06/04/2021
❤️
மேன்மை தருவாள் நீலவேணி (நீலி) அம்மன்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த நாஞ்சில் நாடு என்ற அடைமொழியுடன் கூடிய சமூகத்தை சார்ந்த ஒரு பெண்ணை விரும்பி மணமுடித்துக் கொண்டார். மணமுடித்த மறுவருடமே அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அர்ச்சகர் தான் அனுதினமும் பூஜை செய்து வரும் சுவாமியின் உடனுறை நாயகியான சக்தியின் நாமங்களில் ஒன்றான ஆனந்தவல்லி என்ற செண்பகவல்லி என்கிற பெயரை குழந்தைக்கு சூட்டினார்.
அடுத்து பிறக்கும் ஆண்குழந்தைக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை சூட்ட வேண்டும் என்று எண்ணினார். ஆனால், அடுத்த வருடமே மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. இரண்டாவதாக பிறந்த மகளுக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை நீலா என்றும், மகள் சக்தியின் ரூபமாக திகழ வேண்டும் என்றுணர்ந்த அர்ச்சகர் மகளை நீலாதேவி என்றும் பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தைகள் இருவரும் அறிவுடனும், அழகுடனும் திகழ்ந்தனர். மூத்தவள் செண்பகம் தந்தையைப்போல் சிறிது பருமனான உடல் வாகும் சராசரி உயரமும் நல்ல செந்நிறமும் கொண்டிருந்தாள். தங்கை நீலா தாயைப்போல் மாநிறமும் பருமன் குறைந்து ஒல்லியான உடல்வாகும் அக்காவை விட சற்று உயரம் கூடுதலாகவும் சுட்டித்தனமும், பிடிவாத குணமும் கொண்டிருந்தாள்.
மகள்கள் இருவரும் பருவம் அடைந்தனர். அவர்கள் விரும்பிய வகையில் உடையும், நகையும் வாங்கிக் கொடுத்து வந்தார் அர்ச்சகர். கோயிலுக்குச் செல்வதும், வீட்டுக்கு செல்வதும் தாய் அல்லது தந்தையின் துணையுடன். அந்த அளவு கட்டுக்கோப்புடன் மகள்களை அர்ச்சகர் வளர்த்து வந்தார். ‘‘மகள்களின் அழகுக்கு மாப்பிள்ளை தேடி வருவான். என் குலத்தில் என் கோத்திரத்தில்தான் என் மகள்களுக்கு வரன் பார்க்கணும்’’. என்ற அர்ச்சகரிடம், ‘‘தாராளமாக பாருங்க, உங்க மகள்களாச்சு, நீங்களாச்சு’’ என்று பதில் கூறினாள் அவரது மனைவி. இவ்வாறு இருக்கையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக திகழ்ந்தது பத்மநாபபுரம். இங்குள்ள கோட்டைக்கு அருகே மகாராஜா மார்த்தாண்ட வர்மாவிற்கு தனி தளபதியாகவும், சுருள் வாள் வீசுவதில் வல்லவரும், சிறந்த வீரருமான பத்மநாபன் வசித்து வந்தார்.
இவர் சமஸ்தான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியினை செய்து வந்தார். அகன்ற மார்புடன் திடகாத்திரமான உடல் வாகுவைக் கொண்ட பத்மநாபன் ஒருநாள் காலையில் குதிரையில் புலியூர்குறிச்சியிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை நோக்கி சென்று கொண்டிருக்க, எதிரே கோயிலுக்குச் சென்றுவிட்டு அக்கா தங்கையுமான செண்பகமும், நீலாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பத்மநாபன், செண்பகத்தையும் நீலாவையும் கண்டான். ஆகா, என்ன அழகு என்று ஏங்கியவாறு திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றான். சிறிதுதூரம் சென்ற பத்மநாபன் மனச் சலனப்பட்டு மங்கையர்களை பின் தொடர்ந்தான். பின்விளைவை யோசிக்காமல், பின் வருபவனை நேசிக்காமல் இருப்பினும் அவனை பற்றியே வாதம் செய்து பேசிக்கொண்டு சென்றனர்.
‘‘நீலா அந்த ஆளு ஏன் இப்படி பார்த்திட்டு போறாரு’’ என்று கேட்ட செண்பகத்திடம் ‘‘ஒரு வேளை எனக்கு அவரு அத்தானா வரப்போறாரா அல்லது உனக்கு கொழுந்தனாக போகிறாரா தெரியலை’’ என்றாள் நீலா. உடனே செண்பகம், நீலாவை அடித்தபடி போடி … என்றபடி கூற… பின்னால் குதிரையின் காலடி சத்தம். அவர்களை நெருங்கினான் பத்மநாபன். அஞ்சிய இருவரும் வேகமாக நடந்தனர். இல்லம் சென்று பயத்தில் திரும்பி பார்க்க, அக்ரஹாரம் முனையில் குதிரையில் நின்றபடி கை அசைத்து விட்டுச் சென்றான் பத்மநாபன். கோட்டைக்கு வந்து குதிரையை விட்டு இறங்கிய பத்மநாபன், நடந்த சம்பவங்களையும், அக்கா, தங்கை இருவரும் விளையாட்டாக பேசியதையும் பெரிதாக எண்ணி, தனது ஆலோசகரிடம் கூறி விளக்கம் கேட்க, அவர், அந்த பெண்களின் மனதில் உன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் உள்ளது.
உனது எண்ணமும், அவர்களது எண்ணமும் ஒன்றாக உள்ளதால் நிச்சயம் அவர்களுக்கு உன்மேல் பிரியம் உண்டாயிற்று என்று கூறினான். அவனது ஆசை வார்த்தையை நம்பிய பத்மநாபன். அந்த மங்கையர்கள் யார்? அவர்களது தகப்பன் யார் என்பதை அறிய அக்ரஹாரத்தை சேர்ந்த ஒரு இளைஞனை அழைத்து கேட்க, அவன் அர்ச்சகரின் மகள்கள்தான் செண்பகமும், நீலா தேவியும் என்று கூறினான். மறுநாள் சிவன் கோயில் அர்ச்சகரிடம் மகள்களை பற்றி பேசலாம் என்று நினைக்க, ‘‘அடுத்த வாரம் கோயிலில் கொடி ஏறுது அதன் பிறகு பேசு’’ என்று ஆலோசகர் கூற, அதன்படி பங்குனி தேரோட்டத்திற்கு கொடி ஏறியபின் ஒருநாள் அர்ச்சகரை கோட்டை அருகே வழி மறித்த பத்மநாபனின் உதவியாளர்,‘‘ம்... உங்க மகளை பத்மநாபன் பார்த்திருக்கிறான்.
அவனுக்கு பிடித்துப்போச்சு திருமண ஏற்பாடுகளை எப்ப செய்ய ஆரம்பிக்கணும்கறத, நீரே, நல்ல நாளா பார்த்து ஆள் மூலமா சீக்கிரமா சொல்லி விடும்’’ என்று கேட்க, ஒன்றும் பதில் சொல்லமுடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, செய்வதறியாமல் கை, கால் நடுக்கத்துடன் வேகமாக வீட்டுக்கு வந்தார்.
மனைவியிடத்தில் சொல்லி வருத்தப்பட்டார். ‘‘படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பத்மநாபன் நம் பிள்ளைங்களை பெண் கேக்கிறாண்டி, அவன் குலத்தில் வேறுபட்டவன், குணத்தில் மாறுபட்டவன். மறுத்தால் மரணத்திற்கும் அஞ்ச மாட்டான். மன்னனுக்கு பக்க துணையாக இருப்பவன். என்ன செய்வது. வீதியில் போறவனெல்லாம் பெண் கேக்கிறானே, நான் நாதியற்று போனேனா, இல்லை சாதி கெட்டுப்போனேனா யாரிடம் முறையிடுவது. அந்த நீலகண்டனே துணை’’ என்று கூறிய அர்ச்சகருக்கு ‘‘எல்லாத்தையும் அம்மையப்பன் பார்த்துக்குவான் இப்போ உறங்குங்க’’ என்று ஆறுதல் கூறினாள் மனைவி.
வாரம் ஒன்று கடந்த நிலையில் சிவன் கோயிலில் 9வது நாள் தேரோட்டம். சிறப்பு அர்ச்சகர்கள் பலர் பூஜையிலிருக்க, அதிகாலை கோயிலுக்கு சென்று பணிவிடைகள் முடித்த அர்ச்சகர் வீடு வருகிறார். மகள்கள் தேரோட்டம் காண புறப்படுகின்றனர். அவர்களது தாயும் உடன் புறப்படுகிறாள். அர்ச்சகர் வந்து அவர்களை தடுத்து நிறுத்தி, செண்பகத்துக்கும், நீலாவுக்கும் தோஷம் கழிக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். வீட்டுல ஆறு வகை கூட்டு வச்சு, பாயசம், அப்பளத்தோடு சாப்பாடு தயார் பண்ணிவை. புள்ளைங்க கையால ஏழு பேருக்கு தானம் பண்ணின்டு அப்புறமா நாம சாப்பிடலாம் என்று கூறி மகள்களை அழைத்துச் செல்கிறார்.
கோட்டைக்கு மேல் புறத்து ஆற்றங்கரையோரம் பாழடைந்த ஆழ் கிணற்றுக்கு அழைத்து வந்து, செண்பகம், நீலா இரண்டு பேரும் ஒரே நேரத்தில் இருபத்தோரு கல் படிகளை தாண்டி இறங்கி, கிணற்றில் கால் அலம்புங்க என்று கூற, அக்கா செண்பகம் கூறினாள் ‘‘அப்பா, பார்க்கவே பயமா இருக்கே,’’ ‘‘அது ஒண்ணும் இல்ல வா’’ என்று கையை பிடித்து அழைத்துச் சென்றாள் நீலா. அவர்களது தந்தையான அர்ச்சகர் பின் தொடர்ந்து சென்றார். கடைசி படிக்கல்லில் இறங்கி கால் அலம்புகையில் இரண்டு பேரையும் அர்ச்சகர் கிணற்றுக்குள் தள்ளினார். தத்தளித்து மறு நிமிடமே மாண்டாள் செண்பகம். தத்தளித்தபடியே கத்தினாள் நீலா, ‘‘என் தகப்பா சண்டாளா, என்ன மோசம் செய்து விட்டாய். பாதகன் பத்மநாபனுக்கு பயந்து எங்களை கொன்னுட்டியே’’ என்று கூறியபடியே உயிர் நீத்தாள். மகள்களை பறிகொடுத்த அர்ச்சகர் வீடு சென்று தன்னுயிரை மாய்த்து கொண்டார். கணவன் மார்பில் சாய்ந்து அவரது மனைவியும் உயிர் நீத்தாள்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் தனது மகள்களை படை தளபதி பத்மநாபன் விரும்பியதை கேட்டு, அரண்மனைக்கு கோட்டைச்சுவர் கிழக்கு மேற்கு பக்கம் உள்ள கிணற்றில் மகள்களை தள்ளி கொன்று விடுகிறார். தனது தந்தையால் மரணம் எய்திய அக்கா செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி கைலாய மலையில் இருக்கும் சிவபெருமானிடம் வரங்களை பெற்று கோட்டையை சுற்றி ஆதாளி போட்டு, வருவோரை, போவோரை அடித்து பலி வாங்கினர். பத்மநாபனை, நீலா கொன்று குடலை உருவி மாலையாக போட்டு ஆரவாரம் செய்தாள். பத்மநாபனை சார்ந்தவர்களும் கோட்டையை சுற்றியிருந்த குடிமக்களும் நோய்வாய்ப்பட்டனர்.
சிலர் அகால மரணம் அடைந்தனர். இதையறிந்த மகாராஜா மலையாள நம்பூதரிகளை வரவழைத்து சோளி போட்டு பார்க்கையில் இவற்றுக்கெல்லாம் காரணம் அக்கா, தங்கை தான் என தெரிய வருகிறது. அவர்களை சாந்தப்படுத்து. நல்ல மந்திரவாதியை வைத்து பலி கொடுத்து படையல் பூஜை செய்து அவர்களை சாந்தப்படுத்துங்கள் என்று கூறினார். நம்பூதரிகள் சொன்னபடி மலையாள மாந்திரீகர்கள் மூன்று பேரை வரவழைத்த மகாராஜா, கோட்டைக்கு கிழக்கு பக்கம் மண்ணால் இரண்டு பெண்கள் உருவம் பிடித்து வைத்து, ஆடு, கோழி பலியிட்டு, ஒரு கோட்டை அரிசி பொங்கி ஒரே படையலாய் படைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூஜை செய்தனர். அதன் பிறகே செண்பகமும், நீலாவும் சாந்தமாகினர்.
பூஜை நடைபெற்ற இடத்திலேயே கோயில் அமைக்கப்பட்டது. மேலாங்கோடு ஊரில் அமைந்துள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாள் இருவரும் அக்கா, தங்கையாக இருந்தாலும் தனித்தனி சந்நதிகள் கொண்டுள்ளனர். இதனை போல் நீலவேணி அம்மன் கோவிலில் தங்கை வீற்றிருக்கிறாள்.
அக்கா செண்பகவல்லி சற்று அருகாமையில் இருக்கிறாள்.தங்கை அக்கா செண்பகம் கோயிலில் பலிகள் கிடையாது. சைவ படைப்பு. தங்கை நீலாதேவி கோயிலில் பலிகள் உண்டு. முதல் பூஜை அக்காவுக்கு, இரண்டாவது பூஜை தங்கைக்கு.
ஒரு முறை கொடைவிழாவை காணவந்த திருவிதாங்கூர் மகாராணி, என்ன இது இப்படியெல்லாம் உயிர்பலி கொடுக்கறீங்க. அடுத்த விழாவுக்கு ஆடு, கோழி பலி கொடுக்க கூடாது என்று கட்டளையிட்டார். அன்றிரவு முதல் மகாராணிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. உடனே மகாராஜா மன்னிப்பு கேட்க, மறு கனமே அது நின்றது. நீலாதேவி அம்மன் மகாராணியின் கனவில் தோன்றினாள்.
(அந்த காலக்கட்டத்தில் நீலி மற்றும் நீலியின் இன்னொரு அவதாரமான இசக்கி வழிபாடு, சேரநாடு, ஆய்நாடு, நாஞ்சில்நாடு, பாண்டிய நாட்டு தென் எல்லை பகுதிகளில் பரவலாக இருந்தது) மறுநாளே மகாராணி உயிர்பலிக்கான தடையை நீக்கினாள். கனவில் விரிசடை முடியோடு, வீரப்பல்லோடு அம்மன் காட்சியளித்ததால், மகாராணி நான் கனவில் கண்டது இசக்கியை. அதனால் இந்த அம்மனை இசக்கியம்மன் என அழையுங்கள் என கூற, அன்றிலிருந்து நீலாதேவி இசக்கியம்மனாக அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. (சுடலை மாடனோடு இருப்பது மாஇசக்கி. தனித்து இருப்பது ஆங்கார இசக்கி. சுடலைக்கு மூலஸ்தானம் சீவலப்பேரி. இசக்கிக்கு மூலஸ்தானம் முப்பந்தல். அங்கிருந்து பிடிமண் மூலம், கால் நடை மூலமும் பல இடங்களில் சுடலை, இசக்கிக்கு கோயில் உருவானது.)
தனது குல தெய்வமான பத்மநாபனையும், குருவாயூரப்பனையும் வணங்கி வந்த மகாராஜா, மனைவிக்கு ஏற்பட்ட உதிரப்போக்கு மாறியதால் காவல் தெய்வமான அக்கா, தங்கை கோயிலுக்கு காணிக்கை செலுத்த வந்தார். மகாராஜா அக்கா, தங்கை இருவரது சிலைக்கும் கையில் காப்பும், காலில் தண்டையும் அணிவித்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய செண்பகவல்லி அம்மன், எனக்கு மோதிரம் வேணும் என்று கேட்க, மகாராஜா அம்மனுக்கு மறுநாள் மாலையில் மோதிரம் அணிவித்தார். அன்றிரவு அரண்மனையில் இசை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு நிகழ்ச்சி முடிந்து மகாராஜாவிடம் பரிசுத் தொகையை பெற்றுவிட்டு பாடகர் வில்லுவண்டியில் தனது சொந்த ஊரான குமரி அருகேயுள்ள கொட்டாரத்திற்கு புறப்பட்டார். வண்டி கோட்டை கிழக்குபக்கமாக வரும் போது, அங்கிருந்த சுமைதாங்கி கல்லில் கேரள பெண்கள்போல் கொண்டையிட்டு, ஆடைகளும் அதுபோல் அணிந்து இரண்டு பெண்கள் இருந்தனர்.
வண்டியை நிறுத்தினாள் நீலா, வண்டி நின்றதும் பாடகரைப் பார்த்து ‘‘அரண்மனையில் தான் பாடுவீரா. இங்கும் பாடும்’’ என்று கூறினாள் நீலாதேவி. அவர் மௌனம் காக்க, மறுகணமே ‘‘ம்…என்றபடி கத்தினாள்’’ தேவி. அவர் பயந்து நடுங்கினார். அப்போது செண்பகவல்லி, ‘‘நீலா இங்கே வா’’ என்று அழைத்து விட்டு, பாடகரிடம் ‘‘அவளை நான் பார்த்துக்கிறேன். நீங்க பாடுங்க’’ என்று கூற, அவரும் அவர்களை போற்றிப் பாடினார். பாட்டு முடிந்ததும் செண்பகவல்லி அம்மன் தனது விரலில் கிடந்த மோதிரத்தை கழற்றி அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலை கோயிலுக்கு வந்த பூசாரி அம்மன் விரலில் கிடந்த மோதிரம் காணவில்லை என்று கூற, மன்னன் நான் போட்ட மோதிரத்தை களவு செய்தவனை பிடித்து என் முன் கொண்டு வாருங்கள். அவனுக்கு மாறு கை, மாறு கால் வாங்க வேண்டும் என்று உத்தரவு இடுகிறார். இது முரசு கொட்டி ஆங்காங்கே நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாடகர் அரண்மனைக்கு வந்து நடந்ததை கூற, மன்னன் எனது காவல் தெய்வம் உன் முன் வந்தாளா, நீ உண்மையிலே பாக்கியவான் என்று கூறி பாடகனுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். மேலாங்கோடு அக்கா தங்கை கோயிலின் பக்தர்கள் பலர் பல துறைகளில் அங்கம் வைக்கின்றனர். குழந்தை வரம் வேண்டி மரத்தாலான தொட்டில் பிள்ளை வாங்கி, இக்கோயிலில் கட்டினால் மறுவருடமே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. எனது வாழ்வு உயர்வானால் உருவம் இடுகிறேன் என்று அம்மனிடம் வேண்டுதல் செய்து பலன் பெற்றவர்கள் மண்ணால் செய்யப்பட்ட உருவத்தை வாங்கி கோயிலில் வைக்கின்றனர். உண்மையில் தன்னை நம்பும் பக்தர்களை மேன்மையாக்கி வைக்கிறாள்,நீலி.
இக்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து செட்டிகுளம் இந்து கல்லூரி சாலையில் அமைந்துள்ளது.
Arulmighu Neelaveni Amman Temple
Arulmighu Neelaveni Amman Temple II