29/08/2026
மீலாதுன் நபி விழா: பரிசளிப்பு நிகழ்வும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் (புகைப்பட தொகுப்பு - 1)
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், புனித ரபீஉல் அவ்வல் மாத பிறை 1 முதல் 12 வரை கடற்கரைப் பள்ளிவாசலில் தினசரி இடம்பெற்று வந்த குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கெளரவிக்கும் பரிசளிப்பு விழாவும், விசேட மார்க்கச் சொற்பொழிவும் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (27-08-2026) இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.
போட்டிகளில் பங்குபற்றித் தம் ஆற்றல்களை வெளிப்படுத்திய இளம் திறமையாளர்களைப் பாராட்டி, ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இம்முறை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தப்பட்டமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும். நிகழ்வில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க பரிசுகளுடன், கல்முனை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
புனித ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இத்தகைய குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிப் பாரம்பரியமானது, வெறும் கலை வெளிப்பாட்டிற்கும் அப்பால் சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிக ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள ஒன்றாகும். சிறு வயதிலேயே மாணவர்களிடையே ஆன்மீகப் பற்றை வளர்ப்பதுடன், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்க வரலாற்றையும், இஸ்லாமிய அறநெறிகளையும் கலை வடிவங்கள் வாயிலாக இளஞ்சந்ததியினரின் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்ய இப் பாரம்பரியம் வழிவகுக்கின்றது.
இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் திரு. முபாரிஸ் எம். ஹனீபா அவர்கள் விசேட உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கண்ணியத்திற்குரிய மெளலவி பி.எம். ஜலீல் (பாகவி) மற்றும் மெளலவி ஏ. ஆர். ஸபா முஹம்மத் (நஜாஹி) ஆகியோரால் ஆன்மீக வழிகாட்டல் நிறைந்த விசேட மார்க்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.
இவற்றுடன் மாணவர்களின் கண்கவர் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு மேலும் மெருகூட்டின. சமூக நல்லிணக்கத்தையும், மாணவர்களின் சன்மார்க்க அணுவழியிலான கலை மற்றும் கல்வி ஆற்றல்களையும் வெளிக்கொணரும் ஒரு உயரிய நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகைப்பட தொகுப்பு - 02
https://www.facebook.com/share/p/1RpwRNnTtv/?mibextid=wwXIfr
புகைப்பட தொகுப்பு - 03
https://www.facebook.com/share/p/1ExNNPWTTQ/?mibextid=wwXIfr