03/11/2025
மறைந்துள்ள ஓர் அரிய ரத்னம் பகுதி - 2
விஸ்வநாத ஸ்வாமி
ஒரு நாள் நடு இரவில் பகவான் கதவை தட்டிவிட்டு தன் அறைக்குள் வந்ததை ஒரு சமயம் என்னிடம் இவ்வாறு கூறினார். “பகவான் கூறினார், “வேகமாய் எழுந்திரு! பிறர் பார்க்கும் முன் நாம் பிரதக்ஷிணம் செல்வோம்!” இருவரும் (பகவானும், விஸ்வநாத ஸ்வாமியும்) சேர்ந்த பிரதக்ஷிணம் வந்தனர்; மலை வலம் வரும்வழி நெடிகிலும், பகவான் அவரது உபதேசத்தை விஸ்வநாத ஸ்வாமிக்கு அருள்பாலித்தார். விஸ்வநாத ஸ்வாமி இதை என்னிடம் இயம்பியபொழுது அவர் உள்ளத்து மகிழ்ச்சி அவரது முகத்தில், மிக அற்புதமாய் வெளிப்பட்டது. பொதுவாக, அவர் அதிகம் சிரிக்க மாட்டார்; ஆனால், அவர் சிரிக்கும்பொழுது, அவரது உள்ளத்து மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்லாது உடல் முழுதும் சிரிப்பின் மகிழ்ச்சியில் திளைக்கும்.
பகவானோடு தொடர்புடைய இடங்களை கண்டு பார்த்து அனுபவமாதலை விஸ்வநாத ஸ்வாமி ஊக்குவித்தார். மாமரக்குகை, பவளக்குன்று, பகவான் இரண்டாவது முறை மரணானுபவம் அடைந்த ஆமைப்பாறை போன்ற இடங்களை கண்டுகளித்தேனா என வினவினார்.
ஒரு சமயம், எனக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதால் நான் விஸ்வநாத ஸ்வாமியை இரண்டு நாட்கள் சந்திக்கவில்லை.நான் அது சமயம், சரஸ்வதி நிலையம் அருகில் சிறு குடிசையில் தங்கி இருந்தேன்.மாலை நான்கு மணி அளவில் என்னைத் தேடி வருபவரைக் கண்டு அதிர்ச்சியுற்று மனம் நெகிழ்ந்து போனேன் - வேறு யார்? விஸ்வநாத ஸ்வாமியே தான்! புன்சிரிப்போடும் கேளிக்கையோடும் அவர் கூறினார், “முகமது மலைக்கு வரவில்லை; எனவே, மலையே முகமதை நாடி வந்துள்ளது” அவர் கொணர்ந்திருந்த சௌவ்வனப்ராஸ்ஸில் எனக்கு கொஞ்சம் தந்தார்; அது “டானிக்”காக அமைந்தது. பிறகு, அவர் கூறினார், “நடைமுறைப் பயிற்சிக்குச் செல்லலாம் வா” எனக்கு வயிற்று கடுப்பு என நான் கூறினேன்; அது சரியாகிவிடுமெனக் கூறி என்னை வரும்படி கூறினார். நான் சரியாகிவிட்டேன் எனக் கூற அவசியமில்லை.சிறிது தூரம் சென்ற பின் எங்கு செல்கின்றோம் என நான் கேட்டேன்.“அது ஒரு ரகசியம், அதை நீ மிக விரும்புவாய்” எனக் கூறினார். நகரத்தைக் கடந்து நாங்கள் ஒரு சிறு கருவறைக் கோவிலுக்குச் சென்றடைந்தோம். இது குருமூர்த்தம்.பகவான் திருவண்ணாமலை வந்தடைந்த தொடக்கக் காலத்தில் தங்கியிருந்த இடங்களில் இதுவும் ஒன்று.பகவான் தவக் கோலத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த பதிவுகளை சுவற்றில் அவர் சுட்டிக்காட்டினார்.பகவானைப் பற்றியும் அவரது அருள்மொழிகளைப் பற்றியும் பேசுவதற்கு விஸ்வநாத ஸ்வாமி எப்பொழுதும் மிக ஆயத்தமாய் இருந்தார்.
ஒரு காலகட்டத்தில், நான் சோம்பலாகி ஆர்வமற்று இருந்தேன். ஆதலால், ஐதராபாத் சென்று அங்கு பிரபலமான புத்தமத தியான குருவான கோயன்ஜியுடன் சில காலம் இருந்துவிட முடிவு செய்தேன்.அவ்வாறு நான் தங்கியிருந்துவிட்டு திரும்பிவந்தபொழுது இங்கிருந்த பலர் நான் அவ்வாறு சென்றது குறித்து விமர்சித்தனர்.இது என் மனதை அல்லலுறச் செய்ததால் இதுபற்றி விஸ்வநாத ஸ்வாமியுடன் விளக்கமுற விரும்பினேன்.காலையில் நான் அவரை சந்திக்க நினைத்து காலையில் நான் ஆஸ்ரமம் சென்றேன்.ஆஸ்ரம புத்தக நிலையம் அருகே படிகளில் ஏறிச் செல்ல தொடங்கியபொழுது விஸ்வநாத ஸ்வாமி ஆஸ்ரம அலுவலகத்திலிருந்து வெளிவரும்பொழுது சந்தித்தேன்.என்னை உற்றுநோக்கி, புன்முறுவல் பூத்து தேநீர் (டீ) அருந்த செல்லலாமா என வினவினார்.அது கோடைக்காலத்தில் மிக அதிகமான வெயில் வீசும் காலம்; அதற்காக கையில் குடையும் வைத்திருந்தார். ஆஸ்ரமத்திலிருந்து வெளியில் செல்லும் பொழுது மணி அடிக்கத் தொடங்கியது. விஸ்வநாத ஸ்வாமி நவின்றார், “சப்தம் மௌனத்திலிருந்து வருகின்றது; சப்தம் மௌனத்தில் நிலைத்திருக்கின்றது; சப்தம் மௌனத்திற்கே திரும்பி வருகின்றது; மெளனமே யாவுமாய் இருக்கின்றது” நாங்கள் டீ அருந்தினோம்; இதுவே அவரோடு பேசுவதற்கு உரிய தருணம் என நான் நினைத்தேன்; எனின், பேசுவதற்கு வெட்கமுற்றேன். நாங்கள் அவருடைய அறைக்குத் திரும்பிச் சென்றோம்.அவர் கூறினார், “உள்ளே வா, அங்கு ஒரு கட்டுரை உள்ளது; த மவுண்டன் பாத் இதழுக்காக நீங்கள் பார்க்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்.பேசுவதற்கு எனக்கு சரியான வாய்ப்பை அவர் நல்கியுள்ளார்; எனினும் நான் பேச வெட்கமுற்றேன்.நான் அந்த கட்டுரையை படித்தவுடன் அக்கட்டுரையைப் பற்றி எனது கருத்தைக் கேட்டறிந்தார். பிறகு நான் வேறேதேனும் சொல்ல விரும்புகின்றேனா? எனக் கேட்டார்; நான் “இல்லை” என பதிலுரைத்தேன்.மாலை நான்கு மணிக்கு அறைக்கு வருமாறு அழைத்தார்.நான் செல்ல தொடங்கிய பொழுது என்னை அவர் அழைத்துக் கூறினார்; நான் அதிர்ச்சி ஆச்சரியத்தில் திகைத்துப் போனேன்.என் ஐயப்பாடுகளையும் கவலைகளையும் நீக்குவதற்கு பகவான் ஒவ்வொன்றையும் எவ்வாறு கனகச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்துகின்றார் என்பதை நினைந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். கோயென்கா முறையில் நான் தியானம் செய்தது பற்றியும், அது எவ்வாறு மனதில் மறைந்து பதிந்துள்ள மனப்போக்குகளை நீக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து உதவுகின்றது என்பதையும் அவரிடம் கூறினேன். அவர் என்னை மிக மென்மையாய் பார்த்துக் கொண்டே மெதுவாக படுக்கத் தொடங்கினார்.அவ்வாறு படுத்துக்கொண்டே அவர் கூறினார், “மனதைப் பற்றியோ அதன் தன்மைகளைப் பற்றியோ நான் எதையும் அறிந்திருக்கவில்லை.நான் அறிந்திருப்பதெல்லாம் உறங்குவதுதான்.அவர் முகம் நிறம் மாறி இருந்தது; வெளிறிப் போய் இருந்தது; அவர் குறட்டை விட்டு உறங்கத் தொடங்கினார்.நான் அங்கு அமர்ந்திருந்தேன். அப்பொழுது, ஆஸ்ரம பணியாளர் ஒருவர் விஸ்வநாத ஸ்வாமியைப் பார்க்க வந்தனர். விஸ்வநாத ஸ்வாமி உறங்கியதை கண்டார்.அவரும் அருகில் இருந்த பெஞ்சில் படுத்து குறட்டை விட்டு உறங்கத் தொடங்கினார்.நானும் விஸ்வநாத ஸ்வாமி படுக்கையில் படுத்துறங்க முடிவெடுத்து அவ்வாறே அமைதியாய் உறங்கினேன்.சிறிது நேரம் கழித்து அருகில் எழும் சப்தம் கேட்டு விழித்துப் பார்த்தேன்.விஸ்வநாத ஸ்வாமி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டே என்னைப் பார்த்தார்.அவர் குறிப்பிட்டு துல்லியமாகக் கூறினார், “உனக்குப் புரிகிறதா?” ஆஸ்ரம பணியாளர் இன்னும் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். விஸ்வநாத ஸ்வாமி சொன்னார், “அவர் இயங்குகிறார்.
இவற்றை நான் படித்தவுடன், பகவானின் தலையாய பக்தரான இவருடைய தன்மையை எழுத்துக்கள் எடுத்தியம்பாது என அறிந்துகொண்டேன்.அவர் பகவான் மீது கொண்டிருந்த பற்றும் நன்றி மறவாமையும் அவருடைய ஒவ்வொரு எண்ணிய எண்ணத்திலும், சொல்லிய சொல்லிலும், ஆற்றிய செயலிலும் மிளிர்ந்தன. விஸ்வநாத ஸ்வாமி பகவானை முதன்முதலில் சந்தித்ததைப் பற்றி நாம் ஒருபொழுதும் பேசுவதில்லை; ஆனால் ஒவ்வொன்றும் அவர் பகவான் மீது கொண்டிருந்த பற்றையும் பக்தியையும் வெளிப்படுத்தின. ஆஸ்ரமத்தின் பின் பகுதியில் அமைதியில் ஆழ்ந்து அமர்ந்திருக்கும் அவர் - விஸ்வநாத ஸ்வாமி மண்ணில் மறைந்திருக்கும் மதிப்பில்லா ரத்தினமே!
நன்றி : ரமண ஒளி 2025 அருண விஜய இதழ்
ஆங்கில மூலம் மரே ஃபெல்ட்மன்
தமிழில் முனைவர் மா. முருகேசன்