Sri Krishna chaitanya dasa

Sri Krishna chaitanya dasa hare krsna movement in service of srila prabhupada

04/05/2020

அசைவம் உண்பதால்
வரும் பாவங்களும் / அதன் விளைவுகளும்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐐தன்னுடைய சொந்த வாழ்விற்காக, மற்ற உயிர்களைக் கொல்லக்கூடிய கொடூரமான நபரை கொன்றுவிட வேண்டும் என்றும், அவ்வாறு கொல்வது அவனுக்கு நன்மை பயக்கும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (1.7.37) கூறுகின்றது. ஏனெனில், ஓர் உயிரைக் கொல்வதால் அவன் அடையும் பாவத்திலிருந்து அந்த தண்டனை அவனைக் காப்பாற்றும் என்று குறிப்பிடுகிறது.

🐓கலி எனும் பாவ புருஷன் குடியிருக்கும் நான்கு இடங்களில் மாமிசம் உண்ணும் இடமும் ஒன்றாகும். (ஸ்ரீமத் பாகவதம் 1.17.38) மாமிசம் உண்ணும் இடத்தில் கருணை மனப்பான்மை அடியோடு அழிவதால், கலியின் கேடுகள் அவ்விடத்தினை அடைகிறது. கலி வீற்றிருக்கும் இடத்தில் அமைதியும் உண்மையான மகிழ்ச்சியும் இருக்க முடியாது என்பதால், மாமிசம் உண்பவர்களிடத்தில் அமைதியும் உண்மையான மகிழ்ச்சியும் நிச்சயம் இருப்பதில்லை. மேலும், அப்பாவி மிருகங்களை தனது சொந்த மகிழ்ச்சிக்காக கொன்று உண்பவன் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியடைய மாட்டான் என்று மனுசம்ஹிதை (5.54) கூறுகின்றது.

🦆 உணவிற்காகவும் நாவின் சுவைக்காகவும், விலங்குகள் மற்றும் பறவைகளைக் கொல்லும் கொடிய மனிதர்கள் நரக வேதனையினை அனுபவிக்க வேண்டும்; இவர்கள் கும்பீபாகம் என்னும் நரகத்திற்கு எம தூதர்களால் தூக்கிச் செல்லப்பட்டு, அங்கே கொதிக்கும் எண்ணெயில் போடப்படுகின்றனர் என்று ஸ்ரீமத் பாகவதம் (5.26.13) கூறுகின்றது.


🐓மேலும், மிருகவதையை அனுமதிப்பவர், மிருகத்தைக் கொல்பவர், மாமிசத்தை விற்பவர், வாங்குபவர், சமைப்பவர், பரிமாறுபவர், உண்பவர் ஆகிய அனைவரும் பாவிகளாகவே கருதப்படுவார்கள் என்று மனுசம்ஹிதை (5.51) குறிப்பிடுகிறது. மேலும், எந்த மிருகத்தை ஒருவர் உண்கிறாரோ, அந்த மிருகம் அதன் மறுபிறவியில் அந்த மனிதனை உண்ணும் என்றும் மனு சம்ஹிதை (5.55) கூறுகிறது

🐖மற்ற உயிர்களைத் துன்பப்படுத்தும் மனிதர்கள், வேதங்களை ஓதினாலும் தவங்கள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும் ஸ்வர்கத்திற்குச் செல்ல இயலாது என்றும், அஹிம்சையே மிகப்பெரிய புண்ணியம், பெரும் தவம், பெரும் தானம் என்றும் பத்ம புராணம் (3.31.25-28) குறிப்பிடுகிறது.

🐇மிருகங்களும் நம்மைப் போலவே உண்கின்றன, உறங்குகின்றன, இனப்பெருக்கமும் செய்கின்றன; ஆனால் அவை சற்று அறிவு குறைந்து காணப்படுவதால் அவற்றைக் கொல்லலாம் என்று கருதுவது முட்டாள்தனம். நமது குடும்பத்தில் இருக்கும் சகோதரர் ஒருவர், அறிவிற் குறைந்தவராக அல்லது சற்று இயலாதவராக இருந்தால், அவரைக் கொல்லலாமா? அத்தகு கொலை நாட்டின் சட்டத்தினால் எவ்வாறு குற்றமாக கருதப்படுமோ, அவ்வாறே விலங்குகளைக் கொல்வதும் கடவுளின் சட்டத்தினால் குற்றமாக கருதப்படுகிறது.

மிருகங்களை பலி கொடுக்கலாமா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐏 அசைவ உணவு உண்பவர்களில் சிலர், விலங்குகளை சில கோயில்களில் வைத்து பலியிட்டு உண்கின்றனர். அவ்வாறு உண்பதால் பாவங்கள் தங்களை தீண்டாது என்றும் நினைக்கின்றனர். ஆனால் அஃது உண்மையல்ல. கொலை செய்பவர்கள் நிச்சயம் அதற்கான பலனை அனுபவித்தேயாக வேண்டும், அதிலிருந்து தப்பிக்க இயலாது. பின்னர் ஏன் சில கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுகின்றன?

🦙 அசைவ உணவு உண்ண விரும்பும் கீழ்நிலை மக்களை ஓரளவிற்காவது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மிருக பலிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று மிருக பலியில் ஈடுபடுபவன், இயற்கையாகவே இதர நாள்களில் மாமிசம் உண்பதிலிருந்து தடுக்கப்படுகிறான்; அதாவது, அவனது பாவத்தின் அளவு குறைக்கப்படுகிறது. மேலும், தனது கண்களுக்கு முன்பாக விலங்குகள் கொல்லப்படுவதைக் காணும்போது, மாமிசம் உண்பதற்கான ஒருவனது எண்ணம் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, “மிருகமே, நான் உன்னை இந்த பிறவியில் கொல்கிறேன், நீ என்னை மறுபிறவியில் கொலை செய்துகொள்ளலாம்,” என்ற பொருளுடன்கூடிய மந்திரத்தை கேட்டுக்கேட்டு, அவன் திருந்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

🐐ஆனால், இன்றைய நிலையோ தலைகீழாக உள்ளது. கோயிலுக்குச் சென்று மிருக பலி கொடுப்பவர்கள் யாரேனும் இதர நாள்களில் மாமிசம் உண்ணாமல் உள்ளனரா? முறையான மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றதா? அதன் அர்த்தங்கள் புரிந்துகொள்ளப்படுகின்றதா? நிச்சயம் இல்லை.

யாகத்தில் பலி கொடுத்தல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐂 🐴 பலி கொடுப்பதில் மற்றொரு வகை: யாகத்தில் பலி கொடுத்தல். அஸ்வமேத யாகத்தில் குதிரையும் கோமேத யாகத்தில் பசுவும் பலியிடப்படுவது வழக்கம்; யாகத்தின் வெற்றி என்பது அதனை நடத்தும் முனிவர்களைப் பொறுத்ததாகும். உயர்ந்த முனிவர்களால் நிகழ்த்தப்படும் மாபெரும் யாகங்களில் மந்திரங்கள் முறையாக உச்சரிக்கப்பட்டனவா என்பதை சோதிக்கும் பொருட்டு, அதன் இறுதியில் மிருகங்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. மந்திரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அந்த மிருகம் மானிட உடலை ஏற்பதை அங்கு கூடியிருப்பவர்கள் நேரில் காண முடியும்; மந்திரங்கள் சரியாக இல்லாவிடில், மிருகம் மடிந்துவிடும், முனிவர்கள் அதற்கான பாவத்திற்கு ஆளாவர். சரியான முறையில் மந்திரங்களை உச்சரிக்கும் தகுதி வாய்ந்த முனிவர்கள் இல்லாத காரணத்தினால், இத்தகு யாகங்கள் கலி யுகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன

🐂 மிருக பலி கொடுப்பதில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கையில், மனம்போன போக்கில் பலி கொடுப்பவர்களுக்கு கொடூரமான பாவங்களே பலனாகக் கிட்டும்.

தாவர உணவு உண்பது பாவமில்லையா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌾 பெரும்பாலான அசைவ உணவு பிரியர்கள் எழுப்பும் கேள்வி: தாவர உணவு உண்பது மட்டும் பாவமில்லையா? அதுவும் உயிர்கள்தானே?
***************************************

🌾 ஆம். தாவரங்களை உண்பதும் பாவமே. இருப்பினும், ஓர் உயிர் மற்றோர் உயிரைச் சார்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி, ஜீவோ ஜீவஸ்ய ஜீவனாம், என்று ஸ்ரீமத் பாகவதம் (1.13.47) குறிப்பிடுகிறது. அதன்படி, மனிதனுக்கென்று விதிக்கப்பட்டுள்ள உணவு தாவர உணவாகும். மிருகங்களுக்கு அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப, தாவர உணவோ இறைச்சியோ இயற்கையால் விதிக்கப்பட்டுள்ளது; மிருகங்கள் இயற்கையின் நியதியை மீறுவதில்லை.

🐅 புலி புல்லைத் தின்பதில்லை, பசுவும் மாமிசத்தை உண்பதில்லை. அதுபோலவே, மனிதனும் இயற்கை நியதிக்கு உட்பட்டு தாவர உணவை உட்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறான்.

🐐 மேலும், மிருகங்களுடைய உணர்வு வளர்ச்சியானது தாவரங்களின் உணர்வைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமானது என்பதால், ஓர் உருளைக்கிழங்கை நிலத்திலிருந்து எடுப்பதற்கும் ஓர் ஆட்டினைக் கொல்வதற்கும் பரந்த வித்தியாசம் உண்டு. சுருக்கமாகக் கூறினால், விலங்கைக் கொல்லும்போது ஏற்படும் பாவம், தாவரங்களை உண்பதால் ஏற்படும் பாவத்தைவிட பல நூறு மடங்கு அதிகமானதாகும்.

🌱 அவ்வாறு இருப்பினும், தாவரங்களும் உயிர்வாழிகளே என்பதால், அவற்றை உண்பதும் உயிர்க் கொலையைப் போன்றதே என்பதால், தாவர உணவு உண்பவர்கள்கூட உண்பதற்கு முன்பாக, அந்த உணவினை பகவானுக்கு அர்ப்பணித்து, பிரசாதமாக உண்ணும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அர்ப்பணிக்காத உணவை உண்பவன் பாவத்தையே உண்கிறான் என்று பகவத் கீதை (3.13) கூறுகின்றது. மேலும், உணவை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக ஏற்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான் என்றும் கூறப்படுகிறது.

🌽🌱 ஆகையால், தாவர உணவை உண்பவர்களின் பாவம் குறைவான பாவம் என்றபோதிலும், அதிலிருந்தும் விடுபட, பகவான்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து உணவை பிரசாதமாக ஏற்க வேண்டும் என்பது சாஸ்திர விதி.

பால், பசுவின் இரத்தமாயிற்றே?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அசைவ உணவு பிரியர்களின் மற்றொரு வாதம்: பால், பசுவின் இரத்தமாயிற்றே, எவ்வாறு உண்ணலாம்?
***************************************

🐄 மனிதர்களின் அன்றாட தேவைக்கும் ஸத்வ குணத்தின்படி வாழ்வதற்கும் பால் மற்றும் பால் பொருட்கள் இன்றியமையாத உணவாக சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. சாஸ்திரங்களின் பரிந்துரை ஒருபோதும் பிழையாகாது. ஒரு செயல் பாவமா புண்ணியமா என்பதை நாம் நமது சொந்த அறிவைக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது, தீர்மானிக்கவும் இயலாது. பால் மற்றும் பால் பொருட்களினால் ஸத்வ குணம் மேலோங்கி, நல்ல குணங்களும் நல்ல எண்ணங்களும் வளர்ச்சி பெறுகின்றது என்பதை நடைமுறையில் ஒவ்வொருவரும் உணர முடியும்.

🐂 இயற்கையின் அமைப்பால், பசுவானது தனது கன்றின் தேவைக்கு அதிகமாகவே பாலைச் சுரக்கின்றது. அதிகப்படியான அந்த பாலை கன்று குடித்தால், கன்றுக்கு தீமையே உண்டாகும்; கறக்காமல் விட்டால் பசுவிற்கு துன்பத்தை தரும். அதுமட்டுமின்றி, பாலை பசுவிடமிருந்து கறப்பதால் யாரும் பசுவைக் கொல்வதில்லை. ஓர் உயிரைக் கொன்று பெறப்படும் இரத்தத்தையும் பாலையும் மூடர்கள் மட்டுமே சமன்படுத்துவர்.

🐄 ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு தாய்மார்கள் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதில் பசுவும் ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் தாயின் பாலைக் குடித்தே வளர்கிறது. தாயின் பாலை அருந்தும் குழந்தை தாயைக் கொல்வதாக அர்த்தமில்லை; அதுபோலவே, பசுவின் பாலை அருந்துபவர்கள் பசுவைக் கொல்வதாக அர்த்தமில்லை. மேலும், தாயை கால காலத்திற்கும் காப்பாற்ற வேண்டிய கடமை குழந்தைக்கு இருப்பதைப் போலவே, பசுவையும் கால காலத்திற்கும் காப்பாற்ற வேண்டிய கடமை மனித சமுதாயத்திற்கு உள்ளது.

முட்டை உண்ணலாமா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🥚 முட்டையைத் சைவ உணவு என்று கூறி அதனை உண்பவர்கள் ஏராளமானோர். ஆனால் உண்மையில் முட்டைக்கும் தாவர உணவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முட்டைகளை உண்பது கருக்கொலைக்குச் சமமாகும். மேலும், குறுகிய காலத்தில் அதிக முட்டைகளைப் பெறுவதற்காக, கோழிப் பண்ணைகளில் கையாளப்படும் கொடிய பாவங்கள் நிச்சயமாக அந்த முட்டைகளிலும் அதை உண்பவர்களிடமும் வந்து சேர்கிறது. முட்டையிட்டு முடிந்தவுடன் அந்தக் கோழிகள் கொல்லப்படுகின்றன, அந்த கொடிய பாவத்திற்கு முட்டை உண்பவர்களும் உடந்தையாகின்றனர்.

🐓🥚 சிலர், கோழிப் பண்ணைகள் உருவாக்கும் குஞ்சு பொறிக்காத முட்டைகளை மட்டுமே நாங்கள் உண்கிறோம், இதில் என்ன பாவம் என்பர். ஆனால் இந்த முட்டைகள் கோழிகளின் மாதவிடாய்க்குச் சமமானது என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் வேண்டாத விஷயங்கள் எவ்வாறு மாதரால் வெளியேற்றப்படுகிறதோ, அவ்வாறே குஞ்சு பொறிக்காத கோழியும் தன்னுடைய கழிவுகளை முட்டையின் வடிவில் வெளியேற்றுகின்றன. இதுவே குஞ்சு பொறிக்காத முட்டையின் ரகசியம்

கொன்றால் பாவம்
தின்றால் போகுமா?
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🔪 அசைவ உணவை உண்பதில் இவ்வளவு பிரச்சனைகள் பாவங்கள் இருக்கும்போது, சிலர் முட்டாள்தனமாக, “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்று உளறுகின்றனர். இந்த பேச்சுக்கு, மக்களின் மூடத்தனத்தைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கொன்று தின்பதால், மேன்மேலும் பாவத்தைச் சேகரிக்கின்றோமே தவிர, பாவத்தைக் களைதல் என்பது சாத்தியமே இல்லை. எந்தவொரு சாஸ்திரத்திலும் அவ்வாறு கூறப்படவில்லை. கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்னும் வாதங்கள், நாவினைக் கட்டுப்படுத்த இயலாத நயவஞ்சகர்களின் வார்த்தைகளாகும். இதில் துளியளவும் உண்மையில்லை.

🦀 அசைவ உணவுப் பிரியர்கள் இதுபோன்ற போலியான பழமொழிகளை உருவாக்கி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் அத்தகு சமாதானங்கள் உண்மையான பலனைக் கொடுக்குமா? நிச்சயமாக இல்லை. சினிமாக்காரர்களும் நாஸ்திகர்களும் பாடல்களை வேண்டுமானால் எழுதலாம், ஆனால் பாவம் என்றும் பாவ விளைவைக் கொடுத்தே தீரும்.


🐢 🔪 நீங்கள் கொல்வதால் விளையும் பாவம், அந்த உயிர்வாழி உங்களைத் திண்ணும்போது போகலாம்; அல்லது அந்த பாவத்திற்காக நீங்கள் நரகத்திற்குச் சென்று, உங்களுடைய சதையை நீங்களே திண்ணும்படி சித்ரவதை செய்யப்படுவீர்களே, அப்போது வேண்டுமானால் போகலாம். எனவே, கொல்வதால் விளையும் பாவம், அதைத் தின்பதால் நிச்சயம் போகாது; மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும். போலியான பழமொழிகளை நம்பி ஏமாற வேண்டாம்.

அசைவ உணவை விடுவதற்கு வழி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🐐 மாமிசத்தை பிரதான உணவாக உண்டுவந்த மேலை நட்டவர்கள்கூட, இன்று மாமிச உணவின் கெடுதிகளை உணர்ந்து அவற்றை பெருமளவில் கைவிட்டு வருகின்றனர். எனவே, அசைவ உணவினைக் கைவிடுவது என்பது ஒன்றும் கடினமான செயல் அல்ல.

🐟 சிலர் அசைவத்தின் கெடுதிகளை அறிந்தும்கூட, அதனைக் கைவிட முடியாமல் தவிக்கின்றனர்; பலர் உணர்ச்சிபூர்வமாக சிறிது காலம் கைவிட்டுவிட்டு, வாய்ப்பும் சூழ்நிலையும் அமையும் போது மீண்டும் தொடர ஆரம்பித்து விடுகின்றனர். நீண்ட காலமாக அசைவ உணவை உண்டதால் ஏற்பட்ட பாவங்களின் ஆதிக்கமே இதற்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக, நம் ஆழ்மனதில் அசைவத்தின் மீதான ஆசை முழுமையாக மாறாததும் காரணமாகும்.

👅👻 இந்த பாவத்திற்கு முதல் முக்கியக் காரணகர்த்தா யார் என்றால், நாக்குதான். ஆம்! ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி நாக்குதான். நாக்கை மட்டும் கட்டுப்படுத்திவிட்டால் அனைத்து முயற்சிகளும் வெற்றியே! “நாக்கு அடக்க முடியாததும் ஆற்றல் வாய்ந்ததுமாகும். இந்நாக்கை வெல்வது மிகவும் கடினமானது. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கருணையுடன் பிரசாதத்தினை வழங்கி நாம் நமது நாக்கை அடக்குவதற்கு உதவுகிறார். இந்த பிரசாதத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை பாடிப் புகழுங்கள். இதுவே நாக்கை வெல்லும் எளிய வழியாகும்.”

🍁ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு சிரமமும் இன்றி அசைவத்தை வென்றுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்திலும் பிரசாதத்திலும் எண்ணற்ற சக்திகள் அடங்கியிருக்கின்றன. எனவேதான், கருட புராணம்,
சிங்கம் கர்ஜிக்கும்போது சிறு விலங்குகள் பயந்து ஒடுவதுபோல், பாவங்கள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்போது நம்மை விட்டு விரைவில் நீங்குகின்றன” என்று குறிப்பிடுகிறது. கிருஷ்ண பக்தி, கிருஷ்ண பிரசாதம் என்னும் உயர்ந்த சுவையை அனுபவிப்பதால், தாழ்ந்த சுவைகள் தானாக விலகிவிடும் என்று பகவத் கீதையும் (2.59) குறிப்பிடுகிறது

பாவகரமான உணவுகளைத் தவிர்ப்போம்! கிருஷ்ண பிரசாதத்தினை ஏற்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

17/04/2020

#ஹரேகிருஷ்ண

#முக்தியடைவது_உறுதி

#பகவத்கீதை_கூறுகிறது

காம-க்ரோத-விமுக்தானாம்
யதீனாம் யத-சேதஸாம்
அபிதோ ப்ரஹ்ம-நிர்வாணம்
வர்ததே விதிதாத்மனாம்

#மொழிபெயர்ப்பு

யாரெல்லாம் கோபத்திலிருந்தும் எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, தன்னுணர்வும் தன்னொழுக்கமும் நிறைந்து பக்குவத்தை அடைவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்கின்றனரோ, அவர்கள், கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி.

#பொருளுரை
#ஸ்ரீலபிரபுபாதா

முக்தியை அடைவதற்காகத் தொடர்ந்து பாடுபடும் சாதுக்களில் கிருஷ்ண பக்தனே மிகச் சிறந்தவனாவான். இவ்வுண்மையினை பாகவதம்(4.22.39) பின்வருமாறு உறுதி செய்கின்றது.

யத்-பாத-பங்கஜ-பலாஷ-விலாஸ-பக்த்யா

கர்மாஷயம் க்ரதிதம் உத்க்ரதயந்தி ஸந்த:

தத்வன் ந ரிக்த-மதயோ யதயோ (அ)பிருத்த

ஸ்ரோதோ-கணாஸ் தம் அரணம் பஜ வாஸுதேவம்

"பக்தி தொண்டின் மூலம் பரம புருஷ பகவானான வாஸூதேவரை வழிபட முயற்சி செய். பலன்நோக்குச் செயல்களுக்கான ஆழமான ஆசைகளை வேரறுத்து, இறைவனின் பாத கமலங்களுக்கு சேவை செய்து, திவ்யமான ஆனந்தத்தில் ஆழ்ந்திருக்கும் பக்தர்கள், தங்களது புலன்களின் உந்துதல்களை திறம்பட கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் மிகச்சிறந்த சாதுக்களாலும் அதுபோன்று கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல."

செயலின் பலனை அனுபவிப்பதற்கான ஆசைகளைக் கட்டுப்படுத்த, மிகச்சிறந்த சாதுக்களும் பெருமுயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் கடினமாகத் திகழுமளவிற்கு, இவ்விருப்பங்கள் கட்டுண்ட ஆத்மாவினுள் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன.

கிருஷ்ண உணர்வின் மூலம் இடையறாது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, தன்னுணர்வில் பக்குவமடைந்துள்ள கிருஷ்ண பக்தன், வெகு விரைவில் பரத்தில் முக்தியடைகிறான். தன்னுணர்வின் முழு ஞானத்தையுடைய அவன், எப்போதுமே ஸமாதி நிலையிலிருக்கிறான். ஓர் உதாரணம் கூறுவோமானால்,

தர்ஸன-த்யான -ஸம்ஸ்பர்ஷைர்

மத்ஸ்ய-கூர்ம-விஹங்க மா:

ஸ்வான்-யபத்யானி புஷ்ணந்தி

ததாஹம் அபி பத்ம-ஜா

"மீன் பார்வையாலும், ஆமை தியானத்தாலும், பறவைகள் தொடுவதாலும் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றன. பத்மஜனே, அதுபோன்றே நானும் செய்கிறேன்."

#மீன்_தனது_குஞ்சுகளைப் #பார்வையாலேயே_வளர்க்கின்றது. #ஆமை_அதன்_குட்டிகளை #தியானத்தினால்_வளர்க்கின்றது. #ஆமையின்_முட்டைகள் #கரையில்_இருக்க, #நீரினுள்_இருக்கும்_ஆமை #அம்முட்டைகளின்மீது #தியானம்_செய்கின்றது. #அதுபோலவே, #கிருஷ்ண_உணர்விலுள்ள #பக்தன், #இறைவனின்_இடத்தை #விட்டு_வெகு_தொலைவில் #இருந்தாலும்_கிருஷ்ண #உணர்வில்_ஈடுபடுவதன் #மூலம்_அவரை #இடையறாது_எண்ணி, #தன்னை_அவ்விடத்திற்கு #உயர்த்திக்கொள்ள_முடியும்.

அவன் ஜடத் துன்பங்களின் வலியினை உணர்வதில்லை. இந்நிலை ப்ரஹ்ம நிர்வாணம் (பரத்தில் இடையறாது லயித்திருப்பதால் ஜடத் துயரங்கள் மறைந்துள்ள நிலை) எனப்படுகிறது.

பகவத்கீதை
அத்தியாயம் : 5
ஸ்லோகம் : 26

ஹரேகிருஷ்ண

05/04/2020

மனிதன் குரங்கிலிருந்து வந்தவனா?

மனிதனிடம் இருக்கும் விசேஷ தன்மைகளில் ஒன்று, சிந்திக்கும் திறன். இரவில் நட்சத்திர கூட்டங்களைக் காணும்போதும், மலைப் பிரதேசங்களின் இயற்கை அழகை ரசிக்கும்போதும், மரங்கள், செடிகள், கொடிகள், மீன்கள், பறவைகள், விலங்குகள் என பல இனங்களைக் காணும்போதும், பல தருணங்களில், “நான் யார், எங்கிருந்து வந்தேன்?” என்ற கேள்வி மனிதர்களின் சிந்தனையில் பொதுவாக எழக்கூடிய ஒன்றுதான். இதுகுறித்து ஆழமாக சிந்தித்தவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் என பல பெயர்களில் பிரபலமடைந்தனர்.
இதனால், இயற்கையாகவே, மனித இனத்தின் ஆதிமூலம் குறித்த ஆராய்ச்சியைப் பல்வேறு விஞ்ஞானிகள் கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது கொள்கைகளில் பிரபலமாக இன்றும் அறியப்படும் டார்வினின் பரிணாமக் கொள்கை மனித சமுதாயத்தில் மாபெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. பரிணாமம் குறித்து பேசுபவர்கள் அனைவரும் பெரும்பாலும் டார்வினின் கொள்கையையே ஆதாரமாக அல்லது அடிப்படையாக வைத்துப் பேசுகின்றனர். “மனிதன் குரங்கிலிருந்து வந்தான்” என்று டார்வின் கொள்கையின் அடிப்படையில் நம்பக்கூடிய சிலரது நம்பிக்கையை இங்கே சிதைக்கப் போகிறோம்.

டார்வினின் பரிணாமக் கொள்கை என்றால் என்ன?

உலகின் முதல் உயிரானது உயிரற்ற ஜடப் பொருளிலிருந்து தோன்றியதாக டார்வின் கொள்கை கூறுகிறது. அந்த முதல் உயிரானது படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று நாம் உலகில் காணும் எல்லா தரப்பட்ட உயிரினங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த உயிரினங்களின் வளர்ச்சியானது இயற்கையினால் தானாக நிகழ்ந்தது என்றும், தகுதியுடைய உயிரினங்கள் நீடித்து வாழ்கின்றன என்றும், சில உயிரினங்கள் அழிந்துவிட்டன என்றும் டார்வின் கொள்கை கூறுகிறது.
டார்வினுடைய அபிப்பிராயத்தின்படி, உயிரினங் களின் உடல்கள் பின்வருமாறு தோன்றின: முதன்முதலில் ஒரு சூடான குளத்தில் சில இரசாயனங்கள் ஒன்று சேர்ந்து, ஒரு செல் உயிரினை உருவாக்கியது. அதன் பின்னர் படிப்படியாக நீரிலேயே பல செல் உயிரிகள் வளர்ந்தன, அவை நீர்வாழ் தாவரங்கள், நீர்வாழ் பிராணிகளாக வளர்ந்தன. காலப்போக்கில் அந்த நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் சில நிலத்திற்கு இடம்பெயர்ந்தன. முதலில் அவை நிலத்திலும் நீரிலும் வாழும் உயிர்களாக இருந்தன, ஊர்வனவும் இதில் அடக்கம். காலப்போக்கில் பாலூட்டிகள் வளர்ச்சி பெற்றன, அவை படிப்படியாக மாற்றம் பெற்று, இறுதியில் குரங்கின் மூலமாக கற்கால மனிதன் தோன்றினான். அவன் படிப்படியாக நாகரிக வளர்ச்சியைப் பெற்று வருகிறான். இதுவே டார்வினின் பரிணாமக் கொள்கை.

டார்வின் கொள்கையினால் வரும் பிரச்சனைகள்

டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் வாழ்விற்கு இயற்கையை மட்டும் காரணமாகக் காட்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்துபவர் யாருமில்லை என்றும், உயிர்களின் பரிணாமம் தானாக நிகழ்ந்தது என்றும் கூறியதன் மூலமாக, டார்வின் கொள்கை உலக அளவில் நாத்திகம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. மேலும், மக்களிடையே படிப்படியாக நற்பண்புகள் குறைந்து, புலனின்ப வேட்கையும் லௌகீகவாதமும் அதிகரிப்பதற்கு டார்வின் கொள்கை அடிப்படையாக உள்ளது.
டார்வினுடைய கொள்கையின்படி, கறுப்பர்கள் பரிணாமத்தின் ஆரம்ப நிலையைச் சார்ந்தவர்களாவர், வெள்ளையர்கள் பரிணாமத்தில் உயரியவர்கள். இந்தக் கருத்தானது உலகளவில் நிறம் மற்றும் இனவெறியினை ஆதரித்து வளர்த்து வருகிறது. டார்வினுடைய கொள்கையை உண்மையென ஏற்ற ஜெர்மனியின் ஹிட்லர் ஜெர்மானியர்களைப் பரிணாம வளர்ச்சியில் உயர்ந்தவர்களாக எண்ணினான். இதன் காரணமாக ஹிட்லர் இனவெறி பிடித்து இலட்சக்கணக்கான இதர மக்களைக் கொன்று குவித்தான், இரண்டாம் உலகப் போர் மூண்டு மேலும் இலட்சக்கணக்கான மக்கள் மடிவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.
டார்வினின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் இனவெறியைத் தூண்ட முயற்சி செய்த ஐரோப்பியர்கள் திராவிட ஆரிய மாயையைக் கொண்டு வந்தனர். பரிணாம வளர்ச்சியின் முந்தைய நிலையைச் சார்ந்தவர்களே திராவிடர்கள் என்றும், அவர்கள் பரிணாம வளர்ச்சியின் உயர்நிலையைச் சார்ந்த ஆரியர்களால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கற்பனை செய்யப்பட்டது. இந்தக் கற்பனையின் விளைவாக இனவெறியும் நாத்திகமும் இன்றும்கூட தமிழகத்தில் உலவி வருகிறது. தகுதியுடைய இனங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இனங்கள் அழிய வேண்டும் என்ற டார்வினின் கொள்கையே பல்வேறு இடங்களில் இனக் கலவரங்களுக்கும் இனப் போர்களுக்கும் காரணமாக அமைகின்றன.
பலம் பெற்றவன் தொடர்ந்து வாழ்வான், பலமற்றவன் மடிந்து போவான் என்ற டார்வினின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள நபர்கள், தங்களை மேன்மேலும் பலமுள்ளவனாக மாற்றிக்கொள்ள முயல்கின்றனர். இதனால் முதலாளித்துவம் வளர்ச்சி பெறுகிறது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறிக் கொண்டுள்ளனர், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறிக் கொண்டுள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த பூமியில், வாழ்க்கைப் போராட்டம் என்னும் மிகப்பெரிய சிரமத்தை மக்களிடையே ஏற்படுத்தியதற்கு டார்வினின் கொள்கையே அடிப்படை என்றால் அது மிகையாகாது.

டார்வின் கொள்கை, டார்வின் விதி அல்ல
இத்தனைப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாகத் திகழும் டார்வினின் பரிணாமக் கொள்கை இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று என்பது மக்கள் அறியாத ஓர் உண்மையாகும். எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சியாக இருந்தாலும், அது முதலில் கொள்கை வடிவில் உருவாக்கப்பட்டு, அதன் பின்னர் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே அந்த விஞ்ஞானம் விஞ்ஞானமாக ஏற்கப்படும். இல்லாவிடில், அது வெறும் கற்பனையாகவே தொடர்ந்து இருக்கும். உதாரணமாக, நியூட்டனின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் முதலில் கொள்கைகளாக வடிக்கப்பட்டு, பின்பு ஆராய்ச்சிகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு, விதிகளாக மாற்றம் பெற்றன. கொள்கைகள் விதிகளாக மாறிய பின்னரே (அதாவது நிரூபிக்கப்பட்ட பின்னரே) அவை அறிவியலாக ஏற்கப்படுகின்றன. நிரூபிக்கப்படாவிடில் அவை வெறும் கொள்கைகளாகவே இருக்கின்றன.
ஒருவர் ஒரு கொள்கையைக் கூறலாம், மற்றவர் மற்றொரு கொள்கையைக் கூறலாம், கொள்கை என்பது ஓர் அபிப்பிராயமே தவிர நிதர்சனமான உண்மையல்ல. டார்வினுடைய பரிணாமக் கருத்துகளும் அதுபோன்ற ஒரு கொள்கையே. இதுவரை எல்லா இடங்களிலும் டார்வினின் பரிணாமக் “கொள்கை” என்றுதான் நாம் கேள்விப்படுகிறோம், இதுவரை எங்கும் யாரும் இதனை டார்வினின் பரிணாம “விதி” என்று கூறவில்லை. வேறுவிதமாகக் கூறினால், டார்வினின் பரிணாமக் கொள்கை இதுவரை நிரூபணமாகாத ஒன்று என்பது அனைத்து விஞ்ஞானிகளும் அறிந்த அப்பட்டமான உண்மை; மேலும், இதனை எக்காலத்திலும் நிரூபிக்க முடியாது என்பதையும் அனைவரும் அறிவர். இருப்பினும், தங்களுடைய நாத்திகக் கருத்துகளை தக்க வைக்க உதவுவதால் டார்வினின் பரிணாமக் கொள்கையை விஞ்ஞானிகள் இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
தன்னுடைய கொள்கைகள் கற்பனையால் புனையப்பட்டவை என்பதை டார்வினே தன்னுடைய நூலில் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நிரூபிக்கப்படாத டார்வினின் பரிணாமக் கொள்கையை சாதாரண யதார்த்தத்தின் அடிப்படையில் யோசித்துப் பார்த்தால் போதும், அது முற்றிலும் பொய்யானது, போலியானது, ஏமாற்றுத்தனமானது, முட்டாள்தனமானது, அயோக்கியத்தனமானது என்பதை எந்தவொரு புத்திசாலியாலும் புரிந்துகொள்ள முடியும்.

குரங்கு ஏன் இன்றும் உள்ளது?

டார்வினின் பரிணாமக் கொள்கை எனக்கு ஒன்பதாம் வகுப்பில் கற்றுத் தரப்பட்டது. அச்சமயத்தில், இயற்கையாகவே நானும் எனது நண்பர்கள் சிலரும் எங்களது அறிவியல் ஆசிரியரிடம், “மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால், குரங்கு ஏன் இன்னும் வாழ்கிறது?” என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளிக்க இயலாத ஆசிரியர், “அஃது அப்படித்தான். காலப்போக்கில் தெரிந்துகொள்வீர்கள்,” என்று கூறி எங்களது வாய்களை அடைத்துவிட்டார். ஆம், காலப் போக்கில் தெரிந்துக் கொண்டோம், டார்வினின் பரிணாமக் கொள்கை முற்றிலும் அபத்தமானது என்பதை. இன்றும் இப்போதும் எண்ணற்ற பள்ளி மாணவர்களிடையே, “குரங்குகள் ஏன் இன்றும் வாழ்கின்றன?” என்னும் கேள்வி இயற்கையாகவே எழுகின்றது. ஆனால் அவர்கள் யாவரும் பொதுவாகத் தங்களது பாடத்தைப் படித்து மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணத்தில் அதிகம் யோசிப்பதில்லை, கேள்வி கேட்பதில்லை, வாதம் செய்வதில்லை, முட்டாள்களாகவே இருந்து விடுகின்றனர். ஸ்ரீல பிரபுபாதரின் தெளிவான ஆணித்தரமான பதில்களைப் பெறும்வரையில், நானும் இந்த விஷயத்தில் உங்களைப் போன்றுதான் வாழ்ந்து வந்தேன்.
இஃது இயற்கையான எளிமையான கேள்வி: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால், குரங்கு ஏன் இன்னும் வாழ்கிறது? குரங்கு இனம் ஏன் இன்னும் மடியவில்லை? இந்த கேள்விகளுக்கு டார்வினோ டார்வினைப் பின் பற்றும் இதர விஞ்ஞானிகளோ இதுவரை தெளிவான பதிலை வழங்கவில்லை.
வரலாற்றில் எங்குமே குரங்கு ஒன்று மனிதக் குழந்தையைப் பெற்றெடுத்ததாக நாம் காண்பதில்லை. அத்தகு நிகழ்ச்சி பன்னெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்ந்ததாக டார்வின் கூறுகிறார். பன்னெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி இன்று ஏன் ஏற்படுவதில்லை என்பதே எமது கேள்வி. ரோஜா மலர் செடியிலிருந்து தாமரை மலர் பூக்கின்றதா? தாமரை மலரிலிருந்து பல்லி பிறக்கின்றதா? பல்லியிலிருந்து முதலை பிறக்கிறதா? முதலையிலிருந்து ஆமை பிறக்கிறதா? ஆமையிலிருந்து பன்றி பிறக்கிறதா? பன்றியிலிருந்து நாய் பிறக்கிறதா? நாயிலிருந்து குரங்கு பிறக்கிறதா? குரங்கிலிருந்து மனிதன் பிறக்கிறானா? அல்லது குறைந்தது மாமரத்திலிருந்து வாழைப்பழமாவது வளர்கிறதா? ஏதேனும் ஒன்றாவது மற்றொன்றாக மாற்றமடைந்துள்ளதா? வரலாற்றில் ஏதேனும் ஓர் உதாரணத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.
இப்போது கூறுங்கள்: டார்வினின் பரிணாமக் கொள்கை அறிவியலா, முட்டாள்தனமா?

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்னும் தனது கொள்கைக்கு விளக்கமளிக்க இயலாத டார்வினைக் கிண்டல் செய்யும்படியாக வரையப்பட்ட இப்படம் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரபலமானது.

நீங்கள் குரங்கு கோத்திரமா?

கொரில்லா வகைக் குரங்கிலிருந்து ஆப்பிரிக்காவிலுள்ள கருப்பர் இன மனிதர்கள் தோன்றியதாக டார்வின் கூறுகிறார். ஏதேனும் ஒரு கொரில்லா குரங்கு கறுப்பு மனிதனைப் பெற்றெடுத்துள்ளதா? வெள்ளை மனிதன் எங்கிருந்து வந்தான்? வெள்ளை நிற கொரில்லாவிலிருந்தா? டார்வினின் கொள்கை முற்றிலும் குழந்தைத் தனமான அயோக்கியத்தனம். இதனை மாபெரும் கண்டுபிடிப்பாகக் கூறிக் கொள்கின்றனர். மனிதர் களைப் பெற்றுக் கொடுக்கும் குரங்குகள் தற்போது எங்கே? அந்தக் குரங்குகள் தற்போது மலடிகளாகி விட்டனவா? மனிதர்களைப் பெற்றெடுப்பதை நிறுத்தி விட்டனவா? வெறுமனே டார்வின் சொல்கிறார் என்பதற்காக நாம் இதனை ஏற்றுவிட முடியுமா? டார்வின் சொல்வதற்கேற்ப இயற்கை செயல்பட வேண்டுமா? யாராலும் காண முடியாத யாராலும் நிரூபிக்க முடியாத எங்கும் நிகழாத ஒன்று டார்வினுக்கு மட்டும் தெரிந்துள்ளதே. இதனை நாம் நம்ப வேண்டுமா? குரங்கிலிருந்து மனிதன் ஒரே ஒருமுறை மட்டும் தோன்றினான் என்று கூறுவது என்னே அபத்தம். இந்தக் கற்பனையை நாம் நம்ப வேண்டுமா? இதில் எந்தவொரு அறிவும் இல்லை, முற்றிலும் அபத்தமே.
டார்வின் வேண்டுமானால் தன்னுடைய மூதாதையர் களை குரங்குகள் என்று கூறிக்கொள்ளட்டும். நான் ஏன் என்னுடைய தாத்தா, பாட்டனார்களைக் குரங்குகள் என்று கூற வேண்டும்? நாம் யாரிடமாவது சென்று, “உன்னுடைய அப்பா ஒரு குரங்கு, உன்னுடைய தாத்தா ஒரு குரங்கு, உன்னுடைய பாட்டனார் ஒரு குரங்கு,” என்று கூறினால், நாம் தர்மஅடி வாங்கப் போவது நிச்சயம். ஆனால் டார்வினுக்கும் டார்வினைப் பின்பற்றும் விஞ்ஞானிகளுக்கும் தர்மஅடி கொடுக்கப் போவது யார்?
நீங்கள் கோயில்களுக்குச் செல்லும் போதும் இதர சடங்குகளின்போதும், உங்களுடைய கோத்திரம் என்று கூறி ஏதேனும் ஒரு ரிஷியின் பெயரைக் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் டார்வினின் கொள்கையில் நம்பிக்கையுடையவராக இருப்பீரானால், இனிமேல் யாரேனும், “உங்களுடைய கோத்திரம் என்ன?” என்று உங்களிடம் வினவினால், அவரிடம் கபி கோத்திரம்” அதாவது குரங்கு கோத்திரம்” என்று பதில் சொல்லுங்களேன்.

அறிவு எங்கிருந்து வந்தது?

உயிரினங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தார்கள் என்றால், அவர்களுக்குரிய அறிவு எங்கிருந்து வந்தது? அறிவும் பரிணமிக்கின்றது என்று கூறுவார்களேயானால், அறிவற்ற விலங்குகள் இன்றும்கூட வாழ்கின்றனவே! உதாரணமாக, தற்போதைய தருணத்தில் அறிவுடைய மனிதனையும் அறிவற்ற கழுதையையும் நாம் ஒன்றாகக் காண்கிறோம். அந்த கழுதைகள் பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேற்றம் பெறாதது ஏன்? கழுதைகள் மறையாமல் இருப்பது ஏன்? மனிதர்களிடையே ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்று டார்வினால் கூறப்படுபவர்களுக்கு மத்தியிலும் அறிவாற்றல் வேறுபடுவது ஏன்? அறிவு எங்கிருந்து வந்தது என்பதற்கு டார்வினிடம் பதிலே இல்லை.

யதார்த்தம் அறியா விஞ்ஞானிகள்
ஆண் பெண் வேறுபாடுகள்: சில உயிரினங்களில், ஆண் பெண் என்ற வேறுபாடின்றி, பாலுறவு என்ற நிகழ்ச்சியின்றி இனப்பெருக்கம் நிகழ்கின்றது. சில உயிரினங்களில் ஆண் பெண்ணின் பாலுறவினால் இனப்பெருக்கம் நிகழ்கிறது. எப்போது எந்தச் சூழ்நிலையில் ஏன் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன? இதற்கு டார்வினிடமோ நவீன விஞ்ஞானிகளிடமோ பதில்கள் ஏதுமில்லை.
எரிக்கப்பட்ட உடல்கள்: ஆங்காங்கே கிடைக்கும் புதைப்பொருட்களையும் எலும்புகளையும் கொண்டு மனிதனின் தோற்றத்தினை யூகிப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர். ஆனால் மஹாபாரத போர் நிகழ்ந்த காலம் வரை (சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை) உலகம் முழுவதும் வேதக் கலாச்சாரமே இருந்து வந்தது என்பதை இந்த விஞ்ஞானிகள் அறியார்கள். வேத காலப் பண்பாட்டின்படி இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் முற்றிலும் எரிக்கப்பட்டு வந்தன. அத்தகைய சூழ்நிலையில் பழைய எலும்புகளைத் தேடி ஆராய்ச்சி செய்தல் என்பது நிச்சயம் பக்குவமளிக்காது.
நாகரிக வேறுபாடுகள்: இன்றைய உலகில் நன்கு முன்னேற்றம் பெற்ற மனிதர்களும் நாகரிகமடையாத காட்டுவாசிகளும் ஒருங்கே வாழ்ந்து வருகின்றனர். வருங்காலத்தில் யாரேனும் ஒருவர் காட்டுவாசிகளின் வாழ்க்கை முறை குறித்து சில புதைப்பொருட்களைப் பெற நேர்ந்தால், கி.பி. 2015ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்கள் அனைவரும் காட்டுவாசிகளே என்ற முடிவிற்கு வருவர். இதே பிரச்சனையைத் தான் தற்போதைய புதைப்பொருள் ஆராய்ச்சியிலும் நாம் காண்கிறோம். ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு தருணத்தில் மண்ணிற்குள் புதைந்த மனிதர்களின் எலும்புகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர், இத்தகு ஆராய்ச்சிகள் என்றும் பக்குவமளிக்காது.
ஒருசேர வாழ்ந்த உயிரினங்கள்: புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள்கூட ஒரே சமயத்தில் அனைத்து உயிரினங்களும் ஒருசேர வாழ்ந்தன என்பதற்கான சான்றுகளைத் தொடர்ந்து பெற்று வருகின்றனர். டார்வினின் கொள்கையை முழுமையாக நம்பக்கூடிய விஞ்ஞானிகள் இந்தச் சான்றுகளை மூடத் தனமாக நிராகரித்து வருகின்றனர், சில விஞ்ஞானிகள் குழப்பமடைகின்றனர், வேறு சில விஞ்ஞானிகளோ இந்தச் சான்றுகளை உபயோகித்து டார்வினின் கொள்கை முற்றிலும் தவறானது என்பதனை நிரூபித்து வருகின்றனர்.

சில விஞ்ஞான குளறுபடிகள்

யதார்த்தத்தின் அடிப்படையில் யோசித்துப் பார்த்தாலே டார்வினின் பரிணாமக் கொள்கை முற்றிலும் அபத்தமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். விஞ்ஞான ரீதியிலும் பல்வேறு அறிஞர்கள் இந்த பரிணாமக் கொள்கையின் அபத்தங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவற்றில் சில:
* பூச்சிகளின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு புதைப்பொருள் ஆராய்ச்சியில் எந்தத் தகவலும் இல்லை.

* எந்தவொரு மிருகத்திற்கும் அதன் முந்தைய வாழ்விற்கும் உரிய தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. மீன் தானாகத் தோன்றியது என்பது ஏற்க முடியாத ஒன்று.

* பாலூட்டிகளுக்கும் ஊர்வனவற்றிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கண்டுபிடிக்கப்படவில்லை, விளக்கப்படவில்லை.

* மனிதக் குரங்கு எந்த உயிரினத்திலிருந்து தோன்றியது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அதற்கு புதைப்பொருள் ஆராய்ச்சியில் எந்தச் சான்றும் இல்லை.

* மனிதன் மனிதக் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு இதுவரை எந்தவொரு புதைப்பொருள் ஆராய்ச்சி சான்றும் இல்லை. பில்ட்டவுன் என்ற இடத்தில் இதுகுறித்த ஏமாற்று வேலைகளில் சில விஞ்ஞானிகள் 1912இல் ஈடுபட்டு, பின்னர் 1953இல் அவை போலி என கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* இவை எல்லாவற்றிற்கும் மேலாக, டார்வினின் கொள்கை மனிதர்களை 40,000 வருடத்தைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடுகிறது. ஆனால் புதைப்பொருள் படிமங்களையும் பாறைகளையும் வைத்து மேற்கொள்ளப் பட்டுள்ள ஆராய்ச்சிகள் மனிதர்களைப் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தையவர்களாகக் காட்டுகிறது. அவ்வப்போது எழும் சில கண்டுபிடிப்புகள், மனிதன் தோன்றிய வருடத்தினை மேன்மேலும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகின்றன.
மேலும், விடுபட்டுப்போன தொடர்புகள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அதாவது, ஓர் உயிரினத்திற்கும் அடுத்த உயிரினத்திற்கும் இடையில் தொடர்பற்ற நிலைகள் பல உள்ளன. இந்த அபத்தங்கள் எல்லாம் விஞ்ஞானம், அறிவியல் என்ற பெயரில் உலா வந்து கொண்டுள்ளன. என்னே வேடிக்கை! மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள், அவர்களும் அறிவற்றவர்களாக இருப்பதால், இதனை மாபெரும் கொள்கையாக ஏற்கின்றனர்.

பரிணாம வளர்ச்சி மனிதனுடன் நின்றுவிட்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க இயலாத விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் விதமாக, மனிதன் பன்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் என்பதை விளக்கும் இப்படம் இணைய தளங்களில் பிரபலான ஒன்றாகும்.

அஞ்ஞான விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் பல விஷயங்களை அறியாதவர்களாக உள்ளபோதிலும், எல்லாம் அறிந்தவர்களைப் போல தங்களைக் காட்டிக்கொள்வதில் வல்லவர்கள். “எல்லாம் இயற்கையின்படி நடக்கின்றன,” என்று நினைக்கும் அவர்களால், இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க இயலாது. சில இடங்களில் அதனை விளக்கினாலும், இயற்கை ஏன் இவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான காரணத்தை அவர்களால் துளிகூட கற்பனை செய்ய முடிவதில்லை. அதாவது, மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று கூறுபவர்கள், அத்தகு மாற்றம் “ஏன் நிகழ்ந்தது?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல இதுவரை முயற்சிகூட செய்யவில்லை. ஏன் என்ற கேள்வியை ஒதுக்கிவிட்ட விஞ்ஞானத்தினை விஞ்ஞானம் என்று சொல்வதா, அஞ்ஞானம் என்று சொல்வதா?
அறிவுடைய மனிதனால், இயற்கைக்குப் பின்னால் ஒரு சட்டம் உள்ளது என்பதையும், அதைக் கட்டுப் படுத்துபவர்கள் உள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இதை அறியாத வெற்று விஞ்ஞானிகள் வெறுமனே நூல்களை எழுதித் தள்ளுகின்றனர், மக்களும் அதனை ஏற்கின்றனர்.
இருப்பினும், டார்வினின் கொள்கைகளில் இருக்கும் தவறுகளை விஞ்ஞானரீதியாக சுட்டிக்காட்டிப் பல்வேறு விஞ்ஞானிகள் நூல்களை எழுதி வருகின்றனர். அவற்றை அறிய ஆர்வமுடையவர்கள் Forbidden Archeology. Human Devolution, Rethinking Darwin போன்ற நூல்களைப் படிக்கலாம்.

டார்வினின் பரிணாமக் கொள்கையில் பல்வேறு உயிரினங்களுக்கு இடையிலான இணைப்புகள் இன்றுவரை விளக்கமளிக்கப்படாமல் வெறும் கற்பனையாகவே உள்ளது.

வேதங்கள் கூறும் பரிணாமக் கொள்கை
சில மதவாதிகள் டார்வினின் பரிணாமக் கொள்கையினை ஏற்று, அதே நேரத்தில் அந்த பரிணாமத்திற்குக் கடவுளை காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் வேதங்களோ எல்லா உயிரினங்களும் ஒருசேர படைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
ஒரு குறிப்பிட்ட உடலானது வேறோர் உடலாக மாற்றம் பெறுகிறது என்பது டார்வினின் பரிணாமக் கொள்கை. ஆனால் உடல்கள் மாற்றமடைவதில்லை என்பதும் உடலினுள் உள்ள ஆத்மா பல்வேறு உடல்களை தாண்டிச் செல்கின்றது என்பதும் வேதங்கள் கூறும் பரிணாமக் கொள்கையாகும். நாம் காணக்கூடிய உடல் ஒரு வாகனத்தைப் போன்றது என்றும், ஆத்மா அதனுள் பயணிக்கின்றது என்றும் வேதங்கள் கூறுகின்றன. மனிதன் தன்னிடம் இருக்கும் பணத்திற்கேற்ப வாகனங்களைத் தேர்ந்தெடுப்பதைப் போல, ஆத்மா தனது கர்மத்திற்கேற்ப வெவ்வேறு உடல்களைத் தேர்ந்தெடுக்கிறது.
நீரில் வாழும் உயிரினங்கள் ஒன்பது இலட்சம், தாவரங்கள் இருபது இலட்சம், பூச்சிகள் பதினோரு இலட்சம், பறவைகள் பத்து இலட்சம், விலங்குகள் முப்பது இலட்சம், மற்றும் மனிதர்கள் நான்கு இலட்சம் என மொத்தம் எண்பத்திநான்கு இலட்ச உயிரினங்கள் இருப்பதாக பத்ம புராணம் குறிப்பிடுகிறது. ஜீவன் இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் படிப்படியாகப் பரிணமித்து மனிதப் பிறவியினை அடைகிறான். அதன் பின்னர், அவன் செய்யும் செயல்களுக்கேற்ப அவனது மறுபிறவி அமைகிறது. இதுவே வேதங்கள் கூறும் பரிணாமக் கொள்கையாகும்.
எண்பத்திநான்கு இலட்ச வகையான உயிரினங்கள் என்பது ஸத்வ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களின் கலவை யினால் ஏற்படுவதாகும். விலங்கு உடலிலிருந்து மனித உடலுக்கு ஏற்றம் பெறும் ஜீவன்கள் இந்த மூன்று குணங்களை வைத்து பிரிக்கப்படுகின்றனர். ஸத்வ குணத்தில் இருப்பவர்கள் தங்களது முற்பிறவியில் பசுக்களாக இருந்தனர் என்றும், ரஜோ குணத்தில் இருப்பவர்கள் சிங்கங்களாக இருந்தனர் என்றும், தமோ குணத்தில் இருப்பவர்கள் குரங்கு களாக இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. நவீன கால மக்களில் பெரும்பாலானோர் (திரு. டார்வினைப் போன்று) தமோ குணத்தில் இருப்பதால், அவர்களுக்கும் குரங்குகளுக்கும் சில ஒற்றுமைகள் காணப்படு கின்றன. இந்த ஒற்றுமைகளை வைத்து, குரங்கு மனிதனாக மாறிவிட்டது என்று டார்வின் அபத்தமான முடிவிற்கு வருகின்றனர். சில மனிதர்கள் தங்களது முற்பிறவியில் குரங்குகளாக இருந்திருக்கலாம், குரங்கிலிருந்து மனிதனாகப் பிறவி எடுத்திருக்கலாம்; ஆனால் குரங்கு உடலே மனித உடலாக மாறிவிட்டது என்னும் டார்வினின் கொள்கை மூடத்தனமானது. வேறு விதமாகக் கூறினால், ஆத்மா வெவ்வேறு உடல்களில் பரிணமிக்கின்றது என்பது உண்மை, உடலே வெவ்வேறு உடல்களாகப் பரிணமிக்கின்றது என்பது பொய்.
இந்த பரிணாமங்கள் அனைத்தும் முழுமுதற் கடவுளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன என்று வேதங்கள் உறுதிப்படுத்துகின்றன. எல்லா உயிரினங்களும் ஒரே சமயத்தில் படைக்கப்பட்டன என்றும் அவை அனைத்திற்கும் விதையளிக்கும் தந்தை கிருஷ்ணரே என்றும் பகவத் கீதை (14.4) உறுதிப்படுத்துகிறது. மேலும், வேதப் பரிணாமத்தின்படி முதலில் படைக்கப்பட்ட உயிர்வாழி சற்றும் அறிவற்ற ஒரு செல் உயிரி அல்ல, மாறாக உலகையே நிர்மாணிக்கும் பேரறிவு பெற்ற பிரம்மதேவர் ஆவார்.

ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு இடம்பெயர்வதே பரிணாம வளர்ச்சி என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. உடலே தானாக மாற்றம் பெறுவதாக கூறும் டார்வினின் கொள்கை ஏற்புடையதல்ல.

டார்வின் கொள்கையைப் புறக்கணிப்போம்
டார்வினின் பரிணாமக் கொள்கை வெளிவந்து 150 வருடங்கள் ஆன பின்னரும் விஞ்ஞானிகளால் இதனை இதுவரை நிரூபிக்க இயலவில்லை. உண்மையில் டார்வினின் கொள்கையில் மேன்மேலும் அதிகமான ஓட்டைகளே கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனை நிரூபிக்கும்படி விஞ்ஞானிகளிடம் கேட்டால் காலம் காலமாக “வருங்காலத்தில் நிரூபிப்போம்” என்று பதிலளித்து வருகின்றனர். உங்களுக்குத் தரவேண்டிய பணத்திற்காக, யாரேனும் ஒருவர் சுமார் முன்னூறு வருடங்கள் பின் தேதியிட்ட காசோலையை வழங்கினால், நீங்கள் அதனை ஏற்பீர்களா? அத்தகைய முட்டாள்கள் யாரேனும் இருப்பார்களா? “வருங்காலத்தில் நிரூபிப்போம்” என்னும் விஞ்ஞானிகளின் கூற்றிற்கும் பின் தேதியிட்ட காசோலையை வழங்குவதற்கும் வேறுபாடில்லை.
டார்வினின் கொள்கைக்கு மாற்றாக இன்றைய விஞ்ஞானிகளில் பலர் அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையை (Intelligent Design) ஆதரித்து வருகின்றனர். பிரபஞ்சப் படைப்பிற்கும் உயிரினங்களின் தோற்றத்திற்கும் பூரண அறிவுடைய முழுமுதற் கடவுள் காரணமாக திகழ்கிறார் என்பதை வேத இலக்கியங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தில் இதுகுறித்த விரிவான தகவல்களை நாம் காணலாம். இந்த சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் பயில்வோர் அவற்றில் மிகவும் ஆழமான தத்துவ உண்மைகள் பொதிந்து கிடப்பதை உணர முடியும். இதனால்தான், ஸ்ரீல பிரபுபாதர் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள விஞ்ஞானத்தை பயில்வதற்கு முன்வர வேண்டும் என பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இன்று இஸ்கானில் எண்ணற்ற பல்கலைக்கழகங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் டார்வினின் கொள்கையைப் புறக்கணித்து வேதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
எனவே, மனிதர்களை அவர்களது வாழ்வின் குறிக்கோளிலிருந்து திசை திருப்பக்கூடிய அபத்தமான, நிரூபிக்கப்படாத டார்வினின் பரிணாமக் கொள்கையை நாமும் புறக்கணிப்போமாக.

Address

P. O. Box No:4, Thuckalay
Kanyakumari
629175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Krishna chaitanya dasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Krishna chaitanya dasa:

Share