சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka)

சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka) வணக்கம்! உங்களுக்கு எமது அன்பு வாழ்த்துக்கள்...

www.sathiyavasanam.lk We have served in Sri Lanka since May 1955.

Back to the Bible was incorporated by Act of Parliament No. 17 of 1972, for the purpose of teaching the message of the Christian scriptures through various forms of media and technology. We operate as a not for profit Christian service organisation, funded by donations from individuals and churches and other organisations with similar interests. In our 55 years of operation we have been of service to many thousands of individuals from all parts of the country and walks of life, and from all language and religious backgrounds in Sri Lanka. We provide services in Sinhala, Tamil and English languages. Back to the Bible is governed by a Board of Directors. The Board appoints the Managing Director who is entrusted with the responsibility to lead the organisation and the staff team towards fulfilling the mission of the organisation. All members of the board and staff are Sri Lankan nationals belonging to various Christian denominations.

24/08/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [ஆகஸ்ட் 25 செவ்வாய்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :
2இராஜா 4:1-7

தேவ ஆசீர்வாதம்

எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது என்றான். 2இராஜாக்கள் 4:2

“இதோ கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்" என்று எழுதப்பட்டுள்ளது (சங்.128:4). இங்கே உலகப்பிரகாரமான ஆசீர்வாதமாகிய ஐசுவரியம், சொத்துக்கள், காணிகள், அணியும் உடைகள், ஆபரணங்கள் இப்படியாக குறிப்பிடப்படவில்லை. அவனுடைய மனைவி எப்படி ஆசீர்வாதமாய் இருப்பாள், பிள்ளைகள் எப்படி இருப்பார்கள். அவனுடைய கையின் பிரயாசம் எப்படி ஆசீர்வதிக்கப்படும் இவற்றைத்தான் குறிப்பிடுகிறார். “கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்" என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த இடத்திலே ஒரு தீர்க்கதரிசியின் புத்திரரின் மனைவி, எலிசாவிடத்தில் வந்து, உமது அடியானாகிய எனது புருஷன் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை நீர் அறிவீர். இப்போது கடன் கொடுத்தவன் வந்து எனது இரண்டு குமாரரையும் கேட்கிறான் என்கிறாள். அப்பொழுது எலிசா நான் உனக்கு என்ன செய்யவேண்டும்; உன்னிடத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவள், ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் என்னிடம் வேறு எதுவும் இல்லை என்கிறாள். அப்பொழுது எலிசா, “நீ போய் அயல்வீட்டில் எல்லாம் வெறும் பாத்திரத்தைக் கேட்டு வாங்கி,அதில் உன்னிடம் உள்ள எண்ணெயை ஊற்று" என்றான். அப்படியே அவள் செய்தாள். பாத்திரங்கள் தீர்ந்துபோகும் அளவிற்கு அவள் அவற்றில் எண்ணெயை ஊற்றினாள். இனி பாத்திரங்கள் இல்லையென்றபோது, எண்ணெய் ஊற்று நின்றுபோயிற்று. அதை எலிசாவிற்கு அறிவித்தபோது, அவன் “அந்த எண்ணெயை விற்று உனது கடனை அடைத்து, மீந்ததைக் கொண்டு நீயும் உனது குமாரரும் ஜீவனம்பண்ணுங்கள்" என்றான்.

அருமையான தேவபிள்ளையே, கர்த்தர் அந்த விதவையின் குறைவை எப்படித் தீர்த்தார் என்பதைப் பார்த்தீர்களா. அவளிடம் உள்ளதைக்கொண்டே அற்புதம் செய்தார். உள்ளதையே பன்மடங்காகப் பெருக்கினார். எப்படிப் பெருக்கினார்? அவளிடமிருந்து உள்ளதை எடுத்துவிடாமல், அவளாகவே தன்னிடம் இருப்பதை ஒப்புக்கொடுக்க வைத்தார். அதைக் கர்த்தர் பெருகச் செய்தார்.

ஆண்டவர் ஒருநாளும் அவரை நம்பினவர்களைக் கைவிடமாட்டார். அவர்களுக்கு ஒன்றுமே இல்லாமல் விடமாட்டார். நாமோ எம்மிடம் இருப்பதை உணராமல், இல்லாததற்காக அங்கலாய்க்கிறோம். இருப்பதைத் தேவனிடம் கொடுத்துவிட்டால், அவர் அதைப் பன்மடங்காகப் பெருக்கி, நமக்குத் திரும்பவும் தருவதற்கு வல்ல மையுள்ளவராய் இருக்கிறார். நமது குறைவுகளைப் போக்கவும், நம்மை ஆசீர்வதிக்கவும் கர்த்தர் போதுமானவர்.

💫 இன்றைய சிந்தனைக்கு: நம்மிடம் ஒன்றுமில்லை என்று சொல்லாமல், இருப்பதைக் கர்த்தரிடத்தில் கொடுக்கும்போது, அவர் அற்புதம் செய்வார்.

📘 அனுதினமும் தேவனுடன்.

23/08/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [ஆகஸ்ட் 24 திங்கள்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2இராஜா 2:1-18

அரிதான காரியம்

உன்னை விட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில், என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது என்றான். 2இராஜாக்கள் 2:10

அரிதான காரியம் என்றால், அது அனைவருக்குமே பிடிக்கும். உடைகள் வாங்கும் போது, அரிதான நிறம், அரிதான டிசைன் என்றால் அது அனைவரையும் கவரும். அதுபோல அரிதான பொருள், அரிதான உணவு இப்படியாக அனைவரும் கவர்ந்து இழுக்கப்படுவதுண்டு. இங்கே எலிசா கேட்டதும் ஒரு அரிதான காரியம் என்றே எலியா குறிப்பிடுகிறார்.

காரணம் என்ன? எலியா எடுத்துக்கொள்ளப்படும்போது, அவரை எலிசா காண வேண்டும். இது நடக்குமோ நடவாதோ என்று எண்ணியே எலியா இது ஒரு அரிதான காரியம் என்று சொல்லுகிறார். ஆனால் எலிசாவோ, எலியா இன்று சுழல் காற்றிலே எடுத்துக்கொள்ளப்படப் போகிறார். எப்படியாவது அவரோடு கடைசி நேரம் வரைக்கும் இருக்க வேண்டும் என்ற ஆவலில் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறார். எலியா, எலிசாவைத் தடுக்கப்பார்த்தும், எலிசா, எலியாவை விடாமல் பின்தொடருவதைக் காண்கிறோம். யோர்தான் ஆற்றண்டைக்கு வந்தபோதும், எலியாவோடுகூட யோர்தானைக் கடந்து செல்லுகிறார். அவர்கள் பேசிக் கொண்டு சென்ற போது, அக்கினி மயமான இரதமும் அக்கினிக் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்துப்போட்டது. எலியா சுழல்காற்றில் எடுத்துக்கொள்ளப்பட்டார். இதைக் கண்ட எலிசா, “என் தகப்பனே, என் தகப்பனே" என்று கதறினார். அவருக்குக் கிடைத்தது எலியாவின் சால்வை மட்டுமே.

முன்பு, இந்தச் சால்வையை வைத்து அடித்தே யோர்தானைப் பிளக்கச் செய்தார் எலியா; இப்போது, அதே சால்வையைக் கொண்டு மீண்டும் யோர்தானை அடித்த எலிசா, “எலியாவின் தேவன் எங்கே" என்றார். அப்பொழுது யோர்தான் பிளந்து இரண்டாக நின்றது. அதைக்கண்ட மற்றைய தீர்க்கதரிசிகள் எலியாவின் ஆவி எலிசாவுக்குள் இறங்கினது என்று சொல்லி அவனைப் பணிந்துகொண்டனர்.

அரிதான காரியமாக இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக் கில் எலிசா, எலியாவை விடாமல் பின்தொடர்ந்து சென்றது ஒன்று. கிடைத்த அந்த சால்வையைக் கொண்டு, விசுவாசத்துடன், யோர்தானை அடித்தது இன்னொன்று. எலியா இல்லாவிட்டாலும், எலியாவின் தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதை எலிசா நம்பினான். அதுவே அவனது வெற்றிக்கு அடையாளமாயிற்று. பிலி.3:12-14ல் பவுலின் வார்த்தைகள் இங்;கு குறிப்பிடத்தக்கவை. “அவரால் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ, அதைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு ஆசையாய்த் தொடருகிறேன். அதை அடைந்தாயிற்று என்று எண்ணாமல், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நோக்கித் தொடருகிறேன்" என்கிறார். நாமும் அப்படியே தொடருவோமாக. தேவனுக்குள் வேதாகமத்தின் அரிதான காரியங்களை வாஞ்சிப்போமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு: அரிதான காரியமானாலும் விடாமல் நம்பிக்கையோடு பின் தொடரும்போது நிச்சயம் நாம் அதைக் கண்டடைய முடியும்.

📘 அனுதினமும் தேவனுடன்.

22/08/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [ஆகஸ்ட் 23 ஞாயிறு]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2இராஜா 1:1-18

கர்த்தரை விட்டான்

இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2இராஜாக்கள் 1:6

இக்கட்டான சூழ்நிலைகள் நெருக்கும்போது நாம் சிலவேளைகளில் கர்த்தரை மறந்து விடுவதுண்டு. சுயபுத்தியில் சாய்ந்து, நமக்குச் சரியென்று தோன்றுவதை யும்; செய்வோம். அல்லது, இன்னுமொரு நபரின் உதவியை நாடி அவருடைய பிழையான வழிநடத்துதலின்படி சென்று அனைத்தையும் நாமே நாசப்படுத்திவிடு கின்ற சம்பவங்களும் நேரிடுவதுண்டு. எல்லாம் கெட்டு ஒன்றும் செய்யமுடியாத நிலை வரும்போதுதான், கர்த்தரைத் தேடி ஓடுவதுண்டு. இது பிழையான காரியம் என்பதை நாம் உணரவேண்டும்.

இங்கே இதே பிழையைத்தான் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் அகசியா ராஜாவும் செய்கிறான். “இதினிமித்தம்" என்றால் எதினிமித்தம்? அகசியா ராஜா மேல்வீட்டிலிருந்து விழுந்து முடியாமல் கட்டிலில் படுத்திருக்கும்போது, தான் பிழைப்பேனோ என்று அறியும்படி, பாகால்சேபூவிடத்தில் ஆள் அனுப்பிக் கேட்டதின் நிமித்தம் அவனது மரணம் சம்பவிக்கின்றது. அந்த நேரத்தில் அவனுக்கு இஸ்ரவேலின் தேவனும், அவரது வல்லமையும் பெரிதாகப்படவில்லை. தனது இஷ்டத்திற்கு தனக்கு விருப்பமானபடி காரியங்களைச் செய்கிறான். இது எலியாவுக்குத் தெரிவிக்கப்பட்டு, எலியா வந்து, “இதினிமித்தம்" நீ ஏறின கட்டிலிலேயே இறந்து போவாய் என்று சொன்னபோதும், அந்த நேரத்திலும் அவன் தான் விட்ட தவறை உணரவேயில்லை. அதுமட்டுமல்ல, ஐம்பது, ஐம்பது பேராக இரண்டு தடவையாக எலியாவை வரச்சொல்லி செய்தி அனுப்புகிறான். எலியாவோ, “நான் தேவனுடைய மனுஷனானால் அக்கினி இறங்கிப் பட்சிக்கட்டும்" என்றபோது, அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மூன்றாவது தடவை ஐம்பது பேரை அனுப்பிய போது, அந்தத் தலைவன் எலியாவிடம் கெஞ்சி முறையிட்டு தங்களை அழிக்காத படிக்கு வேண்டிக்கொண்டபோது, கர்த்தருடைய தூதன், பயப்படாமல் அவர்களுடன் போகும்படிக்கு எலியாவைப் பணித்தார். எலியா போய் அகசியாவை எச்சரித்து, இஸ்ரவேலில் தேவன் இல்லையென்றா நீ வேறே தேவரிடத்திற்குப் போனாய், எனவே சொல்லப்பட்டபடியே நீ கட்டிலில் இருந்து இறங்காமல் செத்துப்போவாய் என்றான். அது அப்படியே நடந்தது.

கர்த்தரை விட்டுச் சோரம்போன அகசியா அப்படியே அழிந்துபோனான். இவைகள் எல்லாவற்றையும் எமக்கு எச்சரிப்பாகவும், ஆலோசனையாகவும் ஆவியானவர் எழுதிவைத்துள்ளார். இவற்றையெல்லாம் அறிந்த பின்பும், நாம் எமது எண்ணப்படி தான் நடப்போம் என்று சொன்னால், அந்த அகசியாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்பதைச் சற்றே யோசித்துப் பார்ப்போம். அகசியாவுக்கு நேரிட்டது நமக்கு நேரிட வேண்டாமே.

💫 இன்றைய சிந்தனைக்கு: தேவனோடு நாம் இருந்தால் அவரும் நம்முடன் இருப்பார். நாம் தேவனை விட்டுவிட்டால், அவரும் நம்மை விட்டுவிடுவார். சிந்திப்போம்.

📘 அனுதினமும் தேவனுடன்.

21/08/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [ஆகஸ்ட் 22 சனி]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1பேதுரு 2:18-25

துன்பப்பட ஒரு எடுத்துக்காட்டு

நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 1பேதுரு 2:18

தேவனுடைய செய்தி:

கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

தியானம்:

ஒருவன் எந்தத் தவறும் செய்யாதபோதும் அவன் துன்பப்பட வேண்டியதாகஇருக்கும். ஒருவன் தேவனை எண்ணிக்கொண்டே, துன்பத்தை அனுபவிப்பானாயின், அது தேவனை சந்தோஷப்படுத்தும். ஆனால் நீங்கள் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்பட்டால், அத் தண்டனையை அனுபவிப்பதற்காக உங்களைப் புகழவேண்டியிராது. ஆனால் நன்மை செய்வதற்காக நீங்கள் துன்புற்றால் அது தேவனுக்கு சந்தோஷம் தரும். அதைச் செய்வதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

சத்தியம்:

கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்றதால் நீங்கள் துன்பப்படும்போது பொறுமையாக இருக்கவேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

இயேசு ஏன் பழிவாங்க முற்படவில்லை?

உங்களை ஆழமாகப் புண்படுத்திய ஒருவரை நீங்கள் மன்னிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறதா? அதைச் செய்ய உங்களுக்கு எது உதவியது?

நீதிக்காகப் படும் துன்பத்தை ஒரு சாபமாகக் கருதாமல், எவ்வாறு ஆசீர்வாதமாகக் கருத முடியும்?

“அவருடைய காயங்களால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள்" என்பது உறுதியான சரீர சுகத்தைக் குறிக்கிறதா, மேலும் குணமாகாத நோய்களை ஃநாம் எவ்வாறு கணக்கில் கொள்வது?

அநீதியான துன்பங்களுக்கு நாம் காட்டும் எதிர்வினைக்கு கிறிஸ்துவின் முன்மாதிரி எவ்வாறு வழிகாட்டுகிறது?

தனிநபர், மனித உரிமை, நவீனத்துவம் சார்ந்த இன்றைய உலகில், இயேசுவைப் பின்பற்றி இந்த சேவை மனப்பான்மையை எவ்வாறு முன்மாதிரியாக கருதலாம்?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

20/08/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [ஆகஸ்ட் 21 வெள்ளி]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1இராஜா 21:20-29

தாழ்மையாய் நடப்போம்!

ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டிலே படுத்து தாழ்மையாய் நடந்துகொண்டான். 1இராஜாக்கள் 21:27

நாம் இப்போது கிருபையின் காலத்தில் இருக்கிறோம். முன்பு நியாயப்பிரமாண காலத்தில் கர்த்தர் உடனடியாகவே பாவத்திற்குத் தண்டனை கொடுத்து விடுவார் என்று நாம் பொதுவாகச் சொல்லுவதுண்டு. ஆனால், நியாயப்பிரமாண காலத்திலும் கர்த்தர் தமது தண்டனையைத் தளர்த்தியதையும், அல்லது தண்டனையைப் பின் போட்டதையும் காண்கிறோம்.

நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை, ஆகாபின் மனைவி யேசபேல் தந்திரமாய் நாபோத்தைக் கொன்று, அபகரித்ததை எலியா வந்து ஆகாபுக்குச் சொன்னான். அத்தோடு ஆகாபுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள தண்டனையையும் எடுத்துக் கூறியபோது, ஆகாப் தன் வஸ்திரங்களைக் கிழித்து தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி இரட்டிலே படுத்து தாழ்மையாய் நடந்து கொண்டான். இதைக் கர்த்தர் கண்டார். ஆகாபுக்குக் கொடுத்த தண்டனையை கர்த்தர் உடனே நிறைவேற்றாமல் பின்போடுவதைக் காணலாம். இதைக்குறித்து தேவன் சொன்னபோது, “ஆகாப் தாழ்மையாய் நடந்துகொண்டான்" என்று குறிப்பிடு வதைக் காண்கிறோம்.

பொதுவாக ஜனங்கள் தவறு செய்வதோடுகூட பெருமையாயும் நடந்துகொள்வதுண்டு. எம்மை யார்தான் என்ன செய்யமுடியும் என்றதான இறுமாப்பில் இருப்பதும் உண்டு. ஆனால், “தாழ்மையுள்ளவனையே கர்த்தர் நோக்கிப் பார்க்கிறார்" என்றும், “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்" என்றும் தேவனுடைய வார்த்தைசொல்லுகிறது (சங்.138:6; யாக்.4:6.). இதேபோல யோனா தீர்க்கதரிசியும் நினிவே யின் அழிவைக்குறித்து தீர்க்கதரிசனம் சொன்னபோது, நினிவேயின் மக்களும் தங்களைத் தாழ்த்தி, இரட்டிலும் சாம்பலிலும் இருந்து தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டனர். அப்போது கர்த்தர் நினிவேயை அழிக்காமல் அவர்களுக்கு இரங்கியதைக் காண்கிறோம்.

இன்று நமது நிலையென்ன? நாம் தேவனுக்கு முன்பாகப் பெருமை பேசி திரிகிறோமா? அல்லது தாழ்மையாய் அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து அவருக்குள் உண்மையாய் வாழுகிறோமா? கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படும் போது அவர் நம்மை உயர்த்துகிறவராய் இருக்கிறார். பெருமையினாலேயே அன்று லூசிபர் என்னும் பிரதான தூதன் வானத்திலிருந்து தள்ளப்பட்டு இன்று சாத்தானாய் அலைந்து திரிகிறான். நமக்கு இந்தப் பெருமை வேண்டவே வேண்டாம். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே நம்மிலும் இருக்கக்கடவது.

💫 இன்றைய சிந்தனைக்கு: கிறிஸ்து தாழ்மையாய் நடந்துகொண்டதை சிந்தித்துப் பார்ப்போம். அவ்வழியில் நாமும் நடப்போம்.

📘 அனுதினமும் தேவனுடன்.

Address

120A Dharmapala Mawatha
Colombo
00700

Alerts

Be the first to know and let us send you an email when சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka):

Shortcuts

Share