20/03/2016
இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920… குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920.
1920ம் ஆண்டு, அமெரிக்காவின் மூன்று பகுதிகளில் குருத்தோலை ஞாயிறன்று வீசிய சூறாவளிக் காற்றினால் ஏறத்தாழ 400 பேர் இறந்தனர்; 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதேபோல், 1965ம் ஆண்டிலும், அமெரிக்காவின் சில பகுதிகளில், குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்ற வேளையில், சூறாவளி வீசியதாகச் சொல்லப்படுகிறது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன. தவக்காலத்தின் ஆரம்பம் வசந்த காலத்துடன் இணைந்து வருவதை நாம் சிந்தித்ததுபோல், தவக்காலத்தின் இறுதி நாட்களை சூறாவளி நாட்களாக சிந்திப்பதும் பயனளிக்கும். குருத்தோலை ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.
வரலாற்றில் நிகழ்ந்த முதல் குருத்தோலை ஞாயிறன்று, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவத்தில் அல்ல, கடவுள் வடிவத்தில் வந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; மரங்களை, வீடுகளை அடியோடு சாய்க்கும்; பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எருசலேமை தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை உணரலாம்.
இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. “ஏற்பாடு செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!
குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருஅவை புனிதவாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே, அதனால்... அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, நொறுக்கி ஒரு கந்தல் துணி போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னார். அதேபோல் இந்தப் புனிதவாரம் முழுவதும் நடந்த எல்லா நிகழ்வுகளும் புனிதத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்த வாய்க்கால்கள். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி