11/12/2025
நிசேயா விசுவாச அறிக்கை:
வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமாகிய எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற, சர்வவல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். இவர் சகல உலகங்களுக்கும் உண்டாவதற்கு முன்னே பிதாவினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர். ஜோதியில் ஜோதியானவர். மெய் தேவனில் மெய் தேவனானவர்; உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோடு ஒரே தன்மையுடையவர்; இவர் மூலமாய் சகலமும் உண்டாயின. நமக்காகவும், நம்முடைய இரட்சிப்புக்காகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார். நமக்காக பொந்தியுபிலாத்தின் காலத்தில் சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார். வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஜீவனுள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்பவும் வருவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவே இராது. கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடதொழுது ஸ்தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பேசினவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன்; இவர் பிதாவினிடத்திலிருந்தும், குமாரனிடத்திலிருந்தும் புறப்படுகிறவர்; ஒரே பரிசுத்த அப்போஸ்தல சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்பிற்காக ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோரின் உயிர்த்தெழுதலையும், வரப்போகும் உலகத்தின் ஜீவனையும் நோக்கியிருக்கிறேன். ஆமென்.