23/05/2026
திருவருள் பெண்கள் சங்கத்தின் 85 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு
உளம் ஆறுதல் தரும் ஆன்மீக கடிதங்கள் .....
எதிர்வரும் 23/05/ 2025 திகதியன்று செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் கீழ் செயற்படும் திருவருள் பெண்கள் சங்கமானது 85 ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடுகின்றது . சிவன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து இடம்பெறும் முதலாவது ஆண்டு விழாவாகவும் இது அமைகிறது.
திருவருள் சங்க செயலாற்றுகையில் சுவாமிஜி சோமேஸ்வரானந்தகிரி அவர்களாலும் தாயினாலும் இந்திய தேசத்தில் இருந்து திருவருள் சங்கத்தினருக்கு எழுதப்பட்ட கடிதங்களில் செறிந்து கிடக்கும் ஆன்மீக போதனைகள் இந்நாளில் நினைவுபடுத்திக்கொள்ள இறையருள் கிடைத்துள்ளது.
திருவருள் சங்கம் செயற்பட்ட காலம் முதல் சங்க உறுப்பினர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் ஆன்மீக அடிச்சுவட்டினை பதிக்கும் முகமாகவும் சுவாமிஜியின் ஆச்சிரமத்தில் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.
1950 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட கடிதங்கள் இங்கு கவனத்திற் கொள்ளப்படுகிறது. சங்க உறுப்பினர்களுக்கு சுவாமிஜி அவர்கள் கடிதம் எழுதினாலும் சமூகத்தில் வாழும் அனைத்து சமூதாயத்தினருக்கும் உரிய பொதுவான அறிவுரைகளாகவே அவை அமைந்திருக்கின்றது. சமய சமூக நல்லிணக்க சுவடுகளை கடிதங்கள் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
1950/06/21 ஆம் திகதி சுவாமிஜீ சங்க உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் பொருள்பொதிந்த வாழ்க்கை முறைக்குள் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக குடும்ப நல்லுறவு, பிள்ளைகள் வளர்ப்பு முறைகள், குடும்பத்தில் ஒவ்வொருவரினதும் கடமைகள், பொறுப்புக்கள், சுற்றத்தாரை நேசித்தால் மனதில் இன்பம் பெருகும்
என்பதாக குடும்ப நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களை எழுதி இருந்தார்.
26/07/1960 இல் சுவாமிஜியின் கடிதத்தில் மருந்துகளை சாப்பிடும் போது கடவுளை நன்றாகவும் மனப்பூர்வமாகவும் வணங்குங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். நோய்க்குரிய மருந்தை விட இறை நாம மருந்தே மேலானதென்பதை ஆன்மீக உபதேசமாக எழுதிக்கொண்டார்.
10/ 01/1976-ல் எழுதப்பட்ட ஆன்மீக பத்திரத்தில் பிறரது நலனுக்காக இறை பிரார்த்தனை செய்து ஆசி வேண்டும் அன்பு மகத்தானது சங்கம் நல்ல முறையில் முன்னேற்றமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தனது கையெழுத்துக்களால் பொறித்துள்ளார். ஏழு தசாப்தங்களுக்கு முன்பே கடல் கடந்து வாழும் சிவபக்தர்களுக்காக இறை பிரார்த்தனை செய்த சுவாமிஜியின் பாதங்களில் சரணடைகின்றோம்.
17/08/1976-ல் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் ஊரில் உள்ள அத்தனை பேருக்கும் எனது அன்பை கூறுங்கள் உங்களுக்கும் எனது அன்பு அனைவருக்குமாக இறை விசுவாசம் கிடைக்க வேண்டும் என சுவாமிஜியினது உள்ளம் நாட்டம் கொண்டிருந்ததை இக்கடிதம் சொல்லிக்கொண்டே இருக்கின்றது.
06/01/1977-ல் எழுதப்பட்ட கடிதம் வாழ்வு முறையுடன் தொடர்பானது இருப்பதைக் கொண்டு செலவு செய்யுங்கள் என்று அறிவுரை பகர்கிறது.
சுவாமிஜி ஜீவசமாதி அடைவதற்கு சுமார் மூன்று மாதத்திற்கு முன்பாக 15/06/1977-ல் எழுதப்பட்ட கடிதம் ஒன்றிலே நாடு முன்னேற்றமடைந்து சுபிட்சமடைவீர்கள் வறுமையும் பிணியும் தீரும் உங்கள் துன்பங்களை கடவுளிடம் முறையிடுங்கள் அவை தீர்த்து வைக்கப்படும் என்னும் போதனை நாட்டின் நலனுக்காகவும், எமது வீட்டின் நல்வாழ்வுகாகவும் நோய் பிணி நீங்கி சுகவாழ்வு வாழவும் ஆலோசனையும் வழிகாட்டலும் கூறும் அறிவுரைகளை இந்த ஆண்டு விழாவிலே நினைவுப்படுத்தி மீண்டெழுவோம்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பிருந்து சமூகத்தில் முக்கியத்துவம் பெற்று வரும் ஆலோசனை மற்றும் உளவளத்துணை வழிகாட்டல் எண்ணக்கருவை சுவாமிஜி அவர்கள் 85 ஆண்டுகளுக்கு முன்பே தனது ஆன்மீக போதனைகளுக்குள் பக்தி என்கின்ற உணர்வு நிலையினை அடிப்படையாகக் கொண்டு இயல்பாகவே பயன்படுத்தி வந்துள்ளார்.
இவரது ஜீவ சமாதியினைத் தொடர்ந்து தாய் பாலகிருஷ்ண கிரிபாய் சுவாமிஜியின் உயரிய எண்ணக் கருவினை கடிதப் பரிமாற்றங்கள் ஊடாக மேற்கொண்டார் குறிப்பாக
05/01/1981 இல் எழுதப்பட்ட போதனையில் எத்தனை இடையூறுகள், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இறைவணக்கத்தையும், சத்சங்கத்தையும் இடைவிடாது நடாத்தி இன்பம் காணுங்கள் என்று ஆசிகூறியுள்ளார். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் பாதையில் எம்மை நிறுத்தி இறைவழிபாட்டில் ஈடுபடுவோம் எனவும் மேலும் அக்கடிதத்தில் அவர் கூறுவதாவது அன்புள்ள திருவருள் பெண்கள் சங்கத்தவர்களே
# சங்கத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறீர்கள்?
# எத்தனை பேர் செவ்வாய்க்கிழமை தோறும் சங்கத்தில் சமூகம் கொடுக்கிறீர்கள்?
# பொதுத் தொண்டு ஆலய தொண்டு செய்கிறீர்களா?
கோவில் ஆச்சிரம வளவுகளை கூட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பாடுபடுகிறீர்களா?
நாம் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாக கருதி செயல்பட வேண்டும் மற்றவர் செய்யவில்லையே நான் மட்டும் ஏன் செய்ய வேண்டுமென்று நினைக்கக் கூடாது நாம் செய்வோம் இறைவன் நமக்கு கூலி கொடுப்பார்.
இதேபோல் 1989/01/06 ஆம் திகதி வரைந்த கடிதத்தில் "எம்பெருமான் அருளால் திருவருள் சங்கம் மென்மேலும் வளர்ச்சி அடைந்து அதில் ஊக்கமுடன் செயல்படும் நீங்கள் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இன்று போல் என்றும் சங்கத்தை ஊக்கமுடன் நடத்துங்கள் நலம் பெறுவீர்கள் நாட்டின் நிலை அறிவேன் சிவனை வழிபட்டு உங்கள் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது சற் சங்கம் கூட்டி கூட்டுப் பிரார்த்தனை செய்து இறையருளை பெற்று நலமுடன் வாழுங்கள் அந்த சிவன் பல ஊர் சென்று ஸ்தாபனமாகாது செட்டிபாளையம் உங்கள் ஊர் வந்து ஸ்தாபனமாகிவிட்டார் இதுவே உங்களுக்கு பெரியதொரு கொடையாகும்"
இவ்வாறாக சுவாமிஜி அவர்களால் 1940/05/23 ஆம் திகதி ஆரம்பித்த திருவருள் பெண்கள் சங்கமானது எதிர்வரும் 23ஆம் திகதி 85 ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அவர் எமக்கு அனுப்பிய கடிதங்களிலே பொதிந்து கிடக்கும் ஆன்மீக வழிகாட்டல்களை பதிவிட்டு அவர் தாழ் பணிகின்றோம்.
திருவருள் பெண்கள் சங்கத்தினர் சார்பாக..
திருவருள் சங்கம்
சிவன் ஆலயம்
செட்டிபாளையம்.