24/08/2026
அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
தொடர் – 11
எஸ். எச். எம். இஸ்மாயில் (ஸலபி)
நான்கு இமாம்களின் பார்வையில்....
அல்லாஹ் எங்கும் நிறைந்தவன்; அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்; அவன் படைப்புகளுக்குள் கலந்திருக்கிறான் என்ற நம்பிக்கை இஸ்லாமிய அகீதாவுக்கு முரணானது என்பதை இதுவரை அல்குர்ஆன், ஸுன்னா, ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் கூற்றுக்களின் அடிப்படையில் பார்த்தோம்.
அதேவேளை, அல்லாஹ் தன் படைப்புகளுக்கு மேலாகவும், அர்ஷின் மீது உயர்ந்தவனாகவும் இருக்கிறான் என்பதை ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையாகவும் அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
இத்தொடரில் புகழ்பூத்த இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்களைத் தொகுத்துப் பார்ப்போம். முதலில், இஸ்லாமிய உலகில் பெரிதும் அறியப்பட்ட நான்கு பெரும் இமாம்களின் கூற்றுகளை நோக்குபோம்.
35. இமாம் அபூ ஹனீபா (ரஹ்)
இமாம் அபூ ஹனீபா அந்நுஃமான் இப்னு ஸாபித் (ஹி. 80–150) அவர்கள் இஸ்லாமிய வரலாற்றின் மிகப் பெரிய ஃபிக்ஹ் அறிஞர்களில் ஒருவராவார்.
அவர்களிடம் அல்லாஹ்வின் உயர்வு தொடர்பாகக் கூறப்பட்டுள்ள பிரபலமான வாசகம்:
مَنْ قَالَ: لَا أَعْرِفُ اللَّهَ أَفِي السَّمَاءِ هُوَ أَمْ فِي الْأَرْضِ، فَقَدْ كَفَرَ.
பொருள்:
“அல்லாஹ் வானத்தில் இருக்கிறானா அல்லது பூமியில் இருக்கிறானா என்பது எனக்குத் தெரியாது என்று கூறுபவன் குஃப்ரில் விழுந்துவிட்டான்.”
இந்தக் கூற்று الْفِقْهُ الْأَكْبَرُ எனப் பரவலாகக் குறிப்பிடப்படும் நூலிலும், அபூ முதீஃ அல்-பல்கீ வழியாக அறிவிக்கப்படும் உரைகளிலும் காணப்படுகிறது. ( இவ்வறிவிப்பின் இஸ்னாத் குறித்து அறிஞர்களிடையே விவாதம் மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.)
அதே அறிவிப்பின் மற்றொரு வடிவில்:
وَكَذَا مَنْ قَالَ: إِنَّهُ عَلَى الْعَرْشِ، وَلَا أَدْرِي الْعَرْشُ أَفِي السَّمَاءِ أَمْ فِي الْأَرْضِ.
என்று கூறப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அதாவது இவ்வாறே அல்லாஹ் அர்ஷின் மேல் உள்ளான்.ஆனால் அர்ஷ் வானத்தில் இருக்கிறதா?அல்லது பூமியில் இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது என்று கூறுபவனும் அவ்வாறே (குப்ரில் விழுந்துவிட்டான்)
எனீறு இடம் பெற்றுள்ளது
இதன் மூலம் இமாம் அபூ ஹனீபாவிடம் அறிவிக்கப்படும் கருத்தின் மையம், அல்லாஹ்வின் உயர்வை மறுப்பது அல்லது அதனை சந்தேகிப்பது ஸலப்களின் அகீதாவுக்கு முரணானது என்பதாகும்.
ஆதாரம்: الْفِقْهُ الْأَكْبَرُ எனக் குறிப்பிடப்படும் உரை; மேலும் شَرْحُ الْفِقْهِ الْأَكْبَرِ போன்ற நூல்களில் இவ்வறிவிப்பு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.(பார்க்க:இப்னு அபில் இஸ் அல்-ஹனபி, ஷர்ஹு அல்-அகீதத்துத் தஹாவிய்யா, பக்கம் 301)
36. இமாம் மாலிக் (ரஹ்)
இமாம் மாலிக் இப்னு அனஸ் (ஹி. 93/95–179) அவர்கள் இமாமு தாரில் ஹிஜ்ரா என அழைக்கப்பட்ட மிகப் பெரிய ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் அறிஞராவார்.
அவர்களிடம் அறிவிக்கப்படும் முக்கியமான கூற்று:
اللَّهُ عَزَّ وَجَلَّ فِي السَّمَاءِ، وَعِلْمُهُ فِي كُلِّ مَكَانٍ، لَا يَخْلُو مِنْهُ شَيْءٌ.
பொருள்:
“அல்லாஹ் வானத்திற்கு மேலாக இருக்கிறான்; அவனுடைய அறிவு ஒவ்வோர் இடத்திலும் உள்ளது. அவனுடைய அறிவை விட்டும் எந்த இடமும் விலகியதல்ல.”
இந்தக் கூற்றை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலின் மகன் அப்துல்லாஹ் அறிவிக்கும் السُّنَّة நூலிலும் காணலாம். இமாம் அஹ்மத் அவர்களும் மாலிக்கிடமிருந்து இக்கூற்றை அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பை பல அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் இமாம் மாலிக்கிடம் «الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى» என்ற வசனத்தின் இஸ்திவா குறித்து கேட்கப்பட்டபோது பிரபலமாக அறிவிக்கப்படும் பதில்:
الِاسْتِوَاءُ مَعْلُومٌ، وَالْكَيْفُ مَجْهُولٌ، وَالسُّؤَالُ عَنْهُ بِدْعَةٌ.
பொருள்:
“இஸ்திவா என்பது அறியப்பட்ட ஒன்று; எவ்வாறு என்பது அறியப்படாதது; அதைப் பற்றி ‘எவ்வாறு?’ என்று கேட்பது பித்அத் ஆகும்.”
இந்த வாசகம் இமாம் மாலிக்கின் அகீதையை விளக்கும் மிகப் பிரபலமான ஸலபி மேற்கோள்களில் ஒன்றாகும்.
இதனால் இமாம் மாலிக்கின் அணுகுமுறை, இஸ்திவாவை மறுப்பதல்ல; அதன் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதன் “எப்படி” என்பதை அல்லாஹ்விடமே ஒப்படைப்பது என்பதை விளங்கலாம்.
37. இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாஃபிஈ (ஹி. 150–204) இவர்கள் இஸ்லாமிய ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் வரலாற்றின் மிகப் பெரிய இமாம்களில் ஒருவர்.
அவர்களின் அகீதையை விளக்கும் வகையில் அறிவிக்கப்படும் கூற்று:
الْقَوْلُ فِي السُّنَّةِ الَّتِي أَنَا عَلَيْهَا، وَرَأَيْتُ أَصْحَابَنَا عَلَيْهَا أَهْلَ الْحَدِيثِ الَّذِينَ رَأَيْتُهُمْ وَأَخَذْتُ عَنْهُمْ: الْإِقْرَارُ بِشَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَنَّ اللَّهَ تَعَالَى عَلَى عَرْشِهِ فِي سَمَائِهِ، يَقْرُبُ مِنْ خَلْقِهِ كَيْفَ شَاءَ، وَأَنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كَيْفَ شَاءَ.
பொருள்:
“நான் கடைப்பிடிக்கும் ஸுன்னத் மற்றும் நான் சந்தித்தும் அவர்களிடமிருந்து அறிவைப் பெற்றும் இருக்கும் ஹதீஸ் அறிஞர்கள் கடைப்பிடிக்கும் வழி என்னவென்றால்: ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்’ என்று சாட்சி கூறுதல்; மேலும் அல்லாஹ் தன் வானத்திற்கு மேலுள்ள அர்ஷின் மீது இருக்கிறான்; அவன் விரும்பிய விதத்தில் தன் படைப்புகளுக்கு நெருக்கமாகிறான்; மேலும் அவன் விரும்பிய விதத்தில் கீழ் வானத்திற்கு இறங்குகிறான் என்பவற்றை ஏற்றுக்கொள்வதாகும்.”
இந்த உரை
اجتماع
الجيوش الإسلامية நூலில் இமாம் ஷாஃபிஈ அவர்களிடமிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இமாம் ஷாஃபிஈ அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்து கூறியதாக அறிவிக்கப்படும் மற்றொரு முக்கியமான கூற்று:
لِلَّهِ تَعَالَى أَسْمَاءٌ وَصِفَاتٌ جَاءَ بِهَا كِتَابُهُ، وَأَخْبَرَ بِهَا نَبِيُّهُ أُمَّتَهُ، لَا يَسَعُ أَحَدًا مِنْ خَلْقِ اللَّهِ قَامَتْ عَلَيْهِ الْحُجَّةُ رَدُّهَا.
அதாவது, அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவும் உறுதிப்படுத்திய அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை மறுப்பது அனுமதிக்கப்படாது என்பதே அவரது வழிமுறையாகும்.
38. இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ஹி. 164–241) அவர்கள் ஹதீஸ் மற்றும் ஸுன்னாவின் மிகப் பெரிய இமாம்களில் ஒருவராவார்.
அவர் சத்தியத்தைப் பாதுகாப்பதில் மிகுந்த உறுதியுடன் இருந்தார். குறிப்பாக ஜஹ்மிய்யாக்களின் தவறான அகீதாவுக்கு எதிராக அவர் எழுதிய الرَّدُّ عَلَى الْجَهْمِيَّةِ وَالزَّنَادِقَةِ என்ற நூல் மிகவும் முக்கியமான ஆதாரமாகும்.
அதில் ஜஹ்மிய்யாக்கள்:
هُوَ عَلَى الْعَرْشِ، وَفِي السَّمَاوَاتِ، وَفِي الْأَرْضِ، وَفِي كُلِّ مَكَانٍ، لَا يَخْلُو مِنْهُ مَكَانٌ، وَلَا يَكُونُ فِي مَكَانٍ دُونَ مَكَانٍ
“அவன் அர்ஷின் மீதும் இருக்கிறான்; வானங்களிலும் இருக்கிறான்; பூமியிலும் இருக்கிறான்; மேலும் ஒவ்வோர் இடத்திலும் இருக்கிறான். எந்த இடமும் அவனை விட்டும் காலியாக இல்லை; அவன் ஒரு இடத்தில் மட்டும் இருந்து, மற்றொரு இடத்தில் இல்லாதவனாக இருப்பதில்லை.”
என்று கூறியதாக இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, அல்லாஹ்வின் மகத்துவத்திற்கும் பரிசுத்தத்திற்கும் முரணான இடங்களை எடுத்துக்காட்டுகிறார்.
அதே நூலில் இந்த வழிகேட்டை நிறூபிக்கும் மிக முக்கியமான தர்க்க ரீதியான விளக்கத்தையும் அவர் வழங்குகிறார்.
أَلَيْسَ كَانَ اللَّهُ وَلَا شَيْءٌ؟
“அல்லாஹ் இருந்தான்; அப்போது வேறு எதுவும் இருக்கவில்லைதானே ?”
என்று கேட்க வேண்டும் .
பின்னர், படைப்புகள் உருவாக்கப்பட்டபோது அவை அல்லாஹ்வுக்குள் உருவாக்கப்பட்டனவா அல்லது அவனுக்கு வெளியே உருவாக்கப்பட்டனவா என்று கேட்கவேண்டும்.இதற்கு அவன் மூன்று விதத்தில் விடியளிக்கலாம் எனச் சுட்டிக்காட்டுகிறார்:
1. அல்லாஹ் படைப்புகளைத் தன்னில் இருந்து உருவாக்கினான் என்று கூறினால்
அது படைப்புகள் அல்லாஹ்வின் ذات-இல் இருப்பதாகக் கூறுவதாகிவிடும்.
2. படைப்புகளைத் தனனுக்கு வெளியே படைத்த பின்னர் அவற்றுக்குள் நுழைந்தான் என்று கூறினால்
அல்லாஹ் படைப்புகளுக்குள் நுழைகிறான் என்ற தவறான கருத்து உருவாகும்.
3. படைப்புகளைத் தனனுக்கு வெளியே படைத்தான்; பின்னர் அவற்றுக்குள் நுழையவில்லை என்று கூறினால்
அவன் “அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான்” என்ற தன் முந்தைய கருத்தை விட்டுவிட்டு, அஹ்லுஸ் ஸுன்னாவின் கருத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும்.
இமாம் அஹ்மத் அவர்களின் சொற்களில்:
وَإِنْ قَالَ: خَلَقَهُمْ خَارِجًا مِنْ نَفْسِهِ، ثُمَّ لَمْ يَدْخُلْ فِيهِمْ، رَجَعَ عَنْ قَوْلِهِ أَجْمَعَ، وَهُوَ قَوْلُ أَهْلِ السُّنَّةِ.
“அவன் அவர்களைத் தனனுக்கு வெளியே படைத்தான்; பின்னர் அவற்றுளக்குள் நுழையவில்லை என்று கூறினால், அவன் தன் முந்தைய கருத்தை முழுமையாக விட்டுவிட்டான்; அதுவே அஹ்லுஸ் ஸுன்னாவின் கருத்தாகும்.”
இதன் மூலம் இமாம் அஹ்மத் அவர்கள் அல்லாஹ் படைப்புகளோடு கலந்து எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்ற கருத்தைத் தெளிவாக நிராகரித்திருப்பதை அறியலாம்.
நான்கு இமாம்களின் கருத்து என்ன சொல்கிறது?
இதுவரை நாம் பார்த்த நான்கு இமாம்களின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
இமாம் அபூ ஹனீபா:
அல்லாஹ்வின் உயர்வை மறுக்கும் கருத்தை கடுமையாக மறுக்கும் அறிவிப்புகள் அவரிடமிருந்து வந்துள்ளன.
இமாம் மாலிக்:
اللَّهُ فِي السَّمَاءِ، وَعِلْمُهُ فِي كُلِّ مَكَانٍ
என்று அறிவிக்கப்படுகிறது; மேலும் இஸ்திவா பற்றி «الِاسْتِوَاءُ مَعْلُومٌ، وَالْكَيْفُ مَجْهُولٌ» என்று கூறியதாகப் பிரபலமாக அறிவிக்கப்படுகிறது.
இமாம் ஷாஃபிஈ:
وَأَنَّ اللَّهَ تَعَالَى عَلَى عَرْشِهِ فِي سَمَائِهِ
என்று அல்லாஹ்வின் அர்ஷின் மீதான உயர்வை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
இமாம் அஹ்மத்:
ஜஹ்மிய்யாக்களின் “அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான்” என்ற கருத்தை மறுத்ததுடன், அல்லாஹ் படைப்புகளிலிருந்து வேறுபட்டவனாக இருக்கிறான் என்ற கருத்தைத் தெளிவுபடுத்துகிறார்.
எனவே, அல்லாஹ்வின் உலூ (الْعُلُوّ), அர்ஷின் மீது இஸ்திவா (الِاسْتِوَاءُ عَلَى الْعَرْشِ), மற்றும் படைப்புகளிலிருந்து அவன் வேறுபட்டிருத்தல் (مُبَايَنَةُ الْخَلْقِ) ஆகிய கருத்துகள் ஸலப்களின் அகீதா விளக்கங்களில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.
அதேவேளை, அல்லாஹ்வின் உயர்வு என்பது படைப்புகளின் உயர்வைப் போன்றதல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
“அவனைப் போன்றது எதுவுமில்லை; அவனே நன்கு கேட்பவனும் பார்ப்பவனுமாவான்.”
(அஷ்-ஷூரா: 11)
எனவே, அஹ்லுஸ் ஸுன்னாவின் வழிமுறை:
பண்புகளை மறுப்பதுமல்ல; படைப்புகளுடன் ஒப்பிடுவதுமல்ல.
மாறாக, அல்குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிப்படுத்தியதை உறுதிப்படுத்தி, அல்லாஹ்வை படைப்புகளுக்கு ஒப்பிடாமல் இருப்பதாகும்.
ஏன் ஸலப்களின் கூற்றுகளை நாம் தொடர்ந்து குறிப்பிடுகிறோம்?
“அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான்” என்பதற்கு அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.
என்றாலும், சிலர் குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் வேறு விளக்கங்களை வழங்கக்கூடும்.
அதனால், அந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் விளங்கிய முதல் தலைமுறையினரும், அவர்களைத் தொடர்ந்து வந்த இமாம்களும் எவ்வாறு புரிந்துகொண்டார்கள்? என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
அதனால்தான் இத்தொடரில் ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய இமாம்களின் கூற்றுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இவை அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, அல்லாஹ்வின் உயர்வு மற்றும் அர்ஷின் மீது அவனுடைய இஸ்திவா என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தல்ல; மாறாக, ஸலப்களின் அகீதா விவாதங்களில் தெளிவாக இடம்பெற்ற ஒரு கருத்து என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நான்கு இமாம்களின் கருத்துக்களுடன் இத்தொடரை முடித்தாலும் போதுமானதாகும்.எனினும் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு இன்னும் பல முன்னணி அறிஞர்களின் கூற்றுகளைப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிரபலமான மற்றும் சில அறிஞர்களின் கூற்றுக்களையும் நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.