12/01/2026
தலைமைப்பதவி தந்தருளும்
திருமீயச்சூர்
'ரதசப்தமிபிரும்மோத்சவம் -2026'
தக்ஷ ப்ராஜபதியின் மகள்களான கத்ரு மற்றும் வினதை என்கிற இருவரும் காஸ்யப முனிவரின் மனைவியர். இவர்களில் கத்ருவிற்கு நாகர்கூட்டங்களும், வினதைக்கு கருடன், அருணன் ஆகியவர்களும் புத்திரர்களாக உதித்தனர்.
இவர்களுள் அருணன் பிறக்கும்போதே குறை உடலுடன் தோன்றியவன்.
ஆயினும், மிகுந்த பலசாலியாக விளங்கிய அவனைச் சூரியனுக்குத் தேரோட்டியாக பணிக்கிறார் சிவபெருமான்.
அருணனின் உடற்குறையினைப் பரிகசித்த சூரியனை சிவபெருமான் கோபம்கொண்டு சபித்து விடுகிறார். இதனால் தமது பிரகாசத்தினை இழந்து கருமை நிறம் அடைந்து விடுகிறார் சூரியன். பின்னர் தன்னுடைய தவறுக்கு வருந்திய சூரியன் சாபவிமோசனத்திற்காக பூலோகத்திற்கு வந்து மந்தாரவனமொன்றில் தவம் செய்கிறார். அத்தலமே இப்போதைய திருமீயச்சூர்.
இத்தலத்தில் அம்மையப்பரை மேகங்களுக்கு இடையில் யானைக்கு மேல் எழுந்தருளச்செய்து ஏழுமாத கால அளவு பூஜித்து மகிழ்ந்தாராம் சூரியன். அதனால் உடையவருக்கு மேகநாதர் என்கிற திருப்பெயர் உண்டாயிற்று.
கதிரவன் தமது கருமை நீங்கி மீண்ட தலம் ஆகையால் இவ்வூருக்கு திருமீயச்சூர் என்கிற பெயர் வழங்கப்பெற்றது.
தவிர சிவபெருமான் ஏழுகுதிரைகள் பூட்டடப்பெற்ற சூரியனுடைய தேரினை ஓட்டுகிற பராக்கிரமத்தினை அருணனுக்கு அருளியதோடு, சூரியன் உதிக்கும் விடியல் நேரமானது அருணோதய காலம் என்கிற பெயரால் வழங்கப்படும் என்கிற வரத்தையும் அளித்த தலம் இது. ஆக, மிஹிரன் எனப்படும் சூரியனும்; அருணனும் சேர்ந்து பூஜித்தமையால் இத்தலத்து உடையவருக்கு மிஹிராஅருணேஸ்வரர் என்கிற மற்றொரு திருநாமமும் உண்டாயிற்று.
உடையவர் மேகநாதரை சூரியன் தன்து கிரணங்களால் பூஜிக்கின்ற சிறப்பான பாஸ்கரபூஜை நிகழ்வினை ஆண்டுதோறும் சித்திரை 21 முதல் 27 ம் தேதி வரை காணவியலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூரியன் வழிபட்டு சாபவிமோசனம் அடைந்த தலம். ஜெனன கால ஜாதகத்தின்படி சூரியனால் பாதிப்பு அடைந்து வருந்துபவர்கள் வழிபடவேண்டிய ஆகச்சிறந்த தலம் இது. சூரியன் மீண்டும் தனது பேரொளியினைப் பெற்று புத்துணர்வுடன் இயக்கத்தினைத் தொடங்கிய தலம் இது.
சூரியனுக்குரிய ரதசப்தமித் திருநாளை அடிப்படையாகக் கொண்டு தைமாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சம் நிகழ்த்தப்படுவதும்இவ்வாலயத்திற்குரிய சிறப்பு.
இத்தகு விசேஷமான திருநாளில் இத்தலத்தில் வழிபடுவோருக்கு இழந்த பதவியும் அதிகாரமும் மீண்டும் கிடைத்திடும் என்பது பலன். தவிர ராஜராஜேஸ்வரியாக, சகலபுவனேஸ்வரியாக அருளாட்சி செய்திடும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் அருளால் உயர்பதவி, ஆட்சி, அதிகாரம், நிர்வாகப்பொறுப்பு இவைகள்
எளிதில் கைகூடிடும் என்பது கூடுதல் சிறப்பு.
சுஜாதா மாலி
குருவே சரணம்
'ரதசப்தமிப் பெருவிழா'
(16.01.2026 - 25.01.2026)
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம்
ஸ்ரீ_லலிதாம்பிகா சமேத
ஸ்ரீ_மேஹநாதஸ்வாமி தேவஸ்தானம்
திருமீயச்சூர்
திருவாரூர்_மாவட்டம்