25/05/2026
இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.
Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]
25.05.26.
இந்த வார தியானம்.
பொருள்: *கடைசிக்கால சம்பவங்கள்.*
தியானிக்கும் பகுதி: அப்போஸ்தலர் 2:17-21.
காலங்கள் கடைசி ஆயிற்று, நாம் விழிப்பாயிருப்பதும் அவசியமாயிற்று. தேவபக்தியுள்ள யூதர்கள் எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையிலே பலியான பஸ்கா திருநாளின் ஐம்பதாவது நாள் பெந்தெகொஸ்தே நாளாகும். அந்த நாளிலே அப்.1:5ம் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து எருசலேமிலே ஒரு மேல் வீட்டில் 120 பேர் கூடியிருந்தார்கள். அப்பொழுது யோவேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்ட தீர்க்கதரிசனத்தின்படி கூடி இருந்த அவர்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். அவர்கள் கலிலேயர்களாய் இருந்தும், அவர்களைச் சுற்றி இருந்த 16 வகையான மொழி பேசுகிறவர்களின் மொழியிலே தேவனுடைய மகத்துவங்களைப் பேசினார்கள். அதைக் கண்டவர்களில் சிலர் ஆச்சரியப்பட்டார்கள்; சிலர் பரியாசம் செய்தார்கள். (அப்.2:12-13) இந்த சூழ்நிலையில் பரி.பேதுரு அப்போஸ்தலர் யோவேல் தீர்க்கரால் சொல்லப்பட்ட தீர்க்க தரிசன வார்த்தை இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது என்று கூடி வந்த தேவபக்தியுள்ள யூதர்களுக்கு உபதேசித்தார்.
அப்.2:17ம் வசனத்தில் மூன்று அற்புதமான காரியங்களை, மூன்று வேறுபட்ட பருவத்தைச் சார்ந்தவர்களால் செயல்படுத்தப்படும் என்று சொல்லுகிறார். இதன் அடிப்படையில் இக்காலங்களில் பல வாலிபர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று கேள்விப்பட்டு, கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும், ஐயா...! அம்மா...!! என்பிள்ளைக்கு வேலை கிடைக்குமா? திருமணமாகுமா? குழந்தை இருக்குமா? வியாதி தீருமா? என்று கேட்க ஓடுகிறார்கள். இப்படித் தேடிச் செல்லுகிறவர்களுக்கு, அவர்கள் பரவசத்தோடு சாதகமான பதிலைச் சொல்லி அனுப்புகிறார்கள். இவர்கள் சொல்லுவது தீர்க்கதரிசனமல்ல, ஒளியின்தூதனின் வேஷத்தைப் பெற்று ஜோசியம் சொல்லுகிறார்கள்.
குறிசொல்லுகிற ஆவியைப் பெற்றிருந்த ஒரு ஸ்திரீ, பவுலையும் சீலாவையும் நோக்கி, "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்." இவர்களுக்கு 1கொரி.12:10ல் கூறப்பட்டுள்ள ஆவிகளைப் பகுத்தறியும் ஆவியின் வரத்தைக் கர்த்தர் கொடுத்திருந்தார். ஆகையால் அவர்கள் அவளைக் கடித்துக்கொண்டு அந்த ஆவியைத் துரத்தினார்கள். (அப்.16:17-18) நீங்களும் கடைசிக் காலத்தில் இப்பொழுது வாழ்கிறபடியால், பரிசுத்த ஆவியின் வரமாகிய இந்த வரத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் தேடிச்செல்லும் தீர்க்கதரிசிகள் எந்த ஆவியை உடையவர்கள் என்று பகுத்தறிந்து, அவர்களை விட்டு விலக முடியும். அப்பொழுது பரிசுத்த வேதத்தில் அவர் உங்களுக்காக எரே.32:27 போன்ற வசனங்களை வெளிப்படுத்துவார். விழிப்பாயிருங்கள்.
வாலிபர்கள் தரிசனங்களை அடைவார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இப்பொழுது முதல்வராகி இருக்கும் இவரையே நான் தரிசனத்தில் கண்டேன். ஊடகங்களில் பல வாலிபர்கள் அறிக்கையிட்டிருப்பதைக் காண முடிந்தது. இவர் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவராய் இருந்திருந்தால், அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு உங்களைக்கொண்டு தரிசனமாக இதை அறிவித்திருந்திருக்கலாம்! இவர் ஒரு பெயர் கிறிஸ்தவர்தான் என்பது அவருடைய நடவடிக்கைகளில் இருந்தே விளங்குகிறதே. இது பரிசுத்த ஆவியானவர் காண்பிக்கும் தரிசனமல்ல, தனது நினைவில் மண்டிக்கிடக்கும் சுய நினைவின் தரிசனமாகும். பவுல் அப்போஸ்தலர் மக்கெதோனியா ஊழியத்தைப் பற்றி ஒரு தரிசனம் கண்டு, அதன்படி செயல்பட்டு, ஆத்துமாக்களை ஆதாயம் செய்தாரே அதுவே தரிசனம். (அப்.16:9-15) நீ வாழும் இந்தக் காலம் கடைசிக் காலமாய் இருக்கிறபடியால், ஜாக்கிரதைப்படு.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற சபையின் மூப்பர்கள் சொப்பனங்களைக் காண்பார்கள். இன்றையத் திருச்சபைகளிலே ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்குக் காரணம், மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளாதிருப்பதுவே ஆகும். இந்த வசனப் போதனைப்படி மூப்பர்களைச் சபையில் ஏற்படுத்தி நடத்தப்படும் திருச்சபைகளில் ஆவிக்குரிய நிலமையில் நல்ல வளர்ச்சி இருப்பதும், சுவிஷேசம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு, திருச்சபை இல்லாத பகுதிகளில் திருச்சபைகள் நிறுவப்படுவதும் தற்காலங்களிலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அப்போஸ்தலர் 7ம் அதிகாரத்தில் வரும் ஸ்தேவான் போன்றவர்கள் திருச்சபைகளிலே மூப்பர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது திருச்சபையில் சுவிஷேச குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, சுவிஷேச ஊழியம் நடைபெறும். ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்பட்டு, சபை விருத்தியடையும்.
அப்.2:18ம் வசனத்திலே, "என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்." என்று ஆவியானவர் சொல்லியிருப்பதின் அடிப்படையிலேயே இன்று புராதன சபைகள் மற்றும் Evangelical Church of India (E C I ) போன்ற சபைகளில், பெண்களை ஆயர்களாகவும், பேராயர்களாகவும் நியமித்திருக்கிறார்கள். இந்த வசனத்தில் 'ஊழியர்கள்' என்று சொல்லப்பட்டிருப்பதின் பொருள், திருச்சபைகளிலே ஆலயத்தில் பணிசெய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் கோவில்பிள்ளை மற்றும் பல பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்களையே குறிக்கிறது. இவர்களையும் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்களாகவே நியமிக்க வேண்டும் என்று போதிக்கிறார். அவர்களுக்கும் தீர்க்கதரிசன வரம் கொடுக்கப்படும். இவ்வாறாக நம்முடைய திருச்சபைகளின் ஒவ்வொரு கட்டமைப்பும் ஏற்படுத்தப்படுமென்றால், திருச்சபைகள் எத்தனை பரிசுத்தமுள்ளதாயும், ஒழுங்கும் கிரமுமானதாயும் இருக்கும். இதைக் காணும் வேறுமதத்தைச் சார்ந்தோரும் கிறிஸ்தவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டு, சபைகளிலே சேர்க்கப்படுவார்கள், இல்லையா? திருச்சபைகளின் நிர்வாகிகளே! சிந்தியுங்கள்.
அப்.2:19-20 வசனங்களிலே யோவேல் தீர்க்கதரிசியின் வெளிப்பாடும், மாற்கு 13:24ம் வசனத்தில் இயேசு தமது இரண்டாம் வருகையைக் குறித்துச் சொன்ன இறுதிகாலச் சம்பவங்களையும் ஆவியானவர் லூக்காவைக்கொண்டு சொல்லி, இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் இயேசுகிறிஸ்துவை மேசியாவாக விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரைத் தொழுதுகொள்ளுகிறவன் "இரட்சிக்கப்படுவான்" என்று போதிக்கிறார். பிரியமானவர்களே! பவுல் அப்போஸ்தலரைக்கொண்டு ஆவியானவர் சொல்லும் வார்தையைக் கவனியுங்கள், "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்." (2கொரி.6:2) காலந்தாழ்த்தாது இரட்சிக்கப்பட இயேசுகிறிஸ்துவுக்கு உங்களை இன்றே ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.