23/05/2017
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..
அங்காரகன்-செவ்வாய்..
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது...
இறையருளை பெறவும் கிரக தோஷ பீடைகளில் இருந்து விடுபடவும் விரதங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள் எல்லாம் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் பிரச்னைகளின் தாக்கம் குறைவதுடன் உடலும், உள்ளமும் தூய்மையாகி அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. தோஷ நிவர்த்திக்கு நவக்கிரக வழிபாடு அவசியமானது. நவ கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகம் ஆகும். நெருப்புக்கு அதிபதியான செவ்வாய், ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கிறார். வீர தீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை, உயர் பதவி, தலைமை பொறுப்பு போன்றவற்றை ஒருவருக்கு தரக்கூடிய வல்லமை பெற்றது செவ்வாய் கிரகம்.
இவர் பூமாதேவியினால் வளர்க்கப்பட்டதால் இவரைப் பூமாதேவியின் மகனாகச் சொல்வார்கள்.
ஒரு சமயம், சிவபெருமான் தனியாக யோகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, அவரது நெற்றிக் கண்ணில் இருந்து, ஒரு நீர்த்துளி பூமியில் விழுந்தது. அதில் இருந்து மங்களன், ஒரு குழந்தை வடிவாகத் தோன்றினான். அவனை பூமாதேவி எடுத்து வளர்த்து வந்தாள்.
அவ்வாறு வளர்க்கப்பட்ட மங்களன், சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்தான். அத்தவத்தின் காரணமாக, அவன் உடம்பில் இருந்து யோகாக்கினி கொழுந்து விட்டு எரிந்தது. அது மட்டுமல்ல! அக்கடுந்தவத்தின் பலனாக அவன், நவகிரகங்களில் ஒருவனாக இருந்து அங்காரகன் என் னும் பெயரையும் பெற்றான்.
அடுத்த வரலாறு: பரத்வாஜரின் பிள்ளை மங்களன். அவனைப் பூமாதேவி அன்போடு அரவணைத்து வளர்த்து வந்தாள். தகுந்த பருவம் வந்ததும் அக்குழந்தையை அவள், பரத்வாஜரிடமே ஒப்படைத்தாள். பரத்வாஜர் அக்குழந்தைக்கு அங்காரகன் எனப் பெயரிட்டுக் கலைகளை எல்லாம் கற்பித் தார். கலைகளை எல்லாம் கற்றுக் கொண்ட அங்காரகன், தவம் செய்து நவகிரகங்களில் ஒன்றாக இருக்கும் சிறப்பைப் பெற்றான்.
செவ்வாயைப் பற்றி மச்ச புராணம், ஒரு தகவலைச் சொல்கிறது; தட்சன், தன் மகளான தாட்சாயணியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதன்பிறகு, தட்சனுக்கு அகங்காரம் மேலிட்டு, அவன் சிவபெருமானோடு பகை கொண்டான். பகையின் உச்ச கட்டமாக, தட்சன் சிவபெருமானை அவமதித்து ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு வந் த, தன் மகளான தாட்சாயணியையும் அவன் அவமானப்படுத்தினான். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரரை உண்டாக்கி, தட்ச யாகத்தை அழித்துவரக் கட்டளை இட்டார். ஆவேசமாகப் புறப்பட்ட வீரபத் திரர், தட்சனுடைய யாக சாலையில் புகுந்து அதம் செய்தார். தேவர்கள் உட்பட அங்கிருந்தோர் எல்லாம் சிதறி ஓடினார்கள்.
சுக்கிராச்சார்யார் வீரபத்திரரைப் பணிந்து, தன்னைத் தண்டிக்காதிருக்கும்படி வேண்டினார். அதனால் சுக்கிராச்சார்யாரை விட்டு விட்டு, வீரபத்திரர் யாகத்தை அழித்தார். அப்போதும் வீரபத்திரரின் ஆவேசம் அடங்கவில்லை. அதைக் கண்ட தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, வீரபத்திரைச் சாந்தப்படுத்தி னார்கள். வீரபத்திரரும் கோபம் தணிந்து சாந்தமானார். சுக்கிராச்சார்யாரும் தேவர்களும் வீரபத்திரரை வணங்கி, ‘‘அமைதியான, அழகான இந்த வடிவத்தோடு நீங்கள் நவகோள்களில் ஒன்றாக, அங்காரக னாக இருக்க வேண்டும்’’ என வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வீரபத்திரர் அங்காரகனாக இயங்கத் தொடங்கினார்.
அங்காரகனுடைய திருமேனி, ரத்தம் போலச் செக்கச் சிவந்த நிறம் கொண்டது. அவன் சிவந்த ஆடை அணிந்திருப்பான்; சிவந்த மலர்களால் ஆன மாலையை அணிந்திருப்பான். நான்கு திருக்கரங்கள் கொண்டவன் அங்காரகன். வலது இரு திருக்கரங்களில் அபயமும் சக்தி ஆயுதமும் கொண்டிருப் பான்; இடது இரு திருக்கரங்களில் கதையும் சூலமும் ஏந்தி இருப்பான். அங்காரகனுக்கு வாகனம், மேஷம் (ஆடு) என்று பல நூல்கள் கூறுகின்றன. எட்டுக் குதிரைகள் பூட்டிய தங்கமயமான தேரில் எழுந்தருளிய திருக்கோலத்தை உடையவன் அங்காரகன் என ஒரு நூல் கூறுகிறது.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் அந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.