Jesus Guides Ministry

Jesus Guides Ministry Jesus Guides Ministry & All India Pastors Help Centre

27/12/2013

சங்கீதம்
50 அதிகாரம்

1. வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

2. பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.

3. நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.

4. அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.

5. பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.

6. வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.)

7. என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.

8. உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

9. உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.

10. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

11. மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

12. நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

13. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

14. நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

16. தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

17. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

18. நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

19. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் (வஞ்சனையை) பிணைக்கிறது.

20. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

21. இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

22. தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

23. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

27/12/2013

சங்கீதம்
49 அதிகாரம்

1. ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

2. பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.

3. என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

4. என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.

5. என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?

6. தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,

7. ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,

8. எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.

9. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.

10. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

11. தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.

12. ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

13. இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.)

14. ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

15. ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)

16. ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.

17. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.

18. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்,

19. அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.

20. கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

27/12/2013

சங்கீதம்
48 அதிகாரம்

1. கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

2. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

3. அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

4. இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

5. அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.

6. அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

7. கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

8. நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)

9. தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

10. தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

11. உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

12. சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.

13. பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.

14. இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

27/12/2013

சங்கீதம்
47 அதிகாரம்

1. சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

2. உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.

3. ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

4. தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)

5. தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

6. தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

7. தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

8. தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

9. ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

27/12/2013

சங்கீதம்
46 அதிகாரம்

1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

2. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,

3. அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)

4. ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

5. தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்.

6. ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.

7. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

8. பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.

9. அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

10. நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

11. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

27/12/2013

சங்கீதம்
45 அதிகாரம்

1. என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

2. எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

3. சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

4. சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.

5. உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

6. தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

7. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

8. தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.

9. உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு; ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

10. குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

11. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

12. தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.

13. ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.

14. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.

15. அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.

16. உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

17. உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

27/12/2013

சங்கீதம்
44 அதிகாரம்

1. தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

2. தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.

3. அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.

4. தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.

5. உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.

6. என் வில்லை நான் நம்பேன்; என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.

7. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.

8. தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.)

9. நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.

10. சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

11. நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.

12. நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.

13. எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.

14. நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.

15. நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,

16. என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.

17. இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.

18. நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,

19. எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.

20. நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

21. தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.

22. உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.

23. ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

24. ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?

25. எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

26. எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்

27/12/2013

சங்கீதம்
43 அதிகாரம்

1. தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

2. என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?

3. உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.

4. அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.

5. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்

27/12/2013

சங்கீதம்
42 அதிகாரம்

1. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

2. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

3. உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.

4. முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

5. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.

6. என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

7. உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

8. ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.

9. நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

10. உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

11. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

27/12/2013

சங்கீதம்
41 அதிகாரம்

1. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

2. கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.

3. படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

4. கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

5. அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

6. ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.

7. என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,

8. தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

9. என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

10. கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.

11. என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

12. நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

13. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

Address

Karnam Street, Theni
Cumbum
625556

Telephone

9787865570

Alerts

Be the first to know and let us send you an email when Jesus Guides Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jesus Guides Ministry:

Share