அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு

  • Home
  • India
  • Chennai
  • அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு

அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு (IPAC) International AyyaPathi's Confederation (IPAC)

அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு (IPAC) - மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் மற்றும் தர்மத்தை உலகறிய செய்வதற்கான பொதுவான நோக்கத்துடன் - பதிகளுடன் இணைந்து செயலாற்றுதல்.

🚩அய்யா துணை🚩*'ஸ்ரீமன் வைகுண்டசுவாமி' OR ‘அய்யா’ என்றால் யார்?*(Who is Lord Vaikundar?)புனித அகிலத்திரட்டு வேதாகமத்தின் ப...
31/05/2026

🚩அய்யா துணை🚩

*'ஸ்ரீமன் வைகுண்டசுவாமி' OR ‘அய்யா’ என்றால் யார்?*
(Who is Lord Vaikundar?)

புனித அகிலத்திரட்டு வேதாகமத்தின் படி, ஸ்ரீ மகாவிஷ்ணு தன்னுடைய பத்தாவது அவதாரமாக கலியுகத்தில் எடுத்த அவதாரமே "வைகுண்டர்" அவதாரம் ஆகும். கொல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20ம் தேதி (ஆங்கில வருடம் 1833 மார்ச் மாதம் 1-ம் தேதி) ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி பண்டார உருவில் வந்தார்.

தந்தை: மஹாவிஷ்ணு
தாய்: மகாலெட்சுமி
(ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கும், மகாலெட்சுமிக்கும் மகனாக அவதரித்தது போல் காட்டிக் கொண்டு, ஸ்ரீ மஹாவிஷ்ணு தாமே வைகுண்டமாய்த் தோன்றினார். முருக அவதாரம், நரசிம்ம அவதாரம் போன்றே இந்த அவதாரத்திலும் இறைவனுக்கு பூலோக தாய் தந்தையர்கள் இல்லை)

அவதரித்த இடம்: திருச்செந்தூர் கடல்
(ஸ்ரீமன் வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் இருந்து அவதரித்து வந்த கடற்கரையில் 'அவதாரப்பதி' உள்ளது. இது 'நாராயணசுவாமி வழி' என்றழைக்கப்படும் ‘அய்யா வழி’ புனிதத் தலங்களுள் ஒன்றாகும்.)

அவதரித்த நாள்: கொல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20-ம் தேதி (ஆங்கில வருடம் 1833 மார்ச் மாதம் 1-ம் தேதி)

அவதரிக்க காரணம்: ஒடுக்கப்பட்ட மக்களை காக்கவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும், கலியுகத்தை முடித்து தர்மயுகத்தை தோற்றுவிக்க கலியுகத்தில் கடவுள் மகாவிஷ்ணு வைகுண்டராக மனிதவதாரம் எடுத்தார்.

பிற பெயர்கள்: ‘அய்யா’, ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி’, ‘ஸ்ரீமன் வைகுண்டசுவாமி’, ‘ஸ்ரீ பண்டாரம்’, ‘சிவ நாராயணர்’, ஆண்டவர், கர்த்தன், ‘மாயோன்’, ‘திருமால்’, ஸ்ரீ பத்மநாபர், ஸ்ரீ பெருமாள்.

மனைவியர்கள்/ திருக்கல்யாணங்கள்/ தெய்வத் திருமணங்கள்:
ஏழு சப்தகன்னியர்கள், மற்றும் பூமடந்தை எனும் தெய்வமடவார்களை அவனி மக்களறிய திருமணம் செய்தார். இவர்கள் அனைவருமே பெண் தெய்வங்கள் ஆவர்.

ஏழு சப்தகன்னியர்கள்: சாஸ்திரத்தாள், கமலக்கன்னி, மோகக்கன்னி, மூலக்கன்னி, கடுங்சக்தி, தெய்வக்கன்னி, அரிமடவை
(முந்தைய பெயர்கள்: மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதக் கன்னி, சரிதை, அரிமடவை)

இகனை திருக்கல்யாணங்கள்:
(தாமே ஏக பரம்பொருள், தன்னையே உலகில் பலவித பெயர்களில் தெய்வமாக வணங்குகின்றனர் என்பதை உணர்த்த வேண்டி இறைவன் செய்த திருக்கல்யாணங்கள்)

இகனைத் திருக்கல்யாண வைபவம் புரிந்த தெய்வமாதர்கள்: பெருமாள் சொரூபம் கரியமால் தானெடுத்து மகாலெட்சுமியையும், ஈசுரர் சொரூபம் கரியமால் தானெடுத்து பகவதி, பார்வதியையும், பிரம்மதேவர் சொரூபம் கரியமால் தானெடுத்து அம்மை மண்டைக்காட்டாளையும், கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து வள்ளி, தெய்வானையையும் இகனை திருக்கல்யாணம் புரிந்தார்.

மிக முக்கியமாக கருதப்பட்ட சீடர்கள்: திரு. சிவனான்டி, திரு. முகுந்தன்பண்டாரம், திரு. அழகேசன், திரு. சுப்பையா, திரு. அரிகோபாலன்
(முந்தைய பெயர்கள்: பஞ்ச பாண்டவர்கள் எனும் தர்மன், வீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன்)

ஏவல் சீவாய்மார்கள் (ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கட்டளையை ஏற்று நடப்பவர்கள்):
கருடராசன், சிமிளராசன், தேர்தகன், துட்டிவீரன், தேர்க்குடையோன்
(முந்தைய பெயர்கள்: சுடலைமாடன், கட்டையேறி, பலவேசம், மாசானம், காத்தவராயன்)

அவதார நிறைவு நாள்: கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தேதி (2nd June C.1851) திங்கள் கிழமை, பூருவ பட்சம், பூச நட்ஷத்திரத்தில் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் எடுத்த கலியுக அவதாரத்தை நிறைவு செய்துக் கொண்டு மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றார்.

ஸ்ரீமன் வைகுண்டர் தந்த புனித நூல்கள்:
புனித அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல்

ஸ்ரீ மகாவிஷ்ணு மகாலெட்சுமிக்கு உரைத்த அகிலத்திரட்டு எனும் புனித வேதநூலை நாராயணரருளால் இயற்றியவர்:
திரு. இரா. அரிகோபாலன் சீடர்

புனித அகிலத்திரட்டு எழுதப்பட்ட நாள்: கொல்லம் வருடம் 1016 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் 27-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை (11th December 1840 CE). இப்புனித வேதம் எழுதப்பட்ட இடமே ‘தாமரைக்குளம்பதி’ என்றழைக்கப்படுகிறது.

ஸ்ரீ வைகுண்டர் அவதார வரலாற்றின் காலக்கோடு அட்டவணை:

1008 மாசி 20 (C.1833 March 1) – திருச்செந்தூர் கடலில் இருந்து ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி பண்டார உருவில் வந்தார். ஸ்ரீ வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் இருந்து அவதரித்து வந்த கடற்கரையில் 'அவதாரப்பதி' உள்ளது. ‘ஸ்ரீ பண்டாரமாக’ மானிடர்களுக்கு காட்சி அளித்த மகாவிஷ்ணு காவி உடை உடுத்தி, உச்சிக்கொண்டை கோர்த்து, கையதிலே மாத்திரைக்கோலும், கமுக்கூட்டிலே பிரம்பும் ஏந்தி இருந்தார்.

1008 மாசி (C.1833 March) – ஸ்ரீமன் வைகுண்டர் சுவாமித்தோப்பில் உள்ள ‘மணவைப்பதி’ வந்தடைந்தார்.

1009 மார்கழி (C.1834 January) – ஸ்ரீமன் வைகுண்டரின் தவம் முதல் கட்டம் தொடங்குகிறது. வைகுண்டர் தவமிருந்த புனித இடமே சுவாமித்தோப்பில் உள்ள தாமரையூர் நற்பதி என்றழைக்கப்படும் ‘மணவைபதி’ வடக்குவாசல் ஆகும். இப்புனித இடத்தில் ‘ஆறு வருடங்கள்’ தவம் இருந்ததாக புனித அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.

1012 கார்த்திகை/மார்கழி (C.1836 November/December) – தவத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.

1013 மார்கழி/தை (C.1837 December/January) – தவத்தின் மூன்றாம் கட்டம் தொடங்குகிறது.

1015 கார்த்திகை (C.1839 November) – திருவிதாங்கூர் மன்னர் சுவாதி திருநாள் ராம வர்மா அரசுமுறைப் பயணமாக சுசீந்திரத்திற்கு வந்தார்.

1015 மாசி 19 (C.1840 February 29) – மன்னர் சுவாதி திருநாள் ராம வர்மாவின் எதிர்வினை சந்திப்புக்குப் பிறகு (அதாவது மூன்றே முக்கால் மாதம் [Approx. 112 days] திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு சிறை தண்டனை மற்றும் பல சோதனைகளுக்கு பிறகு 'இவர் மனிதரே அல்ல, கடவுளின் அவதாரம்' என எண்ணி மன்னர் விடுதலை செய்த பின்பு), ஆண்டவர் வைகுண்டரின் பக்தர்கள் ஆண்டவரை திருவனந்தபுரத்திலிருந்து சுவாமித்தோப்பிற்கு தொட்டில் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடங்கினர். குறிப்பு: திருவனந்தப்புரத்தில் சிங்காரதோப்பு சிறை இருந்த இடத்தில் தற்போது 'சிங்காரதோப்புபதி' அமைந்துள்ளது.

1015 மாசி 20 (C.1840 March 1) – சுவாமித்தோப்பில் உள்ள தாமரையூர் நற்பதி வந்தடைந்தனர்.

1015 மாசி (C.1840 March) – துவையல் பண்டாரங்கள் ஆண்டவரின் அறிவுறுத்தலின் படி ‘வாகைப்பதி’-யில் “துவையல் தவசு” தனை தொடங்குகிறார்கள்.

1016 ஆவணி/புரட்டாசி (C.1840 August/September) – உலகளந்த ஆண்டவரின் கட்டளைப்படி, அவர்கள் வாகைப்பதியை விட்டு வெளியேறி ‘முட்டப்பதி’- யை அடைந்து தவசின் மீதமுள்ள கட்டத்தை நிறைவு செய்தனர்.

1016 கார்த்திகை/மார்கழி (C.1840 November/December) – ஸ்ரீ வைகுண்டரின் ‘ஆறு ஆண்டு தவம்’ முடிவுக்கு வந்தது.

1016 கார்த்திகை 27 (C.1840 December 11) – அரிகோபாலன் சீடரின் கனவில் உலகளந்த ஆண்டவர் வந்து, அதில் அவருக்கு காப்புவின் முதல் எழுத்துக்களைக் கொடுத்து இறைவேதம் ‘அகிலத்திரட்டு அம்மானை’ எழுதும்படி கட்டளையிட்டார்.

1016 மார்கழி (C.1840 December) – தவம் முடிந்த உடனேயே ஆண்டவர் வைகுண்டரால் முத்திரிக் கிணறு மக்களுக்காக அருளப்பட்டது (as per oral traditions). அந்த கிணறே சமத்துவத்தை எடுத்துரைக்கும் 'முத்திரி கிணறு' என்றழைக்கப்படுகிறது.

1016 தை (C.1841 January/February) – சுவாமித்தோப்பு ‘மணவைபதி’-யில் முதல் 'தை' திருநாள் தொடங்குகிறது.

1016 மாசி 20 (C.1841 March 1) – “வைகுண்ட ஜெயந்தி” (வைகுண்ட அவதாரம்) முதல் முறையாக கொண்டாடப்பட்டது.

1019 ஆவணி/புரட்டாசி (C.1843 August/September) – கடவுள் வைகுண்டர் சப்தகன்னியர்கள் மற்றும் லெக்ஷ்மி தேவியை மணந்தார். (சப்தகன்னியர்கள் - சாஸ்திரத்தாள், கமலக்கன்னி, மோகக்கன்னி, மூலக்கன்னி, கடுங்சக்தி, தெய்வக்கன்னி மற்றும் அரிமடவை). சப்த மாதர்களை வைகுண்டர் திருமணம் செய்த இடம் ‘தாமரைப்பதி’ என்றழைக்கப்படும் 'சுவாமிதோப்பு பதி' ஆகும்.

1020 மாசி/ பங்குனி (C.1845 February/March) – கடவுள் வைகுண்டர் மனைவியர்கள் மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து அம்பலப்பதி-யை அடைந்தார். இப்பதியை 'மூலகுண்டப்பதி' என புனித அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.

1023 பங்குனி/ சித்திரை (C.1848 March/April) – பாலூரைச் சேர்ந்த பெருமாள் நாடார் தலைமையில் புகழ்பெற்ற தத்துவக்கோட்டை திட்டத்திற்கான பணிகள் தொடங்குகின்றன.

1024 மாசி 20 (C.1849 March 2) – தொண்டர்கள் 16-வது வைகுண்ட ஜெயந்தியை அம்பலப்பதியில் வைகுண்டர் முன்னிலையில் கொண்டாடினர். கடவுள் வைகுண்டர் மக்களுக்காக அம்பலப்பதியில் 'சேவைத் திருநாள்' (செவ்வாய் திருவிழா) ஏற்பாடு செய்தார்.

1024 ஆவணி/புரட்டாசி (C.1849 August/September) – ஆண்டவர் வைகுண்டர் தெய்வக்கன்னியர்களை மணந்தார். அதாவது, குமரி பகவதியை அம்பலபதிக்கு அழைத்து வர இறைவன் ஒரு வயதான மனிதனின் வடிவத்தை எடுத்து, அழைத்து வந்து அறிவொளி பெற்ற மற்றும் சக்திவாய்ந்த பகவதி (பார்வதி தேவியின் ஒரு அம்சம்) சிவன் வடிவத்தில் இகனை திருக்கல்யாணம் செய்து கொண்டார், மேலும் மண்டைக்காட்டாள் தேவியை (சரஸ்வதி தேவியின் ஒரு அம்சம்) பிரம்மாவின் வடிவத்திலும், இறுதியாக வள்ளி மற்றும் தெய்வானை தேவியர்களை முருகனின் வடிவத்திலும் இகனை திருக்கல்யாணம் செய்து கொண்டார்.

1025 தை/மாசி (C.1850 January/February) – ஆண்டவர் வைகுண்டர் முன்னிலையில் தாங்கல்களுக்கு (சுண்டவிளை, வடலிவிளை போன்றவை) அடிக்கல் நாட்டப்பட்டது. ஸ்ரீ வைகுண்டர் அம்மைமார்களுடன் சேர்ந்து விருந்தேற்ற இடம் 'விருந்தேற்றப்பதி' என்றழைக்கப்படும் 'தாமரைக்குளம்பதி' ஆகும்.

1025 மாசி 20 (C.1850 March 2) – ஆண்டவர் வைகுண்டர் முன்னிலையில் கடம்பங்குளத்தின் தாங்கலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வைகுண்டரின் பதினேழாவது அவதார தினவிழா “வைகுண்ட ஜெயந்தி” மக்களால் கொண்டாடப்பட்டது.

1026 ஆவணி/புரட்டாசி (C.1850 August/September) – ஆண்டவர் வைகுண்டர் பூமாதேவியின் கலியுக பிறவியான பூமடந்தை-யை சூரங்குடி எனும் ஊருக்கு மக்களுடன் சென்று உலகறிய திருமணம் செய்தார். ஸ்ரீ வைகுண்டர் பூமடந்தை அம்மையை திருமணம் புரிந்து திரும்பி வரும் வழியில் தேவர்கள் பூ தூவி வணங்கிய இடம் இன்று 'பூப்பதி' என்று அழைக்கப்படுகிறது.

1026 வைகாசி 21 (C.1851 June 2) – ஆண்டவர் வைகுண்டர் பல விதமான லீலைகளை பூலோகத்தில் செய்த பின்னர் தன்னுடைய கலியுக அவதாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றார். வைகுண்டர் வைகுண்டத்திற்கு திரும்பிய பின்பு மனைவியர்கள் வாழ்ந்த இடம் ‘தொட்டில்பதி’ என்றழைக்கப்படுகிறது.

ஸ்ரீ மகாவிஷ்ணு தன்னுடைய வைகுண்ட அவதாரத்தை இந்த பூலோகத்தில் 18 ஆண்டுகள் நிகழ்த்தியதாக அவர் அருளித் தந்த புனித அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.

1046 வைகாசி/ஆனி (C.1871 June/July) – ஆண்டவர் வைகுண்டர் வாழ்ந்திருந்த இடமான சுவாமித்தோப்பு மணவைபதி-யானது கொடிமரத்துடன் கூடிய பதியாக பக்தர்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.

1047 ஆவணி/புரட்டாசி (C.1871 August/September) – சுவாமித்தோப்பு மணவைபதியில் முதல் “கொடியேற்று திருநாள்” கொண்டாடப்பட்டது.

1068 மார்கழி (C.1892 December) – சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்டவதார செய்தியை அறிந்து சுவாமித்தோப்பு வந்தடைந்த சுவாமி விவேகானந்தர் அன்றிலிருந்து 'நாராயணசுவாமி வழி' என்றழைக்கப்படும் ‘அய்யா வழி’ மரபுகளின் படி தலையில் தலைப்பாகை அணியத் தொடங்கியதாக கூறுகின்றனர்.

1114 (C.1939) – புனித அகிலத்திரட்டு வேதமானது முதன்முறையாக அச்சிடப்பட்ட வடிவத்தில் வெளியிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஸ்ரீமன் வைகுண்டரின் கோலங்கள் குறித்து புனித அகிலத்திரட்டில் வேதவியாசர் கூறியது:

ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து
தேட அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து
பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர்
மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும்

சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய்
மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும்
நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக்
கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும்

பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த்
தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க்
காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய்
ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில் - புனித அகிலத்திரட்டு

சான்றோர்களே! ஆம், ஸ்ரீமன் நாராயணரின் ராமவதாரத்தை அறிய ராமாயணமும், கிருஷ்ணவதாரத்தை அறிய மகாபாரதமும் உதவுவது போல வைகுண்டவதாரத்தை அறிய புனித அகிலத்திரட்டு அம்மானை உதவுகிறது.

🙏அய்யா உண்டு🙏

🚩அய்யா துணை🚩அன்பான அய்யாவின் பிள்ளைகளே!உலகளந்த ஆண்டவர் வைகுண்டர் பள்ளிகொண்டிருக்கும் *சுவாமிதோப்பு மணவைப் பதியில் வைகாசி...
29/05/2026

🚩அய்யா துணை🚩

அன்பான அய்யாவின் பிள்ளைகளே!
உலகளந்த ஆண்டவர் வைகுண்டர் பள்ளிகொண்டிருக்கும் *சுவாமிதோப்பு மணவைப் பதியில் வைகாசி திருவிழா* திருக்கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
புனித அகிலத்திரட்டு அம்மானை வேதாகமத்தின் படி கடவுள் ஸ்ரீமன் நாராயணர் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் தீர்த்து, கலியுகத்தை முடித்து தர்மயுகத்தைத் தோற்றுவிக்க தனது கலியுக அவதாரத்தை கொல்லம் வருடம் 1008 மாசி மாதம் 20-ஆம் தேதி (C.1833) திருச்செந்தூர் திருப்பாற் கடலுக்குள் மகரமாய் வளர்ந்து நின்ற அன்னை மஹாலக்ஷ்மியுடன் இணைந்து தாமே குழந்தையாக ஸ்ரீமன் வைகுண்டராக அவதரித்து பண்டார உருவில் தெட்சணத்தில் வந்தமர்ந்து சப்தமாதர்களை திருமணம் புரிந்து திருவிளையாடல் புரிந்த புண்ணிய திருத்தலம் சுவாமிதோப்பு மணவைபதி ஆகும். இத்திருப்பதியை *மணவை பதி* என்றும், *சுவாமிதோப்பு பதி* என்றும் புனித அகிலத்திரட்டு அம்மானை கூறுகின்றது. இப்புனித திருப்பதிக்கு வந்தால் செல்வம் பெருகி, கர்ம வினை கழிந்து, பேரின்ப வாழ்வு பெறுவது உறுதி.

அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..

"ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!"

Lord Narayana Himself Incarnated as Lord Vaikundar

திருவிழா நிகழ்ச்சியாக
22.05.2026 - வெள்ளிக்கிழமை - திருக்கொடியேற்றம் மற்றும் ஒன்றாம் திருவிழா

29.05.2026 - வெள்ளிக்கிழமை - அய்யா குதிரை வாகனபவனி & கலிவேட்டையாடல் மற்றும் எட்டாம் திருவிழா

31.05.2026 - ஞாயிற்றுக்கிழமை - அய்யா இந்திரவாகனபவனி மற்றும் பத்தாம் திருவிழா

01.06.2026 - திங்கட்கிழமை - அய்யா திருத்தேர் பவனி வருதல்
நடைபெறுகிறது.

கொடியிறக்கத்துடன் வைகாசி
திருவிழா நிறைவுபெறுகிறது.

இத்திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உலகை படைத்துக் காக்கும் கடவுள் வைகுண்டரின் திருவருளை பெற அனைத்து பக்த பெருமக்களையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்!

🙏அய்யா உண்டு🙏

அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..*மகாவிஷ்ணு வருகிறார்..!*
26/05/2026

அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..

*மகாவிஷ்ணு வருகிறார்..!*

🚩அய்யா துணை🚩*ஸ்ரீமன் வைகுண்டர் அவதார வரலாறு*ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும், சமூகப்பாகுபாடுகளை ஒழித்து சமத்துவ சமுதாயத...
24/05/2026

🚩அய்யா துணை🚩

*ஸ்ரீமன் வைகுண்டர் அவதார வரலாறு*

ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும், சமூகப்பாகுபாடுகளை ஒழித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், கலியுகத்தோடு கலியையும் சேர்ந்து அழித்த பின்னர் தர்ம யுகத்தை தோற்றுவிக்கவும், வியாச முனிவர் எழுதி இருந்த ஆதி வேதாகமத்தின் (வேதங்களின்) படியே, கொல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20 -ம் தேதியன்று இந்தப் பூமியில் திருச்செந்தூர் கடலில் ஸ்ரீமன் மகாவிஷ்ணு, தாமே ஸ்ரீமன் வைகுண்டர் எனும் பெயரில் அன்னை மஹாலஷ்மியின் மகனாக, மானிட உருவில் பிறப்பு எடுத்து வந்தார் என அகிலத்திரட்டு வேதநூல் கூறுகிறது. புனித அகிலத்திரட்டு வேதநூலில் இந்த உலகம் தோன்றியது முதல், பல்வேறு யுகங்களிலும் தான் எப்படி நரசிம்மராக, கந்தனாக, வாமனாக, ராமராக, கிருஷ்ணராக அவதாரங்கள் எடுத்து வந்து, உலகில் கொடுமைகளை புரிந்து வந்திருந்த குரோணி, சிங்கமுகசூரன், இரணியன், ராவணன், துரியோதனன் போன்ற தீய அசுரர்களை அழித்தேன் என்பதையும், கலியுகத்தில் கலியனை அழிக்க தான் எப்படி பத்தாவது அவதாரத்தில் ஸ்ரீமன் வைகுண்டர் எனும் மானிடப் பிறவி எடுத்து வந்து திருவிளையாடல்கள் செய்து கலியனை அழித்தேன் என்பதையும் அன்னை மகாலெட்சுமிக்கு ஒரு கதையைப் போல விளக்கி கூறி உள்ளார் என்பதாக கூறப்பட்டு உள்ளது. அதே அகிலத்திரட்டு வேதநூலில் ஸ்ரீமன் வைகுண்டர் தனது அவதார சிறப்பை குறித்து சுருக்கமாக கன்னியாகுமரியில் உள்ள பகவதி தேவிக்கு கூறியது கீழே காணப்படும் பாடல் நடையில் உள்ளது.

“ஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம் வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்து
வைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்து கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம்
தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம் மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம்
தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம் புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம்
குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும் கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம்
சந்ததிக ளில்லாத தரணிமனுப் பெண்களுக்கு மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம்
மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித் தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம்
தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும் வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம்
நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள் மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம்
டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம் இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம்
காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும் பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம்
இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால் எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம்
அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த்
தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமென அச்சமறப் பேச்சொன்று ஆதியிலே கேட்டதுண்டு” – அகிலத்திரட்டு அம்மானை

*தமிழ் மொழியில், கவிதை நயத்தில் காணப்படும் மேற்கூறிய பாடல்களின் சாராம்சம் இது:* ‘’1008-ஆம் ஆண்டு மாசி மாதத்தில் திருச்செந்தூர் கடலில் அவதரித்த ஸ்ரீமன் வைகுண்டர், இவ்வுலகில் வந்திருந்து பல அற்புதங்கள் செய்தார். புனித மண்ணும் (திருநாமம்) தண்ணீரும் மட்டும் கொடுத்து பல்வேறு வகைகளிலான நோய்களையும் குணப்படுத்தினார்; கர்ம வினைகளின் பலனாக மக்கள் அனுபவித்து வந்திருந்த பல்வேறு துன்பங்களை விலக்கினார்; அவரது மகிமையினால் பார்வை அற்றவர்கள் கண் பார்வை பெற்றார்கள்; செவிடர்கள் செவித் திறன் பெற்றார்கள்; குழந்தை இல்லாத தம்பதிகள் மழலை செல்வம் பெற்றார்கள். தன்னை சரணடைந்த பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் நீக்கினார். மக்களை துன்புறுத்தி வந்திருந்த பேய், பிசாசுகளை அழித்தார். தேவலோகத்தில் வாழ்ந்திருந்து பூமியில் பிறப்பு எடுத்து இருந்த சப்த கன்னியர்களான மரகதம் (எ) சாஸ்திரத்தாள், வல்லி, வள்ளி, சலிகை, சரகத கன்னி, சரிதை மற்றும் அரிமடவு எனும் ஏழு தெய்வீக பெண்களை மணந்தார். அவர் தங்கி இருந்த இடங்கள், இசை ஒலிகள் முழங்கிட, வாண வேடிக்கை காட்சிகளுடன் திருவிழாக் கோலம் நிறைந்து இருந்தது; கலியுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே தான் பூமியில் அவதாரம் எடுத்ததாகக் கூறினார். இவற்றை எல்லாம் கண்ட மக்கள் ஆதி ஆகமங்களில் கூறி உள்ளபடியே கலியுகம் அழியும் தருணத்தில் மகாவிஷ்ணுவே வைகுண்டராக தெட்ஷணத்தில் அவதரித்துள்ளார் என்பதை உணர்ந்து அவர் பாதம் பணிந்தார்கள்”.

இப்படியாக இக்கலியுகத்தில் பல திருவிளையாடல்களை நடத்திக் காட்டிய வைகுண்டர் கொல்லம் ஆண்டு 1026, வைகாசி மாதம், 21ஆம் தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு (C.1851) தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றார். இனி ஆதி வேதாகம நூல்களில் முன்னர் கூறி உள்ளதை போல கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவித்து, நன்னடத்தை கொண்ட மக்களை வைத்து அரசாள்வார். ஸ்ரீமன் வைகுண்டரை அய்யா, ஆண்டவர், வைகுண்டசுவாமி, வைகுண்டராசர், ஸ்ரீ பண்டாரம், கடவுள், கர்த்தன், இறைவன், மாயோன், நாராயணர், விஷ்ணு, திருமால், பெருமாள், பத்மநாபர் என பல நாமங்களில் அகிலத்திரட்டு வேதநூல் குறிப்பிடுகின்றது.

🙏அய்யா உண்டு🙏

 #அய்யா துணைகடவுள் வைகுண்டர் கூறுகிறார்..*"அன்பு குடிகொண்ட அதிக மக்கா நீங்கள் எல்லாம் பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன...
19/05/2026

#அய்யா துணை

கடவுள் வைகுண்டர் கூறுகிறார்..

*"அன்பு குடிகொண்ட அதிக மக்கா நீங்கள் எல்லாம் பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்!"*

Maintain patience, my dear children. I shall make you the ruler of the world!

#அய்யா உண்டு

 #அய்யா துணை*சமத்துவமே சனாதன தர்மம்! சனாதன தர்மம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் என்றும், இது வேதங்களை அடிப்படையாக கொண்...
17/05/2026

#அய்யா துணை

*சமத்துவமே சனாதன தர்மம்! சனாதன தர்மம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் என்றும், இது வேதங்களை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் வேதசமயம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகை படைத்து காப்பது கடவுள் என்றும், பரம்பொருள் ஒருவனே பல ரூபங்களில் காட்சி அளிக்கிறான் என்றும், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமே வைகுண்டர் என்றும், பெரியோர்களை மதிப்பதும், கடவுளை நம்புவதும், சமத்துவத்தையும், அன்பையும், தர்மத்தையும் கடைபிடித்து இயற்கையை பாதுகாப்பதுமே சனாதன தர்மம்!*

இது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு நாகரீக வாழ்க்கை முறை. இதை இந்து தர்மம் என்றும் அழைப்பர். சமூகநீதியும், சமத்துவமே சனாதன தர்மத்தின் அடித்தளம் ஆகும்.

- *ரிக் வேதம்* கூறுகிறது, "ஏகப்பரம்பொருள்" ஒன்றுதான், ஆனால் ஞானிகள் பல பெயர்களில் அழைக்கிறார்கள் என்று.

இதை தான் நாம் கோவிலில் *சங்கரநாராயணர்* என வழிபடுகிறோம். இதையே "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயில மண்ணு" என்பர்.

- *பகவத் கீதை* கூறுகிறது, நான் அனைத்து உயிர்களிடத்தும் சமமாகத்தான் இருக்கிறேன் என்று.

இதை அனைவரும் சமம், ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம் என்பர்.
இதையே தான் நாம் கோவிலில் "சிவசக்தி"யாக வழிபடுகிறோம். "இதையே சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை" என்பர்.

- *ரிக் வேதம்* கூறுகிறது, நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்று

இதை பிறப்பால் அனைவரும் சமம், சாதீய ஏற்றதாழ்வுகளும், தீண்டாமை என்கிற மடமையும் இறைவனுக்கும், தர்மத்திற்க்கும் எதிரானது என்பர். "இதையே காக்கை குருவி எங்கள் சாதி" என்பர்.

- *பகவத் கீதை* கூறுகிறது, கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்று.

இதையே "அவனின்றி அணுவும் அசையாது" என்பர்.

- *யஜீர் வேதம்* கூறுகிறது, "உண்மையை அழிக்க முடியாது, உண்மையே வெல்லும்" என்று.

இதையே "வாய்மையே வெல்லும்: என்பர்.

- *அகிலத்திரட்டு வேதம்* கூறுகிறது, "தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்" என்று

இதையே "மக்களுக்கு செய்யும் தொண்டே மகேசன் தொண்டு" என்றும் "அன்பே சிவம்" என்றும், "தர்மம் தலைகாக்கும்" என்றும் கூறுவர்.

- *ரிக் வேதம்* கூறுகிறது, "உலகமே ஒரு குடும்பம்" என்று.

இதையே "யாதும் ஊரே' யாவரும் கேளீர்" என்றும், "வசுதெய்வ குடும்பகம்" என்றும், "whole earth is a family" என்பர்.

சனாதன தர்ம புனித நூல்களை தொகுத்தவர் *வேத வியாசர்*. இவர் பரதவர் என்கிற மீனவ சமூகத்தை சேர்ந்த ரிஷி. *அகிலத்திரட்டு வேதம்* கூறுகிறது வேதவியாசர் பிறந்த இடம் தென் பாரதம் என்று.

ஏன் சனாதன தர்மத்தை உலகிற்க்கு பரப்பிய ரிஷிகள் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வசாரியா ஆகியோர் தென் பாரதத்தை சார்ந்தவர்கள் தான்.

உண்மையை உணராமல், தனது பண்பாடும் தெரியாமல், அந்நிய அடிமையாகி தான் பாவி என்று திரியும் மடமையை உடைத்தெறிவோம்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு! வெல்க பாரதம்!

https://www.youtube.com/watch?v=S1-17TeZvV0

அய்யா உண்டு

42K likes, 2.3K comments. "What exactly are the Vedas?"

🚩அய்யா துணை🚩*ஸ்ரீ  மகாவிஷ்ணுவின் வைகுண்டர் அவதார வரலாறு** #அகிலத்திரட்டு - மகாலெட்சுமி மகாவிஷ்ணுவிடம் யுகத்துக்யுகம் அவத...
16/05/2026

🚩அய்யா துணை🚩

*ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வைகுண்டர் அவதார வரலாறு*

* #அகிலத்திரட்டு - மகாலெட்சுமி மகாவிஷ்ணுவிடம் யுகத்துக்யுகம் அவதரிப்பதற்கான காரணத்தை வினவுதல்*

தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க
மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கயவர்
சிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே
மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள்
ஈரே ழுலகு மிரட்சித்த வுத்தமியாள்
பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
நன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத்
தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை
தேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக்
கோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப்
போவ தென்ன புதுமை யெனக்கறிய
தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள்
பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது
என்று மிருக்க இறவா திருப்போனே
ஆதியால் சூட்ச மளவெடுக்கக் கூடாத
நாதியாய் நின்ற நாராயணப் பொருளே
தேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே
உமக்கு யெதிரி யுலகமதி லுண்டோகாண்
தமக்கு யெதிரிவந்த தன்மை மிகவுரையும்
உகத்துக் குகம்பிறந்து உலகிடத்தி லேயிருக்க
அகத்துவந்த ஞாயம் அருளுமென்றா ளம்மானை
என்று திருவும் யிதுவுரைக்க மாயவரும்
நன்று நன்றென்று நாரா யணருரைப்பார்
சக்தி சிவமும் தானுதித்த காலமதில்
எத்திசையும் நாமள் யிருபேர் பிறப்பதிலும்
ருத்திரர் மயேசுர ருதித்த நாளதிலும்
பத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
வானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும்
ஈனமாய்ச் சண்ட னிவன்பிறந்த நாளதிலும்
ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
ஈதுதித்த காலம் யிராச்சியமொன் றுண்டுகண்டாய்
அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாம மென்னவிடு வோமென்று
மாலும் பிரமாவும் மாயா திருப்போனும்
ஆலோசித் தவர்கள் ஆகமத்தைத் தான்பார்த்து
நீடிய யுகமெனவே நியமித் துறுதிகொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினர்கா ணம்மானை
அவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக் காரை இருத்துவோ மென்றுசொல்லி
எல்லோருங் கூடி யிதமித்தா ரம்மானை
அல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில்
தில்லையா ரீசன் திருவேள்வி தான்வளர்க்க
நல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே
பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே
அறந்தா னறியா அநியாயக் கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்ட மமைய அவன்பிறந்தா னம்மானை
முகங்கண் களெல்லாம் முதுகுப்பு றமேலாட
நகக்கரங்கள் கோடி கால்க ளொருகோடி
தவங்க ளறியாச் சண்டித் தடிமோடன்
பவமே நாள்தோறும் பண்ணு மியல்புடையோன்
குறோணி யவனுயரம் கோடிநாலு முழமாய்
கயிலை கிடுகிடென்னும் கால்மாறி வைக்கையிலே
அயிலங் கிடுகிடென்னும் அவனெழுந்தா லம்மானை
இப்படியே குறோணி என்றவொரு அசுரன்
முப்படியே நீடிய யுகத்தி லிருந்தான்காண்
இருந்து சிலநாள் இவன்தூங்கித் தான்விழித்து
அருந்தும் பசியா லவனுயர்ந்து பார்ப்பளவில்
பாருகங் காணான் பலபேருடல் காணான்
வாருதி நீரை வாரி விழுங்கினன்காண்
கடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல்
குடலெல்லா மெத்தக் கொதிக்கு தெனவெகுண்டு
அயில முழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில்
கயிலை தனைக்கண்டு கண்கள்மிகக் கொண்டாடி
ஆவி யெடுத்து அவன்முழுங்கு மப்போது
தாவிக் குவித்துத் தப்பினார் மாயவரும்
மாயவரு மோடி மண்ணுலோகம் புகுந்து
தூயவரு மங்கே சிவனை மிகநினைத்துத்
தவசிருந்தார் காண் தாமோ தரனாரும்
தவசு தனிலீசன் சன்னாசி போலேவந்து
ஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே
ஏதுநீ தவசு எனைநினைந்த வாறேது
என்று சன்னாசி யிதுவுரைக்க மாயவரும்
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே
கயிலை யெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை
அயில மதைக்குறோணி அசுரனென்ற மாபாவி
முழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன்
பளிங்கு மலைநாதன் பாரத்தே வாதிவரை
பண்டுபோல் நாளும் பதியி லிருந்திடவும்
என்றுங் கயிலை யிலங்கி யிருந்திடவும்
முண்டு செய்தபாவி முகமு மவனுடம்பும்
துண்டா றதாகத் தொல்புவியி லிட்டிடவும்
கண்டங்கண்ட மாய்ப்போடக் கடிய வரமெனக்கு
தண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன்
என்று திருமால் எடுத்துரைக்க வேயீசர்
மன்று தனையளந்த மாலோ டுரைக்கலுற்றார்
கேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனைத்
தூளாக்கி யாறு துண்ட மதுவாக்கி
விட்டெறிந்தா லவனுதிரம் மேலு மொருயுகத்தில்
கெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய்ப்
பிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு
துண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய
குண்டோம சாலியனாய்க் குவலயத்தி லேபிறப்பான்
அப்படியே குறோணி அவனுதிர மானதுவும்
இப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு
வந்து பிறப்பான்காண் மாற்றானா யுன்றனக்கு
உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து
அகத்துக் கவன்பிறப் பாறு யுகமதிலும்
உண்டு மவன்சீவ னுயிரழிவு வந்தன்னாள்
பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்
கொண்டுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை
அன்று விடைவேண்டி அதிகத் திருமாலும்
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து
சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம்
நாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி
வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்
வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை
கெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர்
துண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப்
பிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை!" – அகிலத்திரட்டு

🙏அய்யா உண்டு🙏

அனைவருக்கும் *இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!*இந்நாள் நல்லவைகளின் தொடக்கமாக அமைந்து,  என்றென்றும் வைகுண்டரருளா...
14/04/2026

அனைவருக்கும் *இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!*

இந்நாள் நல்லவைகளின் தொடக்கமாக அமைந்து, என்றென்றும் வைகுண்டரருளால் வெற்றி தொடர, வாழ்வில் சந்தோஷங்களையும், வளங்களையும் கொண்டு வர வாழ்த்துக்கள்..!

🚩அய்யா துணை🚩*ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார வரலாறு** #அகிலத்திரட்டு - நூல்சுருக்கம்*                                  ...
10/04/2026

🚩அய்யா துணை🚩

*ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார வரலாறு*

* #அகிலத்திரட்டு - நூல்சுருக்கம்*

"சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
பாரான தெச்சணமே பரம னுறுதலத்தில்
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது யானதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்தும்
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துயிரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து
எவ்வுகமுங் காணா யேகக்குண் டமேகி
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில்
வம்பா லநியாயம் மகாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக் காக யிரக்கமதாய்
அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்த நாமம் வுலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய யிறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாது மருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்து மாத்தாளே அம்பிகையே
ஈரே ழுலகும் யிரட்சித்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்து சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மத்து நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அதன்மேல் பெரிய தவம்புரிந்து
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல்
இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக்
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்
தொண்டராகச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறதுவும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டுமா பாவி கலைத் தடித்ததுவும்
சாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை
வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்
அன்புபார்த் தெடுத் தாளடிமை கொண்டதுவும்
வம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி
எல்லா யிடும்பு மிறையுமிகத் தவிர்த்துச்
சொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும்
மேலெதிரி யில்லாமல் வினையில்லா தாண்டதுவும்
இன்னாள் விவரமெல்லா மெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
பேயை யெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுபோல்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
நீண்டபுகழ் தர்மம் நிறுத்தியர சாண்டதுவும்
பத்தும் பெரிய பாலருக்கா கவேண்டி
சத்தழியும் பாவி தடியிரும்பி லுமிருந்து
படுத்தின பாடெல்லாம் பாலருக்கா கப்பொறுத்து
உடுத்த துணிகளைந்து வொருதுகிலைத் தான்வருத்தித்
தேவ ஸ்திரீகளையுஞ் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப்
பாவக் கலியுகத்தில் பாராத்தியங் கள்பட்டு
நாலு பிறவி நானிலத்தி லேபிறந்து
பாலுகுடித் தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி
மனுக்கண் காணாமல் மறைந்தொரு மூன்றுநாளாய்
தானுந் தவமதுவாய் சாயூச்சியமே புரிந்து
நல்லோரை யெழுப்பி நாலுவரமுங் கொடுத்துப்
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வான மிடியால் மலைக ளிளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாத னுரைக்கிறா ரன்போரே" - அகிலத்திரட்டு

🙏அய்யா உண்டு🙏

🚩அய்யா துணை🚩அன்பான அய்யாவின் பிள்ளைகளே!உலகளந்த ஆண்டவர் வைகுண்டர் பள்ளிகொண்டிருக்கும் *"அம்பலப்பதி"* திருத்தலத்தில் *அகில...
05/04/2026

🚩அய்யா துணை🚩

அன்பான அய்யாவின் பிள்ளைகளே!உலகளந்த ஆண்டவர் வைகுண்டர் பள்ளிகொண்டிருக்கும் *"அம்பலப்பதி"* திருத்தலத்தில் *அகிலத்திரட்டு திருஏடுவாசிப்பு திருவிழா* வெகு விமரிசையாக தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கர்மவினை அகற்றும் ஆண்டவன் பள்ளிகொண்டிருக்கும் இத்திருப்பதியானது *மூலகுண்டப்பதி* என்றும் அழைக்கப்படுகிறது. இப்பதியில் வைத்து தான் வைகுண்டர் பகவதிக்கு தனது உண்மையான சச்சிதானந்த (மகாவிஷ்ணு) வடிவில் காட்சி கொடுத்தார். "இப்பதியில் வந்தால் எள்ளளவும் தோசமில்லை, எப்பதியும் இப்பதிக்கு இணையாகாது" என்று புனித அகிலத்திரட்டு வேதாகமம் கூறுகின்றது.

வைகுண்டர் வருடம் 194 ஆம் ஆண்டு,
பங்குனி 20 (03-04-2026) வெள்ளி முதல்
சித்திரை 06 (19-04-2026) ஞாயிறு முடிய

இந்நிகழ்வில் இந்த உலகம் தோன்றியது முதல் குரோணி என்ற அசுரன் தோன்றி அநியாயங்கள் செய்த போது மகாவிஷ்ணு தானே குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி உலகில் தள்ளியதும், ஒவ்வொரு யுகங்களிலாக குண்டோமசாலி, தில்லைமல்லாலன், மல்லோசிவாகனன், சூரபத்மன், இரணியன், இராவணன், துரியோதனன் என கொடிய அசுரர்களாகப் பிறவியெடுத்து அநியாயங்கள் செய்தபோது மகாவிஷ்ணு தானே நரசிம்மராக, கந்தனாக, வாமனாக, ராமராக, கிருஷ்ணராக அவதாரங்கள் எடுத்து அந்த அசுரர்களை அழித்தது போல் கலியுகத்தில் கலியனை அழிக்க வைகுண்டராக அவதரித்து செய்த காரண காரியங்களை மகாவிஷ்ணு அம்மை மகாலெட்சுமிக்கு விளக்கி கூறியதை மக்களுக்கு எடுத்துரைக்கும் புனித அகிலத்திரட்டு என்னும் வேதாகமத்தை வாசித்து விளக்கி கூறும் இத்திருஏடுவாசிப்பு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..

"ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!"

Lord Narayana Himself Incarnated as Lord Vaikundar

*அகிலத்திரட்டு திருஏடுவாசிப்பு திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக...*

03.04.2026 - வெள்ளிக்கிழமை: திருஏடுவாசிப்பு தொடக்க விழா

17.04.2026 - வெள்ளிக்கிழமை: ஸ்ரீமன் வைகுண்டர்-சப்தகன்னியர்கள் திருக்கல்யாண வைபவ விழா

19.04.2026 - ஞாயிற்றுக்கிழமை:
ஸ்ரீமன் வைகுண்டர் பட்டாபிஷேக விழா

நடைபெற உள்ளது. ஆகையால் இத்திருஏடுவாசிப்பு திருவிழா நிகழ்வில் தாங்கள் வருகைதந்து உலகைப் படைத்து காக்கும் கடவுள் வைகுண்டரின் திருவருள் பெற்று செல்ல வருக வருக அன்புடன் அழைக்கிறோம்!

🙏அய்யா உண்டு🙏

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு:

Share

Category