Saptha kannigal koil

Saptha kannigal koil Saptha Kannigal Kovil is located near Vannivedu Lake, Approximately 2Kms from Walajapet town. The main Deity of temple is Saptha kannigal.

Brameshwari,Gowmari,Varaghi,Vaishnavi,Saamundi,Maheshwari,
Indhirani. With Guardian angels surrounding them. The Guardian Deity Muneeshwarar is represented with bricks near the temple well. The temple has a Big Arasam Tree( Arasamaram). This is Temple's Sthala virutcham. This temple is family deity for people with Walajapet as their native. The century old temple with the divine surrounding, Blesses her followers with mother's affection.

16/12/2018

இனிய மார்கழி காலை வணக்கம் ...

ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை

பாசுரம் 1:

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

ஹரி ஓம்.

🙏 நமோ நாராயணா 🙏

16/12/2018

தெரிந்த புராணம்… தெரியாத கதை!
**********************************************
ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.

ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன்

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ‘சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான்.

உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன்.

தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமா… ராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே… பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ‘ராமா… ராமா…’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ‘ராமா… ராமா… எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான்.

காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.

இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.

”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

16/12/2018

#ஆண்டாள்…

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் போன்ற அனைத்தையும் கடந்தது தான், காதல் யோகம். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன். அதனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே… ஏன் இந்த பிரபஞ்சமே அவன் தான். இறைவனிடம் இருந்து தொடங்கியதை அவனிடமே முடித்துக்கொள்வதுதான் முழுமை. இறைவனை பல்வேறு வழிகளில் அடைய முடியும் என்று வேதங்களும் சாஸ்திரங்களும் வழிகாட்டி உள்ளன. பலரும் அப்படியே இறைவனை அடைந்தும் இருக்கிறார்கள்.

படைத்தவன் வேறு… படைப்பு வேறு என்று எண்ணாமல், படைத்தவன் மீதே காதல் வசப்பட்டு அவனாகவே மாற விரும்புவது தான் காதல் யோகம். பாரதத்தில் கிருஷ்ணன் மீது கோபியர்கள் கொண்ட காதல் இந்த வகைதான். ஆண்டாளின் பக்தி உணர்வு தான் அதனினும் மேலானது.

தண்ணீரில் மூழ்குபவன் மூச்சுக்காக எத்தனை தூரம் ஏங்குவானோ, அப்படி வரவேண்டும் இறைவன் மீது பக்தி என்பார்கள். இங்கே ஆண்டாள் அதனை எல்லாம் தாண்டிப் போய்விட்டாள்.

"கொள்ளும் பயனொன்று இல்லாத
கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே."

என்கிறாள். கண்ணனுக்காக காத்திருந்து காத்திருந்து பயனில்லாத என் மார்பகத்தைப் பறித்து அவன் மீதே வீசியெறிகிறேன் என்று ஆவேசப்படுகிறாள். இந்த உடல் காதலுக்கே உரியது. காதல் வசப்பட்டவர்களுக்கு எங்கேயும் எப்போதும் எல்லாமே காதல் தான் என்பதைக் கவனியுங்கள்.

பைம்பொழில் வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்! அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெருமானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே?

சாலையில் சும்மா போய்க்கொண்டு இருப்பவரைக் கூப்பிட்டுவைத்து கும்முவது என்பார்களே… இங்கேயும் அப்படித்தான் நிகழ்கிறது. குயில்களையும் மயில்களையும் மலர்களையும் அன்போடு அழைப்பவள், அடுத்த கணமே, பஞ்சமா பாதகர்களே என்று திட்டவும் செய்கிறாள். ஏனாம், அவற்றை எல்லாம் பார்க்கும்போது காதலன் கண்ணனின் ஞாபகம் வருகிறதாம்.

இறைவனுடன் பேதமறக் கலந்துவிட்டதால், மதுசூதனனின் கைத்தலம் பற்றுவதாக கனவு காணுகிறாள். வாழை, கமுகு பந்தலிட, பூரண பொற்குடத்துடன் தோரணம் நாட்டப்படுகிறது. இந்திரலோகத்து தேவர்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்க, ஆண்டாள் பட்டுடுத்தி வருகிறாள். வாரணமாயிரத்துடன் மாயவன் வந்துசேர, மத்தளம் கொட்ட, சங்குகள் ஊதப்பட்டது. முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில் மதுசூதனன் கைத்தலம் பற்றினாளாம் மங்கை. கண்களில் இறைவனுடன் தொடங்கிய உறவு காதலாகி, கனவிலே கனிந்து கருவறையில் இணைந்து கொண்டது.

இதைவிட ஒரு பக்தி உண்டா அல்லது இதைவிட ஒரு காதல் உண்டா? உண்மையில் காதல் இறைவனைவிட உயர்வானது. ஆண்டாள் காதலை விட பெரியவள்.

07/08/2018

திருவண்ணாமலையில் சித்தர்கள் அதிகம் ஏன்.
திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்
மலையே சிவம்.அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர்.இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!
மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது .
நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.
நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே
இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்
அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி வருகின்றனர்
திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டு உள்ளது.இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில்
இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும்
மர்மம் இதுதான்..
இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆத சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும்,அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.
அத்திரி மகரிஷி,மச்ச முனிவர், கோரக்கர்,கிராம தேவர்,துர்வாசர்,சட்டை முனிவர்,அகத்தியர்,போகர்,புசுண்டர்,உரோமா மச்சித்தர்,யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா,பிரம்ம முனி, காலங்கி நாதர்,நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி,கொங்கனர்,உதயகிரிச் சித்தர், பிகுஞ்சக ரிஷி ,மேக சஞசார ரிஷி,தத்துவ ஞான சித்தர்,காளமீகா ரிஷி,விடன முனிவர்,யாகோபு முனிவர், அமுத மகாரிஷி,சூதமா முனிவர், சிவத்தியான முனிவர்,பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி,ஜெயமுனி,சிறு வீரமா முனி,வேதமுனி,சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி,பராச முனி,வல்ல சித்தர்,அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர்,புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர்,மவுனச்சித்தர்,தேகசித்திக் சித்தர்,வரரிஷி, கவு பாலச்சித்தர்,மதிராஜ ரிஷி,கவுதமர்,தேரையர்,விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தர்,சச்சிதானந்தர்,கணநாதர், சிவானந்தர்,சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர்,திரி காலாக்கயான முனி, அருட் சித்தர்,கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி,கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர்,வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச்சித்தர்,சத்தரிஷி,தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர்,நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி,அநுமாதிச்சித்தர்,ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர்,வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர்,தொழுகன்னிச்சித்தர்....
என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்
அவற்றுள் தகவல்கள் சேகரித்து கிடைக்க பெற்ற 20 சித்தர்கள் பற்றி ஒவ்வொரு பதிவாக காணலாம்
திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.
“திருவண்ணாலைக்கு வந்து ஞானகுருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.
திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.
உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர். தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.
திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.
திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.
தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியதால் அண்ணாமலையானை நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.
யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திபரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.
பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.
ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.
காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணாமலையானின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.
வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.
கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.
தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர். இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.
கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.
திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.
பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்
பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், முடிக்கப்படாது பாதிக்கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாட்சர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.
திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)
திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர்.
திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்.
கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)
“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்’ என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். ண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.
“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும் தருமபுரிப்பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும் மேற்கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.
உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.
திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 108 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள்.
1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.
திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று,
திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950)
விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக் கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி, ராம் சுரத்குமார்..
.. ஓம் நமசிவாய சிவசிவ அன்பே சிவம்..

திருப்பதியில்  நடந்த காணகிடைக்காத  அற்புத  அலங்கார காட்சி  பத்து டன் புஸ்பம் மற்றும் பழங்களினால் பாலாஜியின். தரிசனம்    ...
07/08/2018

திருப்பதியில் நடந்த காணகிடைக்காத அற்புத அலங்கார காட்சி பத்து டன் புஸ்பம் மற்றும் பழங்களினால் பாலாஜியின். தரிசனம் பகிருங்கள் பக்தகோடிகள் காணட்டும்

09/05/2018

🙏🏽
ஞானகுருவாய் அருளிய மாணிக்கவாசக பெருமான் திருவடி போற்றி.

*திருவாசகம் - திருவேசறவு 9*

ஆட்கொண்ட இறைவன் மனதில் வீற்றிருக்கும் பொழுது எண்ணம் முழுக்க நீக்கமற இறைவனின் திருவடி காட்டி ஆட்கொண்ட திறமே நிறைந்து பெருகி பேரானந்தத்தை தரும் நிலையை போற்றுகிறார்.

"மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொரும் மிகஅலறிச் சிவபெருமான் என்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படி
வாமாறருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே".

*சொல் பதம்.*
"மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,
தெருவுதொறும் மிக அலறி, `சிவபெருமான்' என்று ஏத்தி,
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,
அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!"

*ஆன்றோர் உரை :*
திருவிடைமருதூர் எனும் திருத்தலத்தில் இருந்து வாசம் செய்யும் இடமாக ஏற்றுக்கொண்ட எனது தந்தையே. !

பொருந்துதற்கினிய உனது தாமரை திருவடி மலர்கள் என் உள்ளத்தில் பரவி உள்ளே உருக செய்து, வீதி வீதியாக

"சிவபெருமானே" என்று வாய்விட்டலறி துதித்து சொல்லிய உனது பெருங்கருணையாகிய விசாலம் பொருந்திய திருப்பாற்கடலில்கண் சேரும் வண்ணம் இவ்விடத்தே அடியேனுக்கு அருள் செய்வாயாக ! "

*திருவாசக உருக்கம்:*
"இடைமருதே இடம் கொண்ட அம்மானே!"

திரிவிடைமருதூரில் வாசம் செய்யும் எம் தந்தையே ,

"மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக"

தாமரை மலர் போன்ற எம்பெருமான் திருவடி உள்ளத்தில் வளர்ந்து, உள்ளம் உருகி , எங்கும் சிவம் , எதிலும் சிவமான பெருங்கருணை நிகழ்தலினாலே ,

எப்பொழுதும் சிவபெருமானே ! சிவபெருமானே ! என்று போற்றி

தேனாய் இனிக்கும் உனது நாமத்தை புகழ்ந்திருந்து உனது நினைவிலேயே அழுந்தி , மூழ்கியிருக்கும் வண்ணம் எனக்கு அருள் செய்வாய் பெருமானே என்று வேண்டுகிறார்.

"பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு"

இறைவன் கருணை மா கடல்.

தன் அடியார்களின் (மனதிலே நமசிவாய மந்திரத்தை வைத்து போற்றுவோர்) வினை தீர்த்து அருளும் கருணை கடல்.

அத்தகைய இறைவனின் கருணை ஆகிய கடலிலே மூழ்கும் விதமாக எனக்கு வந்து இங்கு அருள் செய்வாய் , இறைவா என்று வேண்டுகிறார்.

"அருள் எனக்கு, இங்கு"

இறைவன் மனதில் ஆண்டு கொண்ட தன்மையை எப்பொழுதும் போற்றி புகழ்ந்து , நெஞ்சில் நீங்கா இறை உணர்வுடன் இருக்கும் நிலைய அருள வேண்டுகிறார்.

தித்திக்கும் தேனாய் இனிக்கும் சிவபெருமானின் நாமம் "நமசிவாய" நெஞ்சில் நிறுத்தி , நாமும் இறை அருளை வேண்டுவோம்.

*திருச்சிற்றம்பலம்*
🙏🏽

27/04/2018

நந்தியைப் பற்றி தெரியாத 20 மர்மங்கள்!...

1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும்.
அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும்.
எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது.
இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.

6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும்.
இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

8. மதுரை ஆவணி மூல வீதியில் “மாக்காளை” எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது.
இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.

9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது.
இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும்.
அந்த இடத்தை “நந்திமுக தரிசனம்” என்கிறார்கள்.

11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும்.
இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது.
அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார்.
திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது.
நந்தி மலையே பென்னாறு,
பாலாறு பொன்னையாறு, ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது.
ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது.
பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

22/04/2018

>

" திவ்யப் பிரபந்தம் " என்றாலே அழகான அற்புதக் கருத்துக்களை உடைய எளிய இனிய தமிழ். நம்மையெல்லாம் காத்து ரட்சிக்கும் பாசுரம். அந்த மாயங்கள் புரிகிற மாதவனின் பெருமையை அவனுடைய அற்புத விளையாட்டுக்களை ரசித்து ருசித்து ஆழ்வார்கள் அனுபவித்து நமக்கு அந்த பேரின்பத்தைத் தந்திருக்கிறார்கள். திருமழிசையாழ்வாரின் ஓர் இனிய பாசுரம் எத்தகைய துள்ளல் நடையில் அமைந்திருக்கிறது. அவருடைய திருச்சந்த விருத்தம் என்ற பகுதியில் வருகிற ஒரு பாசுரத்தைப் பார்ப்போம்.

" சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே? "

‘சொல் என்று ஆழ்வார் சொல்வது வேதங்களை. வேதங்களின் தொடர்ச்சி நீ என்று எம்பெருமானை பணிந்து வணங்கி தொழுது சொல்கிறார். நீ வேதங்களின் தொடர்ச்சி மட்டும் இல்லை. அந்த வேதம் முன்வைக்கும் பொருளும் நீதான் என்கிறார்!’ வேதங்களின் மூலம் அறியப்படாமல் வெளிப்படும் பரஞ்சோதியும் நீதான்!
நீ கொடுத்த வேதத்தாலே படைப்பதற்கு தோன்றிய பிரம்மனும் நீதான்!

இப்படிப்பட்ட பெருமையும் புகழும் படைத்த உன்னை, உன் குணங்களை உன்னுடைய அளப்பரிய லீலைகளை எப்படி என்னால் எளிய வெறும் சொற்களால் சொல்ல முடியும் என்று எளிய இனிய சொற்களின் படைவீச்சால் விளக்கியிருக்கிறார், திருமழிசை ஆழ்வார்! வைணவத்தின் உயிர்நாடியான " சரணாகதி " தத்துவத்திற்கு வலு சேர்க்கும் பாசுரம், இந்தப் பாசுரம்.

ஓம் நமோ வெங்கடேசாய.

21/04/2018

🙏🏽
*அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை !!*

ஆதிசங்கரரின் சீடர்களுள்
முக்கியமானவர் பத்மபாதர். கங்கை ஆற்றின் ஓரம் ஒரு முறை ஆதிசங்கரர் நின்று கொண்டிருக்கையில் கரையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்பதை காண்கிறார். தனது சீடனை “உடனே வா” என்று அழைக்கிறார்.

குருநாதர் அழைக்கிறாரே என்று எதை பற்றியும் கவலைப்படாது அப்படியே ஆற்றின் மீது கால் வைத்து நீர் மேல் நடக்க ஆரம்பித்துவிட்டார் பத்மபாதர்.

என்ன ஆச்சரியம் அவரது குருபக்திக்கு கட்டுப்பட்டு, கங்காதேவி அவர் ஒவ்வொரு முறை பாதத்தை எடுத்து வைக்கும்போதும் ஒரு தாமரை மலரை தோன்றச் செய்தாள்.

அதன் மீது நடந்து வந்துவிட்டார் பத்மபாதர்.
பிறகு தான் தெரிந்தது தான் தாமரை பூக்கள் மீது நடந்து வந்தது. “எல்லாம்…. குருநாதரின் மகிமை” என்று மெய்சிலிர்த்து ஆதி சங்கரரின் கால்களில் வீழ்ந்தார்.

அது முதல் தான் அவருக்கு ‘பத்மபாதர்’ என்று பெயர் ஏற்பட்டது.
மிக தீவிர நரசிம்ம பக்தரான இவருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. ஆவல் கடைசியில் வைராக்கியமானது. எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு எய்து காட்டில் கடும் தவமிருந்தார்.

ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்துகொள்கிறான்.

“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.
“என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”.

“அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.

“நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்”.

“நரசிம்மமா? அப்படின்னா என்ன?”

வேடன் புரியாது கேட்கிறான்.
“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்!

இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். “இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிக்கொண்டார்.

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான்.

மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது.

“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! கந்தா… அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு அர்பணிப்பு கண்டு அந்த ஸ்ரீமன் நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானார்.

“ஆகா! மாட்டிகிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான்.

வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றது.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான். “சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”.

பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பது தான் தெரிந்தது.

“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய் சிரித்தார்.

“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” வேடன் கூறுகிறான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது. “பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான்.

என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய்.

தவிர ஆணவமும் கொண்டாய்….உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார். அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.

ஆதிசங்கரரின் வராலற்றில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது.

*நம்பிக்கையும், முழு அர்ப்பணிப்புமே பக்தி...*
🙏🏽

Address

Saptha Kannigal Koil, Vannivedu
Walajapet
632513

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saptha kannigal koil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share