09/04/2026
கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காடு ஐயானர் ஆலயத் தேர் திருவிழா —
ஆலயத் திருவிழா என்பது இறைவனை வழிபடும் ஆன்மிக நிகழ்வு அது மக்களை மகிழ்விக்கும் கேளிக்கை மேடை அல்ல.
திருவிழாக் காலத்தில் இறைவன் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வருவது வெறும் கொண்டாட்டமல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை, நேர்த்திக்கடன், கண்ணீர், வேண்டுதல், இறைபக்தி ஆகிய அனைத்தும் ஒன்றிணையும் புனிதமான தருணமாகும்.
அந்தக் கூட்டத்தில் ஒரு தாய் தனது குழந்தையின் நலனுக்காகக் கண்ணீருடன் வேண்டிக்கொண்டிருக்கலாம். ஒரு மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது கணவர் குணமடைய வேண்டுமென்று இறைவனிடம் மன்றாடிக்கொண்டிருக்கலாம். மற்றொருவர் தாங்க முடியாத வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபட இறைவனின் அருளை நாடி வந்திருக்கலாம். இத்தகைய பக்தர்களின் மனநிலையையும் பிரார்த்தனைகளையும் மதித்து, ஆலயச் சூழல் அமைதி, பக்தி மற்றும் ஆன்மிக உணர்வை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
நடனம் தவறல்ல கலைஞர்களை அவமதிப்பதும் எமது நோக்கமல்ல. இறைவழிபாட்டுடன் இணைந்த பாரம்பரிய நடனங்களுக்கும் பக்திக் கலைகளுக்கும் நமது சமயத்திலும் கலாசாரத்திலும் உயர்ந்த இடம் உண்டு. ஆனால் கூட்டத்தை மகிழ்விப்பதற்காக மட்டுமே கேளிக்கை நடனங்களை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிகளைத் திருத்தேருக்கு முன்னால் நடத்துவதைப் பக்திக் கலையுடன் ஒப்பிட முடியாது.
திருத்தேருக்கு முன்னால் இறைவனே அனைவரது கவனத்திற்கும் மையமாக இருக்க வேண்டும். அங்கு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் பக்தர்களின் சிந்தனையை இறைவனை நோக்கி உயர்த்த வேண்டுமே தவிர, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, ஒரு வழிபாட்டு நிகழ்வை வீதிக் கேளிக்கையாக மாற்றக்கூடாது.
உலக வாழ்க்கையின் சத்தம், கவலை மற்றும் கவனச்சிதறல்களிலிருந்து விலகி, மனதை அமைதிப்படுத்தி, இறைவனின் திருவடிகளில் சரணடைவதற்காகவே நமது முன்னோர்கள் ஆலயங்களை அமைத்தார்கள். உலகின் எல்லாப் பொழுதுபோக்குகளையும் ஆலயத்திற்குள்ளும் திருத்தேர் ஊர்வலங்களிலும் கொண்டுவந்தால், ஆலயத்திற்கும் சாதாரணக் கேளிக்கை அரங்கிற்கும் என்ன வேறுபாடு எஞ்சும்?
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பல மேடைகளும் அரங்குகளும் உள்ளன. ஆனால் ஆலயம் அவற்றில் ஒன்றல்ல. ஆலயம் என்பது ஆன்மா அமைதி பெறும் இடம் இறைவனைத் தேடும் இடம் கண்ணீருடன் வருபவர் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்லும் புனிதத் தலம்.
கேளிக்கைக்கும் வழிபாட்டிற்கும் தனித்தனியான இடமும் நோக்கமும் இருக்கின்றன. தயவுசெய்து அவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டாம். மனதில் ஏராளமான கவலைகளையும், சொல்ல முடியாத வேதனைகளையும் சுமந்துகொண்டு இறைவனைத் தேடி ஆலயத்திற்கு வரும் பக்தர்களைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
ஆலயத்தின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவது பழமைவாதமோ குறுகிய மனப்பான்மையோ அல்ல. நடனமாடும் பெண்களுக்கு எதிரான கருத்தும் அல்ல. மாறாக, பொழுதுபோக்கு மற்றும் கேளிகைக்கைகளுக்குரிய இடத்தையும் இறைவழிபாட்டிற்குரிய இடத்தையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள்.
“பரந்த மனப்பான்மை” என்ற பெயரில் ஆலயத்தின் எல்லைகளையும் புனிதத்தையும் சிதைத்துவிட முடியாது. எல்லா நிகழ்வுகளுக்கும் உரிய இடம் உண்டு; இறைவழிபாட்டிற்கான இடத்தில் இறைவழிபாடே முதன்மையாக இருக்க வேண்டும்.
கண்ணீருடன் வருபவருக்கு ஆறுதலையும், கலங்கிய மனத்துடன் வருபவருக்கு அமைதியையும், நம்பிக்கை இழந்தவருக்கு இறைநம்பிக்கையையும் வழங்கும் வழிபாடுத்தலம் தான் ஆலயம்.
ஆலயத்தின் கண்ணியத்தையும், இறைவன் எழுந்தருளும் திருத்தேரின் மகத்துவத்தையும், மனமுருகிப் பிரார்த்திக்க வரும் பக்தர்களின் உணர்வுகளையும் மதிப்போம்.
This incident has been troubling me deeply for the past few days. I tried my best to remain silent and resist writing about it, but in the end, my conscience would not allow me to stay quiet. I felt it was my responsibility to speak up out of respect for the sincere feelings of the devotees.
Sena Kandeepan ✍️