02/06/2026
திருச்சிற்றம்பலம்
"திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி"
திருஞானசம்பந்தர்
சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாக்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவார மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அழைக்கப்படுகின்றனர். தேவார மூவரில் இளம் வயதிலேயே தெய்வ அருள் பெற்று பாடல்களை இயற்றியவராகத் திருஞானசம்பந்தர் விளங்குகிறார்.
பிறப்பு:
சோழ நாட்டில் பிரமபுரம், வேணுபுரம், காழி என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழியில் சிவபாத இருதயாருக்கும், பகவதியம்மாளுக்கும் மகனாக கி.பி. 637 ஆம் ஆண்டு சம்பந்தர் பிறந்தார்.
ஞானப்பால் உண்டல்:
ஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தையார் சம்பந்தரைத் தோணியப்பர் ஆலயக்குளக்கரையில் அமரவைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். நீருக்குள் மூழ்கி தந்தை மந்திர உரு செய்தார். நெடுநேரமாகியும் தந்தை வராதலால் சம்பந்தர் அழுதார். அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் கையில் வைத்திருந்த அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார்.
குளித்துவிட்டு வந்த சிவபாதர் தன் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்த்த போது, யார் கொடுத்தது என்று வினவினார். ஞானசம்பந்தர் தோணியப்பரைக் காட்டினார். அப்பொழுது ஞானசம்பந்தர் “தோடுடைய செவியென்” என்ற நட்டபாடை பண்ணில் திருவாய் மலர்ந்தருளி தொடர்ந்து பல சைவம் தழைத்தோங்க பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் :
பொற்றாளம் பெற்றது;
முயலகன் நோய் தீர்த்தது;
யாழ்மூரி பாடியது ;
வாசித்தீரக் காசு பெற்றது;
பாம்பு தீண்டப்பெற்று இறந்த வணிகனை “சடையா யெனுமால் சரண் நீ யெனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார். திருமறைக்காட்டில் மறைகளால் மூடப்பட்டிருந்த மறைக்கதவத்தைத் திருநாவுக்கரசர் திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர். இத்தலத்தில் பியந்தைக்காந்தாரப் பண்ணில் அமைந்த கோளறு பதிகம் பாடினார்.
மங்கையற்கரசியாரின் அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்றார். ஆலவாய் இறைவனைப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் செய்து வெற்றி பெற்றார். கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருநீற்றுப்பதிகம் பாடினார். திருக்கொள்ளம்புதூரில் “கொட்டமே கமழும் கொள்ளம் புதூர் என்று தொடங்கும் காந்தாரப் பஞ்சமம் பண்ணமைந்த பதிகம் பாடி ஓடம் செலுத்தினார்.
திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசரைச் சந்தித்தார். பின்பு தொண்டை நாடு சென்றார். திருவோத்தூரை அடைந்தார். அங்கு ஒரு சிவனடியாரின் பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனையாக இருந்தன. இதனை,
“பூந்தோர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி” எனத் தொடங்கும் பழந்தக்கராகம் பண்ணமைந்த பதிகம் பாடி பெண்பனையாக்கினார். மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாவையை “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை” எனத் தொடங்கும் சீகாமரப் பண் பதிகம் பாடி பெண்ணாக எழுப்பிவித்தார்.
இறுதியில் திருப்பெருமணம் என்னும் கோயிலை அடைந்தார். இக்கோயில் ஆச்சாள்புரம் என்னும் தலத்தில் உள்ளது. இங்கு இவருக்கு வைகாசி மாதம் மூலநாளில் திருமணம் நடைபெற்றது.
“கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனத் தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடன் சோதியில் கலந்தார்.
மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று திருநெறியத் தமிழ் பாடினார். தோடுடைய செவியன் எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் பாடத் தொடங்கி கல்லூர்ப் பெருமணம் எனத்தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சி பண் பதிகம் வரை பாடியுள்ளர். இவர் பாடியவற்றுள் இன்று வரை 386 பதிகங்கள் கிடைத்துள்ளன. இவை மூன்று திருமுறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இவை பண்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
திருஞானசம்ந்தரின் குருபூசையான இன்றய நன் நாளில் "தமிழையே ஆடையாக கொண்ட" (தமிழாகரன்) சம்பந்தரின் திருவடிகளை வணங்கி அவர் திருவாய் மலர்ந்தருளிய பதிகங்களை ஒப்புவிப்போமாக...
"திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி"
திருச்சிற்றம்பலம்