01/07/2022
சனிக்கிழமை பதிவு...🕉️🕉️🕉️
வடுவூர் ராமர் தரிசனம்.
வடுவூர் கோதண்டராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில், 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்தக் கோயிலின் உற்சவர், ஸ்ரீராமரே உருவாக்கித் தந்தருளிய விக்கிரகம் என்கிறது ஸ்தல புராணம்.
ஶ்ரீ கோதண்டராமர் கோவில், “பஞ்ச ராம க்ஷேத்திரங்களில்” ஒன்று. அபிமான ஸ்தலம். தக்ஷிண அயோத்தி. ஒரு காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் வகுளாரண்ய க்ஷேத்ரம் என்றும் பாஸ்கர ஷேத்திரம் என்றும் பெயர். '
ஐந்து நிலை ராஜகோபுரம். மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் லக்ஷ்மணர், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு! இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். பேரழகு வாய்ந்த ராமர். அழகுக்கே அழகு சேர்க்கும் ராமர். சேவித்துக்கொண்டே இருக்கலாம். என்ன அழகு! என்ன அழகு! பார்த்தவர் மயங்கும் அழகு! மந்தகாசப் புன்னகை!! இது போன்ற தத்ரூபமான புன்னகையை வேறு எங்குமே காண முடியாது. வில்லினைப் பிடித்திருக்கும் அழகு அதி ஆச்சர்யம்!
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகு உடையான்”
என்ற கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீராமனை முழுவதுமாகத் துதிக்கமுடியாமல் தன்னுடைய இயலாமையை ‘ஐயோ’ என்ற பதத்தால் கம்பரே வெளிப்படுத்தி இருக்கும்போது நாம் எம்மாத்திரம்??!! கண்டோம்! கண்டோம்! கண்டோம்! கண்ணுக்கினியன கண்டோம்! என்று மெய்சிலிர்க்க மட்டுமே முடியும்.
வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். சரி இந்த உற்சவமூர்த்திக்கு அப்படி என்ன சிறப்பு? இது ஸ்ரீ ராமரே உருவாக்கிய விக்கிரகத் திருமேனி. அதனால்தான் அப்படியொரு உயிரோட்டம்.
அது வனவாச காலம். ராமரையும் அவரின் குண மாண்புகளையும் கண்டு சிலிர்த்த ரிஷிகள், முனிவர்கள் முதலானோர், அவருடனேயே ஆஸ்ரமத்தில் தங்கினர். அவருடன் இருக்கிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டனர். ‘இதுவே மனித தர்மம். ஒரு மனிதன், இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர் நீங்கள்’ என்று சிலாகித்து வணங்கினர். ஆனால் வந்திருப்பது இறைவன், இவர் எடுத்திருப்பது அவதாரம் என்பதை அவர்கள் அறியவில்லை.
அவர்களுக்கு இறைவனை அடைவதற்கான வழியை, இறைவனே சொல்லித் தந்து அருளினார். அந்த உபதேசம் கேட்டு அனைவரும் நெகிழ்ந்தார்கள்.
அங்கிருந்து அயோத்ராதிக்மகு ராமர் புறப்படும் தருணம்... பதறிப் போனார்கள் ரிஷிகள். ‘’உங்களைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. ஆகவே, எங்களுடனேயே இருங்கள். இந்த வனத்தில், இந்த ஆஸ்ரமத்திலேயே இருங்கள். உங்கள் வழிகாட்டுதலுடன் பகவானை அடைவோம்‘’ என்று சொல்லிக் கண்ணீர்விட்டார்கள். வேண்டினார்கள்.
விடிந்தது. அங்கே அந்தக் காட்சியைக் கண்டு ரிஷிகள் வியந்து போனார்கள். பிரமித்துப் பார்த்தார்கள். பார்த்து பரவசமானார்கள். அங்கே... அழகும் கம்பீரமும் கொண்டு, ராமரைப் போலவே நின்றது சிலை ஒன்று! தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். விரலை நீவிவிட்டார்கள். பாதங்களை வருடினார்கள். கன்னம் கிள்ளி கொஞ்சினார்கள். அப்படியே ராமரை போன்று தத்ரூபமாக இருந்தது சிலை.
‘’உங்களுக்காக என்னுடைய உருவத்தை நானே சிலையாக உருவாக்கியுள்ளேன். இந்தச் சிலை உங்களுக்காக! பிரிவுத் துயர் இனி இல்லை. இந்தச் சிலையிலும் நான் வாசம் செய்கிறேன். இதோ... அயோத்திக்குச் செல்லும் வேளை நெருங்கிவிட்டது. இந்தச் சிலை உங்களுக்குத்தான். இது இந்த அகிலத்து மக்களின் சொத்து. தங்களது பணியைத் தொடருங்கள்’’ என அருளினார். அனைவரும் விழுந்து நமஸ்கரித்தனர். அவர்களுக்கு ஆசிகூறி, அங்கிருந்து புறப்பட்டார் ஸ்ரீராமர்!
அந்த விக்கிரகத்தை, ஶ்ரீ ராமரே உருவாக்கித் தந்த, அவரின் திருவுருவச் சிலையை இன்றைக்கும் வடுவூர் திருத்தலத்தில் தரிசிக்கலாம்.
இங்கே, ஸ்ரீகோதண்டராமரை மனம் உருகி வேண்டிக் கொள்ள காரியம் யாவும் கைகூடும் என்பது உறுதி. ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் இழந்த பதவியையும், கெளரவத்தையும், செல்வத்தையும் மீண்டும் பெறுவீர்கள். திருமண பாக்கியம் கைகூடும் . நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நம்மிடம் உள்ள சின்னச் சின்ன துர்குணங்களையெல்லாம் மாற்றி, நற்குணங்களையே மனதுக்குள் விதைத்து, அன்பொழுக வாழச் செய்வார் ராமச்சந்திர மூர்த்தி என்பது சத்தியம்!
ராமரின் அழகில் சொக்கிப்போனேன் நான். நீங்கள் சென்று பார்த்தால் ஶ்ரீராமர் அழகை உணர முடியும்.🙏🙏🙏🙏ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே.🙏🙏🙏🙏 🕉️🕉️🕉️