08/12/2025
*✝️ காலை ஜெபம்*
"ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்".
(திருப்பாடல் 98 : 1-4)
அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகின்றேன், போற்றுகின்றேன், வாழ்த்துகின்றேன், ஆராதிக்கின்றேன், உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.
இறைவா! அகிலத்தையும் படைத்த ஆண்டவராகிய உமக்கு முன் தூசிக்கும் சமமான மனிதர்களாகிய எங்கள் மேல் நீர் கொண்ட அளவற்ற அன்பு, உமது படைப்புகளிலேயே நாங்கள் எவ்வளவு பாக்கியவான்கள் என்பதை அனுதினமும் நினைவூட்டுகின்றது. தந்தையே! உமது இரக்கப் பெருக்கத்தின் நிமித்தம், மனுக்குலம் உமது மீட்புத் திட்டத்தினால் தப்பிப் பிழைத்தது.
இனிய இயேசுவே! மனிதகுல மீட்பிற்கான அந்த மீட்புத் திட்டத்தில், மாசில்லாத, ஜென்ம பாவமில்லாத அமலோற்பவ அன்னையிடம், அன்பு மகனாகப் பிறந்தீரே! உமது தூய அன்னையை, எங்களுக்கும் தாயாக அடையாளம் காட்டினீர். நன்றி இயேசுவே!
எல்லாம்வல்ல தந்தையிடம், அமலோற்ப அன்னையின் இடைவிடா பரிந்துரையாலும், வேண்டுதல்களினாலும், பாவம் நிறைந்த இவ்வுலகம் இன்னும் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அமலோற்ப அன்னையே! படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
இறைவா! இன்று தேவகிருபையின் நேரத்தில், எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பும், அமலோற்ப அன்னையின் தாழ்ச்சியையும், இரக்க உள்ளத்தையும், தூய வாழ்வையும் எங்களுக்குத் தந்தருள்வீராக.
ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம், என்றென்றும் போற்றப்படுவதாக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணுலகில் இருக்கிற...(1)
அருள் நிறைந்த...(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*