கரூர் மாவட்டம் , குளித்தலை வட்டத்தில் சிவாயம் அய்யர்மலை என்னும் கிராமத்தில் ரெத்தினகிரீசுவரர் திருக்கோயில் வானோங்கி அமைந்துள்ள மலைக்கோவிலாகும். சோழ நாட்டில் அமைந்துள்ள 191 சிவத்தலங்களில் காவிரி ஆற்றுக்குத் தெற்கே 28 சிவத்தலங்களும், வடக்கே 63 சிவத்தலங்களும் உள்ளன. தென்கரையில் உள்ள பாடல் பெற்ற திருக்கோவில்களில் முதலாவதாக அமைந்துள்ள சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு. சைவ சமய நாயன்மார் நால்வரில் திருந
ாவுக்கரசரால் போற்றித் திருத்தாண்டகத்தில் திருவாட்போக்கியம்மான் என்று இங்கு எழுந்தருளியுள்ள இறைவனையும் , சுரும்பா மருங்குழலி என்று இறைவியையும் ஏத்திப் பாடியுள்ளார்.
இத்திருக்கோயில் கடல் மட்டத்திற்கு 1178 அடி உயரத்தில் 1017 படிகள் கொண்ட மலையில் அமைந்துள்ளது. மக்களால் பொதுவாக இத்தலத்திற்கு வழங்கப்படும் பெயர் அய்யர்மலை என்பதே. இம்மலைக்கு சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசலம், மணிகிரி, வாட்போக்கி என்ற பெயர்களும் உண்டு. மலையேறிச் செல்லும்படி வழியும் , மலை மேற்கோயிலில் உள்ள பிரகாரங்களும், ஓம் என்ற பிரணவ எழுத்து போலவும் சிவ மகா மந்திரமான ஐந்தெழுத்தின் வடிவமாகவும் அமைந்திருத்தலால் சிவாயமலை என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்
மலைகள் என்றாலே மகத்தானவை. மகோன்ன தங்கள் நிறைந்தவை. பரந்துபட்ட நீள அகலத்தாலும், பரப்பளவாலும், சுற்றளவாலும், உயரத்தாலும் மலைக்க வைக்க கூடியன, மலைகள்.வனங்களும், வயல்வெளிகளும் சூழப் பெற்ற மலைகள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியன.அருவிகளும், நீரோடைகளும் நிறைந்த மலைகள் மனதிற்கு இதம் தரக்கூடியன.
மலைகளின் மகத்துவத்தை உணர்ந்திருந்த காரணத்தால்தான் முனிவர்களும், சித்தர்களும் மலைகளை நாடினர்.தெய்வ தரிசனங்களுக்கும் உகந் தவை என்பதால் தான் மலைகள் தோறும் தெய்வத் திருத்தலங்கள் அமைந்தன.மன்னர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை மன அமைதிக்கு மலைகளைச் சரணடைந்தனர்.இயற்கை நேசர்களுக்கு மாபெரும் அக விருந்து படைப்பன, மலைகளே! அவ்வகையில் மலைக்கான இலக்கணங்களையும், புராணச் சிறப்புகளையும் கொண்டு, பார்த்த மாத்திரத்தில் பிரமிப்பையும், இறையருளையும் தரக் கூடிய வகையில் அமைந்திருக்கும் ஒரு மலையே, கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகே கம்பீரமாய் காட்சியளிக்கும் அய்யர் மலை.
‘அய்யர்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.எல்லாவற்றுக்கும், எல்லோருக்கும் தலைவனாக இருக்கிற சிவபெருமான் குடிகொண்டிருக்கிற மலை என்பதால் இந்த மலைக்கு ‘அய்யர் மலை’ எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டவர்கள் ஐவரும் சிலகாலம் இந்த மலையில் தங்கியிருந்ததால் ‘ஐவர் மலை’ எனப் பெயர் பெற்று, பின்னாளில் அய்யர் மலை என்று மருவியதாகவும் கூறுகிறார்கள்.
சிவாயமலை, மாணிக்கமலை, இரத்தினகிரி, மணி கிரி, இரத்தினாசலம், வாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை, தென் கயிலாலயம், காகம் பறவா மலை ஆகிய பெயர்களும் இம்மலைக்கு உண்டு.
கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் 1017 படிகளைக் கொண்டு விளங்குகிறது அய்யர்மலை. இந்த மலையில் உள்ள படிகளைப் போல உயரமான படிகளும், செங்குத்தாக ஏறக்கூடிய படிகளும் அபூர்வம். கட்டிளம் காளையரைக் கூட கால்வலிக்குமோ என அச்சம் கொள்ள வைக்கும் படிகள். சிறிது நேரம் ஓய்வெடுக்கலாமே என உண்மையிலேயே கெஞ்ச வைக்கும் உயரம்.
மலை அடிவாரத்தைச் சுற்றிவர 4 கி.மீ. சாலை ஒன்று உள்ளது. இது, கிரிவலத்திற்கு உகந்ததாக உள்ளது.சமீபகாலமாக கிரிவலம் செல்வோர் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவிற்குப் பெருகி வருகிறது. மலையைச் சுற்றி வரும்போது, ஒருபுறம் சிறுசிறு பாறைகள் இன்னொரு புறம் செடி கொடிகள்.மரங்கள் நிறைந்த வனப்பகுதி. மற்றொரு புறமோ வழுவழுப்பான செங்குத்தான பாறைகள் என மலை வளங்கள் மலைக்க வைக்கின்றன.
சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் பரந்திருக்கிற இம்மலைக்குப் படிகள் வழியாகச் செல்வதே கடினப் பயணமாக இருந்தாலும் எளிய வழி.வெயில் நேரத்தில் சென்றால் தொலைந்தோம்.படிகளின் சூடு பாதங்களைக் கொப்பளிக்க வைத்துவிடும்.
படிகள் வழியாகப் பயணம் மேற்கொள்ளும்போது, சில சுவாரஸ்யமான அற்புதங்களை அய்யர் மலை கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
மலை ஏறும்போது முதலில் தென்படுகிறது ஓர் அழகிய குளம்.சுற்றிலும் படிகள் அமைக்கப்பட்டு, குளிர்ச்சியூட்டும் குளம்.கொஞ்ச நேரம் மலை ஏறினால், ஒரு குன்று காணப்படுகிறது.உருண்டை யான பாறை, அடிப்பாகம் சிறுத்து மலையில் ஒட்டிக் கொண்டு இருப்பது போன்றும், நம்மீது உருண்டு விழுந்து விடுமோ என்று பயமுறுத்தும் வகையில் இருக்கிறது அந்தக் குன்று. அதற்கு ‘சகுனக்குன்று’ என்று பெயர்.
சற்று மேலே சென்றால், ‘பொன்னிடும் பாறை’ உள்ளது. அதற்கு மேலே 103 படிகள் ஏறிச் சென்றால் ‘பதினெட்டாம் படி’ என்னும் பகுதி வருகிறது.
கீழிருந்து, மேலே மலை ஏறிச் செல்லும்போது வழியில் ஆங்காங்கே 21 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் குறிப்பிட வேண்டியவை இலட்ச தீப மண்டபம்.காக்கை மண்டபம், வசந்த மண்டபம் எனும் ஒன்று பாதி ஆகியனவாகும். இம்மண்டபங்களுக்கு புராண மகத்துவங்கள் இருப் பதாக ஐதீகம்.
மலை உச்சியில் அய்யர் மலைத் தெய்வமான இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இறைவனுக்கு வாட்போக்கி நாதர், இராசலிங்கம், முடித்தழும்பர் மலைக்கொழுந்தீசர், சுந்தரர், மத்தியான சொக்கர் எனப் பல திருநாமங்கள் உண்டு.ஒவ்வொரு பெயருக்கும் ஏற்ற அதிசயப் புராண நிகழ்வுகளும் உண்டு.
மலை உச்சியிலிருந்து பார்த்தால் 8 கி.மீ. தூரத்தில் அகண்ட காவேரி தெரிகிறது. காவிரியிலிருந்து தினமும் ஒருவர் குடத்தில் நீர் கொண்டு வந்து மலை ஏறி தரும் நீரே அபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொன்றுதொட்டு நடந்து வரும் ஆன்மிக நிகழ்வு.இன்று தெரியும் காவிரி பாவம், மணல் தான் காற்றில் பறந்து ஓடுகிறது.நீரைக் காணோம். இப்போது சில வருடங்களாக அந்த மணலுக்கும் சோதனை வந்துவிட்டது.
இன்னொரு புறம் சோலைகளும், வயல்களும் பசுமை இழந்து காணப்படுகின்றன.ஒரு காலத்தில் பசுமை போர்த்தி பரவசமூட்டும் இடங்களாக இவை காட்சி அளித்தனவாம்.
மலையுச்சியிலிருந்து பார்க்கும்போது திருஈங் கோய்மலை, தோகைமலை, திருச்சிமலை, விராலி மலை ஆகியவகளை தெரிகின்றன.இவை கண்க் கினிய காட்சிகள்.மலையே இன்பம், அருகருகே மலைகளோ பேரின்பம்.
மலைவளம், இயற்கை வளங்களுக்கு அப்பால், அருள் வளங்கள் நிறைந்த மலையாகவும் விளங்கு கிறது அய்யர்மலை. இறை அற்புதங்கள் நிறைந்த ஆன்மீக நம்பிக்கைகள் கொண்ட அவற்றில் சில-
வாயுதேவன், ஆதிசேஷன், இடி, அகத்திய மாமுனி, உரோமசர் முனி, திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், தேவி, சப்தகன்னியருக்கு அருள் பாலித்த மலை, அய்யர்மலை.
அகலிகையைத் தீண்டி கௌதம முனிவரின் சாபம் பெற்ற தேவேந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்.
நாயன்மார்களில் திருநாவுக்கரசர் விஜயம் செய்து, 10 தேவாரப் பாடல்களை இம்மலை நாதர் மீது பாடியுள்ளார். எனவே இது பாடல் பெற்ற திருத்தலம். சுந்தரமூர்த்தி நாயனார் மலைமீது ஏறப் பயந்து மலைமுன் நின்று பாடினார்.இறைவனிடம் பாடலுக்குப் பரிசாகப் பொன் வேண்டினார்.இறைவன் அவருக்கு காட்சி அளித்த இடமே, ஒன்றுபாதி. பொன் சொறிந்த இடமே, ‘பொன்னிடும் பாறை.’ ஒன்று பாதி என்பது அய்யர் மலையின் உயரத்தில் பாதியளவு கொண்ட இடமாகும்.
‘சகுனக்குன்று’ என்ற இடத்தில் தாங்கள் நினைத்த காரியம் ஜெயமாகுமா என வழிபட்டு காத்திருக் கிறார்கள் பக்தர்கள். அங்கிருக்கும் பல்லிகள் ஒலி எழுப்பி சகுனம் சொல்கின்றன.நினைத்தது கைகூட பிரார்த்திக்கும் இடமாக, சகுனம் பார்க்கும் இடமாக இன்றும் விளங்குகிறது, சகுனக்குன்று.
பதினெட்டாம் படியில் இருந்து சூடம் கொளுத்தி சத்தியம் செய்தால் அந்தச் சத்தியம் அடுத்த தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. காலங்காலமாக பதினெட்டாம்படி ஒரு இறைநாட்டாமையாக விளங்கி, மக்களின் சச்சரவுகளை பயபக்தியோடு தீர்த்து வருகிறது.
காக்கை மண்டபத்தின் மீது காகங்கள் பறப்ப தில்லை, அமர்வதில்லை. பக்தர் ஒருவர் கொண்டு வந்த பால் குடத்தை காக்கை கவிழ்த்து விட்டதால், பக்தரின் வேண்டுதல்படி காக்கைக்கு இறைவன் கொடுத்த சாபம், அந்தப் பகுதியில் காக்கைகளின் வரத்தே இல்லாமல் போய் விட்டது. இது ஓர் ஆன்மிக அதிசயம்.
மலையிலும் மலையைச் சுற்றிலும் காவிரி ஆறு உள்பட ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. ஊர் நடுவே திருக்குளம் உள்ளது. நீலகண்டன் கேணி உள்ளது. மலைமேல் பல வற்றாத சுனைகள் உள்ளன. இவையும் சிற்பங்கள் பலவும் பார்ப்பவர்களின் கண்களையும் கருத்தையும் ஈர்க்கின்றன.
மலைமேல் இரு பாறைப் பிளவுகளையும் வாள் போன்று ஒரு கல் நடுவே இருப்பதையும் காண்பவர் வியக்காமலிருக்க முடியாது.இது ஓர் அசுரனை இறைவனின் ஆணைக்கேற்ப தேவியும், சப்த கன்னியரும் இரு கூறாய் அழித்த சம்பவம் தொடர்பானது என்பது தல புராணத்துத் தகவல்.
மலைமேல் வீற்றிருக்கும் இறைவன், வாட் போக்கி நாதர் எனப் பெயர் பெற்ற புராணம் சுவாரஸ்யமானது.சூரியராசன் என்னும் மன்னின் நவரத்தின கிரீடம் இறைவனின் திருவிளையாடலால் காணாமல் போனது. தேடி அலைந்த மன்னனிடம் மணிமுடி, அய்யர் மலை இறைவனிடம் இருப்பதாக ஒரு வேதியர் சொல்ல, மன்னன் படையுடன் அய்யர் மலை விரைந் தான்.
ஈசனே கோவிலில் ஓர் அந் தணராக நின்று கொண்டு, அருகிலிருந்த ஒரு கொப்பறை யில் காவிரியிலிருந்து நீர் கொண்டு வந்து நிரப்பி னால், மணி முடியைக் கொடுப்பதாகச் சொன்னார்.அரசனும் காவிரி நீர் கொண்டு வந்து நிரப்பினான்.எவ்வளவு தடவை ஊற்றியும் கொப்பரை நிறைந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு அரசன் தன் வாளினை எடுத்து அந்தணர் தலை மீது வீசினான்.அந்தணரோ அந்தக் கணமே சிவ லிங்கம் அருகே நின்று மறைந்தார்.அரசனின் வாள் சிவலிங்கத்தில் பட்டு ரத்தம்பீறிட்டது எவ்வளவு முயன்றும் நின்ற பாடில்லை.
அரசன் தவறை உணர்ந்து உயிர் துறக்க முற்பட, இறைவன் தோன்றி அவனைத் தடுத்து மணிமுடி சூட்டினார்.இந்தப் புராணக் கதையை ஒட்டி இறைவனுக்கு வாட்போக்கி நாதர் எனப் பெயர் வந்திருக்கிறது.
இப்போதும், சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் ஒரு வாள் வெட்டு இருப்பதைக் காணமுடிகிறது.அந்த அரசனின் வழிவந்தவர்கள் இன்றுவரை தினமும் எட்டு கி.மீ. தூரமுள்ள காவிரியில் இருந்து நீர் கொண்டு வந்து, மலை ஏறி வந்து நீர் தருகின்றனர்.அந்த நீரே அபிஷேக நீராகப் பயன்படுத்தப்படுகிறது.
காலையில் (குளித்தலை) கடம்பர், மதியம் (அய்யர் மலை) இரத்தினகிரீஸ்வரர் அந்தியில் திருஈங்கோய் நாதர் ஆகியோரை வழிபட்டால் வீடுபேறு கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு. காவிரித் தென்கரையில் உள்ள சிவாலயங்களில் முதலாவதாக அமைந்திருக்கும் பெருமையும் இம் மலை நாதருக்கு உண்டு.
இயற்கையோடு இயைந்த இறை அற்புதங்கள் நிறைந்த அய்யர்மலையின் மலைவளத்தை எழுத்து வடிவாய் படிப்பதைவிட நேரில் காண்பது கோடி சுகம்.