08/07/2022
நிராகரிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுக்கும் கர்த்தர்!
சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பை பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. (1 கொரிந்தியர் 1:26)
படிப்பு, திறமை, பணம் – இவைகளில் முதன்மையாக விளங்குவோரையே இந்த உலகம் அங்கீகரிக்கிறது. இந்த மூன்றில் ஒன்றாகிலும் இல்லாத பெரும்பாலானவர்கள், இந்த உலகத்தால் 'தகுதி இல்லை' என்று நிராகரிக்கப்படுகிறார்கள். இந்த நிராகரிக்கப்பட்ட கூட்டத்தில் நீங்களும் ஒருவரா? இந்த தகுதிகள் இல்லையென்று பலரால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி! இந்த உலகம் யாரை தகுதியில்லை என்று நிராகரிக்கிறதோ, அவர்களையே கர்த்தர் தெரிந்தெடுத்து உயர்த்துகிறார்.
யோசேப்பு, தாவீது போன்றோருடைய வாழ்க்கையை பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தாரால் நிராகரிக்கபட்டார்கள். ஆனால், தகுதி இல்லை என்று நிராகரித்த கூட்டத்தின் கண்களுக்கு முன்பாகவே கர்த்தர் அவர்களை அரியணையில் அமர்த்தினார்.
இந்த உலகம் உங்களை நிராகரிப்பதால், நீங்கள் எதற்கும் பிரயோஜனமில்லாதவர்கள் என்று நினைத்து விடாதீர்கள். கர்த்தர் உங்களை கொண்டு, உங்களை நிராகரித்தவர்களை வெட்கப்படுத்துவார். தகுதி இல்லையென்று நிராகரிக்கப்பட்டவர்களை தெரிந்தெடுத்து, தகுதிப்படுத்தி, அவர்களை நிராகரித்தவர்கள் கண்களுக்கு முன்பாகவே உயர்த்துவது, கர்த்தருக்கு மிகவும் விருப்பமான செயல்களுள் ஒன்று. தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடாதிருங்கள். உலகம் உங்களை நிராகரித்தாலும், நீங்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். ஆமென்!