17/08/2026
கீழக்கரை நகரின் நான்காவது காஜியார் மேதகு ஹழ்ரத் மக்தூம் காஜி முஹம்மது கியாதுத்தீன் II அவர்களின் செம்பு முத்திரை.
முகலாய சாம்ராஜ்யத்தின் மாட்சிமைமிகு பேரரசர் ஷாஜஹான் அவர்கள் காலத்தில் 407 வருடங்களுக்கு முன்னால் ஹிஜ்ரி 1041 ஆம் வருடம் (கி.பி. 1631) கீர்த்திமிகு கீழக்கரை நகரின் நான்காவது பாரம்பரிய காஜியாக விளங்கிய மேதகு ஹழ்ரத் அல்ஆரிஃபுபில்லாஹ் மக்தூம் காஜி முஹம்மது கியாதுத்தீன் II அஸ்ஸித்தீகி அல்கிர்கரி (ரஹிமஹுல்லாஹு) அவர்களின் செம்பு முத்திரை.
மேதகு ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் II அவர்களுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்ட தேதி ஹிஜ்ரீ 1041 ரபீஉல் அவ்வல் பிறை 1 என்று முத்திரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஜியார் அவா்கள் மார்க்க சட்ட விளக்கம் கூறும் காஜி சேவையுடன் அக்காலத்தின் மரபுப்படி மஸ்ஜித்களின் (மிராசு)
பொறுப்பாளராகவும் இமாமாகவும் விளங்கினார்கள். அவர்களின் அடக்கத்தலம் கீழக்கரை பழைய குத்பா பள்ளியில் அமைந்துள்ளது.
இவர்களின் புதல்வர் மேதகு ஹழ்ரத் அல்ஆரிஃபுபில்லாஹ் மக்தூம் காஜி ஷெய்கு அப்துல்லாஹ் II (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கீழக்கரை நகரின் ஐந்தாவது காஜியாக விளங்கினார்கள். பெருங்கொடை வள்ளல் சீதக்காதி ஷெய்கு அப்துல் காதிர் மரைக்காயர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஜும்ஆ மஸ்ஜிதை கட்டிமுடித்து அல்லாஹ்வுக்காக வக்ஃபு செய்து அதன் நிர்வாகப் பொறுப்பை அக்காலத்தின் மரபுப்படி ஹழ்ரத் காஜி ஷெய்கு அப்துல்லாஹ் II அவர்களிடம் ஒப்படைத்தார்கள் அதன் படி ஜும்ஆ மஸ்ஜிதின் முதல் மஹல்லி மிராசாகவும் இமாமாகவும் விளங்கினார்கள். இவர்கள் ஹழ்ரத் அல்ஆரிஃபுபில்லாஹ் மாதிஹுர் ரஸூல் சதகத்துல்லாஹ் அப்பா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு அருகில் அடங்கப்பட்டுள்ளார்கள்.
வல்ல அல்லாஹ் சங்கைமிகு காஜியார் அவர்களின் சன்மார்க்க சேவையை ஏற்று அவர்களை பொருந்திக்கொண்டு அவர்களின் கப்ரை மணமாக்குவானாக. ஆமீன்
- காஜி Dr. A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி மக்தூமி M.A.,D.Litt.
டவுன் காஜி, கீழக்கரை.
(கீழக்கரை நகர் 13வது பாரம்பரிய காஜி)
#கீழக்கரை_காஜி #கீழக்கரை