29/06/2024
கர்த்தருடைய தன்மைகளை (குணம்) அடிப்படையாகக் கொண்டு திருமறையில் அவருக்கு அநேக நாமங்கள் (பெயர்கள்) கொடுக்கப்பட்டுள்ளன. கர்த்தருடைய நாமங்களில் ஒன்றான *யெகோவா சிட்கேனு என்ற எபிரேய பெயரின் பொருள் நீதியுள்ள கர்த்தர் .*
ஏறத்தாழ கி.மு. 586ல் எருசலேம் நகரமே தேற்றுவாரின்றி தவித்தது. பாபிலோன் வந்து எருசலேமை தரைமட்டமாக்கி, மக்களைச் சிறைபிடித்து சென்றது. ‘அவளைத் தேற்றுவாரில்லை, அவளுக்கு உதவிசெய்வார் யாருமில்லை’ என்று எருசலேமின் ஒடுக்குதலைக் குறித்து எழுதப்பட்டுள்ளது (புல.1). ஆனால் எருசலேமின் இந்த நிலை அப்போதுதான் உருவான ஒன்றல்ல. தேவனுடைய உருக்கமான எச்சரிப்புகளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோதே, கர்த்தர் எரேமியா மூலம் பாபிலோன் வருவான் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவர்கள் மனந்திரும்பவில்லை. கர்த்தர் நீதியுள்ளவர்; ஆனால் உருக்கமும் இரக்கமும் உள்ளவர். ஆகவேதான், நாம் நிர்மூலமாகாமல் இருக்கிறது கர்த்தருடைய கிருபையே என்ற வார்த்தையையும் அதே புலம்பலில் வாசிக்கிறோம் (புல.3:22). ஒடுக்கப்படுகிறவர்கள் யாராயினும் தேவனை நோக்கித் திரும்பும்போது, அவர் நீதி செய்கிற தேவனாயிருக்கிறார். விடுவிக்கிற இரட்சகராக இருக்கிறார்.
அன்பானவர்களே, சில சமயங்களில் நாம் ஏன் ஒடுக்கப்படுகிறோம் என்ற காரணமே நமக்குத் தெரியாதிருக்கும். அதற்காக நாம் மாண்டுவிட முடியாது. அந்த சூழ்நிலையைவிட்டு, தேவனை நோக்கித் திரும்பவேண்டும். அவர் நீதியுள்ளவர்; நமது நியாயத்தை வெளிக்கொண்டு வருவார். நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் அது நமது சந்ததியைப் பாதிக்காதபடி மனந்திரும்புவதே நல்லது. அன்று எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு எழும்பியது! அதுபோலவே, நமது வாழ்வையும் கட்டியெழுப்ப தேவன் வல்லவர். ஆகவே பிரசங்கிபோல சூரியனுக்குக் கீழே பாராமல், கண்களை தேவனை நோக்கி மேலே திருப்புவோம். பெரிய காரியங்களைக் காணலாம்.
“கர்த்தாவே, நீர் நீதிபரர். உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்” (சங். 119:137).