19/07/2018
*👼இன்றைய தின பரலோக அப்பம்👼*
*🌺அநாதி தேவன்🌺*
*“அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” (உபா. 33:27).*
அநாதி தேவனைப் பாருங்கள்! அவருடைய நித்திய புயங்களைப் பாருங்கள்! அவரைப்போல உங்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் தருகிறவர்கள் ஒருவரும் இல்லை. சிலர், தங்களுக்கு அடைக்கலமாக, மந்திரிகளையும் உலக அதிகாரிகளையும் தெரிந்துகொள்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளை தேடுகிறார்கள். ஆனால், காலங்கள் உருண்டு ஓடும்போது, அப்படிப்பட்ட எந்த அடைக்கலமும் நிலைநிற்பதில்லை. வியாதி நேரங்களில், அநேகர் ஆஸ்பத்திரிகளையும் டாக்டர்களையும் அடைக்கலமாக கொள்கிறார்கள். பிரச்சனை நேரங்களில், வக்கீல்களையே அடைக்கலமாக எண்ணுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ, அநாதி தேவனே அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்களே ஆதாரம்.
மோசே, தனது அடைக்கலமாக, ஒரு கன்மலையைக் கண்டார். அது ஞானக் கன்மலை. நித்திய கன்மலை. அந்த கன்மலையிலே வெடிப்பு இருந்தது. கர்த்தர் அந்த வெடிப்பிலே, அவனை வைத்து, தம்முடைய நித்திய புயங்களினால் மூடினார் (யாத். 33:22). அப்பொழுது மோசே, அந்த அடைக்கலத்தின் மேன்மையை கண்டுபிடித்தது மாத்திரமல்ல, கர்த்தருடைய மகிமையின் ஒரு பகுதியையும் தரிசித்தார். அவர் எழுதுகிறார்: *“உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன், சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்” (சங். 91:1,2).*
தாவீது, தன்னுடைய சுயபெலத்தையோ, வில் வீரர்களையோ, இரதங்களையோ, குதிரைகளையோ அடைக்கலமாக நம்பவில்லை. அவைகளைக் குறித்து, அவர் மேன்மை பாராட்டவும் இல்லை. *“தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்” (சங்.27:5) என்றார். “நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும், என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்” (சங். 71:3).*
*சிந்திக்க:-*
*தேவபிள்ளைகளே, அநாதி தேவன், தம்முடைய மகிமையான செட்டையை உங்கள்மேல் விரித்தவராய், உங்களை மூடி அரவணைத்திருக்கிறதை, உங்கள் விசுவாசக் கண்களினால் காண்பீர்களாக! எத்தனை பாதுகாப்பு! தாவீது மீண்டும் எழுதுகிறார், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்” (சங். 46:1-3).*
*கர்த்தருடைய அடைக்கலம், உங்களுக்கு மாத்திரமல்ல, உங்களுடைய குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கும், நிச்சயமாகவே உண்டு.ஆமென்.*