01/09/2026
ரெகொபோத் :
சீயோன் குமாரத்தி(பகுதி 7)
ரெகோபோத் என்பதற்கு “விடுதலை” என்றும் பொருள் :
என் பிரியமானவர்களே,
நீங்கள் இனி அடிமைத்தனத்திலோ அல்லது எதிரியால் கட்டுப்படுத்தப்பட்டோ இருக்க மாட்டீர்கள். நீங்கள் விடுதலையாவீர்கள்.
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.சங் 146:7
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:36
ஒடுக்கப்பட்டு வாழ்ந்த நமக்கு கிடைக்க போகும் நியாயம்
கட்டுண்ட நமக்கு குமாரன் கொடுக்கப் போகும் விடுதலை ஆமேன் என்று சொல்லி ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.சகரியா 9:11
புதிய உடன்படிக்கையின் இரத்தம், இயேசுவின் இரத்தம், உங்களைப் பாவத்திலிருந்து மட்டுமல்ல, பாவங்களின் விளைவுகளிலிருந்தும் விடுவிக்கிறது. ரெகோபோத்! இயேசுவின் நாமத்தில் நமக்கு விடுதலை உண்டு.ஈசாக்கும் அவனுடைய ஊழியர்களும், தங்கள் கிணறுகளைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்ட எதிரியிடமிருந்து விடுதலையடைந்தார்கள். நானும் சில எதிரிகளிடமிருந்து விடுதலை அடைந்து விட்டேன், ஆனாலும் எனக்கான சில நியாயங்களுக்காய் கண்ணீரோடுக் காத்திருக்கிறேன்.
இறுதியாக இந்த முறை, அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டினார்கள், அங்கே எந்தவிதமான வாக்குவாதமோ பகைமையோ இருக்கவில்லை. தேவன் தம்முடைய சத்துருவை அவரோடு சமாதானமாயிருக்கச் செய்தார் .
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.நீதிமொழிகள் 16:7
உங்கள் முன்னேற்றத்திற்கு எதிரான ஒவ்வொரு வாதத்தையும் தேவன் அடக்குகிறார், உங்கள் வளர்ச்சிக்கு எதிரான எந்தப் பகைமையையும்
தேவன் நிறுத்துகிறார். சத்துருவின் கிரியைகளையும் மீறி, நீங்கள் செழிப்படைந்து, வெற்றி பெற்று, மேன்மை அடைவீர்கள்! அல்லேலூயா!!!!
தொடரும்......