God is Good All The Time

God is Good All The Time Expect great things from God,
Attempt great things for God...

11/04/2022

இன்றைய தியானம்(Tamil) 11-04-2022

தேவன் எங்கே?

‘’ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.” – மத்தேயு 27:46

இயேசு சிலுவையில் மொழிந்த நான்காம் வார்த்தை:
“கிறிஸ்டியன் & மிஷெனெரி அலைன்ஸ்’’ என்கிற உலகளாவிய மிஷனெரி இயக்கத்தை ஸ்தாபித்தவர் திரு. A.B சிம்சன். இவரது வாழ்க்கை சரிதையை A.W. டோசர் எழுதிய Wingspread என்கிற அருமையான புத்தகத்தில் வாசிக்கலாம். இரட்சிக்கப்பட்டு ஊழியம் செய்ய ஆரம்பித்த சிம்சனின் வாழ்வில், வளர்ச்சி மிக துரிதமாய் இருந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சரீர பெலவீனத்தோடு கூட, ஆவிக்குரிய இருள் போன்ற ஒன்று அவர் வாழ்வில் வந்தது. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற கதறல் அவர் உள்ளத்தில் இருந்தது. ஜெபம், வேதவாசிப்பு போன்ற எதுவும் அச்சூழலில் உதவவில்லை. இச்சோர்வின் சேற்றில் சிக்கிய அவர் திரும்ப எழ அநேக நாட்கள் ஆனது.

இப்படி தேவ பிரசன்னம் இல்லாமல், ஒருவேளை தேவன் இல்லையோ என்று தோன்றக்கூடிய இந்த நேரங்கள் கிறிஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியே என்று A.W.டோசர் எழுதுகிறார். குறிப்பாக தேவனை அளவுக்கதிகமாக நேசித்து அவருக்காய் ஏதாவது செய்கிறவர்கள் வாழ்வில் இது சகஜம் என்கிறார். நாம் நம் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் சாராமல் தேவனையே விசுவாசத்தில் சரர்ந்திருக்க படிக்க உதவும் தருணங்கள் இவை!

மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவையும் அதின் தன்மையையும் கொண்டாடும் புத்தகம், சங்கீத புத்தகம். சங்கீதம் 16:11ல், ’’உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்…பேரின்பமும் உண்டு’’ என்று பூரித்துக் கூறின தாவீது ராஜா, சங்கீதம் 22:1ல், “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறுகிறார். சபை சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால் கிறிஸ்தவ மாமனிதர்களில் அனேகர், இவ்வனுபவங்கள் தங்கள் வழ்விலும் இருந்ததை சாட்சியாக கூறுவர். தேவனுடைய முகம் மறைக்கப்படும் இக்கொடிய அனுபவத்தை நம் ஆண்டவராகிய, இயேசுகிறிஸ்துவும் சிலுவையில் அனுபவித்தார். சங்கீதம் 22:1ல் உள்ள வார்த்தைகளை சொல்லி அவரும் கதறினார். ஆகவே அவருக்கும் நம் அனுபவங்கள் புரியும்.

அன்பர்களே ! இதுபோன்ற ஆவிக்குரிய இருள் நம் வாழ்விலும் வரும் போது தேவனை விசுவாசித்து அமர்ந்திருப்போம். மற்ற விசுவாசிகளோடுள்ள ஐக்கியத்தில் தேவனுடைய முகத்தின் வெளிச்சம் சீக்கிரம் நம்மேல் பிரகாசிக்கும்.

09/04/2022

இன்றைய தியானம்(Tamil) 09-04-2022

அதோ, உன் தாய்

‘’…இயேசு... தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்” - யோவான்19:26

இயேசு சிலுவையில் மொழிந்த மூன்றாம் வார்த்தை:
இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மிகுந்த பொருளை உள்ளடக்கியது. பொதுவாக ஒருவர் இறக்கும் தருவாயில் தன்னுடைய குடும்பப் பொறுப்புகளை உரியவர்களிடம் ஒப்படைப்பர். தகப்பனாயிருந்தால் மனைவியிடமோ, அநேக பிள்ளைகள் இருந்தால் மூத்த மகனிடமோ மற்ற பிள்ளைகளைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைப்பார். அது போலவே நம் அருள்நாதர் இயேசுகிறிஸ்து, கணவனற்ற தன் தாயை பராமரிக்கும் பொறுப்பை அன்பின் சீஷனாகிய யோவானிடத்திலே கொடுத்தார். 33½ ஆண்டு கால உலகவாழ்விலே பிதா தனக்கு கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி முடித்தவர். அந்த கொடூரமான வேதனையின் மத்தியிலும் குடும்பத்தில் தனக்கு இருந்த பொறுப்பை கரிசனையோடு நிறைவேற்றி முடிக்கிறதைப் பார்க்கிறோம்.

உலகத்திலேயே யாருக்கும் கிடைக்காத பாக்கியம் மரியாளுக்கு கிடைத்திருந்தது. இறைமகன் இயேசுவை கர்ப்பத்தில் சுமந்து, பெற்று வளர்க்கும் பெரும் பாக்கியம்! ஆனாலும் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுதலாக, இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதை காண சகிக்காமல் கண்ணீர் விட்டாள். இனி தன்னை யார் கவனிப்பார்கள் என்ற எண்ணம் மரியாளுக்கு இருந்ததோ இல்லையோ, ஆனால் படுவேதனையின் மத்தியிலும் இயேசுகிறிஸ்துவுக்கு இருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சீஷர்களில் அநேகர் ஓடிவிட்டனர். யோவான் மட்டும் மரியாளின் அருகே நின்றுகொண்டிருந்தான். அவருடைய மார்பில் சாய்ந்துகொண்டிருந்த யோவானுக்கு தன் இருதயத்தின் பாரம் புரியும், அவரே தகுதியானவர் என்று மரியாளை ஒப்படைத்தார். பெற்றோரை பராமரிப்பதில் உலகத்திற்கு ஒரு முன்மாதிரி இயேசுகிறிஸ்துவே.

பிரியமானவர்களே! நமக்கும் இந்த பொறுப்பு உண்டு. அதை நாம் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள், திருமணம், வேலை என்று தூர இடத்திற்கோ, தேசத்திற்கோ சென்றுவிடுகின்றனர். பெற்றோரை பராமரிப்பது ஆசீர்வாதம் என்ற சத்தியத்தை ஏற்க மனதில்லை. சிலர் அவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களை முற்றும் மறந்து விடுகின்றனர். ஆசீர்வாதத்தோடு இணைந்துள்ள ஒரே கட்டளை, ‘’உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக’’ என்பதே! நாம் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி ஆசீர்வாதமான சந்ததியாய் இவ்வுலகில் வாழ்வோம்.

07/04/2022

இன்றைய தியானம்(Tamil) 08-04-2022

பரதீசில் பங்கு

“இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்” - லூக்கா 23:43

இயேசு சிலுவையில் மொழிந்த இரண்டாம் வார்த்தை:
கிரியைகளினால் அல்ல, கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை அடைய முடியும் என்பதற்கு வேதத்திலுள்ள சரியான எடுத்துக்காட்டு இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் ஒருவன். அவன் எந்த சபையையும் சேர்ந்தவனல்ல, கர்த்தரின் பந்தியில் பங்குபெற்றவனுமல்ல, எந்த ஊழியமும் செய்யவில்லை. ஊழியத்திற்காக பண உதவியும் செய்ததில்லை. ஆனால் அவனது வாழ்வில் கடைசி மணித்துளியில் அவனது உள்ளத்தில் உண்டான “விசுவாசம்” அவன் இரட்சிப்படையவும் பரலோகத்திற்கு செல்லவும் வழி திறந்தது. அவனது ஆவிக்குரிய வளர்ச்சி சில மணிநேரம் தான் என்றாலும் அது அவனை கிறிஸ்துவிடம் வழிநடத்தி, நரகத்தினின்று அவனை தப்பிக்கச்செய்தது.

இவன் ஒரு பொல்லாத மனிதன், ஒரு கொலைபாதகன்தான், மரணதண்டனை பெற்றவன்தான், இவனை பார்த்தவர்கள், “இனி இவனுக்கு இரக்கத்திற்கு இடமேயில்லை, காலம் கடந்து விட்டது” என நினைத்திருக்கலாம். ஆனால் அவனது வேண்டுகோளுக்கு இயேசுகிறிஸ்து உடனே பதிலளிக்கிறார். அவனோடு அன்பாக பேசுகிறார், அவனை முழுவதுமாக மன்னித்துவிட்டார். பாவங்களை முற்றிலும் கழுவினார். கருணையோடு ஏற்றுக்கொண்டார். இலவசமாக நீதிமானாக்கினார். தான் மரித்துக் கொண்டிருந்த அந்த வேளையிலும் கூட, ஒரு பாவிக்கு நித்திய ஜீவனை உறுதிப்படுத்தினார் கிறிஸ்து.

இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள் யாராயிருந்தாலும் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவேண்டாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு எப்படிப்பட்டவராயிருந்தாரோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார். உங்கள் தலையிலுள்ள முடியைவிட உங்கள் பாவங்கள் அதிகமாக இருந்தால் என்ன? தீய பழக்கங்களும் உங்களோடு கூடவே சேர்ந்து வளர்ந்திருந்தாலும் என்ன? இவை துக்ககரமானதுதான். இருந்தாலும் இன்னும் நீங்கள் நம்பிக்கை கொள்ளலாம். கிறிஸ்துவால் உங்களை குணப்படுத்த முடியும். புழுதியிலிருந்து உங்களை தூக்கமுடியும். மோட்சம் உங்களுக்கு அடைக்கப்படவில்லை. நீங்கள் தாழ்மையோடு உங்கள் ஆத்துமாவை அவரின் கரங்களில் ஒப்புவித்தீர்களானால் அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். அவர் மிகுந்த இரக்கமும், இளகிய மனதும் உடையவர். இப்போதே இயேசுவிடம் வாருங்கள்! நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

07/04/2022

இன்றைய தியானம்(Tamil) 07-04-2022

நாம் உணர்வுள்ளவர்களா?

“அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்…” - லூக்கா 23:34

இயேசு சிலுவையில் மொழிந்த முதலாம் வார்த்தை:
இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட காரணம் யார்? அல்லது எது? என்று சிந்தித்தால், ஏசாயா 53:5 ல் அதற்குரிய பதிலை காணலாம். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” ஆகவே நானும், நீங்களும் உட்பட இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறதற்கு காரணமாய் இருக்கிறோம். அதே நேரத்தில் இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிய போது, “பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று யாருக்காக பரிந்து பேசுகிறார்?

அன்றைக்கு வாழ்ந்த யூதர்கள், குறிப்பாக பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள்தான் இயேசு கிறிஸ்துவை திட்டமிட்டு தந்திரமாக சிலுவையிலறைந்தனர். யூதாஸ்காரியோத்துக்கு பணம் கொடுத்ததிலிருந்து பிலாத்துவை உடன்பட வைத்ததுவரை இவர்களே காரணம் என்பதை நாம் அறிவோம். தேவனைத் தேடி, வேத வசனங்களை ஆராய்கிற இப்பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசு கிறிஸ்துவின் காரியத்தில் தாங்கள்செய்தது நூற்றுக்கு நூறு சரிதான் என்று நினைத்தனர். அதனால் தான், “தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமலிருக்கிறார்கள்” என்று நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவிடம் இவர்களை மன்னிக்குமாறு ஜெபிக்கிறார்.

நம் ஆண்டவர் சிலுவையில் மொழிந்த மேற்கண்ட வார்த்தைகள் நமக்கு உணர்த்தும் கருத்து என்னவென்றால், நாம் நம்முடைய பார்வையில் நூற்றுக்கு நூறு சரி என்று எண்ணிச் செய்யும் சில விஷயம் கூட தேவனுடைய பார்வையில் நூற்றுக்கு நூறு தவறாயிருக்கலாம். இப்படிப்பட்ட காரியங்களை தேவன் நமக்கு தயவாய் மன்னிக்கிறார். இருப்பினும் நாம் இப்படி எந்த காரியங்களில் உணர்வில்லாமலும், அறியாமலும் இருக்கிறோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். “வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று சங்கீதகாரன் 139:24ல் ஜெபிப்பது போல ஜெபிக்கவேண்டும். குறிப்பாக நாம் செய்யும் எந்த காரியமானாலும் நம் அறிவின்படியல்ல, ஆண்டவரின் பார்வைக்கு சரியானதா என சிந்தித்து செயல்பட வேண்டும். இதை அறியக்கூடிய உணர்வுள்ள இருதயத்தை நாட வேண்டும். மேலும் வேதத்திலிருந்தும் மற்றவர்கள் மூலமாகவும் நம்முடைய குறைகளைக் கண்டறிந்து சரிசெய்ய பிரயாசப்படவேண்டும்.

05/04/2022

இன்றைய தியானம்(Tamil) 06-04-2022

என்னே ஓர் தியாகம்!

“...நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.” - 1 யோவான் 3:16

நம்மெல்லாருக்கும் மிக நன்றாகத் தெரிந்த ஒரு ஓவியம் “ஜெபிக்கும் கரங்கள்” (Praying Hands). நம்மில் நிறைய பேருக்கு அதன் பின்னுள்ள ஒரு மனதை உருக்கும் சம்பவம் உண்டு என்பது தெரியுமா? என்று தெரியவில்லை. 15ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குடும்பத்தில் 18 பிள்ளைகள். அப்பா ஒரு தங்க வேலை செய்பவர். பிள்ளைகளுக்கு அனுதினமும் சாப்பாடு கொடுப்பதே பெருங்கஷ்டமாக இருந்தது. இந்த நிலைமையில் ஆல்பிரட், ஆல்பர்ட் என்ற இரண்டு பிள்ளைகளுக்கும் நூரம்பர்க்கிலுள்ள ஒரு கலைக்கல்லூரியில் ஓவியக்கலை படிக்க ஆசை. தம் அப்பாவால் கண்டிப்பாக படிக்க வைக்க முடியாது என அறிந்திருந்தனர்.

ஆகவே இருவரும் ஒரு தீர்மானம் செய்து ஒரு நாணயத்தைப் “ பூவா, தலையா“ போட்டுப் பார்த்து தலை யாருக்கு வருகிறதோ அவர் முதலில் சென்று 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். அதற்கு பண உதவி செய்ய மற்றவர் அருகிலுள்ள சுரங்கத்தில் வேலை செய்ய வேண்டும். ஆல்பிரட்டிற்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர் படிக்கச் சென்றார். ஆல்பர்ட் 4 ஆண்டுகள் அபாயகரமான அந்த சுரங்க தொழில் செய்து தன் சகோதரன் படிப்பிற்கு பண உதவி செய்தார்.

4 ஆண்டுகள் கழித்து ஒரு சிறந்த ஓவியக் கலைஞராய் ஆல்பிரட் திரும்பி வந்த போது அதைக் கொண்டாடும் பொருட்டு குடும்பத்தினர் வரவேற்று விருந்தளித்து மகிழ்ந்தனர். விருந்தின் முடிவில் ஆல்பிரட் எழுந்து “அண்ணன் தாங்கள் நூரம்பர்க் சென்று படித்து வாருங்கள் நான் உங்களுக்கு பண உதவி செய்கிறேன்” என்றான். “தம்பி 4 ஆண்டுகள் வேலை செய்ததில் என் கை விரல்கள் எல்லாம் சிதைந்து ஆர்த்ரிடிஸ் என்ற எலும்பு சிதைவு நோய் வந்ததால் ஒரு சிறிய பிரஷ் அல்லது பேனா கூட பிடிக்க முடியாது“ என்று ஆல்பர்ட் கண்ணீர் மல்க கூறினான். அண்ணனுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக சிதைந்த கரங்கள் கூப்பியிருக்கும் படம் வரைந்தான். அது தான் உலகப்புகழ் பெற்ற “ஜெபிக்கும் கரங்கள்“ என்ற ஓவியம்.

நாமும் கூட நம் பாவங்களுக்காக உச்சி முதல் உள்ளங்கால் வரை காயமடைந்து, சிதைந்து சிலுவையில் ஆணிகள் அடிக்க ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூருவோம் “சிலுவை சுமந்த உருவம்“ என்று ஓவியம் வரைந்து சுவர்களில் தொங்க விடுவதாலல்ல, நம் உள்ளத்தை அவருக்குக் கொடுத்து, அநேகருக்கு அவர் அன்பை வெளிப்படுத்துவோமாக!
“ சிலுவை சுமந்த உருவம் சிந்தின ரத்தம் புரண்டோடியே!
நதி போலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டைவா!”

05/04/2022

இன்றைய தியானம்(Tamil) 05-04-2022

இரத்தத்தில் எழுதப்பட்டது

“நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக;” - கலாத்தியர் 6: 14

ஒரு பெரிய வாகன விபத்தில் அநேகர் சிக்கி உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர். தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. அந்த விபத்துக்குள்ளான வாகனத்தின் ஒரு இருக்கையில், ஒரு செய்தி எழுதி இருப்பதைக் கண்டனர். அது அவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அந்த விபத்தில் பாதிப்படைந்த ஒருவர், தான் இறந்து கொண்டிருப்பதை நினைத்து தன்னில் இருந்து வெளியேறும் இரத்தத்தை எடுத்து தனக்கு முன் இருந்த இருக்கையில் “எனது மனைவியையும், குழந்தைகளையும் அதிகமாக நேசிக்கிறேன்“ என்று எழுதி இருந்தார். ஒரு மனிதன் தன் குடும்பத்தின் மீது வைத்த அன்பைப் பார்க்கும் போதே நெகிழ்ச்சி அடைகிறோம். இயேசு கிறிஸ்து பாவிகளாகிய நம் மீது வைத்த அன்பை தன் இரத்தத்தையெல்லாம் சிந்தி வெளிப்படுத்தினாரே! எத்தனை பெரிய தியாகம்!

அப். பவுல் கலாத்தியர் நிருபத்தை முடிக்கும் போது கிறிஸ்துவுக்காக தன் வாழ்க்கையில் பட்டபாடுகளை மறைமுகமாக நினைத்து எழுதுகிறார்.அந்த மதத் தலைவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அடையாளமாக இருக்கிற அந்த மத சடங்குகளை விட இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமும் உயிர்தெழுதலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று போதித்ததினால் அநேக முறை தண்டிக்கப்பட்டார். பவுல் தன்னுடைய பாதுகாப்பிற்காக சிலுவை மரணத்தை திரித்துக் கூற விரும்பவில்லை. தனது சொந்த வாழ்க்கையை சிலுவைப் பாதையில் இணைத்து, இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம் தேவன் நம் மீது வைத்த அன்பை எழுதி விட்டார் என்று வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக அறிவித்தார்.

பிரியமானவர்களே! நமது நற்கிரியைகள், நீதி எல்லாம் அழியும் கந்தை என அறிவோம். கிறிஸ்து நம்மீது வைத்த அன்பை வெளிப்படுத்த சிலுவையில் இரத்தம் சிந்தினார். அந்த கல்வாரியின் காட்சியை கண்டோராக, அவரது அன்பை சக மனிதர்களிடம் வெளிப்படுத்தி வாழுகின்ற வாழ்க்கை நாம் வாழவும், அவருக்காக நாம் அனுபவிக்கும் பாடுகளை சகித்துக்கொள்ளவும் தீர்மானிப்போம். கிறிஸ்து நம்மை ஆளுகை செய்ய அர்ப்பணிப்போம். கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்போமாக. ஆமென்.

04/04/2022

இன்றைய தியானம்(Tamil) 04-04-2022

ஒரு டம்ளர் பால்

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;… “ - மாற்கு 14:8
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேத பகுதியில் ஒரு ஸ்திரீ இயேசுவின் தலையில் விலையுயர்ந்த தைலத்தை ஊற்றும் சம்பவத்தை வாசிக்கிறோம். அவள் அதை செய்ததும் சுற்றியிருந்தவர்கள் அவளைக் குறித்து முறுமுறுக்கின்றனர். அப்பொழுது இயேசு, இவள் என்னிடத்தில் “நற்கிரியையைச்” செய்தாள் என்று சொல்லி அவளை பாராட்டுகின்றார். விலை மதிப்புமிக்க தைலம். அவள் இயேசுவை விலையேறப் பெற்றவராகக் கண்டு, அவர்மேல் கொண்ட அன்பினால் அதை செய்தாள்.

இன்றைய தினத்திலே நம்முடைய வாழ்வை நாம் சற்று ஆராய்ந்து பார்போம். ஆண்டவர் நம்மைக் குறித்து நற்கிரியை செய்கிறோம் என்று சொல்லத்தக்கதாக இருக்கின்றோமா? நம்மால் இயன்றதை ஆண்டவருக்கு செய்கின்றோமா? நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். ஒரு வேளை என்னால் எண்ண செய்ய முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சில நற்கிரியைகள் அனைவரும் செய்யக்கூடியவை. உதாரணமாக பட்டினியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கலாம், உடையின்றி இருப்பவர்களுக்கு எளிய உடைகளை வாங்கிக் கொடுக்கலாம், டியூசன் எடுக்கலாம், நோயில் இருப்பவர்களை சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். இப்படி பல உள்ளன.

ஒருமுறை ஒரு தாயார் ரோட்டில் மிகவும் சோர்ந்து போயிருந்த ஒரு சிறுவனுக்கு ஒரு டம்ளர் பால் கொடுத்தார்களாம். பல நாட்கள் சென்ற பின் அந்த தாயார் வியாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அது ஒரு பெரிய தனியார் மருத்துவமனை, வெகு தொகை செலுத்த வேண்டும் என அந்தத் தாயார் எண்ணிக்கொண்டிருந்தர்கள். இறுதிநாள் சிகிச்சைக்குப் பின் பில் வந்தது. அதில் மொத்ததொகை என்ற இடத்தில் ”ஒரு டம்ளர் பால்” என எழுதப்பட்டிருந்தது. பின்பு தான் அவருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையின் மருத்துவர் அவர் ஒரு டம்ளர் பால் கொடுத்த அந்த சிறுவன் என்று.

ஆம் பிரியமானவர்களே! நாம் அளக்கும் அளவின் படியே நிச்சயம் மீண்டுமாய் தேவன் நமக்கு அளந்து தருவார். எனவே நற்கிரியைகளை செய்வோம்! இயன்றதை செய்வோம்!

02/04/2022

இன்றைய தியானம்(Tamil) 02-04-2022

பத்து ஒழுங்குகள்

“சகலமும், நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” - 1கொரி 14:40

இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜான்வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த பத்து ஒழுங்குகளை இன்று காண்போம்.

1. ஊக்கமும் சுறுசுறுப்பும் உள்ளவனாயிரு. ஒரு போதும் சும்மாயிராதே. உன் கரங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டிருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தை செலவிடாதே.

2. எதிர்பாலருடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமானதாகவும், குறுகிய நேரமுடையதாகவும் இருக்கட்டும். முக்கியமாக இளம் வயதிலுள்ளோரிடம் நீ சம்பாஷிக்கையில் மிகவும் ஞானத்தோடு நடந்துகொள்.

3. “கர்த்தருக்குப் பரிசுத்தம்“ என்பதே உன் வாழ்வின் சட்ட வாக்கியமாய் இருக்கட்டும். எல்லா வெதுவெதுப்பையும், கேலி பேசுதலையும் முட்டாள்தனமான பேச்சையும் உன்னை விட்டு அகற்று.

4. கிறிஸ்துவுக்குள் உன்னை விட அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்துவிடாதே.

5. எந்த மனிதனைக் குறித்தும் தீமையானதை பேசாதிரு. உன் வார்த்தைகள் கேன்சரைப் போல அரித்துப்போடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்.

6. யாரிடமாவது தவறைக் கண்டால் உடனடியாக நேருக்குநேர் சுட்டிக் காட்டு. உன் மனதிலிருந்து பகை என்னும் நெருப்பை மிகச் சீக்கிரம் எடுத்துப் போடு.

7. பாவத்தைத் தவிர வேறு எதற்கும் வெட்கப்படாதே.

8. அழியும் ஆத்துமாக்களைக் காப்பதே உன் தலையாய கடமை. எனவே இதற்காக நீ செலவு செய்வதுடன் செலவு செய்யப்படவும் ஆயத்தமாயிரு.

9. எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய். எல்லாவற்றிலேயும் ஒழுங்கை கடைபிடி. அவைகளைத் தேவ கோபாக்கினைக்கும் சபையின் கட்டுப்பாட்டுக்கும் பயந்து அல்ல, மனசாட்சியினிமித்தம் பற்றிக்கொள்.

10. பல தடைவைகள் பிரசங்கிப்பது மட்டும் உன் கடமையல்ல, எத்தனை ஆத்துமாக்களை மீட்க முடியுமோ அத்தனைபேரையும் மீட்டு அவர்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்து.

01/04/2022

இன்றைய தியானம்(Tamil) 01-04-2022

கிறிஸ்துவின் பாடுகளில் தேவ அன்பு

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத்… தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” - யோவான் 3:16

1963ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்து நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி போட்டியிட்டார். ஒருநாள் தேர்தல் கூட்டம் ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்த போது அவரும் சுட்டுவீழ்த்தப்பட்டார். அவர் இரத்த வெள்ளத்தில் மிகுந்த வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. அந்த நேரத்திலும் தன்னை சூழ்ந்திருந்த நண்பர்களை தொட்டுப் பார்த்து எல்லோரும் பத்திரமாக இருக்கிறீர்களா? என்று கேட்டாராம். எத்தனை கரிசனை பாருங்கள். சில நிமிடங்களில் அவரும் மரித்து விட்டார். உலக மனிதரான அவரே இவ்வளவு அன்பு கொண்டிருப்பாரானால், உங்களையும் என்னையும் உண்டாக்கின, வானத்தையும் பூமியையும் படைத்த பிதாவாகிய தேவனுடைய அன்பு எவ்வளவு பெரியது என்பதை உணர்த்துவதுதான் இயேசுகிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகள்!

இயேசு கிறிஸ்து என்ன பாடுகள் பட்டார் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போமானால் அவர் நமக்காக வாரினால் அடிக்கப்படும்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். ரோமர்கள் தண்டனை கொடுப்பதற்காகப் பயன்படுத்திய வாரின் நுனியில் ஆணி, சிறு இரும்பு குண்டு இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அடியின் போதும் சதையைப் பிய்த்துக் கொண்டுவரும். அவரது முதுகு உழுத நிலம் போல ஆயிற்று. முட்கிரீடத்தை தலையில் வைத்து அடித்தார்கள். தலையில் வைக்கப்பட்ட கூரான முட்களால் பின்னப்பட்ட முட்கிரீடம் சித்திரவதையின் உச்சகட்டத்தை காண்பித்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இயேசு கிறிஸ்து காயப்படுத்தப்பட்டார்.

பிரியமானவர்களே! நாம் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், வியாதியிலிருந்தும் மீட்கப்படும்படியாக நமக்காக சிலுவையில் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் இத்தனை பாடுகளுக்கும் காரணம் பிதாவாகிய தேவன் நம்மீது கொண்ட அன்பு மட்டுமே! இயேசு கிறிஸ்துவின் பாடுகளுக்கு முன்னால் நம்முடைய பாடுகளெல்லாம் மிகவும் சொற்பம். இயேசு கிறிஸ்து பாடுகளை சகித்துக் கொண்டதினிமித்தம் பிதாவின் அன்பை அறிந்து கொள்ள முடிகிறது. அதுபோல நமக்கு நம்முடைய குடும்பத்திலிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ பாடுகள் வரும்போது அதை நாம் சகித்துக் கொள்ளும்போது, அதன்மூலம் கிறிஸ்துவின் அன்பை அவர்களும் அறிந்து கொள்வார்கள். பாடுகளை சகித்துவாழ நம்மை அர்ப்பணிப்போம். ஆண்டவருடைய அன்பை அறிவிப்போம்!

30/03/2022

இன்றைய தியானம்(Tamil) 31-03-2022

பட்சத்தில் வருவார்கள்

“…எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.” - ஏசாயா 54:15

ஒரு ஊரில் பணபலமும் , அதிகாரபலமும் உள்ள ஒரு மனிதர் இருந்தார் . அவர் தன் மூத்த சகோதரனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் விரோதமாக செயல்பட்டு அவர்கள் குடும்பத்திற்கு தீமையான காரியங்களை செய்து கொண்டே வந்தார். அவர்களை அவமானப்படுத்துவது, அவர்களிடம் காரணமில்லாமல் சண்டை போடுவது, அவர்களுக்கு விரோதமாய் காரியங்களை செய்ய தன்னுடைய ஆட்களிடம் பணம் கொடுத்து நற்பெயரை கொடுப்பது போன்ற பல காரியங்களை பல வருடங்களாய் செய்து கொண்டே வந்தார். காரணம் அவரை விட யாரும் பெரிய அளவில் வந்துவிடக் கூடாது வசதி படைத்தவர்களாய் மாறிவிடக் கூடாது என்பதற்காக! ஆனால் வருடங்கள் உருண்டோடின. அவர் வியாதிப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிட்டார் . பின்பு தன் தவறை உணர்ந்து தன் மூத்த சகோதரனிடம் வந்து நான் உங்களுக்கு விரோதமாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு விரோதமாகவும் அநேக தீமைகளைச் செய்துவிட்டேன் என்று சொல்லி என்னை மன்னித்துவிடுங்கள் என்றார் . அந்த மூத்த சகோதரன் தேவன் உன் குற்றத்தை மன்னிப்பாராக என்று சொல்லி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

இதைப்போல் வேதாகமத்தில் ஈசாக்கு ஆதி. 26:14 வசனத்தில் பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு ஆதி 26: 15 ல் துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள். இப்படி இரண்டு முறை வந்து ஈசாக்கின் வேலைக்காரிடம் வாக்குவாதம் பண்ணினார்கள். ஆனால் இவர்கள் அதைவிட்டு மூன்றாவது துரவையும் தோண்டினார்கள் இப்போது வாக்குவாதம் செய்யவில்லை. இப்படி ஈசாக்குக்கு விரோதமாக பெலிஸ்தர் பகைத்து தீமையான காரியங்களைச் செய்து வந்தார்கள். ஆனால் பின்பு ஆதி 26:28-29 வசனத்தில் ஈசாக்கிடம் வந்து கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றும் நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவர் என்றும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தார்கள்.

என் அன்பு சகோதர சகோதரிகளே! ஒரு வேளை உங்களுக்கும் கூட இதைப்போல் காரணமில்லாமல் சிலர் உங்களுக்கு விரோதமாக காரியங்களை செய்யலாம், பேசலாம் , பயப்படாதேயுங்கள் ! கலங்காதிருங்கள் ! நீங்களும் ஈசாக்கைப் போன்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சண்டையிடவேண்டாம் . கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்றும் உங்களை ஆசீர்வதிக்கிறார் என்றும் அவர்கள் கண்டு உங்களிடம் வருவார்கள். உங்கள் பட்சமாவார்கள். உங்களைக்கொண்டு அவர்களை ஆசீர்வதிப்பார். ஆமென்

30/03/2022

இன்றைய தியானம்(Tamil) 30-03-2022

காண்கிற தேவன்

‘’…தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்” - ஆதியாகமம் 16:13

பிரான்ஸ் தேசத்தின் பிரம்மாண்டமான தேவாலயத்திலிருந்து ஒரு சிற்பிக்கு வேலை கொடுக்கப்பட்டது. அது என்னவென்றால், கானா ஊர் கலியாண வீட்டில் நடந்த அற்புதத்தை பளிங்கு கற்களிலே செதுக்கும்படியான வேலை கொடுக்கப்பட்டது. அந்த சிற்பி இரவும் பகலும் உறங்காமல் செதுக்கினார். இதனை அவர் மகன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு சிற்பியும் அவரது மகனும் சென்ற போது 20 அடி உயரத்தில் சிற்பி செதுக்கிய சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. உடனே அவரது மகன் இவ்வளவு உயரத்தில் வைக்கவேண்டுமென்றால் சாதாரணமாக செய்திருக்கலாமே என்றான். சிற்பி மகனின் தோளைத் தட்டிக் கொடுத்து, “மகனே, இதை ஜனங்கள் பார்க்கிறார்களோ இல்லையோ என் தேவன் என்னைப் பார்க்கிறார். எனக்குக் கொடுத்த வேலையை நான் மனப்பூர்வமாய், நன்றாக செய்துவிட்டேன்” என்றார்.

ஆபிரகாமுக்கு குழந்தை இல்லாததால் சாராள் தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரைக் கொடுக்கிறாள். ஆகார் கர்ப்பவதியானாள். கர்ப்பவதியானதும் சாராள், ஆகார் என்னை அற்பமாய் எண்ணுகிறாள் என்று சொல்லி ஆகாரை மிகவும் கடினமாய் நடத்தினாள். ஆகாரினால் இதனைத் தாங்க முடியாமல் வேதனைப்பட்டு இந்த பாடுகளிலிருந்து தப்பிக்க எண்ணி தன் எஜமாட்டியை விட்டு ஓடினாள். அப்பொழுது ஒரு தூதன் வனாந்தரத்திலே சூருக்குப் போகிற வழியில் அவளை சந்தித்தார் . உடனே ஆகார் , கர்த்தரை நானும் கண்டேன் என்று சொல்லி “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று பேரிட்டாள்.

ஆம் பிரியமானவர்களே! என்னைக் காண ஓருவரும் இல்லையென அங்கலாய்த்து உள்ளீர்களோ? கவலையோடு , துக்கத்தோடு இந்த சூழ்நிலையிலிருந்து எவ்வாறு தப்புவது என கலங்கியிருக்கிறீர்களோ? ஆகாரைக் கண்ட தேவன் இன்று உங்களையும் காண்கிறார், மனிதர்கள் உங்களை அற்பமாய் எண்ணினாலும் , புறக்கணியாத கர்த்தர், உங்களைக் கொண்டு செய்யும் திட்டம் பெரியது . அது வரை பொறுமையாய் இருங்கள். அவர் உங்களைக் காண்கிறவர் என்பதை மறவாதீர்கள் . காண்கிற தேவனின் கரத்தில் அர்ப்பணித்து காத்திருங்கள். தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.

Address

Tuticorin
628103

Website

Alerts

Be the first to know and let us send you an email when God is Good All The Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share