12/09/2026
நீதியின் முக்கியத்துவம்!
நாம் நீதிக்கு அடிமையாகும்படிக்கே நம் பாவத்திலிருந்து நமக்கு மன்னிப்பு, விடுதலையைக் கொடுக்கிறார் தேவன் என்று நாம் பார்த்தோம்.
அப்படியானால், நீதி தேவனுக்கு எந்த அளவு முக்கியம் என்பதைக் குறித்து தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
முதலாவது பார்த்தோம் என்றால், நீதியினால் தான் தேவனுடைய சிங்காசனமே நிலை பெற்றிருக்கிறது என்று பார்க்கிறோம். "நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்" (சங் 97:2) என்று வேதம் கூறுகிறது. ஒருவேளை, தேவன் நீதி தவறினால், அவருடைய சிங்காசனமே உடைந்து விழுந்து விடும்; தேவனே சிங்காசனத்தில் வீற்றிருக்க முடியாதது போல ஆகிவிடும்.
அடுத்ததாகப் பார்த்தோம் என்றால், பரலோகத்திலே பரிசுத்தவான்களுக்கு (நமக்கு) என்னத்தினால் செய்த ஆடை கொடுக்கப்படுகிறது? கதர் ஆடையா? இல்லை, பட்டு ஆடையா? இல்லை வேறு எதினாலாவது செய்யப்பட்ட ஆடையா?!
வேதம் கூறுகிறது நீதியினால் செய்யப்பட்ட ஆடை என்று. ஆம், "அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே" (வெளி 19:8) என்று வாசிக்கிறோம்.
அந்த வேத பகுதியை முழுமையாக வாசித்தால் இப்படியாகக் கூறுகிறது, "7.நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக் குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 8.சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக் கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே" (வெளி 19) என்று.
ஆகவே தான் பரலோகத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறின ஒரு உவமையிலே நீதியாகிய இந்த "கல்யாண வஸ்திரத்தைக்" குறித்து இப்படியாகக் குறிப்பிடுகிறார். "2.பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 11.விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
12.சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 13.அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்" (மத் 12) என்று வாசிக்கிறோம்.
ஏனெனில், இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமான மெல்கிசேதேக்கைக் குறித்து "நீதியின் ராஜா" என்று வேதம் கூறுகிறது, "2. ..இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம். 3.இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்" (எபி 7) என்று.
ஆம், இயேசு கிறிஸ்துவுக்கு பெயரே "நீதியின் ராஜா" தான். ஆகவே தான் (இயேசு கிறிஸ்துவைப் போல போராட்டங்களை சகிக்கிற) நமக்கும் "நீதியின் கிரீடத்தை" நாம் பரலோகம் போகும் போது சூட்டுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் அதைக் குறித்து இப்படியாகக் கூறுகிறார், "7.நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். 8.இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்" (2 தீமோ 4) என்று.
அது மாத்திரமல்ல, பரலோகத்தில் நாம் வாழப் போகும் புதிய பூமியை வேதம் அடையாளப்படுத்தும் போது கூட "நீதி வாசம் செய்யும் புதிய பூமி" என்று வேதம் குறிப்பிடுகின்றது. "அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்" (2 பேது 3:13) என்பதாக.
ஆம் பிரியமானவர்களே, நாம் வாழுகின்ற இந்த பூமி அநீதி வாசம் செய்யும் பூமியாக மாறி விட்டது. இந்த பூமியில் நீதி நியாயம் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்று நாமே அனுபவப்பூர்வமாக அறிந்திருப்போம். ஆங்கிலத்திலே அதனை ஒரு பழமொழி போலவே இப்படியாகக் கூறுவார்கள், "The world is not fair" என்று.
ஆகவே இந்த பூமியில் நாம் நியாயத்தை அதிகம் எதிர்பார்ப்பது நம்முடைய முட்டாள்தனம் என்றே தெரிகிறது. ஏனெனில், என்னுடைய பார்வையில் தேவனும் இந்த அநீதி நிறைந்த பூமியைக் கைவிட்டார் என்றே தெரிகிறது. இந்த பூமியை அவர் சரிப்படுத்த விரும்பவில்லை. ஆகவே தான் இந்த பூமியில் இன்னும் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றது.
"கடவுள் ஏன் உலகில் நடக்கும் கொடுமைகளை எல்லாம் தடுக்கவில்லை" என்று சிலர் கேட்பதற்கான பதிலாக இது இருக்கிறது. தேவனுடைய நிலை இதில் தெளிவாகிறது.
இந்த அநீதி நிறைந்த பூமிக்கு மாற்றாகத் தான் "நீதி வாசமாயிருக்கும்" புதிய பூமியைக் கொண்டு வருகிறார். அந்த புதிய பூமிக்குள் நீதிமான்களுக்கு மட்டுமே நுழைவு உண்டு என்று வேதம் கூறுகிறது.
தேவன் இந்த பூமியை திருத்த முயற்சிக்கவில்லை என்பதால் தான் இறுதியாக இப்படியாகக் கூறி வேதத்தை முடிக்கிறார், "11.அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12.இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" (வெளி 22) என்று.
இதனைத் தான் இயேசு கிறிஸ்து இப்படியாக ஒரு உவமையில் கூறினார், "27.வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
28.அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். 29.அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும் போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள்.
30.அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்" (மத் 13) என்று பார்க்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே, ஒருவேளை இன்று நீங்கள் ஆச்சரியப்படலாம், அநியாயம் செய்பவர்கள் இந்த பூமியில் நன்றாகத் தானே இருக்கிறார்கள் என்று. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள் - களைகளை அறுப்பு நாள் மட்டும் தேவன் தொந்தரவு செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்; இறுதி நாளில் தான் அதன் பலன் வரும் என்று.
இன்று நீங்கள் களையா? கதிரா? உங்கள் முடிவு என்ன?
இந்த பூமியில் நாம் (கோதுமை) கதிராக இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம். அதனைத் தான் வேதம் இப்படியாகக் கூறுகிறது, "10.தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, 11.நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்" (பிலி 1) என்று.
வேத வசனம் கூறுகிறது இயேசு கிறிஸ்துவினால் வருகிற "நீதியின் கனிகளால்" நாம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று. அப்படியானால், அதற்கு என்ன செய்ய வேண்டும்?!
வேதம் கூறுகிறது அதற்கு நாம் "நீதியின் வசனத்தில்" நடக்க பழக வேண்டும் என்று. ஆம் பிரியமானவர்களே, நாம் வேத வசனத்தை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று.
ஏனெனில், "16.வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17.அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோ 3) என்று வேதத்திலே பார்க்கிறோம்.
வேத வசனங்கள் நமக்கு நீதியைப் படிப்பிக்குதலுக்கு ஏற்றதாக இருக்கிறது. அதனை தேவனே மோசே, பேதுரு, பவுல், யோவான், மத்தேயு போன்ற அநேக பரிசுத்தவான்களை தமது ஆவியினால் நிரப்பி, நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆகவே, அவிசுவாசிகள் சிலர் வாதாடுவது போல மனிதர்களால் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல வேதம். தேவனால், தேவ ஆவியால் மனிதர்களைப் பயன்படுத்தி நமக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது.
ஆகவே தான் வேத வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. நாம் வேதத்தை வாசிக்கும் போது தேவனுடைய ஆவியும் ஜீவனும் நமக்குள் இறங்குவதை உணரலாம். என்னுடைய அனுபவமும் அதுவே. வேதத்தை நாம் அதிகமாய் வாசிக்க வாசிக்க ஒரு வல்லமை, அக்கினி நம்மை நிரப்புவதை உணரலாம். வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட அநேக தேவ ஊழியர்களின் வல்லமையின் இரகசியம் - அதிகமாய் வேத வசனத்தை வாசிப்பதே, தியானிப்பதே.
வேத வசனமே நமது ஆவிக்கான உணவு. எப்படி ஒரு கறி பிரியாணி சாப்பிட்டதும் மிகவும் தெம்பாக நமது சரீரம் உணருமோ அது போலத் தான் வேத வசனத்தை வாசிக்கும் போது நமது ஆவி பலமடையும். ஆகவே தான் இயேசு கிறிஸ்து "ஜீவ அப்பம் நானே" என்று வார்த்தையாகிய தம்மைக் குறித்துக் கூறினார்.
என்னை மிகவும் தொட்ட ஒரு வேத சம்பவம் இது, "இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்" (அப் 10:44) என்பது.
ஒவ்வொரு முறை நான் செய்திகளை எழுதி அனுப்பும் போது இந்த வேத வசனத்தைச் சொல்லி ஜெபித்தே அனுப்புவேன். ஆம், அந்த பரிசுத்த ஆவியின் பலத்தினால், வல்லமையினாலே தான் நாம் வாசித்த, கேட்ட, வேத வசனத்தின்படி சாட்சியாக வாழ முடியும். அந்த வேத வசனங்கள் நம் உள்ளத்தில் கிரியை செய்ய முடியும்.
ஆகவே நாம் நீதியின் வசனத்தில் பழக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. "12.காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
13.பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்" (எபி 5) என்று. ஆம், வேத வசனங்களை அறியாதவர்களை ஒன்றும் தெரியாத ஒரு குழந்தையாக வேதம் பார்க்கிறது.
ஒருவேளை, வேதம் முழுமையாக இதனை விளக்கும் என்றால், கொஞ்சம் வேதத்தை அறிந்து நடப்பவர்களை ஆரம்பப் பள்ளி மாணவர்களாகக் கருதும். இன்னும் கொஞ்சம் அறிந்தவர்களை மேல்நிலைப் பள்ளி மாணவர்களாகக் கருதும். இன்னும் கூடுதலாக அறிந்து நடப்பவர்களை கல்லூரி மாணவர்களாகக் கருதும். ஏறக்குறைய முழுமையாகக் கடைபிடிப்பவர்களைத் தான் ஒரு முதிர்ச்சி அடைந்த பெரிய மனிதராகக் கருதும்.
இதனை அடுத்த வசனம் கூறுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம். "பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்" (எபி 5:14) என்று.
ஆம், இயேசு கிறிஸ்துவும் வேத வசனங்களை கையாள்வதில் பூரண வயதுள்ளவராக இருந்தபடியினால் தான் வேதவசங்களைக் கூறியே பிசாசின் சோதனைகளை ஜெயித்தார் என்று வேதத்திலே பார்க்கிறோம்.
ஆம், யோவான் ஸ்நானனிடம் கூட நீதியின் வசனங்களை நிறைவேற்றுவதைக் குறித்து இயேசு கிறிஸ்து இப்படியாகக் கூறினார், "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்" (மத் 3:15) என்று.
ஆம் பிரியமானவர்களே, இன்று நீங்கள் வேதவசனங்களை நிறைவேற்றுவதில் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? குழந்தையைப் போலா? இல்லை, ஒரு மாணவராகவா? இல்லை பூரண வயதுடையவராகவா?
இன்றைக்கு அநேகக் கிறிஸ்தவர்களுக்கு வேதம் அந்நிய காரியமாகப் போய் விட்டது. வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை ஆராதனையில் போதகர் கொடுக்கும் பிரசங்கங்கள் மூலம் மட்டுமே வசனங்களை அறிந்து கொள்வது, இன்னும் சிலர் மற்ற கூடுகைகளிலும் ஆவிக்குரிய பொதுக் கூட்டங்களிலும், சமூக ஊடங்களில் தேவ ஊழியர்கள் பேசும் செய்திகளின் மூலம் மட்டுமே வசனங்களை அறிந்து கொள்வது என்று தங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை நடத்துகிறார்கள்.
அது நல்லது தான். தவறு கிடையாது. கேட்க வேண்டும். ஆனால், அவைகள் மட்டுமே நமக்குப் போதாது. அவர்கள் பற்ற வைக்கிறார்கள், ஆனால், நாம் தான் தொடர்ந்து எரிய வேண்டும்.
வேதம் என்ன கூறுகிறது தெரியுமா? நாம் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று. எப்படி? "கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்" (ஏசா 34) என்று.
அப்படியானால், நாம் கர்த்தருடைய வேதத்திலே கூறப்படும் காரியங்களை ஆழமாய் தேடி வாசிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இணைந்து கொண்டு நமக்கு ஒரு ஆசிரியராக இருந்து அவைகளைக் கற்றுக் கொடுக்கிறார்.
என்னுடைய செய்திகள் அனைத்தும் இப்படித் தான் தேவகிருபையால் எழுதப்படுகிறது. தேவன் மனதில் போடும் காரியத்தைக் குறித்து வேதத்திலே தேடி வாசித்து, பின்பு பரிசுத்த ஆவியானவர் அவைகளை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்துக் காண்பிப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இந்த செய்தியே அதற்கு ஒரு சாட்சி தான்!
அதுமாத்திரமல்ல, வேத வசனங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவர், அவைகளில் நடக்கவும் நம்மை வழிநடத்துகிறார். வேதம் கூறுகிறது, "9.அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும் போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா?
11.எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்" (எபி 12:11) என்று.
ஆம் பிரியமானவர்களே, நாம் நீதியின் கனிகளை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றால், நாம் நீதிமானாக வாழ வேண்டும் என்றால் நாம் நீதியின் வசனத்திற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் நாம் தவறும் போது நம்மை சிட்சித்து (கண்டித்து, தண்டித்து) தேவன் நம்மை பழக்குவிக்கிறார்.
ஏனெனில், வேதம் கூறுகிறது, "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவ வழி" (நீதி 6:23) என்று.
ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.
முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/