07/05/2025
தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாடு
(மிக பழமையான தந்திர உபாசனா நூலாகிய மஹா பைரவம் என்னும் நூலில் சொல்லப்பட்ட அபூர்வ பைரவ பெருமானை வழிபடும் முறைகள், உபாசனை செய்யும் முறைகள் என்பவற்றை தொகுத்து பதிவிடுகிறேன்.)
நட்சத்திரம், திதிகள், கிழமைகள் போன்றவற்றில் பல்வேறு வழிபாடுகள் செய்கிறோம். சாதாரணமாக சுபகாரியங்கள் செய்வதற்கு தவிர்க்கும் திதிகளில், இறைவனுக்குரிய வழிபாடுகளை மேற்கொள்கிறோம். கிருஷ்ணருக்கு அஷ்டமி திதியிலும், ராமருக்கு நவமி திதியிலும் ஜெயந்தி கொண்டாடுகிறோம். அந்த வகையில் இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது.
பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது. நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும்.
கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும்.
அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.
01 சித்திரை ஸ்நாதனாஷ்டமி
02 வைகாசி சதாசிவாஷ்டமி
03 ஆனி பகவதாஷ்டமி
04 ஆடி நீலகண்டாஷ்டமி
05 ஆவணி ஸ்தாணு_அஷ்டமி
06 புரட்டாசி சம்புகாஷ்டமி
07 ஐப்பசி ஈசான சிவாஷ்டமி
08 கார்த்திகை கால பைரவாஷ்டமி
09 மார்கழி சங்கராஷ்டமி
10 தை தேவதாஷ்டமி
11 மாசி மகேஸ்வராஷ்டமி
12 பங்குனி திரியம்பகாஷ்டமி
இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,
ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது. பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான். ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.
"அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது"
சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது
திருஞானசம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். நாம் ஒவ்வொரு வரும் தொழ வேண்டிய அற்புதக் கோயில். ஆதி சங்கரர் தமது "சௌந்தர்ய லஹரி" என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.
திருநாவுக்கரசரை "அப்பர்" என ஞானசம்பந்த பிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, "தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்ட நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே" என்கிறார் அகஸ்தியர்.
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவரே..
தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார். அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.
தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.
மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும். வழக்கில் வெற்றி கிட்டும்.
திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
பைரவ வழிபாட்டின் சிறப்புகள்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது.
வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.
இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.
ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது.
அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்.
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும் வழிபட வேண்டிய இடங்களும்:-
(1) அசுவினி - ஞான பைரவர் போரூர்
(2) பரணி - மகா பைரவர் பெரிச்சியூர்
(3) கார்த்திகை - அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
(4) ரோகிணி - பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
(5) மிருகசீரிஷம் - ஷேத்திரபால் பைரவர் ஷேத்திரபால புரம்
(6) திருவாதிரை - வடுக பைரவர் வடுகூர்
(7) புனர்பூசம் - விஜயபைரவர் பழனி
( பூசம் - ஆவின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
(9) ஆயில்யம் - பாதாள பைரவர் காளஹஸ்தி
(10) மகம் - நர்த்தன பைரவர் வேலூர்
(11) பூரம் - பைரவர் பட்டீஸ்வரம்
(12) உத்திரம் - ஜடாமண்டல பைரவர் சேரன்மாதேவி
(13) அஸ்தம் - யோகாசன பைரவர் திருப்பத்தூர்
(14) சித்திரை - சக்கர பைரவர் தர்மபுரி
(15) சுவாதி - ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
(16) விசாகம் - கோட்டை பைரவர் திருமயம்
(17) அனுஷம் - ஸ்வர்ண பைரவர் சிதம்பரம், ஆடுதுறை,
(18) கேட்டை - கதாயுத பைரவர் சூரக்குடி,
(19) மூலம் - சட்டைநாதர் சீர்காழி
(20) பூராடம் - வீரபைரவர் அவிநாசி, ஒழுகுமங்கலம்
(21) உத்திராடம் - முத்தலைவேல் வடுகர் கரூர்
(22) திருவோணம் - மாரித்தாண்டபைரவர் வயிரவன்பட்டி
(23) அவிட்டம் - பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளூர் (அஷ்டபைரவர்கள் உறையும் பலிபீடம்)
(24) சதயம் - சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
(25) பூரட்டாதி - அஷ்டபுஜ பைரவர் கொக்கரையான்பேட்டை
(26) உத்திரட்டாதி - வெண்கல ஓசை பைரவர் சேஞ்ஞலூர்
(27) ரேவதி - சம்ஹார பைரவர் தாத்தையங்கார்பேட்டை
ஸ்ரீ சொர்ண பைரவர்
--------------------------------------
செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் லட்சுமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். ஒவ்வொரு இல்லத்தின் பூசை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூசை செய்யின் நல்ல பலன் கிடைக்கும். ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது.
மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார். இந்த சொர்ண பைரவரின் படத்தை டாலரையோ சட்டைப்பை மற்றும் கைப்பை பர்சுகளில் வைத்தால் பணத்தட்டுப்பாடு வராது என்று கூறப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை எத்தகைய அலங்காரங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூசை அறையில் அல்லது பூசை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.
பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர்:-
பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார். இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.
பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷைபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிற்று.
பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, "உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக'' என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.
அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, குற்றாலம் அருகிலுள்ளது.
இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.
கால பைரவர்:
பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாலிக்கிறார்.
அசுரர்களை அழிக்க தோன்றியவர் பைரவர். சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவர் பெருமாள்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர். சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரைக் காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பரைவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். அசிதாங்க பைரவர் பிராம்ஹி, குரு பைரவர் மாகேஸ்வரி, சண்டபைரவர் கவுமாரி, குரோதான பைரவர், வைஷ்ணவி, உள் மத்த பைரவர், வாராஹி, கபால பைரவர், இந்திராணி, பீஷண பைரவர், சாமுண்டி, சம்ஹார பைரவர், சண்டிகா தேவி ஆகியோர் ஆவர்.
தாட்சாயிணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச் செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும் அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
மன்னர்களுடைய வழிபாட்டில் பெரிதும் காலபைரவர் இருந்தார். சங்ககாலத்தில் பார்த்தால், மன்னர்களுக்கென்று கால பைரவர் வழிபாடு தனியாக இருந்தது. அவர் எல்லா காலத்தையும் மாற்றக் கூடியவர். எந்தக்காலத்தில், எந்தநேரத்தில் அரசன் சிலவற்றை செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவர். வெளிமாநிலங்களில் மட்டுமல்ல, சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் காலபைரவர் இருக்கிறார்.
கால பைர வரின் சிறப்பு என்னவென்றால், ஒருவருக்கு எந்த கெட்டநேரம் நடந்தாலும் அதனை மாற்றக் கூடியவர். முத்திரைகள், தரிக்கக் கூடிய ஆயுதங்கள் இதெல்லாம் ஒவ்வொரு பைரவருக்கும் வித்யாசப் படும். அதனால் காலபைரவர் கொஞ்சம் உக்கிரமாக இருந்து எல்லாவற்றையும் செய்யக் கூடியவர்.
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்:-
துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்ட வருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
மாதங்கள் - பைரவர்கள்
சித்திரை - சண்ட பைரவர்
வைகாசி - குரு பைரவர்
ஆனி - உன்மத்த பைரவர்
ஆடி - கபால பைரவர்
ஆவணி - ஸ்வர்ணகர்ஷண பைரவர்
புரட்டாசி - வடுக பைரவர்
ஐப்பசி - க்ஷேத்ர பாலபைரவர்
கார்த்திகை - பீஷண பைரவர்
மார்கழி - அசிதாங்க பைரவர்
தை - குரோதன பைரவர்
மாசி - ஸம்ஹார பைரவர்
பைரவர் வரலாறு:
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் கூறப்படுகிறது. எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
பைரவரை ஏன் வழிபட வேண்டும்?
------------------------------------------------------------
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.
இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
பைரவரின் சிறப்பு வடிவங்கள்:-
பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.
உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். ஸ்ரீபைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயானது பைரவருக்கு பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. நகரத்தார் கோவில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.
பைரவர் வாகனம்
1. அசிதாங்க பைரவர் - அன்னம்
2. ருரு பைரவர் - ரிஷபம்
3. சண்ட பைரவர் - மயில்
4. குரோதன பைரவர் - கருடன்
5. உன்மத்த பைரவர் - குதிரை
6. கபால பைரவர் - யானை
7. பீஷண பைரவர் - சிம்மம்
8. சம்ஹார பைரவர் - நாய்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்னப பூமி