11/03/2015
மூலவனே, முப் பரம்பொருளே
எம்மை சிருஷ்டித்த சர்வேஸ்வரனே
தேவனே, எம் இறையவனே
தயவாய் காக்கும் தயாபரனே
பணிவுடன் உம் பாதம், பணிந்து
எம் அகம் புறம் யாவும் சமர்ப்பித்தோம்
மன்னியும், எம் பாவம் யாவும் மன்னியும்
பொறுத்தருளும், எம் பிழையெல்லாம் பொறுத்தருளும்
எம்மை புடமிட்டு,
உம் கை தன்னில்
யாம் மென் பட்டு
நேரியதாய் வாழ
சுகந்தமான மனதை
மீண்டும் தருவாயா
1) இறை உம் வழியில் வாழ எம் மனம் நாடினும்
இவ்வுலகின் மாயை எம்மை தினம் தடுக்குது
பகட்டாக வாழும் வாழ்வே போதும் என்றெண்ணி
இவ்வுலக வழியில் நித்தம் எம் மனம் செல்லுது
யாம் என்ன செய்திட, எம் மனம் பலவீனமானது
நொடிப்பொழுதில் திசை மாறிடும் சருகொத்தது
மாயை நிறைந்த உலகில்,
எம் மரக்கலம் போகையில்
சூழ்ந்திடும் சூழலில்,
சோதனை புயல் வீசுகையில்
எம் மனதை திசை திருப்பிடா, அதிலே கவனம் மாறிடா
நான் வீழ்ந்திடா, கறையுள்ள வாழ்வினில் மீண்டும் மூழ்கிடா
கலம் விட்டு என்னை வீசி எறிந்திடா, என் களம் மாற்றிடா
உம் வழிதனில் தொடர்ந்து பயணித்திட, அதில் நிலை கொண்டிட
நீர் எம் மேல் காட்டும்
என்றென்றும் மாறாத அன்பானது
வாழ்வின் கள வலிமையை
எண்பித்திடும் ஒரு துடுப்பானது
இது ஒரு அரிய விந்தை அல்லவோ
உம் திருச்சித்த கொடை அல்லவோ
2) எம் வாழ்வு இங்கு உம் முன்னே வெறும் கசடானது
இந்நிலை மாற்றிட எம் மனம் நித்தம் நிஜம் ஏங்குது
இதன் இயலாமையில், பொங்கிடும் ஆற்றாமையில்
எம் மனம் விளிம்பின் நிலைக்கு நித்தம் செல்கின்றது
காண்கின்ற தேவனே, இவை யாவும் முன்பே அறிந்திடினும்
எம்மை காத்து வழிநடத்திட உம் தூதர்கள் இருப்பிடினும்
இவ்வுலக ஆசாபாசங்கள்
என்னை தடம் மாற்றுது
இள வயதின் வாழ்வை நோக்கி
மனம் திசை மாறுது
எம் வயதொத்த நபரின் வாழ்வு கண் முன் நிழலாடுது
அவர் வாழ்ந்திடும் மாய்மாலங்களில் மனம் சிதையுது
ஏன் இந்த விழலான வாழ்க்கையை நோக்கி மனம் நாடுது
என்றெண்ணிய வேதனை எம் மனதை சுமையாக்குது
உம் அருள் ஒன்றே போதும்,
ஒரு வார்த்தை மட்டும் கூறும்
எம் ஆன்மா உடன் சுத்தம் அடையும்,
உம் வழிதனில் மாறும்
இது ஒரு அரிய விந்தை அல்லவோ
உம் திருச்சித்த கொடை அல்லவோ
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
இறையவன், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரை நியமித்துள்ளார். அந்த தூதர் எப்போதும் நமது அருகில் இருக்கின்றார். அதை நாம் நினவில் கொள்ள வேண்டும் . நம் பாவ சோதனை வேளையிலும், ஆபத்து நேரத்திலும் அவருடைய துணையை நாட வேண்டும்.
சோதரமே / நட்பே
பலவீன உள்ளம் கொண்ட நாம், காவல்தூதர் நம்மை எப்போதும் காத்திட வேண்டுதல் ஏறெடுப்போம்.
காவல் தூதர்களே: நாங்கள் என்றும், சோதனைகளிலும், துன்பங்களிலும் விழாமல் இருக்க எம்மை பாதுகாக்கும். அங்ஙனம் நாங்கள் வீழ்ந்தாலும், நீரே எம் அரணாயும் கேடயமுமாய் திகழ்ந்திட வேண்டும்.