10/02/2020
தேவனுடைய வார்த்தை.
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். - 1 கொரிந்தியர் 13 : 10.
குறைவுகள், இன்று அநேகருடைய வாழ்வில் காணப்படுகின்றன. அந்தக் குறைவுகளை நிறைவாக்குவதைப் பற்றித்தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். முக்கியமாக ஆவிக்குரிய வாழ்வில் உள்ள குறைவுகளை நிறைவாக்குவதைப் பற்றியே நாம் தியானிக்கப் போகிறோம். முதலில் குறைவு என்றால் என்ன? இதைப்பற்றி நாம் முதலில் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்று குறைவு என்ற வார்த்தைக்கு ஆவிக்குரிய வாழ்வில் அர்த்தமே மாறிக்கொண்டிருக்கிறது.
உதாரணமாக ஒருவர், ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் 100 ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவரிடம் 85 ரூபாய் மட்டுமே உள்ளது. இப்பொழுது தேவைப்படும் இந்த 15 ரூபாயே குறைவு. 15 ரூபாய் இருந்தால் அவர் அந்தப் பொருளை வாங்கி விடுவார். பாருங்கள் இதுபோலத்தான், ஆவிக்குரிய வாழ்விலும் தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய இரட்சிப்பையும் அடைய நாம், நம்மையே முழுவதுமாக ஒப்புக்கொடுத்த பின்பும் தேவைப்படுகிறதே குறைவு. அந்தக் குறைவுபடுகிற தேவை என்ன என்று தான் நாம் தியானிக்கப் போகிறோம்.
நம்மிடத்தில் காணப்படுவது குறைவு மட்டுமா இல்லை வேறே எந்த செயலுமா? என்பதை நாம் இங்கு தெளிவாகக் காண உள்ளோம். இதற்கு உதாரணமாகச் சொல்ல, சில போதகர்கள் சொல்லும் வார்த்தையை எடுத்துள்ளேன். ஏனென்றால் முழுவதுமாக தேவனிடத்தில் அவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்த பின்பும் தங்களிடத்தில் குறைவு உண்டு என்று சொல்வதுண்டு. (குறைவில்லாத பிற போதகர்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவும். குறைவுள்ளவர்களிடத்தில் தேவன் பேசுவாராக.) அப்படி சொல்லுகிறவர்கள், பொதுவாக, குறைவில்லாத மனுஷன் இல்லையே என்று பொத்தாம் பொதுவாக சொல்லுவார்கள். அதற்கு முழுமையான உண்மையான அர்த்தம் பாவம் செய்யாத மனுஷன் இல்லையே என்பதே ஆகும். இதைக்குறித்து நான் நெடுநாளாய், சில வருடங்களாய் சிந்தித்ததுண்டு. என்ன எல்லா போதகரும் இப்படி சொல்கின்றனரே, அப்படி என்னதான் குறை வருடக்கணக்காக அவர்களிடத்தில் நிறைவாகமலே உள்ளது என்று யோசிப்பேன்.
இதைக்குறித்து நான் யோசிக்கும்போது, தேவனே, இப்படிப்பட்ட குறைகள் என்னிடத்திலும் உண்டா? குறையில்லாத மனுஷன் இல்லையே என்று சொல்கிறார்கள். அவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள், நானோ இன்னும் சிறுபிள்ளையாய் இப்பொழுதுதான் என் ஓட்டத்தைத் துவக்கியிருக்கிறேன் பதில் தாருமே என்று கேட்டேன். அதற்கு தேவன், "அவர்களோ, தாங்கள் செய்யும் பாவங்களை மீண்டும் மீண்டும் செய்துகொண்டு, பரிசுத்தத்தை இழந்து, என்னுடைய சமூகத்திலிருந்து விலகிச் செல்கின்றனர். ஆவியானவரும் துக்கப்படுத்தப்படுகின்றார்" என்றார். எப்படி தேவனே அது ஆகும்? என்று கேட்டேன். "அதற்கு அவர், ஒருவன் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன், நான் பரிசுத்தமாக வாழ்கிறேன், பரிசுத்தமடைந்து விட்டேன், தேவன் என்னைப் பரிசுத்தப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு, தன் பாவக் கிரியைகளை மாற்றிக்கொள்ளாமல், தன்னிடத்தில் குறைகள் உண்டென்று சொல்லும்போது, அங்கு ஏற்படுவது பரிசுத்தக் குறைவு என்று தானே அர்த்தம். அந்த பரிசுத்தக் குறைவு என்பது, பரிசுத்தக் குலைச்சல் அல்லவா? இப்படி இவர்கள், என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி விட்டு என்னோடு எப்படி வாழ முடியும். இவர்களிடத்தில் கிறிஸ்துவினுடைய ஆவியாகிய, நான் இல்லாததே இவர்களின் குறைவு.
மேலும் இவர்கள், தேவனே, நான் பாவம் செய்துவிட்டேன் நான் இனி அதைத் திரும்ப செய்யாதபடி என்னை முற்றிலுமாய் மாற்றும், நான் என்னிடத்தில் கொண்டுள்ள பரிசுத்தமல்ல, நீர் என்னிடத்தில் விரும்பும் பரிசுத்தத்தை அடைய நான் குறைவுப்பட்டவனாக இருக்கிறேன். நீர் எனக்கு இந்த பாவக்கறைகளை அகற்றி, என் குறைவுகளையெல்லாம் நிறைவாக்க வேண்டும், அதற்கு என்னை சிறுமைப்படுத்தவும், உடைக்கவும், பண்படுத்தவும், பக்குவப்படுத்தவும், உமக்கு உகந்த பரிசுத்தத்தைக் கொண்ட பாத்திரமாய் என்னை வனையவும் முழுவதுமாய் என்னை அர்ப்பணிக்கிறேன், நீர் என்னோடு இருக்கும்போது மட்டுமே நான் நிறைவுள்ளவனாக இருக்கிறேன், என்றல்லவா தங்களைத் தாழ்த்த வேண்டும் என்னிடத்தில், அவர்களோ அப்படிச் செய்ய மனதில்லாமல் இருக்கிறார்கள்" என்றார்.
அதற்கு நான், தேவனே இவர்கள் இதனைத் தெரிவிக்க, நீர் சொல்வதைப்போல தான் பாவி என்று ஒப்புக்கொள்வதே அல்லவா சரியாய் இருக்கும். ஆனாலும் இவர்கள் குறைவு இருப்பவர்கள் போல சொல்லிக்கொண்டு நல்லவர்கள் போலல்லவா வேஷம் போடுகிறார்கள் என்றேன்.
அதற்கு அவர், "ஆம் அதுதான் உண்மை, இங்கு எவருமே தன்னுடைய பாவங்களை ஒப்புக்கொள்ளாததே, தான் பாவி என்று அறிக்கையிடாததே காரணமாய் இருக்கிறது. இதனை நான் ஆதியில் நடந்த காரியங்களோடு ஒப்பிட்டுச் சொல்வேன். ஆதாம், ஏவாள் காலத்தில், அவர்கள் கீழ்படியாமையின் போது, ஆண்டவரே, நான் பாவம் செய்துவிட்டேன் என்று ஒப்புக்கொள்ளாமல், ஒருவருக்கொருவர் குற்றஞ்சுமத்தினார்கள். அதேதான் இன்றும் நடக்கிறது. கேட்டால் கடைசியில் பிசாசின் தந்திரங்களுக்குள் விழுந்து விட்டேன் என்று சொல்லித் தப்பிக்க நினைக்கிறார்கள். பாவம் செய்துவிட்டேன் என்று ஒப்புக்கொள்வதே இல்லை. இவர்கள் இன்னும் திருந்தவே இல்லை. இவர்களை எப்படி என்னால் மன்னிக்க முடியும்? என்றார்.
மேலும், இவர்கள் தன் பாவங்களை ஒப்புக்கொண்டு என்னிடத்தில் திரும்பி, என் வார்த்தையின்படி செய்தால் மட்டுமே, நான் இவர்களுக்காக இரங்கி வந்து, இவர்களுக்கு மன்னித்து, இவர்களை பிசாசின் தந்திரங்களுக்குள் இருந்து விடுவிப்பேன், காத்துக்கொள்வேன், ஆசீர்வதிப்பேன், பரிசுத்தத்திற்கு மேல் பரிசுத்தம் செய்வேன், நித்திய ஜீவனைக் கொடுப்பேன். என்னுடைய சத்திய வசனத்தின்படி நடப்பவனல்லவா பரிசுத்தன். அவனையல்லவா பிசாசுகள் அணுகாது.
இவர்கள் குறைவுகளையெல்லாம் நீக்கத்தானே, நான் என் ஒரே பேறான குமாரனையே ஒப்புக்கொடுத்து, சிலுவையில் பாடுகளைச் சுமந்து, இவர்கள் பாவத்தை மன்னிக்கச் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தேன். இப்படி மகிமையான காரியங்களை நான் இவர்களுக்குச் செய்தும், என் ஜனங்கள் இன்னும் உணர்வில்லாமலும், அறிவில்லாமலுமல்லவா இருக்கிறார்கள். இவர்களை நான் எப்படி மன்னிக்க முடியும்? இவர்களிடத்தில் குறைவுகள் இல்லை, பரிசுத்தக் குலைச்சல்களே இருக்கின்றன. இன்னும் இவர்கள், காரியங்களை மறைக்கிறார்களே, பின் எப்படி நான் இவர்களுக்கு இரங்குவேன்? தேவனே நீர் விரும்பும் பரிசுத்தத்தை அடைய என்னிடத்திலுள்ள குறைவுகளையெல்லாம் நிறைவாக்கும், என் பாவங்களை எல்லாம் என்னைவிட்டு அகற்றிப்போடும் என்று தங்களைத் தாழ்த்தி, என்னிடத்தில் திரும்பச்சொல், அப்பொழுது நான் அவர்களை சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தி, முடிவு பரியந்தம் நிலைநிறுத்தி, இரட்சித்து, நித்திய ஜீவனைக் கொடுத்து ஆசீர்வதிப்பேன். உன் தேவனாகிய கர்த்தர் நான் இல்லாத இடத்தில் தான் குறைவுகள் என்னும் பரிசுத்தக் குலைச்சல்கள் உண்டு. இவர்களை என்னிடத்தில் மனந்திரும்பி, நிறைவாயிருக்கும்படி இவர்களுக்குச் சொல். நான் இவர்களை நிறைவாக்குவேன்" என்றார்.
ஆம், நம்முடைய தேவையே தேவன் தான், தேவன் நம்முடைய குறைவுகளை நிறைவாக்க தேவன் நமக்குள் வாசம் செய்ய விரும்புகிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளாக தெரிந்துகொண்ட உங்களை தம்முடைய சமூகத்தில் கொண்டு வந்து மகிழ்வடையச் செய்ய நினைக்கிறார். சகோதர சகோதரிகளே, என்னிடத்திலும், உங்களிடத்திலும் குறைவுகள் உண்டு, இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது குறைவுகள் தானா? அல்லது தேவன் அடையாளம் காட்டியபடியான பரிசுத்தக் குலைச்சல்களா? என்று நம்மைநாமே சோதித்து அறியவேண்டும். ஏனென்றால் நீங்கள் சோதித்தறிந்து, தேவனிடத்தில் ஒப்புவித்தால், உங்கள் குறைகளை நிறைவாக்கவும், உங்கள் பரிசுத்தக் குலைச்சல்களை, அவர் நாமத்தினிமித்தம் குலைத்துப்போடவும் தேவன் செய்வார். நான் தேவனிடத்தில் என் கேள்விகளுக்கு பதில் மட்டுமல்ல, தேவனுடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொண்டேன், என்னையும் ஏற்றுக்கொண்டார் என விசுவாசிக்கிறேன். நீங்களும், தேவனிடத்தில் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேளுங்கள். நிறைவான தேவனுக்கு உங்கள் வாழ்வில் இடம் கொடுங்கள், அவர் கிரியை செய்வார். தேவனுடைய வார்த்தையின்படி நடவுங்கள், என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். - பிலிப்பியர் 4 : 19. ஆமென்.
அடியேனுக்காக, தேவன் எடுத்து பயன்படுத்தும் பாத்திரமாய் நான் மென்மேலும் வளர வேண்டியும், பாதுகாப்பு மற்றும் தேவைகள் சந்திக்கப்பட வேண்டி ஜெபித்துக்கொள்ளுங்கள்.
சாமுவேல் பெலிக்ஸ்,
திருநெல்வேலி.
மொபைல் : 99940 97844.