31/08/2026
⛪ஆலயம் அறிவோம் வரிசையில் 1,083-வதாக இன்று "திருச்சிலுவை திருத்தலம், சொறிக்கல்முனை" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.
✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🛐
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." மத்தேயு 11:28
#சொறிக்கல்முனை #மட்டக்களப்பு #சம்மாந்துறை #கல்முனை #அம்பாறை
✝️பெயர்: திருச்சிலுவை திருத்தலம்
🍇இடம்: சொறிக்கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை
🍎நாடு: இலங்கை
🍊மாவட்டம்: அம்பாறை
🍒மறைமாவட்டம்: மட்டக்களப்பு
🍓மறைக்கோட்டம்: கல்முனை
🌳நிலை: திருத்தலம்
கிளைப்பங்குகள்:
🌺1. புனித அந்தோனியார் ஆலயம், சொறிக்கல்முனை 3
🏵️2. சின்னமடு மாதா ஆலயம், 6-ம் காலனி
🌹பங்குதந்தை அருட்தந்தை. I. ஜினோ சுலக்சன்
👪குடும்பங்கள்: 480+
❤️அன்பியங்கள்: 32
திருவழிபாட்டு நேரங்கள்:
✝️ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி
✝️காலை 09:00 மணி (அந்தோனியார் ஆலயம்)
மாலை 05:00 மணி (சின்ன மடுமாதா ஆலயம்)
✝️வெள்ளிக்கிழமை திருப்பலி காலை 07:00 மணி
✝️வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி
✝️செவ்வாய்க்கிழமை மாலை 05:30 மணி திருப்பலி (புனித அந்தோனியார் ஆலயம்)
🛐மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை காலை 07:00 மணி நற்கருணை ஆராதனை, திருப்பலி. பகல் முழுவதும் நற்கருணை எழுந்தேற்றம். மாலை 06:00 மணி ஜெப வழிபாடு, நற்கருணை ஆராதனை.
தனிச்சிறப்பான வழிபாடு:
🛐ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, இயேசுவின் திருச்சிலுவை திருப்பண்டமானது மக்களின் முக்திக்காக வைக்கப்படும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து முத்தி செய்வார்கள்.
✝️பெரிய வெள்ளியன்று சிலுவைப் பாதை, கல்லறை ஆண்டவர் சுரூபமானது மக்களின் முத்திக்காக வெளியில் காலை 04:00 மணி முதல் இரவு 09:30 மணி வரை வைக்கப்படும்.
🎉திருவிழா: செப்டம்பர் மாதம் 14-ம் தேதியை மையமாகக் கொண்டு நடைபெறும்.
சொறிக்கல்முனை மண்ணின் இறையழைத்தல்கள்:
💐1. அருட்தந்தை. இன்னாசி ஜோசப்
💐2. அருட்தந்தை. ஞானப்பிரகாசம் ரெட்ணகுமார்
💐3. அருட்தந்தை. அல்பிரட் அன்ரனி சுரேந்திரகுமார், கிளரீஷியன் சபை
💐4. அருட்தந்தை. எட்வெட் செல்வராஜ்
💐5. அருட்தந்தை. யோ. சுதர்சன், கிளரீஷியன் சபை
🌹6. அருட்சகோதரி. மேரி லீமா, ஆசீர்வாதப்பர் சபை
🌹7. அருட்சகோதரி. வயலட், ஆசீர்வாதப்பர் சபை
🌹8. அருட்சகோதரி. ஜெராட் ஜெஸ்ரீனா, கார்மேல் கன்னியர் சபை
🌹9. அருட்சகோதரி. சபீனா, கார்மேல் கன்னியர் சபை
🌹10. அருட்சகோதரி. ரானி அக்னஸ்,
நல்லாயன் சபை
👉வழித்தடம்:
அம்பாறை மாவட்டத்திலே கல்முனை தென்மேற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சொறிக்கல்முனை என்று அழைக்கப்படும் மிகவும் தொன்மை வாய்ந்த கிராமத்திலே திருச்சிலுவை திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் மேன்மைக்கும், புகழுக்கும், அருளுக்கும் காரணமாக அமைவது நமது மீட்பரான இயேசு கிறிஸ்து மரணித்த திருச்சிலுவையின் ஒரு சிறியபாகம் இத்திருத்தலத்தில் வீற்றிருப்பதாகும். அதை சிறப்பிக்கும் முகமாக வருடந்தோறும் திருவிழா திருப்பலிகள் இடம்பெறுகின்றன.
👉Church Map location:
https://maps.app.goo.gl/n9durVyvZHR8gR8z6
🎯பேஸ்புக் தளம்:
https://www.facebook.com/share/1DoKMFHsWy/
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
🍊1. திருபாலத்துவ சபை
🍓2. கார்மேல் கன்னியர் மொட்டுக்கள்
🍎3. இளைஞர் ஒன்றியம்
🍇4. பீடப்பணியாளர்
🍒5. பாடகற்குழாம்
🍍6. கார்மேல் கன்னியர் அன்னையர்
🍉7. மரியாயின் சேனை
🍑8. புனித வின்சென்ட் தே பவுல் சபை
நிறுவனங்கள்:
✒️1. ஹோலி கிராஸ் மகாவித்யாலயம்
✏️2. ஹோலி கிராஸ் பாலர் பாடசாலை
✏️3. அன்னை தெரசா பாலர் பாடசாலை
பங்கில் பணிபுரியும் கன்னியர்:
🕯️கார்மேல் சபை கன்னியர்.
சொறிக்கல்முனை பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
☂️1. அருட்தந்தை. ஜோசப் மேரி (1936-
☂️2. இயேசு சபை குருக்கள்
☂️3. அருட்தந்தை. அன்ரனி லியோ (1976-1979)
☂️4. அருட்தந்தை. எல்மோ ஜோண் பிள்ளை
☂️5. அருட்தந்தை. B. A. ஜோசப் (1984-1989)
☂️6. அருட்தந்தை. J. B. செல்வராஜ் (1989-1990)
☂️7. அருட்தந்தை. அகுஸ்தீன் நவரெட்ணம்
☂️8. அருட்தந்தை. சுகுணேந்திரன் குரூஸ் (1998-2001)
☂️9. அருட்தந்தை. ஸ்ரனிஸ்லாஸ்
☂️10. அருட்தந்தை. பேதுரு ஜீவராஜா (2001-2006)
☂️11. அருட்தந்தை. X. I. றஜீவன் (2006-2010)
☂️12. அருட்தந்தை. S. மதுராங்கன் (2011-2012)
☂️13. அருட்தந்தை. A. ஜேசுதாசன் (2013-2014)
☂️14. அருட்தந்தை. R. திருசெல்வம் (2015-2017)
☂️15. அருட்தந்தை. S. இக்னேஷியஸ் (2018-2019)
☂️16. அருட்தந்தை. L. ஜெயகாந்தன் (2020-2023)
☂️17. அருட்தந்தை. I. ஜினோ சுலக்சன் (2024---
திருத்தல வரலாறு:
***********************
🦋சொறிக்கல்முனை கத்தோலிக்க திருச்சபை எப்படி தடம் பதித்தது என்பது ஒரு கடினமான விடயமாகும். ஆனால் 1800-ம் ஆண்டுகளிலும் அதற்கு முன்னர் டச்சுக்காரர், போத்துகீசியர் ஆகியோரது ஆட்சிக்காலங்களைக் குறித்து அறியும் போது, இவர்கள் எவ்வாறு சொறிக்கல்முனைக்கு வந்தார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கிறது.
🌳ஆரம்ப காலத்தில் சொறிக்கல்முனை அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட, மனித நடமாட்டமற்ற, போக்குவரத்து வசதிகளற்ற பகுதியாகவும், சில ஆதிவாசிகள் வேட்டையாடியும், பயிரிட்டும், ஒருசிலர் வயல்களை பண்படுத்தி வேளாண்மை செய்தும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இந்து சமயத்தை பின்பற்றுகின்றனர்.
🪴அதேவேளையில் இலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துகேயர் வசம் வந்து, அவர்களால் ஆளப்பட்ட காலத்தில், இந்தியாவில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் இருந்து புனித பிரான்சிஸ் சவேரியாரால் கத்தோலிக்கர்களாக மனந்திரும்பிய பரவர் இன மக்களில் ஒரு பிரிவினர் படிப்படியாக இலங்கையில் வந்து குடியேறினர். இவ்வாறு இவர்கள் குடியேறிய பகுதிகள் மன்னார், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, முல்லைத்தீவு, திரிகோணமலையும் அதை அடுத்த பகுதிகளும், மூதூர், தன்னமுனை, வீச்சுக்கல்முனை, புளியந்தீவு எம்பனவாகும். இவர்கள் அனைவரும் அதிகமாக மீன்பிடிப்பதையே தங்கள் பாரம்பரிய தொழியாகக் கொண்டிருத்தனர். போர்த்துக்கேய அதிகாரிகள் உரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்ததால், இந்தியாவில் இருந்து வந்த பரவ இனக் கிறிஸ்தவர்கள், இங்கு வந்து குடியேறுவதற்கு எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை.
🌷அத்துடன் பல போர்த்துக்கேய போர்வீரர்கள் கால ஓட்டத்தில் இலங்கை நாட்டுப் பெண்களையும் திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கெல்லாம் திருமுழுக்குக் கொடுத்து கத்தோலிக்கர்களாக்கினர். அப்போது இருந்த போர்த்துக்கேயர்களோடு வந்திருந்த போர்த்துக்கேய குருக்கள், சமயம் பரப்புவதைத் தம் குறிக்கோளாகவும் கொண்டிருந்ததால் இவையெல்லாம் சுலபமாக நடைபெறலாயிற்று.
🌺ஆனால் இலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயர்களிடமிருந்து, ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) வசம் மாறியவேளை, இப்படி கடற்கரையோரப் பகுதியில் கத்தோலிக்க மக்கள் வாழ்ந்து வந்ததை பார்வையிட்டுப் பீதியடைந்தனர். ஏனென்றால் இலங்கைக்கு மிகவும் அருகாமையில், இந்தியாவின் மேற்குக் கரையோரமாக கோவா நகரெங்கும் அதை அண்மித்த பகுதிகள் எங்கும் கத்தோலிக்க மக்களே வாழலாயினர்.
🍊தென்னிந்தியாவில் ஏராளமான மக்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டு வருவதையும் ஒல்லாந்தர்கள் உணர்ந்திருந்தனர். இதனால் ஒரு காலத்தில் கோவாவிலிருந்து போர்த்துகேய படைகள் வந்து இலங்கையை கைப்பற்றி, தங்களை விரட்டியடிக்கலாம் என்றும் பயந்தனர். அவ்வேளையில் இலங்கையில் உள்ள கத்தோலிக்க மக்கள் அனைவரும், பேர்த்துக்கேய படைகளுக்கு பக்கபலமாக நின்று, டச்சுக்காரர்களாகிய தங்களுக்கு எதிராகப் போரிடலாம் என்றும் பயந்தனர். அக்காலத்தில் இருந்த கத்தோலிக்க மக்கள் பேர்த்துகேய மொழியையும் தங்கள் தாய்மொழியாகிய தமிழுடன் சேர்த்து கற்றிருந்தனர்.
🌹மேற்கூறிய இக்காரணங்களினால் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியதும், அப்பகுதிகளில் வாழ்ந்த கத்தோலிக்கர்களை, தங்களது பிரிவினை கிறிஸ்தவ சபையில் சேருமாறு வற்புறுத்தினர். அவ்வாறு வருகிற மக்களுக்கு பல அரசு தொழில் வசதிகளையும், சலுகைகள் வழங்குவதாகவும் கூறினர். இதனை ஏற்றுக் கொண்டு சில கத்தோலிக்க மக்கள் பிறசபையில் சேர்ந்தனர். ஆனால் பெரும்பாலான கத்தோலிக்க மக்கள், பிறசபையில் சேராமல் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்திருந்தனர். இதனால் கத்தோலிக்க மக்கள் நெருக்கடிகளுக்கும், பெருந்தொல்லைகளுக்கும் ஆளாகினர். இப்படியான சூழலில், ஒரு தொகையினர் (கொஞ்சம் மக்கள்) தங்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு, வேறிடங்களுக்கு அகதிகளாக செல்லலாயினர். முக்கியமாக அடர்ந்த காட்டுப் பிரதேசங்களில் சென்று வாழ்க்கை நடத்தவும், தங்கள் கத்தோலிக்க விசுவாசத்தைக் காப்பாற்றவும் முயன்றனர். வடக்கில் மடுத்திருப்பதி ஒரு முன் உதாரணமாகும். அதே போன்றுதான் மட்டக்களப்பில் "சொறிக்கமுனை"-யும் ஒரு உதாரணமாகும்.
🍇இவ்வாறு சொறிக்கல்முனைக் காடடர்ந்த பகுதிக்கு கிறிஸ்தவர்கள் அகதிகளாக, கி.பி 1680-1685 ஆண்டுக் காலப்பகுதியில் வந்திருக்க வேண்டும். இவர்களுக்கு அருட்தந்தை ஜேக்கப் கொண்சல்வேஸ் (Rev. Fr. Jacobs Gonsalvez) அவர்கள் இரகசியமாகப் பணிபுரிந்து, ஒரு சிறு ஓலைக்குடிசை போன்ற ஆலயத்தையும் அமைத்துக் கொடுத்தார். 1710-ம் ஆண்டளயில் அது மறுபடியும் சற்று நீளமாகப் புனரமைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்காலங்களில் டச்சுக்காரரின் ஆட்சி நடைபெற்றது. எங்கும் கத்தோலிக்க குருவானவர் வாழமுடியாது. அவருக்கு இடம் அளிக்கவும் கூடாது என்ற சட்டம் அமலில் இருந்தது. இக்காலத்தில்தான் ஜோசப்வாஸ் அடிகளும் அவருடைய சகாக்களும் மாறுவேடத்தில் வந்து போயினர். இக்காலங்களில் சொறிக்கல்முனையை "சுவர்க்காமனம்" "சுவர்க்காமனை" என்று மக்கள் அழைத்ததாக ஒரு மரபுவழிச் செய்தியும் உண்டு.
🍑ஆனால் ஆரம்பத்தில் டச்சுக்காரர்களிடமிருந்து தப்பியோடி சொறிக்கல்முனை வந்த கத்தோலிக்க மக்கள், தங்களது விசுவாசத்தைக் காத்து வாழ்ந்து வந்திருந்தாலும், அவர்களின் வாரிசுகள் காலம் செல்லச் செல்ல தங்களது கத்தோலிக்க விசுவாசத்தை விட்டு விட்டு, அங்கு வாழ்ந்த ஆதிவாசிகளின் சைவ சமயத்தை பின்பற்றலாயினர். இச்செயல்கள் 1700-ம் ஆண்டளவில் ஆரம்பித்து ஒரு நூற்றாண்டு காலப் பகுதிகளில் நிகழலாயிற்று. இக்காலக்கட்டத்தில் இவர்களுக்கு கத்தோலிக்கக் குருக்களின் முறையான உதவிகள் கிடைக்கவில்லை. இவர்களில் பலர் தங்களுடைய முன்னோர்கள் கொடுத்த செபமாலைகளைக் கழுத்திலே மாலைகளாக அணிந்திருந்தனர். சிலர் கத்தோலிக்க செப நூல்களையும் வைத்திருந்தனர். இக்காலத்தில் வணக்கத்துக்குரிய ஜோசப் வாஸ் அடிகளார் மாறுவேடமணிந்து, ஒருசில வேளை சொறிக்கல்முனை வரை வந்து போயுள்ளார் என்று கூறப்படுகிறது.
🍒1796 ஆம் ஆண்டு டச்சுக்காரர் வசம் இருந்த இலங்கையின் கரையோரப் பகுதியெல்லாம் ஆங்கிலேயர் வசமாயிற்று. இதன்பின்னர் கத்தோலிக்க மதத்திற்கு டச்சு அரசினால் விதிக்கப்பட்டிருந்த தடைச்சட்டங்கள் எல்லாம் தளர்த்தப்பட்டன. கத்தோலிக்க குருமார்கள் நாட்டிற்குள் வரவும், கிறிஸ்தவம் போதிக்கவும், கத்தோலிக்க மக்கள் தங்கள் சமய வழிபாடுகளை நடத்தவும் முடிந்தது.
🍓இக்காலக்கட்டத்தில் தான் பாஸ்கல் முதலியார் என்பவர் மட்டக்களப்புப் பகுதிக்கு ஆங்கிலேயரால் முதலியாராக நியமிக்கப்பட்டவர். இவரும் இவரது மனைவியும் நல்ல கத்தோலிக்கர் ஆவார்கள். இந்த முதலியார் மட்டக்களப்பு அரச காணிகளை (நிலங்கள்) கண்காணிக்கும் பொறுப்பையும் கொண்டிருந்தார்.
💐கிழக்கு மண்ணிலே திருமலை மறைமாவட்டம் உருவாக்கப்படுவதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னமே, 1800-ம் ஆண்டளவில் இவர் சொறிக்கல்முனைப் பகுதிக்கு வந்துள்ளார். அவ்வேளை அங்கு வாழ்ந்த ஒருசில மக்களுடைய கழுத்தில் செபமாலை தொங்குவதைக் கண்டு அதைப்பற்றி விசாரித்தார். அவ்வேளை தங்கள் முன்னோர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னமேயே, தாங்கள் கத்தோலிக்கர்கள் என்ற காரணத்தினால் டச்சுக்காரர்களினால் துன்புறுத்தப்பட்டதாகவும், கத்தோலிக்க விசுவாசத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், இதைப் பொறுக்க முடியாத தங்கள் முன்னோர்கள் மட்டக்களப்பை விட்டு அகதிளாக ஓடி இடம் பெயர்ந்து ஈற்றில் சொறிக்கல்முனைக்கு வந்து குடியேறியதாகவும் கூறினர்.
⛪எனவே பாஸ்கல் முதலியார் ஓறட்டோறியன் (Oratorian) சபையைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க குருவானவரை வரவழைத்து, சொறிக்கல்முனையில் வாழ்ந்த கிறிஸ்தவ வாரிசுகளுக்கெல்லாம் மறைக்கல்வியூட்டி, திருமுழுக்குக் கொடுத்து, மறுபடியும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக சொறிக்கல்முனையில் வாழச் செய்தார். அவ்வேளையில் கிராமம் முழுவதுமே ஒரு கத்தோலிக்க கிராமமாயிற்று. அங்கிருந்த இந்து மக்களும் கத்தோலிக்கர்களாக மனம் மாறி, கிராமம் முழுவதும் கத்தோலிக்க கிராமமாயிற்று. இதனைக் குறித்து ஆயர் ஜோசப் பொன்னையா அவர்கள் 'விசுவாசப் பேழை' எனும் நூலுக்கு ஆசியுரை வழங்கியபோது கூறியுள்ளார். சொறிக்கல்முனையில் வாழ்ந்த மக்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வசம் சிலுவைகள், செபமாலைகள், கத்தோலிக்க செப புத்தகங்கள் இருப்பதைக் கண்ட பாஸ்கல் முதலியார், உங்களுக்கு இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தது? என வினவியபொழுது, 100 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது இனத்தவர் கத்தோலிக்கர்களாக இருந்த போது, அவர்கள் டச்சுக்காரர்களால் துரத்தப்பட்டு
சொறிக்கல்முனை வந்து வாழ்ந்ததாக ஆயர் எழுதியுள்ளார். இதனால் தான் பாஸ்கல் முதலியார் அவர்கள் இவர்களது ஆன்மீகத் தேவைக்காக ஆலயம் அமைக்க நிலம் ஒதுக்கி, அதில் திருச்சிலுவை பெயர் கொண்ட ஆலயத்தையும் அமைத்துக் கொடுத்தார். மேலும் ஒரு குருவானவர் அங்கு வந்திருந்து இவர்களுக்காக பணிபரியவென 72 ஏக்கர் வயல் நிலத்தையும் கொடுத்து, அதில் இக்கிறிஸ்தவர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனப் பணித்தார். இதனால் இவர்களுக்கு ஒருபுறத்தில் குருவானவருடன் நெருங்கியத் தொடர்பும், குருவானவருக்கு வாழ்வதற்கு ஏற்ற வருமானமும் என்பதை வலியுறுத்தி செயல் வடிவம் அமைத்தும் கொடுத்தார். இச்செயல் மூலமாக விசுவாசம் வளர்வதற்கு வழிவகுத்த இக்காணி பற்றிய விவகாரம் அனைத்தும் 1854 செப்டம்பர் 8ம் நாள் உயர்நீதி மன்றம் (Supreme Court) வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
⛪பாஸ்கல் முதலியார் ஆரம்பத்தில் கட்டத் தொடங்கிய ஆலயம் இயேசு சபைத் துறவிகளின் வருகைக்குப் பின்னர் 1908 ஆம் ஆண்டில் முழுமை பெற்றது. இந்த ஆலயம்தான் இன்றுவரை சொறிக்கல்முனை மக்களின் வாழ்வின் அச்சாணியாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்து வருகின்றது. அக்காலத்தில் இவ்வாலயம் குட்டைக்கல்லினால் கட்டப்பட்டு, நாட்டோடு வேயப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி அதேபாணியில் ஒரு சுற்றுமதிலும் கட்டப்பட்டிருந்தது. கால ஓட்டத்திலே இம்மக்கள் நிரந்தர குருவானவர் இன்றி விடப்பட்டதினால் தளர்ந்த விசுவாசத்துடனும், உடைபட்ட ஆலயத்தையும் கொண்டு இருந்தனர். 1846ம் ஆண்டிலிருந்து இலங்கையில் இன்றைய சிலாபப் பகுதியும், வடமத்திய மாகாணமும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் யாழ் மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது. இக்காலப் பகுதிகளில் சில அமல மரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட் தந்தையர்கள் மட்டக்களப்பிற்கும், சொறிக்கல்முனைக்கும் வந்து பணிபுரிந்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
🍏இக்காலத்தில் இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை புரூனி (Rev. Fr. Andrew Bruni, S.J) சொறிக்கல்முனைக்கு வந்து சில நாட்கள் தங்கி, அங்கிருந்த மக்களுக்கு ஒப்புரவு வழங்கி, திருப்பலி ஒப்புக்கொடுத்து, புதுநன்மையும் உறுதிபூசுதலும் அளித்துள்ளார். இது 1846ல் அல்லது அதற்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும். இதற்குப் பின் 50 ஆண்டுகள், மட்டக்களப்பில் நிரந்தர வதிவிடம் கொண்ட குருக்கள் சொறிக்கல்முனையையும், கல்முனையையும் பராமரித்து வந்தனர்.
✝️யாழ் ஆயர் பேரருட்திரு பெட்டக்கீனி அவர்கள் 1853- இல் மட்டக்களப்பிற்கு வந்தபோதுதான் சொறிக்கல்முனை ஆலயத்திற்குச் சென்று, இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் ஒரு சிறுதுண்டை அன்பளிப்புச் செய்தார்.
🍍அன்று முதல் இன்று வரை இந்த ஆலயத்தினதும், இங்கு வாழ் மக்களினதும் ஒரு பெரும் செயலாக நடைபெற்று வருவது, பாஸ்குகால முடிவில் பெரிய வெள்ளியன்று அவர்கள் நடத்திவந்த பாஸ்கு நாடகமாகும். இது ஒரெட்டோறின் (Oratorian) குருக்களுள் ஒருவரான அருட்தந்தை யாக்கோமே கொன்சால்வேஸ் கற்பித்த ஒரு வகையான மறைபரப்பும் பணியாகும். எந்த வகையான வசதிகளும் இல்லாத அக்காலத்தில், மக்கள் மனதில் இயேசுவின் பாடுகள் நன்கு வேரூன்றுவதற்கு அவர் எழுதிக் கொடுத்த இயேசுவின் பாடுகளை, 'பசான்' (வியாகுல பிரசங்கம்) வாசித்தல் என்று சிலர் இராகத்துடன் வாசிக்க, வேறுசிலர் திரைமறைவிலிருந்து கொண்டு பொம்மைகளை அங்குமிங்கும் நகர்த்தி ஒரு நாடகமாகக் காட்டினர். ஈற்றில் இயேசு சிலுவையில் மரிப்பதும், இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுவதும், பின்னர் இறந்த உடலை பவனியாக எடுத்துச் செல்வதும் (ஆசந்தி) கிறிஸ்தவர்களுடைய மனதை மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் அல்லாத பலருடைய உள்ளங்களையும் தொடுகின்ற ஒரு செயலாக விளங்கியது. இதனால் பலர் மனம் உருகி, மனம் மாறி கிறிஸ்தவர்களாக வந்ததும் உண்டு. இயேசு சிலுவையில் மரிப்பதைக் கண்ணுற்றதும் இயல்பாகவே அனைவரும் மண்டியிட்டு 'சர்வேசுரா சுவாமி இரக்கமாக எங்களைப்பாரும்' என்று மனம் உருகி மன்றாடுவது உண்மையிலே பார்ப்போருக்கும் கண்ணீர் மல்கச் செய்யும் செயலாகவே விளங்கியது.
இவையெல்லாம் சொறிக்கல்முனையின் கடந்த காலப் பாரம்பரியங்கள் ஆகும்.
🍇அருட்தந்தை புறுணி மட்டக்களப்புக்கும், சொறிக்கல்முனைக்கும் வந்து சென்ற பின்னர், அமலமரித்தியாகியான அருட்தந்தை முஷெல் (Rev. Fr. Mouche, omi) அடிகளார் மட்டக்களப்பில் தங்கியிருந்து இப்பெரிய பிரதேசத்தைப் (பகுதிகளை) பராமரிக்கலானார். இவ்வாறு 50 ஆண்டுகள அமலமரித்தியாகிகள் சொறிக்கல்முனைக்கும், வருடத்தில் ஒரு முறையாவது சிறப்பாகத் திருச்சிலுவைத் திருநாளை அண்மித்து வந்து சில நாட்கள் தங்கியிருந்து, அனைத்து ஆன்மீக சேவைகளைச் செய்து, திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடியபின் மட்டக்களப்பு திரும்புகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது சுமார் 50 ஆண்டுகள் நீடித்திருந்தது. பரிசுத்த திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களின் ஒப்புதலுடன், பின்னர் இயேசுசபைத் துறவிகளிடம் சொறிக்கல்முனை ஒப்பட்டைக்கப் பட்டது.
🏵️அதன் பின்னர் 1896-இல் இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை பிலிப் ஜோசப் மேரி அடிகளார் சொறிக்கல்முனையில் முதலாவது வதிவிடக் குருவாக வந்து பணிபுரியத் தொடங்கினார்.
🌷அவ்வேளையில் சொறிக்கல்முனையானது, கல்முனையின் ஒரு அலகாகத்தான் (கிளையாக) இருந்தது. பங்குகள் ஒன்றும் சட்டப்படி பிரிக்கப்படவில்லை. மட்டக்களப்பு ஒன்றுதான் சட்டப்படி ஒரு பங்கு. அது முழு மட்டக்களப்பு கோட்டம் அனைத்தையும் உள்ளடக்கிய, குமணை தொடக்கம் வெருகல் வரை உள்ள ஒரு பெரிய பிரதேசம் ஆகும். தொடர்ந்து அருட்தந்தை அலோசிங் அலோசியஸ் அடிகளாரும், இன்னும் பலரும் வதிவிடக் குருக்களாகச் சொறிக்கல்முனையில் பணியாற்றியுள்ளார்கள்.
🪴1936ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி தான் திருமலை ஆயர் பேரருட்திரு கஷ்டன் ரொபிஷே (Rt. Rev. Dr. Gaston Robichez, SJ) அவர்களால் அதிகாரப்பூர்வமாக சொறிக்கல்முனை ஒரு தனிப் பங்காகப் பிரகடனம் செய்யப்பட்டு, அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார் முதலாவது பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவருக்குப்பின் பல இயேசுசபைத் துறவிகளும், மறைமாவட்டக் குருக்களும் பங்குத்தந்தையர்களாக சொறிக்கல்முனையில் பணியாற்றியுள்ளனர்.
🙏இவர்களுள் அருட்தந்தை குளோட் R. டேலி, (Rev. Fr. Claude R. Daly, SJ.) சொறிக்கல்முனைவாழ் மக்களால் அதிகம் நினைவு கூரப்படுபவராக விளங்குகின்றார்.
🍎கல்ஓயா பள்ளத்தாக்கு 1948-ம் ஆண்டுக்குப் பின்னர் பெரிய ஒரு குடியேற்றத் திட்டமாக மாறியது. இதன் விளைவு சொறிக்கல்முனையிலும் தடம் பதிக்கலாயிற்று. 1963-ல் ஆலயத்திலிருந்து 2கி.மீ தொலைவில் 6-ம் கொலனி என்னும் பெயரில் ஒரு குடியேற்றத் திட்டம் உருவெடுத்தது. இத்திட்டத்தின் கீழ் சொறிக்கல்முனையிலிருந்து 85 குடும்பங்கள் தங்கள் சுயவிருப்பின்படி 6-ம் கொலனியில் குடியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்கர்கள் ஆவர். இதனால் இவர்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்த ஆயர் இக்னேசியஸ் கிளெனி ஆண்டகை அவர்கள், ஆலயம் ஒன்று அமைக்க அங்கு ஒரு காணியைப் பெற்றுக் கொடுத்தார். ஆரம்பத்தில் ஒரு சிறு ஓலைக் குடிலே மக்களின் அயராத முயற்சியினால் அங்கு கட்டப்பட்டு, புனித அந்தோனியார் பெயரால் உருவாக்கப்பட்டது.
🦋பின்னர் 1960-ம் ஆண்டளவில் அருட்தந்தை டேலி அவர்கள், 6-ம் கொலனி குடிசை ஆலயத்தை கல்லினால் கட்டிப் புனரமைத்தார். அத்துடன் மக்களின் பயன்பாட்டிற்கென ஒரு கிணற்றையும் ஆலயப் பகுதியில் கட்டினார். இவ்வாலயம் 1980 -இல் பங்குத் தத்தையாக இருந்த அருட்தந்தை எல்மோ ஜோண்பிள்னை (Rev. Fr. Elmo Johnpilai) அவர்களால் மாற்றியமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று நாம் காணும் நிலையை அடைந்தது. இவ்வாலயம் சொறிக்கல்முனைப் பங்கின் ஒரு அலகாகவே உள்ளது.
🕯️1976ம் ஆண்டில் ஆயர் பேரருள்திரு L.R. அன்ரனி (Rt. Rev. Dr. Leo Rajendram Antony) அவர்கள் திருக்குடும்பக் கன்னியர்களை சொறிக்கல்முனைக்கு வரவழைத்து பங்கிலும் பாடசாலையிலும் பணியாற்றச் செய்தார். இவர்கள் 10 ஆண்டுகள் இங்கே பணிபுரிந்தனர். பின்னர் ஆயராய் வந்த போரருள்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள், திருக்குடும்பக் கன்னியர்களை மட்டக்களப்பு இருதயபுரத்திற்கு மாற்றி, அவர்களை ஐயந்திபுரத்தில் அமர்த்தி, சொறிக்கல்முனையை கல்முனையிலுள்ள அப்போஸ்தலிக்க கார்மேல் சபைக் கன்னியரிடம் ஒப்படைத்தார்.
🍒1976 முதல் 1979 வரை பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. அன்ரனி லியோ (Rev. Fr. Antony Leo) அடிகளாரின் காலத்தில், சொறிக்கல்முனைப் பங்கிற்கு உரிய வயல் காணி வேளாண்மை செய்ய மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஒரு சிலருடைய ஏகபோக உரிமையாய் இருந்த வயல்வெளி அனைத்தும் இரண்டு ஏக்கர் கொண்ட துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் அவைகள் ஒவ்வொரு துண்டாக வருடந்தோறும், துண்டு குலுக்கப்பட்டு மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதற்கு தகுதியுள்ளவர்களாகும் பொருட்டு எல்லோரும் முதலில் ஒரு ஆண்டுக்குரிய தாபரிப்புப் பணம் முழுவதையும் கட்டி முடித்திருக்க வேண்டும் என்ற ஒழுங்கும் உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இவ்வொழுங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
🌹1978 ஆம் ஆண்டில் வீசிய பயங்கரமான சூறாவளி சொறிக்கல்முனையை விட்டு வைக்கவில்லை. மக்களின் வீடுகளோடு பழைய ஆலயமும் அதைச்சுற்றியிருந்த மதிற்சுவரும் குடைசாய்ந்தன. வாழவும் இருப்பிடம் இல்லை, வழிபடவும் ஆலயம் இல்லாது மக்கள் அவதியுற்றனர். அவ்வேளை பங்குத்தந்தையாக இருந்த எல்மோ அடிகளார் கொழும்பு செடெக் நிறுவனம் அளித்த நிதியுதவியுடன் மக்களுக்கு வீடுகளும், வழிபாட்டிற்குப் புதியதோர் ஆலயமும் கட்டினார்.
🌺1984 முதல் 1989 வரை பங்குத் தந்தையாக விளங்கிய B.A ஜோசப் அடிகளாரின் காலத்தில் 6ம் கொலனியில் சின்ன மடுமாதா சிற்றாலயமும், சம்மாந்துறையில் கிறிஸ்து அரசர் சிற்றாலயமும் கட்டப்பட்டன. அத்துடன் வீரச்சோலையிலும் புனித செபமாலை மாதா ஆலயம் என்ற புதிய ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டது.
😥அதன் பின்னர், 1990ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சொறிக்கல்முனையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. துடிப்புள்ள பல இளைஞர்கள், பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இளம் பெண்கள் சூறையாடப்பட்டு, கொல்லப்பட்டு நெருப்பிலப்பட்டார்கள். இன்னும் பலர் காணமற்போனார்கள். சிலர் ஊரைவிட்டே ஓடவேண்டிய சூழல் உருவானது. ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் கல்முனையிலும், மட்டக்களப்பிலும் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
❤️சொறிக்கல்முனையில் எஞ்சியிருந்த மக்களுக்காக பணிபுரிந்த அருட்பணி. J. B. செல்வராஜ் (Rev. Fr. J.B. Selvaraj) அவர்கள் 11-07-1990 அன்று அகதிகளுக்கு உணவு எடுத்துக் கொண்டு சவளக்கடையூடாக சொறிக்கல்முனைக்கு வரும்பொழுது வழிமறிக்கப்பட்டு, வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு, நெருப்பிலிடப்பட்டார். இக்கோரச் செயல் இன்றும் அழியாத வடுவாகத்தான் இருக்கின்றது.
🍏பல வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் பின்னர் மீள் குடியமர்த்தப்பட்டவேளை, 6ம் கொளனி அந்தோனியார் ஆலயமும், அதைச் சுற்றியுள்ள நிலமும் பாதுகாப்புப் படையினரால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. இக்காலக்கட்டத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. அகுஸ்தின் நவரெட்ணம் அடிகளார் ஆலயம் இல்லாத இப்பகுதிவாழ் மக்களின் புகார்களுக்குச் செவிமடுத்து, ஆயர் சுவாம்பிள்ளை அவர்களுடன் பேசியதன் விளைவாக, அதிகாரிகளுடன் ஆயர் அவர்கள் உரையாடி, ஆலத்தை பிரித்தெடுத்து, அதற்கு வழிபாட்டுக்குச் செல்ல ஒரு சிறு நடை பாதையையும் பெற்றுக் கொடுத்தார். அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார் உடைக்கப்பட்ட ஆலயத்தைத் திரும்பவும் கட்டியெழுப்பி, திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆரம்பித்தார். சில காலத்திற்குப்பின் ஆலய வளவும் (பகுதிகள்) திருச்சபை வசம் கையளிக்கப்பட்டது. ஆலயத்திற்கு புறம்பாக வேறு இடத்தில் பாதுகாப்புப் படையினர் தங்கள் முகாம்களை அமைத்துக் கொண்டனர். ஆயினும் இக்காலம் மிகவும் கெடுபிடிகள் கொண்ட பயங்கரமான ஒன்றாகவே இருந்தது.
💐மேலும் அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார் உடைக்கப்பட்ட சம்மாந்துறை கிறிஸ்து அரசர் சிற்றாலயத்தையும், வீரச்சோலை ஆலயத்தையும், 4ம் காலனி சின்ன மடு மாதா சிற்றாலயத்தையும் மீளக் கட்டியெழுப்பி, மக்களின் வழிபாட்டிற்கு ஏற்றதாக அமைத்தார். திருப்பலியும் ஒழுங்காக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
🌿நவரெட்ணம் அடிகளாருக்குப் பின் அருட்தந்தை சுகுணேந்திரன் குரூஸ் அவர்கள் பங்குத்தந்தையாக 1998 முதல் 2001-ம் ஆண்டுவரை பணியாற்றினார். அதிகமான மக்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
🌈தொடர்ந்து பங்குக் குருவாக வந்த அருட்தந்தை ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் மரியாள் பக்தியை வளர்க்கும் பொருட்டு அங்கே அந்தோனியார் ஆலய வளவில் ஒருபுறம் சதாசகாய அன்னை படத்தை ஏற்றி மெருகூட்டி, ஒரு சிற்றாலயமாக அதை மாற்றி, மக்களை அன்னை மரியின் பக்தியில் வளர வழியமைத்தார். பின்னர் 2001 -2006 வரை அருட்தந்தை பேதுரு ஜீவராஜா அடிகள் பங்குதந்தையாக பணிபுரிந்துள்ளார்.
🍊அவருக்குப்பின் அருட்தந்தை X. I. றஜீவன் அடிகளர் 2006ல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவர் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலமும் கற்பித்தார். ஆலயத்திலும் ஆங்கில மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் பழக்கத்தையும் உருவாக்கினர்.
🌳சொறிக்கல்முனையில் ஆலயம் அமைக்கப்பட்டதன் இருநூறாம் ஆண்டு ஜூபிலி, 2008 ஆம் ஆண்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சூறாவளிக்குப்பின் கட்டப்பட்ட ஆலயம் புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவூட்டப்பட்டது. அவ்வேளையில் ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை அவர்களால் இது ஒரு புனித யாத்திரை திருத்தலமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இக்காலக் கட்டத்தில் அருட்தந்தை சேவியர் றஜீவன் அவர்கள் சொறிக்கல்முனையிலுள்ள பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றினார். இதனால் பாடசாலை மாணவர்களுடைய கல்வி நிலையும் உயர்வடைந்தது.
🌈தொடர்ந்து பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் திருத்தல வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்றனர்.
👉தகவல்கள்: பங்குத்தந்தை அருட்தந்தை. I. ஜினோ சுலக்சன் அவர்கள்.
📸தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் சகோதரர். டினேஸ் அவர்கள்.
✍️ஆலயம் அறிவோம் பதிவாளர்:
K Jose Mathapuram
Tholayavattam Post
Kanniyakumari District
Tamilnadu, 629157
Email: [email protected]
இயேசுவுக்கே புகழ்.. இயேசுவுக்கே நன்றி...🌹💐🙏💐🌹