C.S.I St Peter Church Thanjavur

C.S.I St Peter Church Thanjavur C.S.I St Peter's church
M.Chavady
Thanjavur. 1
Pin:613 001

திரு. பிரபாகரன் பாண்டியன் (தஞ்சை TNEB) இன்று 12.04.2025 அதிகாலை கர்த்தருக்குள் நித்திரையடைத்தார்கள். அவர்களது நல்லடக்கம்...
12/04/2025

திரு. பிரபாகரன் பாண்டியன் (தஞ்சை TNEB) இன்று 12.04.2025 அதிகாலை கர்த்தருக்குள் நித்திரையடைத்தார்கள். அவர்களது நல்லடக்கம் உயிர்தெழுதலின் நம்பிக்கைக்கென்று நாளை 13.04.2025 காலை 11 மணியளவில் நடைபெறும். அவரை இழந்த குடும்பத்தினருக்கு கர்த்தர் தாமே ஆறுதலையும், சமாதானத்தையும் அருள்வாராக.😢😢

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின்  ஈடு இணையற்ற நாமத்தினாலே அன்பின் நல்வாழ...
05/09/2024

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தினாலே அன்பின் நல்வாழ்த்துகள்.தஞ்சை தரணியிலே எண்ணற்ற கிறிஸ்தவ கீர்த்தனைப் பாடல்களை பாடிய நம்முடைய, தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களின் 250 வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 06.09.2024 மற்றும் 07.09.2024 வெள்ளி சனி ஆகிய இரண்டு தினங்களிலும்,சாஸ்திரியார் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சாஸ்தியார் அவர்கள் இயற்றிய பாடல்கள் மற்றும் சாஸ்திரியார் இயற்றிய பெத்தலகேம் குறவஞ்சி நாட்டிய நாடகம், கோலாட்ட நடனம், சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.இடம் தஞ்சை தூய பேதுரு ஆலய வளாகம், மானம்புச்சாவடி, மாலை6 மணி அளவில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் தாங்கள் குடும்பமாய் கலந்து கொண்டு இறையாசீர் பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்.(குறிப்பு) இது சபை பாகுபாடற்ற சிறப்பு நிகழ்ச்சி. அனுமதி இலவசம்..

05/02/2024

நம்பி வந்தேன் ஏசையா நான்

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் கி.பி. 1834 - ஆம் ஆண்டு இந்த கீர்த்தனையை இயற்றியுள்ளார். இது சாஸ்திரியார் கீர்த்தனைத் தொகுப்பு நூலான ஞானப் பதக் கீர்த்தனைகள் புத்தகத்தில் 256 - வது கீர்த்தனமாக இடம்பெற்றுள்ளது. CLS கீர்த்தனை புத்தகத்தில் (2008 - ஆம் வருட பதிப்பு) 167 - வது கிருதியாக உள்ளது.

ஞானப் பதக் கீர்த்தனைகள் புத்தகத்தில் பல்லவி, 'நம்பி வந்தேன் ஏசையா' என்று உள்ளது. பொதுவாக சாஸ்திரியார் கீர்த்தனத்துக்கு முன்பு 'வெண்பா' பாடி தொடங்குவது வழக்கம். அவ்வாறு அவர் பாடும் வெண்பாவில் வரும் ஈற்றடி அதாவது இறுதி வரியியை தொடக்கமாகக் கொண்டுதான் பல்லவியை அமைப்பார். இது அவருடைய பெரும்பாலான தனிக் கீர்த்தனை பாடல்கள் எல்லாவற்றிலும் பொருந்தியே வரும். ஆனால் இந்த கீர்த்தனைக்கு அமைத்த வெண்பாவில் 'நம்பி வந்தேன் மேசையா' என்று இறுதியடி அமைத்துப் பாடியுள்ளார். ஆனால் பல்லவியில் "ஏசையா" என்று அச்சேறியுள்ளது. 'மேசையா' என்றே பல்லவி பாடியிருக்க வேண்டும். பதிப்பிக்கும்போது அச்சுப் பிழை ஏற்பட்டிருக்கலாம். மேசையா (மேசியா) என்பதற்கும் ஏசையா (இயேசையா) என்பதற்கும் பொருள் மாறுபடுகிறது. மேசியா என்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பது பொருள். இயேசு என்பதின் பொருள் இரட்சகர் என்பதாகும். மேசையா என்ற பதத்தை சாஸ்திரியார் தம் படைப்புகளில் அதிகம் பயன்படுத்தியே வந்திருக்கிறார். CLS கீர்த்தனை பதிப்பில் 'மேசியா' என்றே உள்ளது. இருப்பினும் ஞானப் பதக் கீர்த்தனைகள் புத்தகத்தில் உள்ளவாறே இங்ஙனம் பொருள் கூறுகிறேன்.

வெண்பா

பாருந் திருக்கண்ணாற் பார்த்திரங்கித் துன்பம் எல்லாந்
தீரும் அருள் கூருந் திருவுளமே — சீர்அருளும்
தம்பமே திவ்விய சரணம் சரணமே
நம்பி வந்தேன் மேசையா.

இராகம்: பியாகிடை
தாளம்: ஆதி தாளம்

பல்லவி

நம்பி வந்தேன் ஏசையா நான் நம்பி வந்தேனே திவிய
சரணம் சரணம் சரணையா நான் நம்பி வந்தேனே.

சரணங்கள்

1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு
தவிது குமரகுரு பரமனுவேலே நம்பி வந்தேனே — நான்...

2. நின்பாத தெரிசனம் அன்பான கரிசனம் நித
நிதசரி தொழுவது இதமெனவும் உறுதியில் நம்பி வந்தேனே — நான்...

3. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் அதி
நலமிகு(ம்) உனதிரு திருவடியருளே நம்பி வந்தேனே — நான்...

4. அட்செயத்(து) ஐங்காயம் அற்புதத் திவிய நேயம் - நினை
அறிவுடன் இருதய மகிழவு(ம்) முழுவதும் நம்பி வந்தேனே — நான்...

5. தேடினேன் பாதமே நாடினேன் வேதமே ஓகோ
திருவுளமே கைவிடாதேயும் ஐயா நம்பி வந்தேனே — நான்...

6. பாவியிற் பாவியே கோவியிற் கோவியே கன
பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பி வந்தேனே — நான்...

7. ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன(து)
அடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பி வந்தேனே — நான்...

8. சுவிசேட தோத்தரி கவிவேத சாஸ்திரி துதி
சொலிய பத உனத கவிதைகள் பாடி நம்பி வந்தேனே — நான்...

சொற்பொருள்:

வெண்பா

# திருவுளம் — கடவுள், தெய்வ சித்தம்
# தம்பம் — பற்றுக்கோடு, ஆதாரம், தூண், நம்பிக்கை, சங்கீதம்
# சரணம் — அபயம், பாதம், புகலிடம், அடைக்கலம், அருள்
# மேசையா — மேசியா (அபிஷேகம் பண்ணப்பட்டவர்), கிறிஸ்து

பல்லவி

# சரணம் — அடைக்கலம், அபயம், பாதம், வணக்கம்
# சரணையா — சரண் + ஐயா — அடைக்கலம் ஐயா

சரணங்கள்

1. # தம்பிரான் — கடவுள், கட்டளைப்படி நடத்துவோன், திருக்கூட்டத் தலைவன்
# தம்பம் — பற்றுக்கோடு — ஆதாரம், கவசம், நம்பிக்கை
# தவிது — தாவீது
# குமரன் — இளையோன் (16 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவன்), மகன்
# குமர குரு — இளைய குரு, குமாரனாகிய குரு
# குருபரன் — பரம குரு, பரலோகத்தின் குரு
(குமரன், குமர குரு, குருபரன் போன்ற சொற்கள் இறைத்தத்துவத்தை விளக்கும் பல பொருள் கொண்டவையாக உள்ளன.)
# தவிது குமர குரு பரன் — தாவீதின் குமாரனாகிய பரம குரு
# வரு தவிது குமர குரு பரன் — வருகிறவராகிய தாவீதின் குமாரனாகிய பரம நாயகர். (கிறிஸ்துவின் வருகை)
# மனுவேல் — இம்மானுவேல் (சுருக்கம்) — தேவன் நம்மோடிருக்கிறார். (மத்தேயு 1: 23) (பரமனுவேல் — பரலோக தேவன் நம்மோடிருக்கிறார்)
2. தெரிசனம் — தரிசனம், காட்சி
# நித நித — நிதம் — தினம் தினம்
# சரி — ஒப்பு, ஒழுங்கு
3. # வேதன் — கடவுள், வேதத்திற்கு உரியவன், வேதத்தின் பொருளாக இருப்பவன்
# சிறுமை — அற்பம், கீழ்மை, குறைவு, துன்பம், நோய், மெய் ஞானமில்லாமல் அறியாமையைச் செய்வது
# உன திரு திருவடி — உனது மேன்மைப் பொருந்திய திருப்பாதம்
4. # அட்செயம் — அட்சயம் — கேடின்மை, அழிவில்லாமை
# நேயம் — அன்பு, உறவு
5. # ஓகோ — அதிசயத்தோன், ஆச்சரிய சொல்
# திருவுளம் — கடவுள் விருப்பம், திவ்விய சித்தம், கிருபையுடையோன்
6. # கோவி — கோ — இறைவன், அரசன், தந்தை, தலைமை, மேன்மை
7. # ஓலோலம் — ஓல் + ஓலம் — ஒலி, கூக்குரல், சத்தம், வார்த்தை
# ஆதி ஓலோலம் — ஆதிமுதல் இருக்கும் வார்த்தையாகிய கடவுள். (யோவான் 1: 1 & 14)
# பாதுகா காலமே — தக்க சமயத்தில் பாதுகாத்தல்
# அடிமைகள் — அடியவர்கள், பக்தர்கள்
# மெத்த — மிகவும்
8. # சுவிசேட — சுவிசேஷ
# சொலிய — சொல்லிய
# பத — பதம் — சொல், பக்குவம், பொருள்
# உனத — உன்னத — உன்னதம், உயர்ச்சி, மேன்மை

பொருள் விளக்கம்:

வெண்பா

பாரும், திருக்கண்ணால் பார்த்து இரங்கித் துன்பமெல்லாம் தீரும். கருணை உள்ளம் கொள்ளும். நன்மை தாரும், ஆதாரமானவரே உம் இன்ப பாதத்தில் அடைக்கலம் வேண்டி நம்பி வந்தேன் மேசியா.

பல்லவி

நம்பி வந்தேன் இயேசையா நான் நம்பி வந்தேனே, இனிய பாதத்தில் புகலிடம் தேடி அடைக்கலம் வேண்டி ஐயா நான் நம்பி வந்தேனே.

சரணங்கள்

1. கடவுள் ஒருவனே, நம்பிக்கை தருபவனே‍, தாவீதின் குமாரனாகிய பரம குருவே, உடனிருக்கும் தேவனே நம்பி வந்தேனே. - நான் ...

2. உம் பாதம் காண்பது உனது அன்பின் உருக்கம். தினம் தினம் ஒழுங்குடன் வழிபடுவது இனிமையானது எனவும் உறுதியுடன் நம்பி வந்தேனே. - நான்...

3. நாதனே (கர்த்தனே) கிருபை கூரும், தேவனே (துன்பம், துக்கம், கவலை, நோய் முதலான) குறைகளை தீரும். அதிக நன்மைகளை நிறைவாக கொண்டிருக்கும் உனது மேன்மைப் பொருந்திய திருவடிகளை வணங்கி, பெருங் கொடைகளைத் தாரும் என நம்பி வந்தேனே. - நான்...

4. அழிவில்லாதவர் (முடிவில்லாதவர்) ஐந்து காயங்களைப் பெற்று, அற்புதமான இன்ப உறவை தந்தீரே, உம்மை அறிகின்ற அறிவினால் உள்ளம் மகிழவும், முழுவதும் உம்மையே நம்பி வந்தேனே. - நான்...

5. உம் பாதத்தையே தேடினேன், உம் வேதத்தையே விரும்பினேன், அதிசயமே என்னை ஏற்றுக்கொள்ளுமே, கைவிடாதேயும் ஐயா நம்பி வந்தேனே. - நான்...

6. பாவியில் பாவியே, அரசருக்கெல்லாம் அரசரே, மிகுந்த இரக்கத்துடன் நன்மை செய்யும், உம்மை விட்டு விலக்கி (ஒதுக்கி) விடாதேயும் நம்பி வந்தேனே. - நான்...

7. ஆதியில் வார்த்தையானவரே, தக்க சமயத்தில் பாதுகாத்தருளும். உமது அடிமைகள் (அடியவர்கள்) படுகின்ற வருத்தங்கள் துன்பங்கள் பெருகினதால் நம்பி வந்தேனே. - நான்...

8. சுவிசேஷத்தின் புகழ்ச்சி கூறும் கவிஞன் வேத சாஸ்திரி, புகழ்ந்து சொல்லிய உன்னத சொற்களின் கவிதைகள் பாடி நம்பி வந்தேனே. - நான்...

பரமன் பணியில்,
சங்கை. சை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
05.02.2024.
(பிப்ரவரி 05, 2024)

REV. FR. CHRISTIAN FREDRIC SCHWARTZ 297th BIRTH ANNIVERSARY TODAY . 22nd OCTOBER , 1726 AT SONNENBERG. NOW KNOWN AS STON...
22/10/2023

REV. FR. CHRISTIAN FREDRIC SCHWARTZ 297th BIRTH ANNIVERSARY TODAY . 22nd OCTOBER , 1726 AT SONNENBERG. NOW KNOWN AS STONSK NEAR GORZOW IN POLAND.

மறைதிரு. தந்தை கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் சுவார்ட்ஸ் அவர்களின் 297வது பிறந்தநாள் நினைவு இன்று . 22.10.1726 அன்று சோனன்பர்கு என்ற ஊரில் பிறந்தார். இது தற்பொழுதைய போலந்து நாட்டின் கார்சோ அருகிலுள்ள ஸ்டோன்ஸ்க் என்ற பகுதியாகும்.

(சுவார்ட்ஸ் ஐயர் அவர்களின் 200வது இறந்தநாள் நினைவாக தஞ்சையில் நடைபெற்ற ஆய்வு கருத்தரங்கம் மூலமாக வெளியிடப்பட்ட நூலில் Rev. Dr. டேனியல் ஜெயராஜ் ( சென்னை குருக்கல் இறையியல் கல்லூரி முன்னாள் பேராசிரியர் , இந்நூலின் பதிப்பாசிரியர் ) அவர்கள் எழுதியதிலிருந்து.)

01/09/2023

அன்புள்ள சகோதர சகோதரிகளே....
இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் ஸ்தோத்திரம்.🙏🤝🙏

நம்முடைய தஞ்சை தூய பேதுரு ஆலயத்தின் 01.09.2023 இந்த மாதத்தின் வாக்குத்தத்தம்
🌺🌺📖📖🌺🌺

This month our St. Peter's Church is the Word of Promise🙏🙏🔥🔥🙏🙏
01/08/2023

This month our St. Peter's Church is the Word of Promise🙏🙏🔥🔥🙏🙏

நமது திருச்சபையை சோ்ந்த முன்னாள் பொருளா்Er. P. ஜெயசிங் அவா்கள் இன்று 27.07.223  இரவு 8.00 மணிக்கு  நித்திரை அடைந்தாா் எ...
27/07/2023

நமது திருச்சபையை சோ்ந்த முன்னாள் பொருளா்
Er. P. ஜெயசிங் அவா்கள் இன்று 27.07.223 இரவு 8.00 மணிக்கு நித்திரை அடைந்தாா் என்பதை வருத்தத்துடன் தொிவித்துக்
கொள்கிறோம். அவருடைய உடல் ராஜப்பா நகா் 4-வது தெருவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினா் பலமும் ஆறுதலும் பெற பிராா்த்தனைகள். அடக்க ஆராதனை நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.

26/07/2023

அமலா தயாபரா அருள் கூரையா

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களால் கி.பி. 1811 - ஆம் வருடம் இந்த கீர்த்தனை இயற்றப்பட்டது. இது சாஸ்திரியாருடைய ஞானப் பதக் கீர்த்தனைகள் புத்தகத்தில் 208 - வது கீர்த்தனையாக இடம்பெற்றுள்ளது. CLS சங்க வெளியீடான கிறிஸ்தவ கீர்த்தனைகளில் (பதிப்பு 2008) 12 - வது பாடல். இந்த கீர்த்தனை வெண்பா, பல்லவி மற்றும் 8 சரணங்களைக் கொண்டுள்ளது. ரீதி கெளளை (Reethi Gowlai) இராகம், ஆதி தாளம்.

கடவுளின் தத்துவத்தை குறித்தும், திரித்துவத்தை முன்னிறுத்தியும் இதில் பாடப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் முதல் சரணம் இந்திய இறைத்தத்துவத்தை கிறிஸ்துவில் வைத்து பாடப்பட்டுள்ளது. வேதநாயகம் சாஸ்திரியார் தனது பெரும்பான்மை படைப்புகளில் இறைத்தத்துவ கருத்துக்களை முன்னெடுத்து, அதில் கிறிஸ்தவத்தை உள்நாட்டுமயமாக்கல் நோக்கிலும் (தன்னிலைமயமாக்கல் அதாவது தமிழ் மரபு — Christology in Indigenisation), கிறிஸ்தவத்தை இந்தியமயமாக்கல் (Christology in Indianisation) அடிப்படையிலும் வெளிப்படுத்துவார். அந்த வகையில் இந்த கீர்த்தனை இறை தத்துவம் நிறைந்த பாவாக அமைந்துள்ளது.

வெண்பா

ஆதியந்தம் இல்லான் மாறாதான் சருவ வல்லோன்
ஏதும் அறிந்தோன் அளவிலா ஞானன் - ஓதுமிடம்
எங்கும் நிறைந்தோன் சத்தியன் தூயன் நீதியுளோன்
அங்கிருபை யாளன் அமலன்.

இராகம்: ரீதி கௌளை
தாளம்: ஆதி தாளம்

பல்லவி

அமலா தயாபரா அருள் கூரையா குருபர
அமலா தயாபரா அருள் கூரையா.

சரணங்கள்

1. சமையம் ஈராற் ஓராறு சாஸ்திரங்கள் வேதம் நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற்றாறு(ம்) ஆறுங் கடந்த. — அமலா...

2. அந்தம் அடி நடுவிலாத தற்பரன் ஆதி
சுந்தரமிகும் அதீத சோதிப் பிரகாச நீதி. — அமலா...

3. ஞானத்திரவிய வேத நன்மைப் பரம போத
வானத் தேவப் பிரசாத மகிமைக்கு அளவில்லாத. — அமலா...

4. காணப்படா அரூப கருணைச் சுய சொரூப
தோணப்படா வியாப சுகிர்தத் திருத்தயாப. — அமலா...

5. சத்திய வசன நேயா சமஸ்த புண்ணிய சகாயா
கர்த்த தத்துவ உபாயா கருணை பொழியும் வாயா. — அமலா...

6. எல்லை இல்லா மெஞ்ஞான ஏக பராபர வஸ்தான
சொல்லரிதாம் நிதான துல்லிபத்தொன்றாம் மேலான. — அமலா...

7. கருணாகரா உபகாரா தராதரா
பரமேசுரா கிருபாகரா சருவேசுரா. — அமலா...

8. ஆதியொன்றான மூவா அற்புதவாச ஏயோவா
வேதநாயகன் பாவா மேலாந் திரித்துவ தேவா. — அமலா...

சொற்பொருள்:

வெண்பா

# ஏதும் — மூலம், ஆதி, யாதொன்றும், எல்லாமும்
# ஞானன் — கடவுள்
# ஓதுமிடம் — மன்றாடுமிடம்
# அங் — அங்கு — அவ்விடம்
# அமலம் — அழகு, புனிதம், வெண்மை
# அமலன் — பரிசுத்தன், கடவுள்

பல்லவி

# அமலா — கடவுளே, பரிசுத்தரே
# தயாபரா — கிருபையுடைய கடவுளே
# குருபரன் — பரமகுரு, பரத்தின் குரு, கடவுள்

சரணங்கள்

1. # சமையம் — சமயம் — மதம்
# ஈராறு — இரண்டு ஆறு 6+6 - எண்ணிக்கை (2×6=12)
# ஓராறு — ஒரு ஆறு - அதோடு கூடுதலாக ஒரு ஆறு - எண்ணிக்கை (+6)
# சாஸ்திரங்கள் — ஒழுங்கு, கட்டளை, வேதம்
# ஆறு — வழி, ஒழுக்கம், பாதை

2. # அந்தம், அடி, நடு — முடிவு, ஆதி, நடு (முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்டது)
# தற்பரன் — கடவுள், பரம்பொருள்
# ஆதி — அதிசயம், எப்பொருட்கும் இறைவன், தொன்மை, பழைமை
# அதீதம் — எட்டாதது, கடந்தது, மேற்பட்டது

3. # ஞானத்திரவியம் — அருள் மருந்து, கடவுளின் அருள், கொடை, பாக்கியம்
# பரம போதம் — பரத்தின் போதனை, இறை வார்த்தை
# வானத் தேவ பிரசாதம் — வானத்திலிருந்து கிடைத்த கடவுளின் உணவு. (ஜீவ அப்பம் நானே. யோவான் 6: 48., வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம். யோவான் 6: 51.)

4. # காணப்படா அரூபி — காணப்படாத வெறுமை (உருவம் இல்லாமை)
# சுய சொரூபி — தானாய் இருக்கும் உருவம் (உருவம் உள்ளவர்)
# தோணப்படா — தோன்றப் பெறாத உருவம், எங்கும் நிறைந்தது.
# வியாபம் — வியாபகம் — வியாபித்தல், எங்கும் இருப்பது, சுய தன்மை
# சுகிர்தம் — நன்மை, இன்பம், புண்ணிய பலன்
# தயாபம் — அருள் நிறைந்த, இரக்கமுள்ள

5. # நேயா — நண்பா, நேசன்
# சமஸ்தம் — ஆதாரம், எல்லை
# சகாயம் — உதவி
# கர்த்தத்துவம் — அதிகாரம், தெய்வத் தன்மை, சகலத்தையும் நடத்துகிற தத்துவம். ("கர்த்தத்துவம்" என்ற சொல் தமிழ் திருமறையில் ஏசாயா 9: 6, தானியேல் 4: 22, 4: 34, 6: 26, 7: 14. ஆகிய இடங்களில் வருகிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் Government, Dominion, Sovereignty என்ற ஆங்கில சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.)
# உபாயம் — செயல்படுத்தும் வகை
# கருணை பொழியும் வாயா — கருணை நிறைந்த வார்த்தையை தரும் வாயை உடையவர்.

6. # ஏகபராபர வஸ்து — ஒரு பொருளாகிய ஒரே பராபரன்
# சொல்லரிதாம் — சொல்ல இயலாத, சொல்லால் உணர்த்தமுடியாத
# நிதானம் — ஆதிகாரணம், நேர்மை
# துல்லிபம் — மேன்மை

7. # உபகாரா — உதவுவோன், நன்மை செய்வோன்
# தராதரா — உயர்வு தாழ்வு வேற்றுமை கொள்ளாதவர்
# பரமேசுரா — பரத்தின் தலைவன், கடவுள்
# கிருபாகரா — அருளுக்கு இருப்பிடமானவரே, கிருபையுடையவரே,
# சருவேசுரா — சருவ வல்லோன், எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுள்

8. # ஆதியொன்றான மூவா — ஆதிமுதல் ஒன்றாயிருக்கும் பிதா, குமாரன், பரிசுத்தாவியாகிய மூவொரு (மூன்றும் ஒன்றான) கடவுள்
# அற்புதவாசன் — அற்புதம் செய்பவர்
# ஏயோவா — யேகோவா — நித்திய ஜீவனுள்ளவர், இருக்கிறவராக இருக்கிறவர் (யாத்திராகமம் 3: 14)
# பாவா - பாட்டுக்கு உரியவர்
# மேலாந் திரித்துவ தேவா — எல்லாவற்றுக்கும் மேலாக திரித்துவத்தில் (மும்மை தன்மை) இயைந்திருக்கும் கடவுள்.

பொருள் விளக்கம்:

வெண்பா

தொடக்கமும் முடிவும் இல்லாதவர், மாறாதவர், எல்லா வல்லமையும் உடையவர், எல்லாம் அறிந்தவர், அளவில்லா பெருத்த ஞானமுள்ளவர் — பெயர் சொல்லி அழைக்கும் இடமெங்கும் நிறைந்திருப்பவர், உண்மையுள்ளவர், தூயர், நீதியுள்ளவர், அவ்விடத்து கிருபையுள்ளவர், பரிசுத்தர்.

பல்லவி

பரிசுத்தரே கிருபையுள்ள கடவுளே அருள் செய்யும், பரத்தின் குருவே பரிசுத்தரே இரக்கமுள்ளவரே அருள் செய்யும்.

சரணங்கள்

1. சமயங்கள் பதினெட்டும் (18), சாஸ்திரங்களாகிய வேதங்கள் நான்கும் (4), அமைந்த தத்துவங்கள் தொண்ணூற்று ஆறும் (96) ஆகிய இவைகள் கூறும் வழிகளை (பாதைகள்) எல்லாம் கடந்து நிற்பவர். — அமலா தயாபரா...

(இந்த கவியின் கூடுதல் விளக்கத்தை இறுதியில் கொடுத்திருக்கிறேன்.)

2. முடிவும் தொடக்கமும் அதற்கு நடுவாகவும் இல்லாத அதிசயமான பரம்பொருள், மிகுந்த அழகுடன், எல்லாவற்றிலும் மேலான தன்மை கொண்ட சுடரில் எழும் வெளிச்சமாகிய நீதி. — அமலா தயாபரா...

3. வேதம் தரும் நன்மை நிறைந்த பரம போதனை, ஆத்தும அருமருந்து. அளவில்லாத மகிமைக்கு உகந்த வானத்தின் தெய்வீக உணவு. (யோவான் 6: 48, 51, 58) — அமலா தயாபரா...

4. காணப்படாத உருவமற்றவரே, கருணையை தன் வடிவாக கொண்டவரே, கண்கள் காண தோற்றம் கொள்ளாத எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் நன்மையாக விளங்கும் தெய்வீக அருள் நிறைந்த. — அமலா தயாபரா...

5. சத்திய வசனமாகிய நண்பா, எல்லா நற்செயல்களுக்கும் துணைவா, கடவுளின் தன்மையை விளங்கச் செய்பவரே, கருணை நிறைந்த வார்த்தையைத் தரும் நாவை உடையவரே. — அமலா தயாபரா...

6. எல்லையற்ற மெய்ஞானமுள்ள ஒரே பொருளான பராபரன், சொல்லால் உணர்த்தமுடியாத ஆதிகாரணர், மேன்மைகளுக்கெல்லாம் ஒரே மேலான — அமலா தயாபரா...

7. கருணையுள்ளவரே, உதவுபவரே, தகுதி மிக்கவரே, பரலோகின் தலைவரே, அருள் தருபவரே, எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுளே — அமலா தயாபரா...

8. தொடக்கமுதல் மூன்றில் (பிதா, குமாரன், பரிசுத்தாவி) ஒன்றாயிருக்கும் கடவுளே , அற்புதம் செய்பவரே, நித்திய ஜீவனுள்ளவரே, வேதநாயகன் பாட்டுக்கு உரியவரே, எல்லாவற்றுக்கும் மேலாக திரித்துவத்தில் இயைந்திருக்கும் கடவுளே — அமலா தயாபரா...

கூடுதல் விளக்கம்:

சரணம் 1.

சமையம் ஈராறு ஓர் ஆறு சாஸ்திரங்கள் வேதம் நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற்று ஆறும் ஆறும் கடந்த.

1. சமையம் ஈராறு ஓர் ஆறு
# சமையம் - சமயம்
# ஈராறு - 2 × 6 = 12
# ஓர் ஆறு - 6
சமயங்கள் மொத்தம் 18. (2×6+6=18) (18 சமயங்களை கடைசியில் கொடுக்கிறேன்.)

2. சாஸ்திரங்கள் வேதம் நான்கும்
# சாஸ்திரம் - வேதம்

நான்கு வேதங்கள் :

i. இருக்கு (ரிக்) ( Rig veda )
ii. தைத்ரியம் ( யசூர் ) ( Yajur veda )
iii. சாமம் ( Sama veda )
iv. அதர்வணம் ( Atharva veda )

3. அமையும் தத்துவம் தொண்ணூற்று ஆறும்

தத்துவங்கள் 96.

4. ஆறும் கடந்த

# ஆறு - ஒழுக்கம் , வழி, பாதை

பொருள் விளக்கம் :

சமயங்கள் பதினெட்டும் (18) , சாஸ்திரங்களாகிய வேதங்கள் நான்கும் (4) , அமைந்த தத்துவங்கள் தொண்ணூற்றி ஆறும் (96) ஆகிய இவைகள் எல்லாம் கூறும் வழிகளையெல்லாம் கடந்து நிற்பவர் ....

18 சமயங்கள் :

(I) சைவம் , வைஷ்ணவம் , சாதிதம் , செளரம் , காணபத்தியம் , கெளமாளம் - இவை வைதிக மதம் எனப்படும்.

(II) கபில மதம் , கணாத மதம் , பதஞ்சலி மதம் , அக்ஷபாத மதம் (க்ஷ - க் + ஷ ) , வியாச மதம் , ஜைமினி மதம் - இவை வேதாந்த மதம் எனப்படும்.

(III) பெளத்தம் , ஜைனம் , பைரவம் , காளாமுகம் , உலோகாயதம் , சூனிய வாதம் - இவை புறச் சமயம் என்பர் வைதிகர்.

96 தத்துவங்கள் :

1. ஆன்ம தத்துவம் - 24.
2. உடலின் வாசல்கள் - 9.
3. தாதுக்கள் - 7.
4. மண்டலங்கள் - 3.
5. குணங்கள் - 3.
6. மலங்கள் - 3.
7. வியாதிகள் - 3.
8. விகாரங்கள் - 8.
9. ஆதாரங்கள் - 6.
10. வாயுக்கள் - 10.
11. நாடிகள் - 10.
12. அவத்தைகள் - 5.
13. ஐவுடம்புகள் - 5.

இந்த 96 தத்துவங்கள் ஒவ்வொன்றாக விரித்துரைத்தால் இன்னும் விரிந்து செல்லும். ஆகையால் இத்துடன் விரிவுரையை நிறைவு செய்கிறேன்.

பரமன் பணியில்,
சங்கை. சை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
25.07.2023.
(ஜுலை 25, 2023)

அன்பிற்குாிய திருச்சபை மக்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.நமது ஆலயத்தில் அருள்திரு. வ...
15/06/2023

அன்பிற்குாிய திருச்சபை மக்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.

நமது ஆலயத்தில் அருள்திரு. வில்லியம் ஹொ்பா்ட் பிளேக் ஐயாின் (1923 - 2023) நூற்றாண்டு நினைவுவிழா முன்னிட்டு இன்று 15.06.2023 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். நமது பேராயா் பேரருள்திரு. முனைவா். த. சந்திரசேகரன் தலைமை தாங்கி Choir Room மறுமங்கல படைப்பு செய்து, நமது பேராயா் அம்மா திருமதி.ரோசலின் சந்திரசேகரன் அவா்கள் ஒளியேற்றி வைத்து ஆராதனை நடத்த உள்ளாா்கள். சிறப்பு செய்தியாளராக அருள்திரு.முனைவா். தியான்சந்த் காா் அவா்கள் பங்கு பெற்று சிறப்பிக்க உள்ளாா். எனவே
திருச்சபை மக்கள்
அனைவரும் மாலை 6.00 மணிக்கே முன்பதாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

24/05/2023

அரூபியே அருப சொரூபியே

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களால் கி.பி. 1838 - ஆம் வருடம் இந்த கீர்த்தனை இயற்றப்பட்டது. இது சாஸ்திரியாருடைய ஞானப் பதக் கீர்த்தனைகள் புத்தகத்தில் 194 - வது கீர்த்தனை. CLS சங்க பதிப்பு (2008) கீர்த்தனையில் 94 - வது கீர்த்தனையாக இடம்பெற்றுள்ளது.
மேலும் CLS சங்கம் 1957 ஆம் ஆண்டு பதிப்பித்த 'தேவ தோத்திரப் பாடல்கள்' (வேதநாயகம் சாஸ்திரியார் மற்றும் அவர் வழித் தோன்றல் சாஸ்திரிமார் பாட்டுகளுடன்) (மொத்தம் 280 பாடல்கள்) நூலில் 112 - வது பாடலாகவும் உள்ளது.

இந்த கீர்த்தனை பரிசுத்த ஆவியைப் பற்றிய துதியாக அமைந்தது என்பதை வெண்பாவில் முன்வைக்கிறார் சாஸ்திரியார். திருச்சபை கொண்டாடும் பண்டிகைகளில் மிகமுக்கிய பண்டிகை "பரிசுத்தாவியின் பண்டிகை" ஆகும். திருச்சபை நாட்காட்டி (Church Calander) வகுத்துள்ள நியமத்தின்படி முதலில் வருகையின் ஞாயிறு தொடங்கி திரித்துவ ஞாயிறு வரையிலும் அதன்பிறகு திரித்துவ ஞாயிற்றை முன்வைத்து வாரங்கள் வரிசைப்படுத்தப்படும். கிறிஸ்தவத்தில் திரித்துவம் என்பது மையமாக விளங்குகிறது. கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, பரம் ஏறுதல் பிறகு பரிசுத்தாவி இறங்குதல் (Pentecostal Day) அதனைத் தொடர்ந்து திரித்துவம் என்ற கோட்பாட்டை சிந்திக்க திருச்சபை நமக்கு திருமறையடிப்படையில் வழிவகை செய்துள்ளது. அதற்கு ஆதாரமாக பரிசுத்தாவியை விளங்கிக்கொள்வது அவசியம். இது மனித சிந்தையால், அறிவால், ஞானத்தால் அறிவது கூடாததாயினும்; பரமன் யாருக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவருக்கு தம்மை (திரித்துவத்தை) வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறோம். பிதா குமாரன் பரிசுத்தாவி என்ற மூன்று நிலைகள் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வை இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கின் போது அறியலாம். "இயேசு ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 1: 10 & 11.

திரித்துவ கடவுளின் தன்மை ஒன்றித்து செயாலாற்றுதலும், தனித்து செயல்படுதலும் காணப்படினும், ஒருத்துவத்தை அதாவது ஏகத்துவத்தை, திரியேகத்துவத்தை (மூன்றில் ஒன்றான நிலை) வலியுறுத்தி கூறுகிறது.

இறைக்கோட்பாடு அல்லது இறைத்தத்துவம் கடவுளின் தன்மையை வெளிப்படுத்துவதாகும். திருமறையில் ஆதாம் தொடங்கி நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது, தீர்க்கதரிசிகள், யோவான் ஸ்நானகன், பவுல் அடிகளார், திவ்ய வாசகன் யோவான் என எண்ணற்ற பாத்திரங்கள் வழியாக பல வகையான தன்மையில் தம்மை வெளிப்படுத்தினார் கடவுள். இன்று நாம் அறிந்து உணர்ந்த கடவுளின் தன்மையும் அவரவர் தம்தம் அனுபவத்தில் உய்த்துணர்ந்தவையே. நம் பின்வரும் சந்ததிகள் பெறப்போகும் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் என்னவோ? கடவுள் பல காலங்களாக பலருக்கு பல வகையில் வெளிப்பட்டார். ஆனால் கடவுள் ஒருவரே, அவர் மாறாதவர், அவர் நிலைப்பெற்றிருக்கிறார்.
"நான் கர்த்தர், நான் மாறாதவர்..." மல்கியா 3: 6.
"இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்". எபிரேயர் 13: 8.
மேலும், எபி. 1: 12, சங். 102: 27.

கடவுள் யார்? என்ற கேள்விக்கு நாம் கொடுக்கும் பதில் ஒரு வார்த்தையோ, ஒரு வரியோ, ஒரு புத்தக அளவோ, அது கடவுள் பற்றிய நமது புரிதலில் ஒரு துகள் என்பதைத்தான் திருமறை பல ஆயிரம் வருட நீரோட்டத்தில் நமக்கு உணர்த்துகிறது. அதில் காணப்படும் திரித்துவ தத்துவ ஞானத்தை சிறு துளியாக அறியவும் உணரவும் தூண்டுதற்கான சிறு முயற்சியே இது.

இங்கே இந்த கீர்த்தனையின் வழியாக திரித்துவத்தில் தூய ஆவியின் பங்கை மும்மை நிலையில் வெளிப்படுத்துகிறார் சாஸ்திரியார். இதில் நேரடி பொருள் விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளேன். தத்துவார்த்த விளக்கங்களுக்குள் செல்ல முற்படவில்லை, ஆகிலும் சொற்பொருள் வழியாக சில விளக்கங்களை பகிர்ந்துள்ளேன்.

வெண்பா

அக்கினியின் னா(நா)வாய் அருந்தவர் மேல் வந்திருந்த
முக்கிய திரித்துவத்தின் முற்பொருளே — மிக்க
அருப சொரூபியே யாண்ட பரிசுத்த
அரூபியே தோத்திரம் ஐயா.

இராகம் : சேனாவதி
தாளம் : ரூபகம்

பல்லவி

அரூபியே அருப சொரூபியே யெமை
யாண்ட பரிசுத்த (அ)ருபியே.

அனுபல்லவி

திருவிணாடுறை நிதான கருணையாதிபதி மோன
சுர நரா தொழுகும் வான ஒரு பராபர மெய் ஞான — அரூபியே...

சரணங்கள்

1. ஆதி காரண அரூபியே அசரீரி சத்திய
நீதி ஆரண சொரூபியே
வேதவாசக சமுத்திர ஓதும் வாய்மைகள் சுமுத்திர
தீதிலாது உயர் விசித்திர சாதியாருட பவித்திர — அரூபியே...

2. சீருலாவிய தெய்வீகமே திரிமுதல் ஒருபொருள்
ஏருலாவிய சினேகமே
பாருளோர் பணிந்து போற்றும் ஆரியர் அடியர் சாற்றும்
நேரமே புகழை யேற்றும் வீரமாய் மனதை ஆற்றும் — அரூபியே...

3. பத்தர் பாதகம் அடாமலே பசாசுல குடல்
சத்துரு சோதனை படாமலே
அத்தனார் தேவகோபம் நித்திய வேதனைகள் சாப
முற்று மாறிடத் தயாபம் வைத்து நீடும் பிரதாப — அரூபியே...

4. உன்னதப் பரிசுத்தாவியே ஒரு வேதநாயகன்
சொன்ன பாவினப் பிரதாபியே
நின்னையே தெரியக் காட்டும் அன்னை தீதனைத்தும் ஓட்டும்
முன்னமே பதியினாட்டும் இன்னமே கிரீடம் சூட்டும் — அரூபியே...

சொற்பொருள்:

வெண்பா

# அக்கினி நாவாய் — அக்கினிமயமான நாவுகள் போல... (அப். 2: 3)
# அருந்தவர் — முனிவர் (இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும். யோ.1: 32 - 34)
# திரித்துவம் — கடவுளின் முத்தன்மை, மூன்று தத்துவம். (பிதா, குமாரன், பரிசுத்தாவி)
# முற்பொருள் — முன் சொல்லப்பட்ட பொருள் (யோ. 1: 1 - 14)
# அரூபம் — உருவமற்றது, வெறுமை
# சொரூபம் — சொரூபி — அழகுள்ளவர், உடம்புள்ளவர், பரம், வடிவு
# யாண்டு — எப்போதும், எவ்விடத்தும்
# பரிசுத்தரூபி — பரிசுத்தம் + அரூபி — பரிசுத்த கடவுள்

பல்லவி

# அரூபி — உருவிலி (உருவம் இல்லாதது), கடவுள்
# சொரூபி — உடம்புள்ளவர், பரம், வடிவு

அனுபல்லவி

# திருவிணாடுறை — திரு + விண் + துறை
# துறை — இடம், எல்லை, தங்குமிடம், வழி
# நிதானம் — ஆதிகாரணம், சமம்
# மோனம் — மெளனம் (சாத்துவிக குணத்தில் ஒன்று அது அருள், ஐம்பொறியடக்கல், ஞானம், தவம், பொறை, மேன்மை, மோனம், வாய்மை), சாந்தகுணம்
# சுரர் — வானோர்
# நரர் — மனிதர்
# பராபரம் — பரமண்டலத்துக்கும் மற்ற யாவுக்கும் கடவுள். ("பராபரக் கண்ணி" நூலில் வேதநாயகம் சாஸ்திரியாருடைய விளக்கம்)

சரணங்கள்

1. # அசரீரி — அரூபி, சரீரமற்றது, வானில் தோன்றும் ஒலி
# ஆரணம் — வேதம், வேதத்தின் ஞான பகுதி
# சமுத்திரம் — கடல், பத்து இலட்சக் கோடா கோடி, மிகுதி
# சுமுத்திரை — சரிநிறை, சரியளவு, நன்முத்திரை, நிதானம்
# பவித்திரம் — தூய்மை
2. # ஏர் உலாவிய — அழகு பொருந்திய, நன்மை நிறைந்த
# பாருளோர் — பாரில் உள்ளோர் — உலகில் உள்ளோர்
# ஆரியர் — ஆசிரியர், குருமார், வைத்தியர்
3. # பத்தர் — பக்தர் — தேவ தொண்டர், அடியார்
# பிசாசுல குடல் — பிசாசு + உலகு + உடல்
# அடாமல் — அடாது — தகாது, பொருந்தாது, விழாமல்
# அத்தனார் — கடவுள், குரு, பிதா, மூத்தோன், உயர்ந்தோர்
# தயாபம் — அருள் மிக்க கடவுள், தயை நிறைந்த கடவுள்
# பிரதாபம் — வீரம், புகழ், பெருமை,புகழ், ஒளி, உயர்ச்சி, கீர்த்தி
# பிரதாபி — உயர்ந்தோன், மகிமையுள்ளோன், பெருமையுடையோன்
# நின்னை — உன்னை
# பதியில் நாட்டும் — பரம உலகில் நிலைநிறுத்தும்
# இன்னம் — மறுபடியும், இன்னும், மேலும்

பொருள் விளக்கம்:

வெண்பா:

அக்கினிமயமான நாவுகளைப் போல இருந்தவர் (அப். 2: 3), அருந்தவத்தராகிய இயேசு முனிவர் மேல் வந்திருந்த (யோ.1: 32 - 34), சிறப்பு மிக்க திரித்துவத்தின் (மும்மை நிலை) முன் சொல்லப்பட்ட பொருளே (ஆதி. 1: 2), மேலான தன்மையாகிய உருவம் இல்லாமையிலும் உருவம் கொண்டவரே, எங்கும் நிறைந்திருக்கும் பரிசுத்தாவியாகிய பொருளே தோத்திரமையா.

பல்லவி:

உருவம் இல்லாதவரே, உருவமில்லாமையிலும் உருவம் கொண்டவரே, எமை ஆளுகை செய்யும் பரிசுத்த ஆவியாகிய பொருளே.
(உருவம் கொண்டும் உருவம் இல்லாதவருமாகிய பொருளே)

அனுபல்லவி:

மேன்மை தங்கிய விண்ணக நாட்டில் சமம் ஒத்து தங்கியிருக்கும் கருணை அதிபதி, சாந்தகுணமுள்ளவர். தூதரும் மனிதரும் பணிவாய் வணங்கும், ஆதியாகிய ஒரே பராபரன், மெய் ஞானமாகிய தூயாவி. — அரூபியே...

சரணங்கள்:

1. உலகம் அமைய காரணமான உருவம் இல்லாதவரே, ஒலியாக (வார்த்தை) விளங்கிய உண்மையும் நீதியும் நிறைந்த திருமறை வடிவே, கடல் போன்று விரிந்த திருமறை வார்த்தைகள் சொல்லும் உண்மைக்கு ஒப்பானவரே, தீமையிலாத உயர்ந்த சிறப்புமிக்க கூட்டத்திற்கு தூயவரே. — அரூபியே...

2. ஒலியாக (வார்த்தை) இயங்கிவந்த தெய்வத்தன்மையுள்ளவரே, மூன்றில் முதலும்; மூன்றும் ஒன்றான பொருளே, நன்மை நிறைந்த நட்பே, உலகில் உள்ளவர் பணிந்து போற்றும் குருவே, தகுந்த நேரத்தில் அடியான் சொல்லும் புகழையேற்று துணிவுள்ள மனதை கொடுத்து வழிகாட்டும். — அரூபியே...

3. பக்தர் பாவத்தில் விழாமலே; பகைவரான பிசாசும் உலகமும் உடலும் கொடுக்கும் சோதனைக்கு உட்படாமல் இருக்கவும், பிதாவே, தேவகோபமும் நீங்காத வேதனைகளும் சாபமும் முற்றும் விலகிட மிகுந்த இரக்கம் வைத்து உயந்த மகிமையில் வைக்கவும். — அரூபியே...

4. மேன்மைப் பொருந்திய பரிசுத்த ஆவியே, ஒரு வேதநாயகன் சொன்ன பலவகை பாடல்களில் மகிமையுள்ளவரே, உம்மையே தெரிந்துகொள்ள காட்டும், அப்பொழுதே தீமையனைத்தும் போக்கும். பரம உலகில் நிலைநிறுத்தும், மேலும் பரம கிரீடம் சூட்டும். — அரூபியே...

பரமன் பணியில்,
சங்கை. சை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்
24.05.2023.
(மே 24, 2023)

11/05/2023

ஆமன் அல்லேலூயா
(ஆமென் அல்லேலூயா)

இந்த கீர்த்தனை கி.பி. 1835 - ஆம் ஆண்டு தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களால் எழுதப்பட்டது. சாஸ்திரியாரின் கீர்த்தனை தொகுப்பு நூலான "ஞானப் பதக் கீர்த்தனைகள்" புத்தகத்தில் 179 - வது கீர்த்தனையாக இடம்பெற்றுள்ளது. CLS பதிப்பித்த "கிறிஸ்தவக் கீர்த்தனைகள்" புத்தகத்தில் கீர்த்தனை எண் 59 (பதிப்பு 2008). சாஸ்திரியாரின் கீர்த்தனை புத்தகத்தில் உள்ளவாறே "ஆமன் அல்லேலூயா" என்று பதிவு செய்துள்ளேன். இதில் வெண்பா, பல்லவி, அனுபல்லவி மற்றும் ஏழு சரணங்கள் உள்ளன. சாஸ்திரியார் தன் வழக்கத்தின்படி இறுதியில் அதாவது ஏழாவது சரணத்தில் தன் முத்திரையடியை அமைத்து பாடியுள்ளார்.

இந்த கீர்த்தனையில் வரும் வெண்பா, பல்லவி, அனுபல்லவி ஆகியவற்றில் வரும் ஓம், அனாதி, ஆம், ஆமன் (ஆமென்), அல்லேலூயா போன்றவை இறைத் தத்துவத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக அமைந்துள்ளது. திரித்துவத்தை கூறி திரியேகத்துவத்தை முன்னிறுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது. அதாவது, 1. மூவராகிய கடவுள் (பிதா, குமாரன், பரிசுத்தாவி), 2. மூன்றில் ஒன்றான கடவுள், 3. மூன்றும் ஒன்றான கடவுள் என்ற மூன்று நிலைகளுக்குள்ளும் கடந்து வருகிற இறைத் தத்துவத்தை குறிப்பதாக அமைகிறது. இதை எழுத்தில் விவரித்தால் மிக நீண்டு செல்லும். திரித்துவத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள அதநாஷியஸ் விசுவாசப் பிரமாணத்தை (The Athanasian Creed) வாசித்து அறிந்துக்கொள்ளலாம். இதை இணையத்தின் வழியாகவும் படித்தறியலாம்.
இதன் மூன்று பகுதிகளை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

4. ஏக தேவனைத் திரித்துவமாகவும் : திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டும் என்பதே.
25. அன்றியும் இந்தத் திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல : ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல.
26. மூவரும் சமநித்தியரும், சரிசமானருமாம். (நித்தியர் — அழியாமை உடையவர்)
(ஆதாரம்: இந்திய திருச்சபை ஜெப புத்தகம், கிறிஸ்தவ அறிவு அபிவிருத்திச் சங்கம் I.S.P.C.K., டெல்லி.)

அனுபல்லவியில் உள்ள "தந்தார் - வந்தார் - உயிர்த்தெழுந்தார்" என்ற மூன்று சொற்களின் வழியாக திரித்துவத்தின் தன்மையை உணரலாம்.

தந்தார் : ஆதியில் இருந்த வார்த்தை (தேவ ஆவியானவர். ஆதி.1: 2) அனுப்பினார்.

வந்தார் : வார்த்தை மாம்சமானார்.....; (அவருடைய மகிமை) பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1: 14.)

உயிர்த்தெழுந்தார் : இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார். (அப். 2 : 32), மேலும்‍, அப். 2 : 24, 13 : 30.

ஆமன் அல்லேலூயா

வெண்பா
வேதாளம் ஓடி விழுந்து அலறித் தீ நரகப்
பாதாள மட்டும் படிந்ததே காதோரே
ஓம் ஓம் அனாதி உயிர்த்தெழுந்தார் வெற்றி கொண்டார்
ஆம் ஆமன் அல்லேலூயா.

பல்லவி
ஆமன் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா
ஆமன் அல்லேலூயா செயஞ் செய
அனந்த கோடி நரா.

அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந்(து)
உயிர்த் தெழுந்தாரே உன்னதமே. — அமன்...

சரணங்கள்
1. மனனவன் வந்து பிறந்தது பெத்தலேம்
வளர்ந்து சென்றது நாசரேத் திஸ்தலம்
உன்னதப் பாடுகள் பட்டது எருசலேம்
உயிர்த்துச் சென்ற(து) உயர் பரமண்டலம். — ஆமன்...

2. வெற்றிக் கொண்டார்ப் பரித்துக் கொடும் வே
தாளத்தைச் சங்கரித்து முரித்துப்
பத்திராசனக் கிறிஸ்து மரித்துப்
பாடுபட்டுத் தரித்து முடித்தார். — அமன்...

3. வேதம் நிறைவேற்றி மெய்த் தோற்றி
மீட்டுக் கரையேற்றி பொய் மாற்றிப்
பாவிகளைத் தேற்றிக் கொண்டாற்றிப்
பத்திராசனத் தேற்றி வாழ்வித்தார். — ஆமன்...

4. சாவின் கூரொடிந்து மடிந்து
தடுப்பு சுவரிடிந்து விழுந்து
சீவனே விடிந்து தேவாலையத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்து. — ஆமன்...

5. தேவ கோபந் தீர்ந்து அலகையின்
தீமையெலாஞ் சோர்ந்து உலகமே
ஆவலுடன் சேர்ந்து பணிந்து கொண்
டாடுங் களிகூர்ந்து மகிழ்ந்து. — ஆமன்...

6. யேசு பாவநாசர் கிறிஸ்துவே
யென் ஆற்றும நேசர் மகாசத்திய
வாசர் கிருபை வாசர் உலாசர்
மகிமையின் ராசர் சருவேசர். — ஆமன்...

7. ஞானத் திருக் கூட்டுக் கவிவேத
நாயகன் பாட்டு நற்றேட்டு
வானப் பரன் ஆட்டுக் குட்டிக்கு
வாச்சது கொண்டாட்டு மன்றாட்டு. — ஆமன்...

சொற்பொருள்:

வெண்பா:

# வேதாளம் — பிசாசு
# படிந்ததே — படிதல் — கீழே விழுதல்
# காதோரே — காதுள்ளோரே, கேட்போரே
# ஓம் — ஆமெனல் (ஆம்+எனல்), அ+உ+ம் மூன்றெழுத்து ஒன்றித்து எழும் ஓசை, மும்மைத் தன்மை இறை கோட்பாடு (திரித்துவம்), முக்காலம்
# ஓம் — இருக்கிறவராக இருக்கிறேன் - - - - - இருக்கிறேன் என்பவர் - - - - - . (யாத்திராகமம் 3: 14)
# அனாதி — ஆதியின்மை, தொடக்கம் இல்லாமை, கடவுள்
# ஓம் அனாதி — ஆதியில் இருந்த வார்த்தை
# ஆமன் — ஆமென் — அப்படியே ஆகட்டும்
# ஆமென் — உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது. வெளி. 3: 14.

பல்லவி:

# ஆமென், அல்லேலூயா — வெளி. 19: 4, சங்கீதம் 106: 48.
# தம்பரா — தம்பிரான் — கடவுள், கட்டளைப்படி நடத்துவோன், திருக்கூட்டத் தலைவன்
# பரா — பரமண்டலம் முதலிய யாவற்றுக்கும் (அல்லது) பரமண்டலமும் பூமண்டலமும். (வே. சாஸ்திரியார் 'பராபரக் கண்ணி' என்ற நூலில் கொடுத்துள்ள விளக்கம்)
# தம்பரா பரா — சகல உலகத்திற்கும் தலைவன்
# அனந்தம் — அந்தங்கெட்டது, முடிவு இல்லாதது, எல்லை இல்லாதது
# நரா — தழும்பு பட்டது (காயம் / குத்தப் படுதல்), நொருங்குதல், உடைபடுதல்

அனுபல்லவி:

# ஓம் அனாதி — ஆம் என்று இருப்பவரும் (2 கொரி. 1: 19, யாத். 3: 14), திரியேகத்துவத்தில் தொடக்கம் இல்லாதவருமாய் இருப்பவர்.

சரணங்கள்:

# இஸ்தலம் — இடம், ஊர்
# உன்னதப் பாடுகள் — பாவிகளுக்காக பாவமில்லாதவர் பட்ட பாடுகள். (யோவான் 11: 50 - 53)
# வேதாளம் — பிசாசு
# சங்கரித்தல் — அழித்தல்
# பத்திராசனம் — இராஜ ஆசனம், சிங்காசனம், அரியணை
# தரித்து — சகித்து, தாங்குதல், ஏற்றுக்கொள்ளுதல்
# தோற்றி — தோன்றல், பிறத்தல்
# விடிந்து — விழித்தல், எழுதல், அனுகூலமாதல்
# அலகை — பிசாசம் — பேய், பிசாசு
# உலாசர் — பவனி வந்தவர்
# சருவேசர் — சர்வேசன் — எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுள்
# நற்றேட்டு — நன்றாக கேட்டு, இனிதாக கேட்டு
# பரன் — கடவுள்
# வாச்சது — வாய்த்தது — கிடைத்தது
# கொண்டாட்டு — மகிழ்ச்சி

பொருள் விளக்கம்:

வெண்பா

பிசாசு ஓடி விழுந்து, அலறித், தீ நிரம்பிய நரகப் பாதாளத்தில் வீழ்ந்ததே. காது கொடுத்து கேட்போரே, ஆதியில் இருந்த வார்த்தையான தொடக்கம் இல்லாத கடவுள் உயிர்த்தெழுந்தார், வெற்றி கொண்டார். ஆம் அப்படியே ஆகக்கடவது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

பல்லவி

ஆதி முதல் இருப்பவருக்கு துதி உண்டாவதாக. பெருமையுள்ள பரலோக கடவுளே, இருக்கிறவராக இருக்கிறவரே (யாத். 3: 14), உமக்கே தோத்திரம். காயம்பட்ட உமக்கு எண்ணற்ற எல்லையில்லா வெற்றி வெற்றியே.

அனுபல்லவி

ஆம் என்று இருக்கும் மூன்றில் ஒன்றான, தொடக்கம் இல்லாதவர் உலகை படைத்து, அதற்கு தன் மகனைத் தந்தார். அந்த பூவுலகில் இறைமகனாக வந்தார். இறந்து உயிரோடு எழுந்தாரே, மேன்மை கொண்டாரே. — ஆமன்...

சரணங்கள்

1. மன்னன் வந்து பிறந்தது பெத்தலகேம். வளர்ந்து சென்றது நாசரேத் ஊர். பாவிகள் விடுபட பாடுகள்பட்டது எருசலேம். உயிர்த்தெழுந்து சென்றது உயர்ந்திருக்கும் பரமண்டலம். — ஆமன்...

2. வெற்றிப்பெற்று ஆரவாரத்தோடு கொடும் பிசாசை அழித்து தோற்கடித்தார். அரச சிங்காசனம் ஏற, கிறிஸ்து பாடுகளை ஏற்றுக்கொண்டு மரித்து இறைச் சித்தம் முடித்தார். — ஆமன்...

3. தீர்க்கதரிசன வாக்கியங்களை நிறைவேற்றினார். மனிதனாக தோன்றி, பாவிகளை மீட்டுக் காப்பாற்றி, பொய் உலகை மாற்றி, பாவிகளை தேற்றி வழிகாட்டி, பரலோக வாழ்வில் ஏற்றி வாழ்வளித்தார். — ஆமன்...

4. சாவின் கூர் ஒடிந்து அழிந்தது. தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. நித்திய ஜீவவாசல் திறந்தது. தேவாலயத் திரை இரண்டாகக் கிழிந்து ஒழிந்தது. — ஆமன்...

5. தேவ கோபம் தீர்ந்து, பிசாசின் தீமையெல்லாம் நீங்கி, உலகம் அனைத்துமே ஆவலுடன் பணிந்து களிகூர்ந்து மகிழ்ந்து கொண்டாடு. — ஆமன்...

6. இயேசு பாவத்தை அழிப்பவர். கிறிஸ்துவே என் ஆத்தும நன்பர். அவர் உயர்ந்த உண்மையின் இருப்பிடம், கிருபை கொண்டவர், உடனிருப்பவர் (அசைவாடுபவர்), மகிமைக்கெல்லாம் அரசர். அவரே எல்லா உயிர்க்கும் கடவுள். — ஆமன்...

7. ஞானம் நிறைந்த திருச்சபை திருக்கூட்டம், கவிஞன் வேதநாயகன் பாடலை இறை வேண்டுதலாகப் பாட, பரத்திலிருக்கும் பராபரனாகிய ஆட்டுக்குட்டிக்கு கொண்டாட்டமாக வாய்த்தது.

பரமன் பணியில்,
சங்கை. சை. நோவா சாஸ்திரியார்,
தஞ்சாவூர்.
11.05.2023.
(மே 11, 2023)

Address

C S I Street Peter Church M Chavady Thanjavur . 1
Thanjavur
613001

Telephone

+914326279192

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.S.I St Peter Church Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category