17/11/2024
#கொழையூர்தேவாரவைப்புத்தலம் #கொழையூர் #சிவத்தைவணங்காவிடில் #உடல்இழிவு #உடலால்பயன்என்
திருச்சிற்றம்பலம்
சிவத்தை வணங்காவிடில்
உடலால் பயன் என்?
( பகுதி:1)
நம்உடல் இத்தனை இழிவு உடையது அதை தூய்மை செய்வது சிவவழிபாடு,
அவற்றை விடுத்து எது தெய்வம் என்று அறியாமல் எதுஏதோ!தெய்வம் என்று வழிப்பட்டு உடலை வளர்த்து தீமையே!பெரிதும் செய்து,காக்கையும்,
கழுகும் கொத்தி திண்ணும் உடலால் பயன் ஒன்றும் வாய்க்காது,
ஏக இறை சிவனே!என்கிற பத்திமையே பாழை போகும் இவ்வாழ்வை வளப்படுத்தும், கேடாய்போகும் உடலை தூய்மைஆக்கும்
சிவத்தை தொழு நெஞ்மே!!நெஞ்சமே!
எண்ணரிய பிறவிதனில்
மானிடப் பிறவிதான்
யாதிலும் அரிதரிதுகாண்...
இப்பிறவி தப்பினால்
எப்பிறவி வாய்க்குமோ
ஏது வருமோ ?...
என்று தாயுமான சுவாமிகள் பாடினார்🙏
உடம்பு உள்ளபோதே அறம் செய்க
உடம்பு உள்ளபோதே அறம் செய்க
திருக்குறளில், "நிலையாமை" என்னும் ஓர் அதிகாரம். நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு (தாம்புக் கயிறு) போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.
இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "வாய் பேசமுடியாதபடி நாக்கை அடக்கி, விக்கல் மேலெழுவதற்கு முன்னே, வீடுபேற்றிற்கு ஏதுவாகிய அறச் செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்" என அறிவுறித்தினார் நாயனார்.
உடம்பானது எந்த நேரத்திலும் இறந்து படுதல் கூடும், அது எப்போது எவ்விதம் இறக்கும் என்பது அறிவதற்கு இல்லை. அவ்விதம் இறக்க நேரும் காலத்தில், நாவானது பேசுதற்கு இயலாமல் போய்விடும், அத்துடன் விடாது வருகின்ற விக்கலானது வந்து சேரும். அக்காலத்தில் அறத்தைச் செய்யவேண்டும் என்று எண்ணி இருந்தாலும், அதை வெளிப்படுத்தவோ, செய்யவோ இயலாது என்பதால், அந்த நிலை வரும் முன்னதாகவே அறத்தைச் செய்யவேண்டும்.
நமது கண் முன்னரேயே, வயதில் மூத்தோரும் இளையோரும் கூட மாண்டு போவதைக் கண்டு இருந்தும், நாமும் ஒரு நாள் இப்படித் தான் போவோம் என்று எண்ண மாட்டோம். நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் உண்மையை அறிந்திருந்தும், மரணமானது ஒருவனுக்கு எப்போது வேண்டுமானாலும், எப்படியும் வரும் என்பதை உணர்ந்து கொள்ளாமல், நீண்ட நாள் வாழ்ந்திருப்போம் என்று எண்ணி வாழ்நாளைக் களிப்பில் கழிக்கின்றோம். இதோ வந்தேன் என்று வாழ்நாளின் இறுதி நாளும், சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிடுகின்றது. இறுதிக் காலத்தில் கோழை மிகுதிப்பட்டு, தொண்டை அடைத்து, கை கால் இழுத்து அறிவிழந்து அல்லல் படுவது நிச்சயம். அப்பொழுது, இதுவரை செய்யாத அறத்தைச் செய்யவேண்டும் என்னும் எண்ணம் எழலாம். ஆனால், அதைத் தானாகச் செய்யவும் முடியாது. செய்யவேண்டும் என்று பிறருக்குச் சொல்லவோ, நாக்கு எழாது. பசிக்கு வேண்டிய உணவுக்கு நெல்லைக் காலத்தே பயிரிட்டு வைத்துக் கொள்ளாமல், ஒருவன் பசி மிகுந்தபின், உண்பதற்காக நெல்லை விதைப்பதும், வீடு தீப்பற்றிக்கொண்டு அழியும்போது தீயை அணைக்க ஆறு வெட்டுவதும், போர் நடக்கும்போது படைநூல் கற்பதும் போன்று அறிவற்றது மட்டுமல்லாமல், இயலாததும் ஆகும்.
பசிமிகுந்த பின்நெல்லை விதைப்பதுபோல்,
வீட்டில்தீ பற்றிக் கொண்டு
நசியும்போது அதை அவிக்க ஆறுவெட்டல்
போலும்,போர் நடக்குங் காலை
விசிகநூல் கற்கமுயல்வது போலும்,
கபம் மிஞ்சி விக்கிச் சிக்கி
இசிவுகொண்டு சாங்காலத்து எப்படி நீ
அறம்புரிவாய் இதயப் பேயே. நீதிநூல்.
"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன், நல்வினை
மேல்சென்று செய்யப் படும்".
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
எம்பிரான்
திருஞானசம்பந்தர் பெருமான் அருளியது (திருவாரூர்)👇
பவனமாய்ச் சோடையாய் நா எழாப்
பஞ்சுதோய்ச்சு அட்ட உண்டு,
சிவனதாள் சிந்தியாப் பேதைமார்
போல நீ வெள்கினாயே,
கவனமாய்ப் பாய்வதோர் ஏறு உகந்து
ஏறிய காள கண்டன்,
அவனது ஆரூர் தொழுது உய்யலாம்,
மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.
இதன் பொருள்
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சிநிலை எய்தி, நாக்கு எழாது உலர்ந்து, பிறர் பஞ்சில் தேய்த்துப் பால் முதலியவற்றைப் பிழிய உண்டு, மரணம் உறும் காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல, நமக்கும் இந்நிலை வருமா என, நெஞ்சே! நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். அறிவு மயக்கம் கொண்டு அஞ்சாதே!
பவனம் - காற்று. இறக்குங்கால், பிராண வாயு உடலின் நீங்கும் பொருட்டுப் பெருகும். அது ‘மேல்மூச்சு வாங்குகின்றது’ என்ற வழக்கினாலும் அறியப்படும்.
எம்பிரான்
திருஞானசம்பந்தர் பெருமான் அருளியது(திருக்கோவலூர் வீரட்டம்)👇
கனைகொள்இருமல் சூலைநோய்
கம்பதாளி குன்மமும்
இனையபலவும் மூப்பினோடு
எய்திவந்து நலியாமுன்
பனைகள்உலவு பைம்பொழில்
பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான்
வீரட்டானம் சேர்துமே.
இதன் பொருள்
மூப்புக் காலத்தில் கனைத்தலைக் கொண்ட இருமல் , சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே, பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த திருக் கோவலூரில், இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக.
உடம்பு நிலைத்திராது என்பதை உணர்ந்து, பொருளை ஈட்டிப் பலர்க்கும் உதவி வாழ்ந்து, இறைவன் திருநாமத்தைச் சொல்ல வாழுகின்ற அடியவர்கள் உள்ளத்தில் இறைவனைக் காணலம் என்கின்றார் அப்பர் பெருமான்
🙏எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான் வேதவாக்கு🙏(தலம்:திருகன்றாப்பூர்)👇
பொசியினால் மிடைந்து, புழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப் பட்டே ஈட்டிப்
பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
இதன் பொருள்:
செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணி, பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு, பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலை விடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
மலரும்.....
சிவார்ப்பணம்
கொழையூர்சிவஆனந்த்