St.Antony's Siluvaipatti

St.Antony's Siluvaipatti கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருத்தலம் சிலுவைப்பட்டி

Follow the Channel: https://youtube.com/?si=vvdcqxKhzlKskmNX
(1)

Follow us & Subscribe our YouTube channel

https://www.youtube.com/c/StAntonysSiluvaipatti?sub_confirmation=1

Let us stand together in prayer for the people of Nepal 🇳🇵🙏May God comfort every family affected by the devastating floo...
27/08/2026

Let us stand together in prayer for the people of Nepal 🇳🇵🙏
May God comfort every family affected by the devastating floods, strengthen the rescue teams, and bring hope and healing to those who are suffering. 🕯️🤍
Prayer for Nepal 🙏
Stand with Nepal 🇳🇵
Together in prayer, together in hope. ❤️
— St. Antony's Siluvaipatti

ஆகஸ்ட் 27 :  நற்செய்தி வாசகம்ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய...
26/08/2026

ஆகஸ்ட் 27 : நற்செய்தி வாசகம்

ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம் கூறியது: “விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
------------------------------------------------------------------------
27 ஆகஸ்ட்/ வியாழன்

*அருள் ஊற்று*

இன்றைய நற்செய்தியும் நானும்:-

மத்தேயு 24:42–51

*தலைப்பு:* *“யாரும் இல்லாதபோது நாம் யார்?”*

இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளரைப் பற்றி சொல்கிறார். அவனுடைய தலைவர் வீட்டில் இல்லாத நேரத்திலும், அவன் தன் வேலையைச் சரியாகச் செய்கிறான்.
இதில் ஒரு ஆழமான கேள்வி இருக்கிறது:
“யாரும் என்னைக் கண்காணிக்காதபோது நான் எப்படி வாழ்கிறேன்?”
மக்கள் இருக்கும்போது நல்லவராக இருப்பது எளிது.
பாராட்டு கிடைக்கும்போது சேவை/ உதவி செய்வது எளிது.
மேலதிகாரி அருகில் இருக்கும்போது நேர்மையாக இருப்பது எளிது.
ஆனால்…
யாரும் பார்க்காதபோது?
யாரும் பாராட்டாதபோது?
தவறு செய்தாலும் யாருக்கும் தெரியாது என்ற சூழ்நிலையில்?
அங்கேதான் நமது உண்மையான குணம் வெளிப்படுகிறது.
ஒரு கடையில் அதிகமாகத் திருப்பிக் கொடுத்த பணத்தை யாரும் அறிய மாட்டார்கள். அதைத் திருப்பிக் கொடுப்போமா?
வீட்டில் யாரும் கவனிக்காத ஒரு வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதைச் செய்வோமா?
நம்மை காயப்படுத்தியவர் நம்மிடம் இல்லாதபோதும், அவரைப் பற்றி நல்லதாகப் பேச முடியுமா?
இவை சிறிய விஷயங்கள் போலத் தோன்றலாம். ஆனால் நமது குணம் பெரிய முடிவுகளில் மட்டும் உருவாகவில்லை; யாரும் பார்க்காத சிறிய முடிவுகளில்தான் உருவாகிறது.
இயேசு சொல்லும் நம்பிக்கைக்குரிய பணியாளர், தலைவர் வருகிறாரா என்று பார்த்துக்கொண்டிருக்கவில்லை. தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைச் செய்து கொண்டிருந்தான்.
அதுதான் உண்மையான விசுவாசம்.
மனிதர்களின் கண்காணிப்பு இல்லாமல் நல்லவராக இருப்பது — நேர்மை.
கடவுள் பார்க்கிறார் என்ற உணர்வோடு நல்லவராக இருப்பது — விசுவாசம்.
இன்று ஒரு சிறிய பரிசோதனை செய்வோம்:
“இந்தச் செயலை யாரும் அறியாவிட்டாலும், பார்க்காவிட்டாலும், நான் இதைச் செய்வேனா?”
“ஆம்” என்றால்—நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள்.

இன்றைய நமது செபம்:

“ஆண்டவரே, பிறர் பார்க்கும்போது மட்டும் அல்ல; யாரும் பார்க்காதபோதும் உமக்கு உண்மையாக வாழ எனக்கு அருள் தாரும்.”
நமது உண்மையான குணம் நாம் வெளிச்சத்தில் செய்வதில் மட்டும் தெரியாது; யாரும் பார்க்காத இரகசிய நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகளில்தான் தெரியும்.

ஆமென்.

Fr.செங்கோல் CSSR,
இரட்சகர் சபை,
அருளகம், மதுரை.

ஆகஸ்ட் 27 :  பதிலுரைப் பாடல்திபா 145: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1)பல்லவி: என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.2நா...
26/08/2026

ஆகஸ்ட் 27 : பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.

2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

4
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5
உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். - பல்லவி

6
அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.
7
அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 27 :  முதல் வாசகம்எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில...
26/08/2026

ஆகஸ்ட் 27 : முதல் வாசகம்

எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 26 :  நற்செய்தி வாசகம்நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வா...
25/08/2026

ஆகஸ்ட் 26 : நற்செய்தி வாசகம்

நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32

அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; ‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
-----------------------------------------------------------
26 ஆகஸ்டு 2026 /புதன்

*அருள் ஊற்று*

இன்றைய நற்செய்தியும் நானும்:-

மத்தேயு 23:27–32

*தலைப்பு: “யாருக்காக வாழ்கிறோம்?”*

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களின் ஒரு பெரிய பிரச்சினையை வெளிப்படுத்துகிறார். அவர்கள் மற்றவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார்கள்.
இதிலிருந்து நமக்கான கேள்வி:
“நான் உண்மையில் யாருக்காக வாழ்கிறேன்?”
சில நேரங்களில் நமது வாழ்க்கை முழுவதும் பிறருடைய பார்வையைச் சுற்றியே இருக்கிறது.
“மக்கள் என்ன சொல்வார்கள்?”
“என்னை மதிப்பார்களா?”
“என் பெயர் கெட்டுவிடக்கூடாது.”
“நான் மற்றவர்களைவிட குறைவாகத் தெரியக்கூடாது.”
இதற்காக நாம் பணம் செலவிடுகிறோம், மன அழுத்தம் அடைகிறோம், உறவுகளையே இழக்கிறோம்.
ஆனால் நாளை கடவுளின் முன்னிலையில் நிற்கும்போது, “மக்கள் என்ன நினைத்தார்கள்? என்ன சொன்னார்கள்?" என்று அவர் கேட்கமாட்டார்.
அவர் கேட்பது:
“நான் உனக்குக் கொடுத்த வாழ்க்கையை உண்மையுடன் வாழ்ந்தாயா?”
இயேசு அற்புதங்கள்மேல் அற்புதங்களை செய்திருந்தாலும் ஒருபோதும் மக்களின் பாராட்டை எதிர்பார்க்கவில்லை. மக்களின் பாராட்டைப் பெற விரும்பவில்லை. பாராட்டுக்காக எதையும் அவர் செய்யவில்லை. தந்தையின் திருவுள்ளத் தை நிறைவேற்றுவதையே தன் நோக்கமாக கொண்டிருந்தார்.
அதுதான் உண்மையான வாழ்க்கை:
மக்களை மகிழ்விப்பதற்காக அல்ல; கடவுளை மகிழ்விப்பதற்காக வாழ்வது.
இன்று ஒரு சிறிய சோதனை செய்வோம்.
ஒரு முடிவு எடுக்கும்போது,
“மக்கள் என்ன சொல்வார்கள்?என்ன நினைப்பார்கள்” என்பதற்குப் பதிலாக,
“இதைச் செய்தால் கடவுள் மகிழ்வாரா?”
என்று முதலில் கேட்போம்.
மக்களின் பாராட்டு சில நாட்கள் மட்டுமே இருக்கும்;
கடவுளின் பார்வை நித்தியமானது.
எனவே மக்களின் கைத்தட்டலைவிட, கடவுளின் மகிமைக்காக வாழ்வோம்.

ஆமென்.

Rev.Fr. செங்கோல் CSSR
இரட்சகர் சபை
அருளகம், மதுரை .

ஆகஸ்ட் 26 : பதிலுரைப் பாடல்திபா 128: 1-2. 4-5 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!1ஆண்டவ...
25/08/2026

ஆகஸ்ட் 26 : பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 2: 5
அல்லேலூயா, அல்லேலூயா!

கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 26 :  முதல் வாசகம்உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்...
25/08/2026

ஆகஸ்ட் 26 : முதல் வாசகம்

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10, 16-18

அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப் பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல; மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.

அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!

இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

† இன்றைய புனிதர் †(ஆகஸ்ட் 26)✠ புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ் ✠(St. Teresa Jornet Ibars)கன்னியர்/ நிறுவனர்:(Virgin/ Fo...
25/08/2026

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 26)

✠ புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ் ✠
(St. Teresa Jornet Ibars)

கன்னியர்/ நிறுவனர்:
(Virgin/ Founder)

பிறப்பு: ஜனவரி 9, 1843
அய்டோனா, ல்லேய்டா, ஸ்பெய்ன் அரசு
(Aytona, Lleida, Kingdom of Spain)

இறப்பு: ஆகஸ்ட் 26, 1897 (வயது 54)
லிரியா, வலென்சியா, ஸ்பெய்ன் அரசு
(Liria, Valencia, Kingdom of Spain)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 27, 1958
திருத்தந்தை 12ம் பயஸ்
(Pope Pius XII)

புனிதர் பட்டம்: ஜனவரி 27, 1974
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

பாதுகாவல்:
"கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள் சபை" (Little Sisters of the Abandoned Elderly)
ஆன்மீக சபைகளால் மறுக்கப்பட்ட மக்கள் (People rejected by religious orders)
முதியோர் (Elderly people)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 26

புனிதர் தெரெசா ஜோர்னெட் இபார்ஸ், ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளரும், "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற சபையின் நிறுவனரும் ஆவார்.

ஸ்பெயின் நாட்டின் “ல்லேய்டா” (Lleida) பிராந்தியத்தின் “அய்டோனா” (Aytona) எனும் சிறு நகரில், 9 ஜனவரி 1843ல் விவசாய குடும்பமொன்றில் பிறந்த இபார்ஸின் தந்தை பெயர் “ஃபிரான்சிஸ்கோ ஜோஸ் ஜோர்னேட்” (Francisco José Jornet) ஆகும். தாயாரின் பெயர், “அன்டோனியிட்டா இபார்ஸ்” (Antonieta Ibars) ஆகும்.

சிறுவயதிலிருந்தே எழைகளின்பால் தீவிர பற்று கொண்ட இவர், பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார். ஏழைகளின் நிலை கண்டு எப்போதுமே கவலை கொண்டிருந்தார்.

இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. எந்த துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார். தமது பத்தொன்பது வயதில் “பார்சிலோனா” (Barcelona) நகரில் ஆசிரியை பணி செய்கையில், துறவு வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்படுவதாக உணர்ந்தார்.

கி.பி. 1868ம் ஆண்டு, “பர்கோஸ்” (Burgos) நகருக்கு அருகேயுள்ள “எளிய கிளாரா” (Poor Clares) மடத்தில் இணைய விண்ணப்பித்தார். ஆனால் அப்போதிருந்த ஆன்மீகத்துக்கேதிரான சட்டங்கள், அவரை சபையில் இணைய தடுத்தன. அதனால், பின்னர் கி.பி. 1870ம் ஆண்டு, “மதச்சார்பற்ற கார்மேல்” (Secular Carmelites) சபையில் உறுப்பினராக இணைந்தார்.

அவரது தந்தையின் இறப்பு மற்றும் அவரைப் பீடித்த ஒரு கடுமையான நோய் காரணமாக, அவர் நீண்ட காலத்திற்கு தமது வீட்டிலேயே தங்க நேரிட்டது. பின்னர், தமது ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனைகளின்படி, பிராந்தியத்திலுள்ள முதியோரை அழைத்து வந்து சரியாக அவர்களை கவனிக்க ஆரம்பித்தனர். கி.பி. 1872ம் ஆண்டு, இதற்கான முதல் இல்லத்தை “பர்பாஸ்ட்ரோ” (Barbastro) என்னும் இடத்தில் தொடங்கினார். அவரது சொந்த சகோதரியான மரியா இதற்கு உதவினார்.

நாளடைவில் தன் விருப்பத்தை, தன்னுடைய ஆன்ம வழிகாட்டியிடம் தெரிவித்தார். அவர் காட்டிய வழியில் சென்ற தெரசா, கி.பி. 1872ம் ஆண்டு பார்பஸ்ட்ரோ (Barbastro) என்ற ஊரில், ஒரு துறவற சபையை தொடங்கினார். இச்சபைக்கு "கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரிகள்" (Little Sisters of the Abandoned Elderly) என்ற பெயரை சூட்டினார்.

கி.பி. 1873ம் ஆண்டு, மே மாதம், 8ம் தேதி, “வலென்சியா” (Valencia) நகரில் தமது சபையின் தலைமை இல்லத்தை நிறுவினார். சபையின் தலைமைப் பொறுப்பையும் தாமே ஏற்றார். தமது சபையின் சகோதரிகளிடம், ஏழைகளுக்காக தமது வசதிகளை தியாகம் செய்யுமாறு கற்பித்தார். கி.பி. 1887ம் ஆண்டு, திருத்தந்தை “பதின்மூன்றாம் லியோ” (Pope Leo XIII) சபைக்கான அங்கீகாரத்தை வழங்கினார்.

கி.பி. 1897ல், ஸ்பெயின் நாட்டில் காலரா (Cholera) நோய் பரவியது. இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட இவரும் இவரது சபையின் சகோதரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். இம்முயற்சிகளில் மிகவும் மனம் தளர்ந்த தெரேசா சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். மிகவும் தளர்ச்சியடைந்த தெரெசா, காசநோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு, கி.பி. 1897ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 26ம் தேதி “லிரியா” (Liria) நகரில் மரணம் அடைந்தார்.

ஆகஸ்ட் 25 :  நற்செய்தி வாசகம்நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.✠ மத்தேயு எழுதிய த...
24/08/2026

ஆகஸ்ட் 25 : நற்செய்தி வாசகம்

நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26

அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
-------------------------------------------------------------------------
25 ஆகஸ்டு/ செவ்வாய்

*அருள் ஊற்று*
இன்றைய நற்செய்தியும் நானும்:-

மத்தேயு 23:23–26
*தலைப்பு:* *“எதை விட்டுவிட்டோம்?”*

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களை கடுமையாகக் கண்டிக்கிறார். அவர்கள் தவறு செய்ததற்காக மட்டும் அல்ல; சரியானதைச் செய்துகொண்டிருந்தபோதும், மிக முக்கியமானதைத் தவறவிட்டதற்காக.
அவர்கள் காணிக்கையில் மிகவும் கவனமாக இருந்தார்கள். ஆனால் நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை விட்டுவிட்டார்கள்.
இதுதான் நமது வாழ்க்கையிலும் நடக்கிறது.
ஒரு மனிதன் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்கிறான். ஆனால் குடும்பத்தினருக்கு நேரம் கொடுக்க மறந்துவிடுகிறான்.
ஒருவர் ஆலயப் பணிகளில் மிகவும் ஈடுபடுகிறார். ஆனால் வீட்டில் இருப்பவரை அன்புடன் நடத்த மறந்துவிடுகிறார்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் மன அமைதியை இழந்துவிடுகிறார்.
அதனால் இன்று இயேசு நம்மிடம் கேட்கிறார்:
“நீ எதைப் பெறுவதற்காக ஓடிக்கொண்டிருக்கிறாய்?
அதற்காக எதை இழந்துகொண்டிருக்கிறாய்?”
சில நேரங்களில் வாழ்க்கையில் பெரியவற்றைப் பெறுவதற்காக ஓடும்போது, கடவுள் கொடுத்த சிறிய ஆனால் விலைமதிப்பற்ற பரிசுகளை நாம் இழந்துவிடுகிறோம்—குடும்பம், உறவுகள், நேரம், அமைதி, அன்பு.
இன்று நம் வாழ்க்கையை சிறிது நிறுத்திப் பார்ப்போம்.
நான் அதிகமாகப் பிடித்துக்கொண்டிருப்பது என்ன?
அதனால் நான் விட்டுவிட்டிருப்பது என்ன?
தேவையற்ற ஒன்றை விட்டுவிட்டு, முக்கியமான ஒன்றை மீண்டும் அணுகுவோம்.
“வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெறுவது வெற்றி அல்ல; முக்கியமானவற்றை இழக்காமல் வாழ்வதே உண்மையான வெற்றி.”

ஆமென்.

அருட்தந்தை அ. செங்கோல் CSSR
அருளகம், மதுரை,

ஆகஸ்ட் 25 :  பதிலுரைப் பாடல்திபா 96: 10. 11-12a. 12b-13 (பல்லவி: 13ab)பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர்...
24/08/2026

ஆகஸ்ட் 25 : பதிலுரைப் பாடல்

திபா 96: 10. 11-12a. 12b-13 (பல்லவி: 13ab)

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12a
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். - பல்லவி

12b
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

Address

Siluvaipatti
Tuticorin
628002

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 10pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Telephone

+919629590007

Alerts

Be the first to know and let us send you an email when St.Antony's Siluvaipatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Antony's Siluvaipatti:

Shortcuts

Share