31/01/2026
அனுதின வேதாகம தியானம்
ஜனவரி 31. சனிக் கிழமை - 2026
வாசிக்க வேண்டிய வேத பகுதி: சங்கீதம் 3:1-4:8
மையக் கருத்து: மனிதர்கள் அருளும் பாதுகாப்பை விடக் கர்த்தர் அருளும் பாதுகாப்பே சிறந்தது.
இன்று உலகமும், மனிதரும் எவ்வளவு சிறந்த பாதுகாப்பை அருளினாலும்
கர்த்தரின் பாதுகாப்புக்கு அது ஈடாகாது. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறதும் விருதா. கர்த்தரின் பாதுகாப்பைப் பெற, பாதுகாப்பை அருளும் கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதை முதலில் அறிவோம்.
(1) கேடகமாக இருப்பவர் (3:1-5):
தாவீது கூறுகையில் எனது சத்துருக்களும், விரோதிகளும், நான் கர்த்தரில் நம்பிக்கை வைத்திருக்கிறதை பரிகாசம் செய்பவர்கள. இருந்தாலும், அவர்களிடமிருந்து வரும் அம்புகள் என்னைத் தாக்காதவாறு ஆண்டவர் கேடகமாக இருக்கிறார்.
நம்மைப் பிரச்சனைகளின் மத்தியிலும் அவர் உயர்த்துவார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது நமக்குச் செவி கொடுக்கிறார். ஆபத்துகள் நிறைந்த இடத்திலும் கர்த்தர் நம்மைத் தாங்குகிறார். நாமும் அவரையே கேடகமாகக் கொள்வோம்.
(2) செயலாற்றுபவர் (வசனம். 3:6-4:3):
நமக்கு விரோதமாக எத்தனை பேர் வந்தாலும் பயப்படத் தேவையில்லை. மீட்பு கர்த்தருடையது, ஆகவே அவர் நமக்காக செயலாற்றுவார்.
நீங்கள் நின்று கொண்டு கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். கர்த்தரைச் செயலாற்ற விட வேண்டும். நாம் குறுக்கிடக்கூடாது. நமக்கு விரோதமாக இருப்பவர்களுக்குப் பதிலுக்குப் பதில் செய்யக் கூடாது. எதிரிகளை சிநேகிக்க வேண்டும். அவர்களும் மனம் மாறுவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.
நமது எதிரிகள் உலகத்துக்காக வாழ்வதினால் வீணானதை விரும்பிப் பொய்யை மட்டுமே நாடுபவர்கள். என்னைக் கர்த்தர் தெரிந்தெடுத்துள்ளார் என்று தாவீது சொல்வது போல நாமும் கர்த்தருக்கென்று தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்று சொல்வோம்.
(3) மகிழ்ச்சி அருள்பவர் (வசனம்.4:4-8):
மகிழ்ச்சியைக் கெடுப்பது கோபம். ஆகவே கோபத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைச் செலுத்த வேண்டும்.
ஆண்டவரை நம்பும் பிள்ளைகளின் வாழ்வில் இருள் நீங்கி வெளிச்சம் பிரகாசிக்கும். இருளிலிருந்து வெளிச்சத்துக்கு மீட்கப்பட்டவர்கள். எந்தப் பாடுகள் மற்றும் துன்பத்திலும், கர்த்தரை நம்பும் பிள்ளைகளின் வாழ்வில் நிறைவான மகிழ்ச்சி இருக்கும், நிம்மதியான தூக்கமிருக்கும். அவரே நம்மைச் சுகமாய்த் தங்கப் பண்ணுகிறவர். யூதப் பிள்ளைகள் இரவில் தூங்குவதற்குச் செல்லும் முன்பு 4:8 வசனத்தைச் சொல்லி ஜெபிப்பது வழக்கம்.
ஜெபம்: அன்புள்ள பரலோகத் தகப்பனே, எல்லாத் தீங்குக்கும் என்னை விலக்கிக் காத்தருளும். ஆமென்!