உபநிஷதங்கள்

உபநிஷதங்கள் உபநிஷத கருத்துக்கள் மற்றும் விளக்கங? இந்த விளக்கங்கள் ராம கிருஷ்ண மடம், சுவாமி. ஆசுதோஷாந்தனரின் விளக்கத்தை ஒட்டி எழுதப்பட்டவை

02/11/2024

#முண்டக உபநிஷதத் தத்துவங்கள் 1:

நிழலும் நிஜமும்:

ஒரு கணம் கூட இடையீடின்றி வாழ்க்கை நமக்கு அனுபவங்களைக் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அவற்றுள் சில இன்ப அனுபவங்கள், சில துன்ப அனுபவங்கள். இன்பம் வரும்போது மகிழ்கிறோம், துன்பம் வரும்போது துவள்கிறோம். இவ்வாறு நமது வாழ்க்கை மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஓயாத இந்த ஓட்டத்திற்கு முடிவே கிடையாதா, விடிவே கிடையாதா என்று மனம் சில வேளைகளில் அங்கலாய்க்கிறது. உண்டு, விடிவு உண்டு என்கிறது முண்டக உபநிஷதம். ‘நீ நிழலைப் பற்றிக் கொண்டு அதனுடன் யுத்தம் செய்கிறாய். அதை விட்டு விட்டு நிஜத்தைப் பற்று’ என்று கூறுகிறது இந்த உபநிஷதம்.

அதர்வண வேதத்திலுள்ள 28 உபநிஷதங்களுள் ஒன்று இது. ‘முண்ட’ என்ற மூலச்சொல்லில் இருந்து வந்தது ‘முண்டகம்’. ‘முண்ட’ என்றால் ‘நீக்குதல்’.
‘நிழலைப் பற்றிக் கொண்டிருக்கிறாய்’ என்று நமது அறியாமையைச் சுட்டிக் காட்டி, நிஜம் எது என்பதை எடுத்துக் கூறி, நமது அறியாமையை நீக்க இந்த உபநிஷதம் முயற்சி செய்கிறது. எனவே முண்டக உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.

‘முண்ட’ என்றால் ‘மழித்தல்’, தலையை மழித்தவர்களான துறவியருக்கு உரிய உபநிஷதம் இது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

இந்த உபநிஷதத்தில் மூன்று முண்டகங்கள் (பகுதிகள்) உள்ளன. ஒவ்வொரு முண்டகத்திலும் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. இந்த ஆறு உட்பிரிவுகளிலுமாக மொத்தம் 64 மந்திரங்கள் உள்ளன.

உபநிஷதக் கரு

நிழலை உண்மை என்று நம்பி, அதன் பின்னால் ஓடுகிறோம் நாம். தவறான திசையில் நாம் செய்கின்ற இந்தப் பயணம்தான் நமது ஏமாற்றங்கள், துன்ப துயரங்கள் அனைத்திற்கும் காரணம். எனவே, ‘நிழலை விட்டு நிஜத்தைப் பற்று’ என்று வற்புறுத்துகிறது இந்த உபநிஷதம்.

உடம்பு, மனம், ஆன்மா என்று பல பகுதிகளால் ஆனவன் மனிதன். இதில் உடம்பும் மனமும் மாறக் கூடியவை, நிழல். ஆன்மா மாறாதது, நிஜம். நிழலுடன் நம்மை ஒன்றுபடுத்துவதை விட்டு விட்டு நிஜத்துடன் ஒன்றுபடுத்திக் காண வேண்டும்; அதனை அனுபூதியில் உணர வேண்டும் என்பது இந்த உபநிஷதத்தின் தனிக்கருத்தாக உள்ளது. அதற்கான சில சாதனை முறைகளையும் இங்கே நாம் காண்கிறோம்.

வித்யைகள்

இறைவனை அடைவதே ஒவ்வொரு மனிதனின் லட்சியமாகக் கொள்ளும் உபநிஷதங்கள் அதற்கென பற்பல வழிமுறைகளை வலியுறுத்துகின்றன. இப்படி ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களிலுமாக சுமார் 35 வித்யைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும் வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.

முண்டக உபநிஷதத்தில் நாம் காண்பது அக்ஷர—பரா வித்யை. இது அக்ஷராக்ஷர வித்யை என்றும் வழங்கப்படுகிறது.

1.1.4-6 & 1.1.9 மந்திரங்கள் இதனைக் கூறுகின்றன.

அடுத்த பதிவில் சாந்தி மந்திரத்தைக் காண்போம்.

11/10/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 25:

உறுதியாக அறிபவன்:

யோ வா எதாமேவம் வேதாபஹத்ய பாப்மானமனந்தே ஸ்வர்கேலோகே ஜ்யேயே ப்ரதிஷ்ட்டதி ப்ரதிஷ்ட்டதி II 9 II

யார் இதனை உறுதியாக அறிகிறானோ அவனது பாவங்கள் அகல்கின்றன. முடிவற்றதும் மேலானதுமான ஆன்ம உணர்வில் அவன் நிலை பெறுகிறான்.

8 ம் மந்திரம் கூறிய சாதனைகளை அறிந்து, அவற்றை உறுதியாகக் கடைப்பிடித்து, தெய்வத்திடம் பிரார்த்தனையுடன் வாழ்பவன் ஆன்ம அனுபூதி பெறுகிறான் என்ற நம்பிக்கை வாக்குகளுடன் உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

இதி கேனோபநிஷதி சதுரத்த: கண்ட: II

சாந்தி மந்திரங்கள்

1
ஓம் ஸஹ நாவவது I ஸஹ நௌ புனத்து I ஸஹ வீர்யம் கரவாவஹை I தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை II
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II

2
ஓம் ஆப்யாயத்து மமாங்கானி வாக்ப்ராணச் சக்ஷு: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி I ஸர்வம் ப்ரஹ்மௌபநிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம் மேஅஸ்து I ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து II

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II

இத்துடன் கேன உபநிஷதத் தத்துவங்கள் நிறைவு பெறுகிறது. இந்த நூலை நம் போல வடமொழி அறியாதவர்கள் கற்கும் முகமாக மிக அருமையான உரையுடன் புத்தகமாக எழுதி வெளியிட்ட ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

10/10/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 24:

ரகசிய அறிவிற்கு அடிப்படை:

தஸ்யை தபோ தம: தர்மேதி ப்ரதிஷ்ட்டா வேதா: ஸர்வாங்கானி ஸத்யமாயதனம் II 8 II

பொருள்: அந்த ரகசிய அறிவிற்கு, தவம், புலக்கட்டுப்பாடு போன்ற சாதனைகள் அடிப்படையாக உள்ளன. வேதங்கள் அதன் அங்கங்களாக உள்ளன. உண்மையே அதன் உறைவிடமாக உள்ளது.

உபநிஷத உண்மையை உணர்ந்து, ஆன்ம அனுபூதி பெற மூன்றுவிதமான சாதனைகளை இந்த மந்திரம் கூறுகிறது.

1 . தவம், புலக்கட்டுப்பாடு போன்ற சாதனைகள்.

2 . வேத பாராயணம், உயர் உண்மைகளைக் கூறுகின்ற நூல்களைப் படித்தல்.

3 . உண்மையைக் கடைப்படித்தல், விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் பிடிவாதமாக உண்மை பேசுவது என்ற பொருளில் இதைக் காணக் கூடாது. பிறர் மனத்தை நோகச் செய்யாத உண்மையே பேச வேண்டும்; அத்தகைய பேச்சை வாக்கினால் செய்கின்ற தவம் என்று வகைப்படுத்துகிறது கீதை.

‘உண்மை பேச வேண்டும், இனிமையாகப் பேச வேண்டும்; இனியதல்லாத உண்மையைப் பேசக் கூடாது. இதுவே சான்றோர்கள் காலம்காலமாகக் கடைப்பிடிக்கின்ற தர்மம் என்று மனுவும் கோருகிறார்.

1 அனுத்வேககரம் வாக்யம் ஸத்யாம் ப்ரியஹிதம் ச யத் I .....வாங்மயம் தப உச்யதே II ----- கீதை 17.15

2 ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யாம் அப்ரியம் I ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: ஸனாதன: II ------ மனு 4.138

( ஆக ஆன்ம அனுபூதியைப் பெற முக்கியப் படிக்கட்டாக உண்மையைப் பேசுதல் என்ற ஒரு தன்மையையே நாம் கொள்ளலாம். இயன்ற வரையில் உண்மையைப் பேசுதல் என்பதை இன்னொரு வகையில் இயன்ற வகையில் பொய் பேசாதிருத்தல் என்றும் கூடக் கொள்ளலாம். ஒரு நபர் சம்பந்தப்பட்ட கெடுதலான ஒரு விஷயத்தை அவரிடம் சொல்வதை விடவும் சொல்லாமல் மறைப்பது சிறந்தது என்று கொள்ளலாம். ஏனென்றால் அப்படி இனியதல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி அவரிடம் நாம் முதலில் சொல்லப் போய் அவர் படுகின்ற அவஸ்தையைக் கண்டால் அதற்கு ஒரு வகையில் அதை அவரிடம் சொன்ன நாமும் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள இயலும்! அதனால்தான் இனியதல்லாத உண்மையைப் பேசக் கூடாது என்று உபநிஷதம் சொல்கிறது.)

இன்னும் காண்போம். (அடுத்த பதிவு கேன உபநிஷதத்தின் கடைசிப் பதிவாகும்).

09/10/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 23:

அடிப்படை சாதனைகள்:

ஆன்ம அனுபூதியைப் பெறுவதற்கான அடிப்படை சாதனைகள் பற்றி இந்த மூன்று மந்திரங்களும் கூறுகின்றன.

உபநிஷதம் போ ப்ருஹீத்யுக்தா த உபநிஷத் ப்ராஹ்மீம் வாவ த உபநிஷதம் அப்ருமேதி II 7 II

பொருள்:

சீடன்: ‘குருநாதா ரகசிய அறிவை எனக்கு உபதேசியுங்கள்.’

குரு: ‘இதுவரை ரகசிய அறிவையே உனக்கு சொன்னேன். ஆன்மாவை எப்படித் தியானிப்பது என்பது பற்றியே உனக்குச் சொன்னோம்.’

உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபூதியிலிருந்து பிறந்தவை; அனுபவ வார்த்தைகள். எனவே வெறும் சம்ஸ்கிருத அறிவாலோ, புலமையாலோ அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான், சாதனைகள் செய்பவன், கற்றுணர்ந்தவன், இறைவனில் நிலைபெற்றவன், சிரத்தை உள்ளவன், தன்னையே ஆஹுதியாக அளித்து வாழ்பவன் – இத்தகையோருக்கு மட்டுமே ஆன்மீக ஞானத்தை அளிக்க வேண்டும் என்று உபநிஷதங்கள் உறுதிபடக் கூறுகின்றன. எனே இதுவரை குரு உபதேசித்த உபநிஷத உண்மையை அறிவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சீடன் கேட்கிறான்.

( பெரும்பாலும் நம்மில் பலர் ஆன்ம அனுபூதி பெறுவது, மோட்சம் பெறுவது போன்றவைகள் எல்லாம் துறவு நிலையுடன் சம்பந்தப்படுத்தியே நினைத்துக் கொள்கிறோம். அது ஒரு வகையில் உண்மைதான். உண்மையான துறவிகள் அந்தப் பிறவியிலேயே ஆன்ம அனுபூதி பெருமளவு தவசீலர்களாக அக்காலங்களில் இருந்தனர். இன்றும் கூட அத்தகைய சிலர் வெளியுலக வாழ்வில் தென்படாமல் இருக்கவே செய்கின்றனர். ஆனாலும் கூட உலக வாழ்க்கையில் உள்ள, இல்லற தர்மத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு மனிதன் ஆன்ம அனுபூதியைப் பெறுவது இயலாத காரியம் என்றுதான் நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனாலும் கூட அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் குடும்பப் பற்றை விடுத்தும், உலகத்தையே தம் குடும்பமாக நினைத்து வாழும் பேருணர்வை அடைந்து அறநெறிகளுடன் வாழ்கிற நேரத்தில் அவர்களுக்கும் கூட ஆன்ம அனுபூதி அடையக் கூடிய ஒன்றுதான். இதை விளக்க பலப்பல கதைகள் நம் வரலாற்றில் இருக்கவே செய்கின்றன.)

இன்னும் காண்போம்.

08/10/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 22:

ஆன்மாவை எப்படித் தியானிப்பது?:

ஆன்மாவை நமது உடல்-மனச் சேர்க்கைக்குப் பின்னால் உள்ள ஆன்ம உணர்வாக, உலகையே இயக்குகின்ற இறையுணர்வாக தியானிப்பதே உண்மையான ஆன்ம தியானம்.

தத்த தத்வனம் நாம தத்வனம் இத்யுபாஸிதவ்யம்; ஸ ய ஏததேவம்வேதாபி ஹைனம் ஸர்வாணி பூதானி ஸம்வாஞ்சந்தி ii 6 ii

பொருள்: ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது. அவ்வாறே அறியப்படுகிறது. எல்லா உயிர்களிலும் நிறைந்ததாக அதனைத் தியானிக்க வேண்டும். ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதை யார் அறிகிறானோ அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன.

‘யார் எல்லா உயிரினங்களையும் ஆன்மாவிலும், ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ அவன் யாரையும் வெறுப்பதில்லை’ என்கிறது ஈசாவாஸ்ய உபநிஷதம். எதையும் வெறுக்காத ஒருவனிடம் அன்பு மட்டுமே நிறைகிறது. அவனை அனைத்து உயிரினங்களும் நேசிக்கின்றன.

யஸ்து சர்வாணி பூதானி ஆத்மனி ஏவ அனுபச்யதி i
ஸர்வபூதேஷு சாத்மானம் ததோ ந விஜூகுப்ஸதே II (ஈசாவாஸ்ய உபநிஷதம்)

( அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்கிறார் வள்ளுவர்பிரான்! உலகிலேயே மிக அதிகமான மக்கள் ஏங்குவது பகட்டுக்காகவோ, பணத்துக்காகவோ, பொருளுக்காகவோ அல்ல!! அந்த ஏக்கம் அன்புக்காகத்தான்! சந்தேகமிருந்தால் முதியோர் இல்லங்களுக்குப் போனால் புரிந்து கொள்ளலாம்!! சரி உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் மீதும் அன்பு வைப்பது சாத்தியமா என்று நமக்கும் ஒரு சந்தேகம் வரக் கூடும்! ஆனால் அவ்வாறு அன்பு வைப்பது சாத்தியமே என்று பல செல்லப் பிராணிகளின் வளர்ப்பாளர்கள் நிரூபிக்கின்றனர்! அவ்வளவு ஏன் சாதாரண பூனை, நாய்க்குட்டியைப் போல திபெத்திய லாமாக்கள் புலிகளையும் சிங்கங்களையும் அன்புடன் செல்லப் பிராணிகளை வளர்ப்பதை நாம் கண்டிருப்போம். ஆனால் இக்காலத்தில் இந்த வரையறைக்குள் முழுவதும் கொண்டு வர இயலாத ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே!! ஏனென்றால் எத்தனைதான் அன்பு செலுத்திப் பழகினாலும் கூட உள்ளுக்குள் ஆயிரம் கேடுகளை வைத்துப் பழகும் மனிதர்களை நாம் அனுபவத்தில் காண்கிறோம். ஆயினும் அதையெல்லாம் தாண்டி நம்மிடம் எப்படி வேண்டுமானாலும் அவர்கள் நடந்து கொள்ளட்டும் நாம் அவர்களிடம் அன்பை மட்டுமே செலுத்தி வாழ்வோம் என்று நினைப்பது எத்தனை உன்னதமான விஷயமாக இருக்க முடியும்? அதைத்தான் உபநிஷதம் வலியுறுத்துகிறது!! இந்த இடத்தில் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பெருமான் நினைவு கூறத்தக்கவர்! பயிர்களைக் கண்டே ஒரு ஞானியால் வாட முடிந்தால் துன்பத்தால், பசிப்பிணியால், வறுமையால், நோயால் வாடிடும் சக மனிதர்களிடம் இயன்ற அளவு உதவி அன்புடன் பழகும் தன்மையை நாம் ஏன் கைக்கொள்ள இயலாது? அவ்வாறு செய்யக் கூடிய தன்மையே ஒரு ஆன்ம தியானம் என்றும் கொள்ள முடியும்).

இன்னும் காண்போம்.

05/10/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 21:

ஆன்மா:

உலகெங்கும் நிறைந்துள்ள இறைவனே நம்மில் ஆன்மாவாக உள்ளார். நமது உடல்-மனச் சேர்க்கைக்குப் பின்னால் உள்ளது அந்த ஆன்மாவே.

அதாத்யாத்மம் யதேதத் கச்சதீவ ச மனோஅனேன சைததுபஸ்மரதி அபீக்ஷ்ணம் ஸங்கல்ப: II 5 II

பொருள்: இனி ஆன்மா பற்றிப் பார்ப்போம். ஆன்மாவின் காரணமாகவே மனம் புறவுலகை நாடிச் செல்வது போல் உள்ளது. பொருட்களை நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் ஆன்மாவே காரணம்.

(மேலை நாடுகளின் இறையியலுக்கும் சனாதன தர்ம இறைத் தத்துவங்களுக்கும் உள்ளதொரு முக்கியமான விஷயம் இதுவேயாகும். மேலை நாடுகளில் SOUL எனப்படும் ஆன்மா என்பது ஆரம்ப காலங்களில் ஒத்துக் கொள்ளப்படவேயில்லை.

ஆனால் நமது சனாதன தர்மத்திலோ பழம்பெரும் காலத்திலேயே ஆன்மா என்பது பற்றிய விசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றுக்குள்ள வித்தியாசம் மிகத் தெளிவாக நமது உபநிஷதங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது சிறப்பு.

மனம் என்பது உணர்வின் பாற்பட்டதாகும். ஏதோ ஒரு இடத்தில் கால் மோதி விடுகிறது. அங்கு நாம் வலியை உணர்கிறோம். இது மனதின் பாற்பட்ட விஷயம்! வலி என்பதை நாம் உணருமாறு செய்வது நம் மனதின் செயல்பாட்டால் ஆகும். அந்த வலியை தாங்கவியலாத ஒன்றாக நமது மனம் உணரும் போது நாம் மருத்துவரைத் தேடிச் செல்கிறோம்!!

சரி இங்கு மருத்துவரைத் தேடி நம்மை செல்ல வைப்பது எது? அதுவே நமது புத்தி ஆகும். வலியை நாம் உணரவைக்கும் விஷயம் மட்டுமே நமது மனம் செய்யும் செயல். அந்த வலி பொறுக்க இயலாத அளவு உள்ளதையும் அதுவே உணர வைக்கிறது!

ஆனால் வலி பொறுக்க இயலாத அளவு உள்ளது என்பதை உணரும் போது நமது புத்தி வேலை செய்கிறது! ஒரு வேளை இது எலும்பு முறிவாக இருக்குமோ என்று புத்தி சிந்திக்கிறது! வலியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை, இது எலும்பு முறிவாகவும் கூட இருக்க வாய்ப்புண்டு எதற்கும் மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொள்வோம் என்று புத்தி முடிவு செய்து நம்மை மருத்துவரிடம் செல்ல வைக்கிறது!

ஆனால் இந்த மனம், புத்தி இரண்டையும் வலி என்னவாக இருக்கும் என்று மாறிமாறி உணரவும், சிந்திக்கவும் வைப்பது நமது ஆன்மாவேயாகும்!! ஆன்மா நமது செயல்களுக்கு ஒரு சாட்சியாக இருந்தாலும் கூட நமது கர்மவினைகளுக்கு ஏற்ப நம்மை உலக வாழ்வில் வழி நடத்தியும் செல்லக் கூடிய ஒன்றாக உள்ளது! ஆனால் அது நம்மை முடிவெடுக்க வைக்கக் கூடிய நிலையில் இல்லை. மாறாக நம் மனமும் புத்தியும் மாறிமாறி நம்முடைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதை ஒரு பார்வையாளரைப் போலக் கண்டு நிற்கிறது!! இதுவே ஆன்மாவின் சிறப்பு எனலாம்).

இன்னும் காண்போம்.

03/10/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 20:

ஆன்ம அனுபூதியின் உயர் பரிமாணம்:

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணர்வை உணர்வதுதான் உண்மையான ஆன்ம அனுபூதி என்பதை #2.4 இல் கண்டோம். இந்த அனுபூதியின் மற்றொரு பரிமாணத்தை இந்த மந்திரங்கள் கூறுகின்றன. நமது ஒவ்வொரு செயலிலும் ஆன்ம உணர்வைக் காண்பது போல் உலகம் முழுவதிலுமே இறை உணர்வைக் காண்பது ஆன்ம அனுபூதியின் உயர் பரிமாணம் ஆகும்.

எல்லாம் இறைவனின் சக்தி:

இறைவனின் பெருமையை இந்த மந்திரம் கூறுகிறது. இறைவனைப் பணிந்து வாழ வேண்டும். ஏனெனில் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன.

தஸ்யைஷ ஆதேசோ யதேதத் வித்யுதோ வ்யத்யுததா இதின் ந்யமமிஷதா

இத்யதி தைவதம் II 4 II

பொருள்: கடவுளைப் பற்றிய விளக்கம் இது. ஆகா! மின்னல் மின்னுவது அவரால்; இமைகள் இமைப்பது அவரால், ஆகா! இது அவரது தெய்வீக சக்தி.

( ஒரு ஆன்மசாதகனாக இருக்கும் ஒருவன் முதலில் தான்-உணர்வை விட வேண்டியது அவசியமான ஒன்று. ஆனால் அவன் பல விஷயங்களை செய்கிறான்! அதை செய்வது அவன் மனம் தரும் கட்டளையால்! ஆனால் அவன் மனதை எது இயக்குகிறது? இன்னொன்று அவனை சுற்றி இருக்கும் மனிதர்கள் பல விஷயங்களை செய்கிறார்கள்! அவர்கள் மனதை எது இயக்குகிறது? அதையும் தாண்டி அவன் சுற்றுப்புறம்!! அதாவது இயற்கை! இயற்கையில் பல விதமான இயக்கங்கள் நிகழ்கிறது! மின்னல் மின்னுகிறது! ஆனால் எப்போதோ ஒரு நாள்தான் மின்னல் மின்னுகிறது!! ஆண்டு முழுவதும் தினம் தினம் இருபத்து நான்கு மணி நேரமும் மின்னல் மின்னினால் அங்கு மனிதன் வாழ இயலுமா?? எப்பொழுதும் இடி இடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? எப்பொழுதும் பகலாகவும் அல்லது இரவாகவும் இருந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்?? ஆனால் இவையெல்லாம் அல்லாமல் இயற்கையின் எல்லா அம்சங்களும் ஏதோ ஒரு ஒழுங்கு முறையுடன் நடக்கிறது! அதை நிகழ்த்துவது கடவுள் என்பதையும் தன்னுடைய மற்றும் தன்னை சுற்றியுள்ள அனைவரின் இயக்கத்தையும் நடத்துவது கடவுள் என்பதை ஒரு மனிதன் உணர்ந்தால் அவன் ஆன்ம உணர்வு வலுப்பெறும் என்னும் கருத்துதான் இந்த மந்திரத்தில் வலியுறுத்தப்படுகிறது!!)

30/09/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 19:

ஆன்மாவை அறிந்தவன் மேலானவன்:

ஆன்மாவை அறிந்தவனே உண்மையா நிறைவு பெறுகிறான் என்பதை #2:5 இல் கண்டோம். தொடரும் இரண்டு மந்திரங்களில் அத்தகையோரின் பெருமை மேலும் பேசப்படுகிறது.

தஸ்மாத் வா ஏதே தேவா அதிதராமிவான்யான் தேவான் யதக்னிர் வாயுரிந்த்ரஸ்தே ஹ்யேனன்னேதிஷ்ட்டம் பஸ்பர்கஸ்தே ஹ்யேனத் ப்ரதமோ விதாஞ்சகார ப்ரஹ்மேதி II 2 II

பொருள்: அக்கினி, வாயு, இந்திரன் ஆகிய தேவர்கள் மற்ற தேவர்களை விட மேலானவர்கள். ஏனெனில் இவர்கள் கடவுளை நெருங்கித் தொட்டிருக்கிறார்கள்; முதன்முதலாக அவரை அறிந்திருக்கிறார்கள்.

தஸ்மாத் வா இந்த்ரோ அதிதராமிவான்யான் தேவான்; ஸ ஹ்யேனன்னேதிஷ்ட்டம் பஸ்பர்ச ஸ ஹ்யேனத் ப்ரதமோ விதாஞ்சகார ப்ரஹ்மேதி II 3 II

எனவே இந்திரன் மற்றவர்களை விட மேலானவன். ஏனெனில் அவன் கடவுளை நெருங்கித் தொட்டிருக்கிறான்; முதன்முதலாக அவரை அறிந்திருக்கிறான்.

(பிரம்மம் என்ற ஆதிமூலமான கடவுளை இந்த நிகழ்வின் முன் தேவர்கள் எவருமே அறிந்திலர்; நாமெல்லாம் படைக்கப்பட்ட ஒருவரென்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தங்களிடமிருக்கும் பெரும் சக்தியெல்லாம் தங்களுக்கே உரித்தானது என்றும் தாம் எப்போதும் இருக்கும் தேவராலவுமே எண்ணியிருந்தனர். எப்போது பிரம்மம் யட்சனின் உருவத்தில் வந்து அவர்களுக்கு சோதனை கொடுத்தாரோ அப்போதுதான் தேவர்களுக்கு தாமும் படைக்கப்பட்ட உயிர் என்பது புரிந்தது. அவர்களுக்கு இருந்த ஆணவம் அகன்றது.

இங்கு தேவர்களைப் புலன்கள் என்று கொண்டு மனதை இந்திரனுக்கு ஒப்பாக வைத்துப் பார்த்தால் மனத்தால் தேவியை வேண்டினால் கடவுளை அவள் நமக்குக் காட்டுவாள் என்ற உருவகம் கிடைக்கும்)

இன்னும் காண்போம்.

28/09/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 18:

அடிப்படை சாதனைகள்:

தேவியிடம் பிரார்த்தனை செய்து இந்திரன் உண்மையை அறிந்தான். அதாவது, ஆன்ம அனுபூதிக்குப் பிரார்த்தனை வேண்டும். பிரார்த்தனையுடன் சில அடிப்படை சாதனைகளும் வேண்டும். அவை பற்றி இந்த அத்தியாயம் கூறுகிறது.

தேவி உணர்த்திய உண்மை

ஸா ப்ரஹ்மேதி ஹோவாச: ப்ரஹ்மணோ வா எதத் விஜயே மஹீயத்வமிதி: ததோ ஹைவ விதாஞ்சகார ப்ரஹ்மேதி II 1 II

பொருள்: ‘அது கடவுள், நிச்சயமாக அவரது வெற்றியையே நீங்கள் உங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்ந்தீர்கள்’ என்று தேவி கூறினாள். யட்சனாகத் தோன்றியது கடவுளே என்று அதன் பிறகுதான் இந்திரன் அறிந்தான்.

தன்னால் யட்சனை அறிய முடியாது என்பதைக் கண்ட இந்திரன் தேவியைச் சரணடைந்தான். அவள் அவனுக்கு உண்மையை உணர்த்தினாள். ‘நீ சுதந்திரமானவன் அல்ல; அவள் எப்படிச் செய்விக்கிறாளோ அப்படியே செய்ய முடியும். அந்த ஆத்மா சக்தி தந்தால்தான் பிரம்ம ஞானம் கிடைக்கும் ....அவளை மீறிச் செல்ல முடியாது என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

( இந்த இடத்தில் இன்றைய காலகட்டத்தில் நம் மக்களை ஏமாற்றும் சில போலி ஞானிகளைப் பற்றிக் கூற விழைகிறேன். முதலில் எந்த ஒருவனுமே எல்லா விஷயங்களையும் அறிந்தவனல்ல என்பது மையக் கருத்து. இந்திரனே தேவர்களின் தலைவன் என்னும் அடிப்படையில் அவனே அனைத்தையும் அறிந்தவனாக தேவர்களும் ஏன் அவனுமே கூட கர்வம் அடைந்திருந்தான். அவனது சக்திகள் எல்லாம் பிரம்மத்தால் அவனுக்கு வழங்கப்பட்டவை தான் என்பதை தேவி உணர்த்திய பின்தான் அவனுக்குப் புரிந்தது. அதுவரை அவனுக்கு தானும் ஒரு உருவாக்கப்பட்ட ஜீவன்தான் என்ற எண்ணமே இல்லை!! அதே போல இன்றும் நாம் பல போலி ஞானியர்களைக் காண்கிறோம். அவர்கள் எல்லாம் ஆன்ம ஞானம் பெறவும், யோக குண்டலினி சக்திகளைப் பெற பயிற்சி அளிப்பதாகவும் இன்றளவும் பற்பல ஆர்ப்பாட்டமான விளம்பரங்கள், பெரியளவிலான ஆசிரமங்கள் எல்லாம் வைத்து செய்கின்றனர்!! அப்படி இதை சொல்லிக் கொடுப்பதற்கு இது கல்லூரி விரிவுரை அல்ல என்பதை நாம் உணர்தல் நலம்! தியானம் போல அடிப்படை விஷயங்களை நாம் இவர்களிடம் பழகலாம் என்பது உண்மைதான். ஆனால் உயர்நிலையில் ஆன்ம அனுபூதி பெற விரும்பும் ஒருவனை அவனது குரு எப்படியேனும் கண்டுபிடித்து அழைத்துக் கொள்வார் என்பதே உண்மை!! )

இன்னும் காண்போம்.

26/09/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 17:

மனத்தால் தேடு:

தேவர்கள் ஒவ்வொருவரும் சென்று யட்சன் யாரென்று அறிய முடியாமல் திரும்புகிறார்கள். புலன்களும் அது போலவே. புலன்களால் இறைவனை அறிய முடியாது!!

கடைசியாக, தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செல்கிறான். அவன் சென்ற போது அந்த யட்சன் மறைந்து விட்டான். அந்த இடத்தில் தேவி நின்றாள். தேவியிடம் கேட்டு உண்மையை உணர்வதாக அடுத்த அத்தியாயத்தின் முதல் மந்திரம் சொல்கிறது. அனைத்து புலன்களுக்கு தலைமையாக இருப்பது மனம்.

மனத்தால்தான் இறைவனை தேட வேண்டும். ஆனால் மனத்தால் இறைவனை அறிய முடியாது என்று அனைத்து உபநிஷதங்களும் ஒரே குரலில் கூறுகின்றன. அதையே இந்த உபநிஷதத்திலும் காண்கிறோம். யட்சன் மறைந்ததாக அதையே இந்தக் கதை குறிப்பிடுகிறது.

யட்சன் யாரென்று அறிய முடியாம தொற்று நின்ற இந்திரன் தேவியிடம் பிரார்த்தனை செய்த போது, யட்சனைப் பற்றிய உண்மையை அவள் தெரிவித்தாள்.

மனத்தால் இறைவனை, அவரது உண்மை நிலையில் அறிய முடியவில்லை. அதே மனம் தனது ஆற்றலின்மையை உணர்ந்து, தெய்வத்திடம் தன்னைச் சமர்ப்பித்து, பிரார்த்தனை செய்தால் அந்தத் தெய்வத்தின் மூலமே அறுதி உண்மையை அறிய வல்லதாகிறது. இதையே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ‘பக்தவத்சலனான பகவான் மனம் வைத்தால் பிரம்ம ஞானத்தையும் கொடுப்பான்’ என்கிறார்.

நமது உடலும் மனமும் எல்லாம் இயங்குவது யாரால் என்ற கேள்வியுடன் உபநிஷதம் ஆரம்பித்தது. ஆன்மாவே என்று அடுத்த மந்திரம் அதற்கு பதிலளித்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு செயல்பாட்டிலும் அதனை உணர்பவனே உண்மையில் ஆன்ம அனுபூதி பெற்றவன் என்பதை #2:4 இல் கண்டோம். தெய்வத்திடம் பக்தி கொண்டு அவரிடம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் அந்த ஆன்ம அனுபூதியைப் பெறலாம் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

இன்னும் காண்போம்.

25/09/2024

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 16:

கதையும் பாடமும்:

இந்தக் கதையில் வரும் அக்கினி, வாயு முதலான தேவர்கள் புலன்களுக்கும், தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் தலைமைப் புலனான மனத்திற்கும் உருவகமாகக் கூறப்பட்டுள்ளனர்! (இதை உருவகமாகக் கூறாமலும் கூட அப்படியே வைத்துக் கொள்ளலாம். ஆனால் சுவாமிஜி இதை இப்படி உருவகப்படுத்தி அதன் கருத்துக்களை நாம் அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையாகக் கூறியுள்ளார். ஆனால் சில ஆண்டுகள் முன்னால் ஒரு ஆன்மீகவாதி இந்த கதையின் விளக்கத்தை சிதைத்து சொல்லியதைக் கேட்டேன்! அவருடைய பக்குவம் அவ்வளவே)

அக்கினி எதையும் எரிக்க வல்லவன். வாயு எதையும் சுமக்க வல்லவன். இவ்வாறே தேவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆற்றல் பெற்றவர்கள். ஆனால் இந்த ஆற்றல்கள் எதுவும் யட்சனின் முன் செயல்படவில்லை.அவர்கள் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இறைவன் தந்த வெற்றியைத் தங்கள் திறமையால் வந்த வெற்றியாக எண்ணியதன் விளைவு இது அவர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பிய இறைவன் தமது ஆற்றலை அவர்களிடமிருந்து விலக்கிக் கொண்டார். எனவே தேவர்களால் எதையும் செய்ய இயலவில்லை – அக்கினியால் எரிக்க முடியவில்லை. வாயுவால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.

தேவர்கள் புலன்களுக்கு உருவகமாகக் கூறப்பட்டுள்ளனர். கண்கள் காண்கின்றன, காதுகள் கேட்கின்றன, கால்கள் நடக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு புலனும் தங்களுக்கென்று ஒரு ஆற்றலைப் பெற்றுள்ளன. ஆனால் கண்கள் காண்பதற்கும் காதுகள் கேட்பதற்கும் உரிய ஆற்றல் ஆன்மாவிலிருந்து வருகிறது ( #1:2). ஆன்மா தனது உணர்வைப் புலன்களிலிருந்து விலக்கிக் கொண்டால் கண்கள் காணவோ, காதுகள் கேட்கவோ இயலாது.

மரணம் இதற்கொரு உதாரணம் ஆகும். மரணத்தில் பிராணன் புலன்களிலிருந்து பிரிக்கப்படுகிறது. அதன் பிறகு கண்கள் காண்பதில்லை; காதுகள் கேட்பதில்லை. பிராணன் மட்டுமல்ல, நமது உடம்பு, மனம் என்று அனைத்தின் இயக்கங்களும் ஆன்மாவின் காரணமாகவே நிகழ்கின்றன. ஆன்ம உணர்வு ஆகாரமாக இல்லையென்றால் புலன்களோ மனமோ எதுவும் இயங்காது. நமக்குப் பின்னால் நமது உடல்-மனச் சேர்க்கைக்குப் பின்னால் இருப்பது ஆன்மா; எல்லா இயக்கங்களும் நடைபெறுவது ஆன்மாவால். கதை தரும் முதல் பாடம் இது!

இன்னும் காண்போம்.

30/03/2022

#கேன உபநிஷதத் தத்துவங்கள் 15:
அனைத்தையும் தூக்குவேன்:
தஸ்மின்ஸ்த்வயி கிம் வீர்யமித்யபீதம் ஸர்வமாததீய யதிதம் ப்ருதிவ்யாமிதி
II 9 II
பொருள் : ‘உன்னிடம் என்ன சக்தி உள்ளது?’ என்று யட்சன் கேட்டார். அதற்கு வாயுதேவன், ‘இந்தப் பூமியிலுள்ள அனைத்தையும் என்னால் தூக்க முடியும்’ என்று பதிலளித்தான்.

தஸ்மை த்ருணம் நிததாவேததாதத்ஸ்வேதி ததபப்ரேயாய ஸர்வஜவேன, தன்ன சசாகாதும், ஸ தத ஏவ நிவவ்ருதே நைததசகம் விஜ்ஞாதும் யதேதத் யக்ஷமிதி II 10 II

பொருள்: அந்த யட்சன் வாயுதேவனின் முன்னால் ஒரு புல்லை வைத்து, ‘இதனைத் தூக்கு’ என்றார். வாயுதேவனும் மிகவும் விரைவாக அந்தப் புல்லை அணுகினான். ஆனால் அவனால் அதனைத் தூக்க முடியவில்லை. எனவே திரும்பி விட்டான். பிறகு தேவர்களிடம் சென்று ‘ அந்த யட்சன் யார் என்பதை என்னால் அறிய இயலவில்லை’ என்று தெரிவித்தான்.

அதேந்த்ரம் அப்ருவன் மகவன்னேதத் விஜானீஹி கிமேதத் யக்ஷமிதி ததேதி ததப்யத்ரவத் தஸ்மாத் திரோததே II 11 II

பொருள்: பிறகு தேவர்கள் இந்திரனை அணுகி, ‘இந்திரனே அந்த யட்சன் யார் என்று அறிந்து வா’ என்று கூறினார். இந்திரனும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி யட்சனை நோக்கி விரைந்தான். ஆனால் அதற்குள் அந்த யதன் அங்கிருந்து மறைந்தான்.

ஸ தஸ்மின்னேவாகாசே ஸ்திரியமாஜகாம பஹுசோபமானம் உமாம் ஹைமவதீம் தாம் ஹோவாச கிமேதத் யக்ஷம் இதி II 12 II

பொருள்: பொன் ஆபரணங்களை அணிந்து மிகுந்த அழகுடன் பொலிந்து தோன்றிய உமாதேவியை அந்த வானிலேயே இந்திரன் கண்டான். அவன் அவளிடம் ‘இந்த யட்சன் யார்?’ என்று கேட்டான்.

( இந்த கதை மிக நுண்மையான பல கருத்துக்களைக் கொண்டுள்ளது. நம் போல மனிதர்களின் காரியங்கள் எதுவும் நம்மாலே ஆவதில்லை. ஆனால் நாமோ நான்-உணர்வு (EGO) காரணமாக அனைத்தையும் நாமே செய்வதாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நாம் யாராலோ இயக்கப்படுகிறோம். தம்மை இயக்குவது யாரென்று அறியாமல் கர்வமடைந்த தேவர்களுக்கு பாடம் புகட்டும் அற்புத நிகழ்வாக இது சொல்லப்படுகிறது)

இதி கேனோபநிஷதி த்ருதீய கண்ட: II
இத்துடன் கேனோபநிஷதம் மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when உபநிஷதங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share