12/06/2021
தூய வனத்துச் சின்னப்பரை நோக்கி செபம்
எல்லாம் வல்ல இறைவா! வனத்திலே வியப்புக்குரிய தவ வாழ்க்கை நடத்தி உமக்கு ஊழியம் புரியும் வரத்தை தூய வனத்துச் சின்னப்பருக்கு அளித்தீரே! நாங்கள் எங்களையே ஒறுத்து அனைத்துக்கும் மேலாக உம்மையே இடையறாது அன்பு செய்யுமாறு இப்புனிதரின் வேண்டுதலால் எங்களுக்கு அருள வேண்டுமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
துறவற வாழ்வின் முன்னோடியாக வாழ்ந்து காட்டிய எம் புனிதரே! தவத்தினை வாழ்க்கை நெறியாகவும் சிந்தனை நெறியாகவும் கொண்டவரே! உமது அசைக்கமுடியாத இறைநம்பிக்கையின் காரணமாக உமது பெயரால் இறையை நோக்கி எழுப்பப்படும் வேண்டுதல்கள் புதுமைகளாய் மலர்கின்றன என்ற உண்மையை உணர்ந்தவர்களாக இப்போது நாங்கள் கேட்கப்போகும் விண்ணப்பங்களைக் கண்ணோக்கியருளும். (வேண்டுதல்களை நினைவு கூறவும்) இந்த விண்ணப்பங்கள் எங்களுக்குக் கிடைக்கப் பெற்றால் நாங்கள் என்றும் இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். நாங்கள் கேட்டவை இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையது இல்லை என்றால் இதைவிட சிறந்ததொன்றை எங்களுக்கு பெற்றுத் தந்தருளும். இந்த எங்கள் மன்றாட்டுகளை தூய வனத்துச் சின்னப்பர் வழியாக பெற்றுத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.
(1 பர, 1 அரு, 1 திரி)
ஆமென்