திவ்ய பிரபந்தம் Divya Prabandham

திவ்ய பிரபந்தம் Divya Prabandham ஸ்ரீவைஷ்ணவத்தின் தொன்மையை, மாண்பினை சொல்வதே அடியேனின் பணி! "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்".

27/03/2026

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

ராமநவமி வாழ்த்துக்கள் 🙏

02/03/2026

வானமாமலை

நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும் இனி யுன்னைவிட்டு, ஒன்றும்

ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,

சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,

வீற்றிருந்த எந்தாய், உனக்கு மிகையல்லே னங்கே.

பொருள்:
சரியான நோன்புகள் (கர்மயோகம்) நோற்கவில்லை, கூடவே ஞானமும் (ஞானயோகம்) இல்லை; ஆனாலும் இனி உன்னை விட்டு ஒரு கணமும் பிரிய மாட்டேன், ஆதிசேஷனில் பள்ளி கொண்டவனே, வானமாமலை பெருமாளே, நின்னை சரணடைகிறேன்" என்று ஆழ்வார் தம் இயலாமையையும், பகவான் மீதான நம்பிக்கையையும் தெரிவிக்கிறார்.

ஆச்சார்யர்களின் வியாக்கியானம்:
உன்னை அடைவதற்காக சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உபாயங்கள், என்னிடம் எதுவுமே இல்லாத போதும், உன்னை மட்டுமே அடைய வேண்டும் என்கிற பேராவல் என்றென்றும் உள்ளது என்பதை ஆழ்வார் குறிப்பிடுவதை சொல்கிறார்கள்.

இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், ஆன்ம பலத்தைப் பெறுவதற்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகத்தை உடையவன் அல்லேன். ஆதலால், நுண்ணியமான தான ஞான யோகத்தை உடையவனும் அல்லேன். இவை இரண்டாலும் கூடும் பக்தியும் இல்லாத போதும், உன் குணங்களை நினைத்துப் பார்த்தப் பின்பு, உன்னை விட்டு ஒரு க்ஷணமும் வாழ முடியாத நிலையில் உள்ளேன்.

ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு, உன் திருமேனியை அவனுக்குக் கொடுத்த ஸ்வாமியாய், செந்நெல் விளையும் வயல்களோடு கூட, கலங்கிய நீர் கொண்ட நிலத்தில் தாமரையானது மலரும்படி செய்யும், இப்படிப் பட்ட அழகான சிரீவரமங்கல நகரிலே, அடியார்களைக் காப்பதற்காகக் கொண்ட தனித்துவம் வாய்ந்த வீற்றிருந்த திருக்கோலத்தாலே எனக்கு உபகாரகனானவனே, அங்கே ரக்ஷகனாக இருக்கும் உன்னால் காக்கப்படுபவர்களுள் ஒருவனாக இந்நாள் வரை அடியேன் வெளிப் பட்டவன் அல்லேன், ஆகையால் அடியேனையும் ஆட்கொள்ள வேண்டும் என்பதே விளக்கம்.

இங்கே பல சொற்கள் மணிப்பிரவாள நடையிலேயே இருக்கும். ரொம்பவே தமிழ்ப் படுத்தினால், ஆழமான உளமன எண்ணங்களை சொல்ல முடியாமல் போகிறது. அதனை அப்படியே கொடுத்து விட்டேன் 🙏🙏🙏

உள்ளுறை:
ஆழ்வார் பகவானிடம் சரணடையும் போது, "அடியேன் ஒன்றும் செய்ய வில்லை. ஆனால், நும்மைத் தவிர வேறு புகலிடமும் அறியவில்லை," என்பதே உட்பொருள்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏

15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎊

நீங்காத செல்வம் நிறைந்து 🙏🙏🙏

13/01/2026

திருப்பாவை பாசுரம் - 30

தனுர் மாத முடிவில், இந்த பாசுரத்தோடு பாவை நோன்பும் நிறைவடைகிறது. திருப்பாவை நிறைவு அடையும் இந்நாள் ஒரு புண்ணிய தினமாகும். இப் பாசுரத்தில் ஆண்டாள் தரும் செய்தி அடியார்கள் அனைவருக்கும் மோட்சத்தை காட்டுவதாக அமைகிறது.

**************************************
ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற்கெம்மை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

********************************************
பாசுரம் 30
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற அரவத்தை கயிறாக்கி திருப்பாற்கடலை கடைந்த பரமமூர்த்தி, கேசவன் (அழகிய சுருண்ட நீள்முடி கொண்டவன்) மற்றும் மாதவன் (திருமகளின் கணவன்) என்று திருநாமங்களைக் கொண்டவன் என்கிறாள் ஆண்டாள். அவ்வாறு கடையும் போது, திருப்பாற்கடலில் எண்ணற்ற வஸ்துக்கள், அலைகளின் மீது மிதந்து கொண்டிருந்தனவாம் - அவைகள் பார்ப்பதற்கு கப்பல் (வங்கம் ) போல் இருந்தாலே, இங்கே ஆண்டாள், பாற்கடலை " வங்கக் கடல் ", என்கிறாள்.

"சந்திரனை ஒத்த அழகிய முகத்தை உடைய, அழகிய ஆபரணங்களை அணிந்த, ஆயர் சிறுமியர், அப்பிரானை அடைந்து திருவடி பணிந்து, அவனது சன்னிதியில், தாங்கள் வேண்டிய பறையைப் (தங்கள் புருஷார்த்தத்தைப்) பெற்ற அந்த செய்தியை விளக்கி, அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதரித்தவளும், அன்றலர்ந்த தாமரை மலரால் ஆகியகுளிர்ந்த மாலையை அணிந்த பட்டர்பிரானின் (பெரியாழ்வார்) திருமகளும், ஆன கோதை நாச்சியார், அருளிச் செய்த சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களை, குறையில்லாமல் ஓதும் அடியார்களுக்கு நான்கு பெருமலைகளை ஒத்த திருத்தோள் களையும், சிவந்த திருக்கண்களையும், அழகிய திருமுகத்தையும் கொண்ட, அனைத்துச் செல்வங்களுக்கு அதிபதியான திருமால், இம்மையிலும், மறுமையிலும் கருணை காட்டி, (அவன் சேர்க்கையால்) பேரானந்தத்தை அருளுவான்", என்கிறாள் ஆண்டாள்.

**************************************
தேசிகர் பிரபந்தம்:
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
துழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

வேதப்பிரான் பட்டர் அருளியது:
கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

மணவாளமாமுனிகள் அருளியவை:
இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு
அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

குறிப்பு:

இதுகாறும் திருப்பாவையை சேவித்த அனைத்து வைணவ அடியார்கள், நின்ற நெடுமாலின் அருளைப் பெற இறுதியாக பல்லாண்டு சேவிப்போம்.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு"

அடியேன் ராம்குமார் ராமாநுஜ தாஸன்
அடியேன் பாலாஜி ஶ்ரீநிவாஸ்

12/01/2026

திருப்பாவை பாசுரம் - 28

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்
-------------------------------------------------------
ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
சூடிக் கொடுத்த சுடர் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.
--------------------------------------------------------------------------
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை!

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

-----------------------------------------------------------------------
இப்பாசுர விளக்கம் :

"பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், ஆயர் குலததில் நீயும் பிறந்ததினால் - எங்களில் ஒருவனாக ஆயர்குலத்தவ னாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத கோவிந்தனே, கண்ணனே", என்கிறாள்.

"ஸ்வாமியான கண்ண பிரானே, உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால், அதீத அன்பினாலே உன்னை, மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் நாராயணா, மாயனே , மாதவா என்றெல்லாம், மரியாதை குறைவாக (சிறுபே ரழைத்தனவும்) அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக. எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக ", என்றே கேட்கிறாள்.

பூர்வாசார்யர்கள் சொல்லும் விளக்கத்தினை கேட்போம்:

வைணவ ஆச்சார்யர்களின் சம்பந்தம் ஏதும் இல்லாததால், தங்களுக்கு பகவத் விஷய ஞானம் இல்லை என்பதையும் "அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து" என்று சொல்லி ஒப்புக் கொள்கின்றனர். தாங்கள் பசுக்களை மேய்க்கும் சிறுதொழில் செய்து வாழ்பவர்கள் என்றும், ஆதலால் பகவத்-பாகவத சேவை என்று பெரிதாக எதுவும் செய்யாதவர்கள் என்றும் கூட கண்ணனிடம் மனம் விட்டுச் சொல்கின்றனர்.

"நீ யாதவ மணியாக எங்கள் குலத்தில் அவதரித்தது மட்டுமே நாங்கள் பெற்ற ஒரே பெரும்பேறு, அதனாலேயே நாங்கள் பெரும் புண்ணியம் பெற்ற வராகி விட்டதாக நினைக்கிறோம். மற்றபடி, நாங்கள் செய்த எதுவும் புண்ணியத்தில் சேராது. உனது அருமை பெருமைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்குத் திறனில்லை. தகுதியுமில்லை. ஆனாலும், நீ ஒருவனே குற்றமற்றவன், குறையற்றவன் என்ற ஒரு விஷயத்தை எப்படியோ உணர்ந்து கொண்டோம், திடமாக நம்பினோம்.

எங்கள் அறியாமையால், உன்னைச் சரணடைவதே கதி என்பது புரிய எங்களுக்கு இத்தனை காலமாகி விட்டது. எங்கள் கர்ம ஞான பக்தியில் குறைவிருக்கலாம். ஆனால், உந்தன் கருணைக்கு குறைவுண்டோ? எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து, நாங்கள் விரும்புவதை அருளி, எங்களை உன்னுடன் சேர்த்துக் கொள்" என்று சரணாகதியின் உன்னதத்தை கோபியர் வெளிப்படுத்துவதாக கோதை நாச்சியார் இயற்றியுள்ள இப்பாசுரம், வைணவப் பெருந்தகைகளால், மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்றாகும்.

-----------------------------------------------------------------

வேதப்பிரான் பட்டர் அருளியவை:
கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் - நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.


வாழி திருநாமம்:
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம் !
ஆச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே நாராயணாய நம:

11/01/2026

திருப்பாவை பாசுரம் - 27
***********************************
ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

தனியன்:
நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :
**************************

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை:
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
******************************
விளக்கவுரை:
சென்ற பாசுரத்தில் கண்ணன் கோபியரது வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ததால், அவர்களுக்கு வரும் பேரானந்தம். பாவை நோன்பும் பூர்த்தி அடையும் நிலைக்கு வருகிறது.

பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே, உன்னை வாயாரப் பாடி உன்னிடத்து யாம் வேண்டுகின்ற பறையைப் பெற்று பின்னும் நாங்கள் பெறும்படியான ஸன்மானமாவது. இங்கே பறை என்பது, வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பகவத் கைங்கர்யத்தை என்றென்றும் செய்யும் மனோ நிலை வேண்டும் என பகவானிடம் வேண்டுதல்.

"ஆயர்பாடியில் உள்ள மக்கள் புகழும்படியாக கையிலணியும் ஆபரணமான சூடகங்களும், தோள்வளைகளும், காதுக்கிடும் ஆபரணமான தோடும், கர்ணப்பூவும், பாதகடகம் என்னும் ஒரு வகையான கொலுசும் - இப்படியெல்லாம் சொல்லப்படும் ஆபரணங்கள் போன்றவைகளை - நாம் அணிந்து மகிழ்வோம். அழகான ஆடைகளை உடுத்துவோம்", என்கிறாள் ஆண்டாள்.

அதன் பின்பு, பாற்சோறு முழுவதுமே மேல நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம். இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கு அருள்வாயாக.

'உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்', இவ்வரிகளுக்கு பூர்வாச்சார்யர்கள் சொல்லும் வியாகியனம் அருமை. ஆண்டாள் கோவிந்தனிடம், 'சம்மானமாக இதைக் கொடு அதைக் கொடு', என்று குறிப்பாக எதுவும் வேண்டவில்லை. ஆனால், 'உயர்ந்ததாக ஒன்றைக் கொடு' என்பது போல குறிப்பில் சொல்கிறாள் ஆண்டாள்.

அதாவது, 'நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையாக உன் சம்மானம் இருக்க வேண்டும்" என்று சொல்கிறது போலிருந்ததாம். அதன் பொருள். 'கண்ணனே சம்மானம்' என்பது தவிர வேறென்ன இருக்க முடியும்? என்கிறார்கள்.
*****************************************

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

10/01/2026

திருப்பாவை பாசுரம் - 26
**********************************
ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

தனியன்கள்:
நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற்கெம்மை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

********************************
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வன வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

**************************************
விளக்கவுரை:

ஆண்டாள், 'மாலே மணிவண்ணா', என்றழைக்கிறாள். இதன் பின்னர் வரும் வரிகளுக்கு பூர்வாச்சார்யர்கள் சொல்லும் விளக்கம் கருத்தில் கொள்வோம்.

'மேலையார் செய்வன வேண்டுவன கேட்டியேல்' - அதாவது அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலவனே, நீலமணி கண்ணனே, எங்கள் உத்தமபுருஷர்கள், குலப் பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம். ஆதலால், நாங்கள் மேற்கொள்ள இருக்கும் நோன்புக்குத் தேவையான பொருட்கள் தேவைப்படுகிறது.

அது யாதெனில், இந்த உலகமனைத்திலும் உள்ள அடியார் களுக்கு ஞாலத்தையும், துஷ்டர்களுக்கு பயத்தையும் உண்டு பண்ணக் கூடியதான உன் பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். பெரிதான பேரிகைகள் வாத்தியங்கள் வேண்டும். திருப்பல்லாண்டு பாடுபவர்களையும், விடியற்காலை என்பதால், இருள் விலக்க மங்கள தீபங்களையும், நோன்புக்கு வந்து கொண்டிருக்கிற பேர்களுக்கு தொலைவிலேயே இடத்தை அடையாளம் சொல்லத்தக்க கொடிகள் வேண்டும். இவற்றை யெல்லாம் குடையாகக் காக்க கூடிய மேல்விதானம் வேண்டும், இவை களையெல்லாம் பிரஸாதித்து அருள வேணும், என்று ஒரு பெரிய பட்டியலையே வேண்டுகிறார்கள்.

ஆச்சார்யர்கள் இன்னும் அழகாய் மேலும் உரை எழுதுகிறார்கள். ஆச்சர்யமான விளக்கங்கள்.

கண்ணன் கேட்கிறானாம், "ஆமாம், இதெல்லாம் வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தெரியும், இதெல்லாம் மேலையார் செய்வனகள் ஆயிற்றே", என்றானாம்.

அதற்கு நோன்பிருப்போர் சொல்கிறார்கள், " எங்களுடைய பூர்வாசார்யர்கள் செய்தவைகள் எங்களுக்கு தெரியும், அதனால் அவைகளையே அருள வேண்டும்", என பதிலளிக்கிறார்கள்.

வியாக்கியானத்தில் இந்த இடத்தை பூர்வாசார்யர்கள் அழகாக விளக்கியிருக்கிறார்கள். இவர்கள் கேட்டபடி, கண்ணன் பதிலளிக்கிறான்.

"என்னிடம் பாஞ்சசன்யம் ஒன்றுதான் இருக்கிறது, அதன் ப்ரபாவங்களுக்கு ஈடாக இன்னொன்றில்லை, அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

நோன்பிருக்கும் பாவையர் சொல்கிறார்கள், "மணிவண்ணா, நீ தருவதாகச் சொல்வதெல்லாம் ஒன்றுதானே இருக்கிறது. எங்களுக்கு இதுமாதிரி பல வேண்டும் என்று இவர்கள் கேட்க,

அவன் இல்லாததை எப்படி தருவது என்று திகைக்க, இவர்கள் சொல்கிறார்கள். உன்னிடம் இல்லாதது என்று ஒன்று உண்டா? ஆலினிலையாய்! ஞாலமேழும் உனக்குள் கொண்டு ஆல இலையில் சிறு குழந்தையாக துயில் கொண்டவனாயிற்றே நீ! இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கடந்து ‘இல்லாததையும்’, ‘இருப்பதையும்’ உண்டு பண்ணுபவனாயிற்றே நீ, உன் அருளாலே எல்லாம் முடியும் என்று சொல்கிறார்கள்.

பகவான் சொல்கிறானாம், " நான் உங்களுடன் கூத்தாடின பறை இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாண்டு பாடின விஷ்ணு சித்தரே இருக்கிறார். அந்த பெரிய ஆழ்வாரை ஆசார்யானாக வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நப்பின்னையே கோல விளக்காக உங்களை காட்டித் தருகிறாள். அவளை எடுத்துக் கொள்ளுங்கள். என் கருடன் ஆரோகணித்த கொடி இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். விதானத்துக்கு என் உத்தரீயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்", என்கிறானாம்.

தன்னுடைய வஸ்துக்களையும் பகவான் கொடுக்க ஆரம்பித்தானாம்.

*****************************************
தேசிகர் பிரபந்தம்:
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
துழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

வேதப்பிரான் பட்டர் அருளியது:
கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

மணவாளமாமுனிகள் அருளியவை:
இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு
அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

09/01/2026

திருப்பாவை பாசுரம் - 25
---------------------------------------

ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

தனியன்கள்:
நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற்கெம்மை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
-----------------------------------------------------------------------------
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
-------------------------------------------------------------------------
விளக்கவுரை:

ஒருத்தி மகனாய் பிறந்து, தேவகி பிராட்டியாகிற ஒருத்திக்கு பிள்ளையாய் அவதரித்து, அவதார காலமாகிய அந்த ஒரு இரவில், இந்த குழந்தையை ப்ரசவிக்கிற அறையில் ஒரு ராத்திரி கூட தங்க விடவில்லை. உடனே குழந்தையை இடம் மாற்றியாக வேண்டியதாகி விட்டது.

இதனை ஆண்டாள் சொல்கிறாள், ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - என்னவொரு அர்த்தமுள்ள சொல்லாடல். அதாவது, திருவாய்ப்பாடியில் நந்தகோபர் மாளிகையில் வந்து சேர்ந்து, யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தியினுடைய பிள்ளையாக ஏகாந்தமாக வளரும் சூழல். முதலில் சொன்ன ஒருத்தி தேவகி. இப்போது சொல்கிற ஒருத்தி யசோதை. தேவகி, கண்ணனை பிறந்த குழந்தையாக பார்த்தாள். யசோதையோ அவன் வளர்ந்து, அவன் பால லீலைகளையெல்லாம், தொல்லையின்பத்தையெல்லாம் திகட்ட திகட்ட அனுபவித்தவள். அவள் பெருமைக்கு ஈடே இருக்க முடியாது. யசோதைக்கு ஈடு இணை உண்டோ!!! ஈடு இணையற்ற த்வயமானவள்.

தீயவனான கம்சனின் விஷப்பார்வை கண்ணன் மீது பட்டு விடக்கூடாதே, நல்லவர்களான தேவர்களும் இவன் இருக்குமிடம் தெரிந்தால் அவர்களெல்லாம் இவனிடம் ப்ரமை கொண்டு கூடி வருவர், அதனால் இவனிருப்பது வெளித்தெரிந்து விடுமே என்று யாரும் பார்க்காமல் கண்ணனை நிலவரையில் வைத்து வளர்த்தாளாம். இப்படி கண்ணனை நினைக்கும் போதே நாம் கம்ஸனையும் சேர்த்தே நினைக்க வேண்டியிருக்கிறதே, அது அவன் செய்த புண்ணியம்.

ஆண்டாள் கம்சனை எண்ணி, "தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைத்த"- கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்து வருகிறான் என்று தெரிந்தவுடன், ஓரிடத்தில் தன் உடலை தரிக்க முடியவில்லையாம் கம்சனுக்கு. உடலும் தவிக்க, உள்ளமும் தவிக்க தரிக்க முடியாமல் துடித்தானாம்.

இதனை ஆண்டாள் அழகாய் சொல்கிறாள், "தான்தீங்கு நினைத்தகருத்தைப் பிழைப்பித்து" - கண்ணன் அங்ஙனம் வளர்வதைப் பொறுக்கமாட்டாதவனாய், "இவனை எப்படியாகிலும் கொல்லவேணும்" என்று தீங்கை நினைத்த, கம்ஸனுடைய எண்ணத்தை வீணாக்கி,

அடுத்த வரியில், "கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே" - தானே எல்லாம் என்று நினைத்து நிர்பயமாக இருந்த அரக்கன் வயிற்றில் பயாக்னியை உண்டு பண்ணி, நெருப்பென்ன நின்றான் கண்ணன். சின்ன குழந்தையாய் இருந்தாலும் கம்ஸனுக்கு நெருப்பென்ன நெடுமாலாய் நின்றானாம் கண்ணன். கண்ணனை என்னமாய் சிலாகித்து பாடுகிறாள் ஆண்டாள்.

"நெடுமாலே, உன்னிடத்தில் புருஷார்த்தமான உயர்ந்த கதியை யாசித்துக்கொண்டு வந்தோம். நீ எங்களுக்கு கைங்கர்ய ஸ்ரீயை கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக - என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, நித்யமான பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம்", என்று வேண்டுகிறாள்.

------------------------------------------------------------------------
வேதப்பிரான் பட்டர் அருளியது:
கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

08/01/2026

திருப்பாவை பாசுரம் - 24
*********************************

வேதாந்த தேசிகன் தனியன்:

ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

தனியன்:
நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :

*******************************
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

*****************************
பொருள்:

இந்த பாசுரம், பரிபூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

போன பாசுரத்தில் சிம்மத்தின் நடை அழகைக் கண்டு, அவன் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்ததும், அவனின் ஆற்றல்களை வியந்து, இப்பாசுரத்தில் புகழ்ந்து போற்ற ஆரம்பிக்கிறாள் ஸ்ரீ ஆண்டாள்.

“வாமனனாய் வந்து, த்ரிவிக்கிரமனாய் வளர்ந்து அனைத்துலகத்தையும் அளந்து விட்டாய், உன் பாதங்கள் போற்றி"

"பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில் எழுந்தருளி, உலகைக் காக்க இலங்கைக்கு நடந்தே சென்றாய் - ராவணனை வென்றாய் எல்லாம் உன் திறல் அல்லவா - போற்றி போற்றி"

"சகடமாய் வந்த அசுரனை, வண்டி சக்கரத்தின் உருவில் வந்த சகடாஸுரன் முடியும்படி அந்த சக்கரத்தை காலால் உதைத்தே வதைத்தாய், உன் கீர்த்திகள் பல்லாண்டு போற்றி போற்றி"

“கன்றாய் உருமாற்றி கொண்டு தீங்கிழைக்க வந்த வத்ஸாஸுரன் என்ற அஸுரனை எறி தடியாகக் கொண்டு விளாமர வடிவில் இருந்த கபித்தாஸுரன் மீது எறிந்தவனே, உன்னுடைய திருவடிகள் போற்றி ”

“குன்றைக் குடையாய் பிடித்து, அஃதாவது கோவர்த்தன மலையை குடையாக தூக்கினவனே, உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி குணங்கள் (எவ்வுயிரையும் சமமாக பாவிக்கும் தன்மை, சுலபமாக எல்லோருக்கும் கிட்டி இருக்கும் தன்மை முதலான உயர்வற உயர் நலமான குணங்கள்) மக்களைக் காத்தாய். கண்ணா உன் குணம் போற்றி போற்றி."

“உன் பகைவர்களை வென்று அவர்களுக்கு மோக்ஷ வழி காட்டுகிறாய். சிசுபாலன், கம்சன் , ஜராசந்தன் எல்லோருக்கும் வைகுந்தத்திற்கே வழி காட்டினாய் அல்லவா உன் திரு நாமம் போற்றி போற்றி"

"பகைவரை வென்று த்வேஷத்தை அழிக்கின்ற, உனது திருக்கையில் உள்ள, வேல் போற்றி ”

"உனக்குச் சேவகம் செய்து உன்னை வழிபட வந்திருக்கிறோம் கேசவா, எங்களை ஏற்றுக் கொண்டு
எங்களைக் காப்பாய்".

பலவாறாக மங்களாசாஸனம் பண்ணிக்கொண்டு, "உன்னுடைய வீர்யங்களையே புகழ்ந்துக் கொண்டு அடியோம் இப்போது பறை கொள்வதற்காக உன்னிடம் வந்து சேர்ந்தோம். கிருபை செய்தருள வேணும்", என்றெல்லாம் சொல்லியவாறே ஸ்ரீ ஆண்டாள் பாசுரம் ஸேவிக்கிறாள்.

**************************************

வேதப்பிரான் பட்டர் அருளியது:
கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

07/01/2026

திருப்பாவை பாசுரம் - 23
-----------------------------------------------
வேதாந்த தேசிகன் தனியன்:

ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

தனியன்:
நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :
_______________________________________

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை:

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

_________________________________________

விளக்கவுரை:

"கார் காலத்தில் மலைக் குகையை தனது இருப்பிடமாக்கிக் கொண்டு, உறங்கிக் கிடக்கும் பெருமை வாய்ந்த சிங்கமானது, தூக்கம் கலைத்து, தீப்பொறி பறக்க தனது சிவந்த விழிகளை திறந்து பார்த்து, மணமுள்ள தனது பிடறி முடி அலை பாயும் வகையில் உடலை நாற்புறமும் அசைத்து, நெட்டுயிர்த்து, பின் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையை விட்டுக் கிளம்புவது போல,

காயாம் பூப்போன்ற நிறத்தை உடைய பிரானே, உனது திருமாளிகையை விட்டு இவ்விடம் வந்து, உனக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட பெருமை வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, அதன் பின், நாங்கள் உனை நாடி வந்த செயலுக்கான காரணத்தை ஆராய்ந்து அருள வேண்டுமாய், பாவை நோன்பிருந்து வணங்கிக் கேட்கிறோம்.", என்கிறாள் ஆண்டாள்.

இப்பாசுரம், ஸ்ரீ கண்ணனின் கம்பீரத்தை கோபியர் போற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது. சூடிக் கொடுத்த நாச்சியார், மாயக் கண்ணன் துயிலெழுவதை, ஒரு சிங்கம் விழித்தெழுவதுடன் ஒப்பிட்டு, மிக அழகாக தன் எண்ணங்களை பாசுரம் வாயிலாக சொல்லியுள்ளார்.
_______________________________________

வேதப்பிரான் பட்டர் அருளியது:

கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே

ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when திவ்ய பிரபந்தம் Divya Prabandham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share