Geelong Tamil Christian Fellowship தமிழ் கிறிஸ்தவ சபை

Geelong Tamil Christian Fellowship தமிழ் கிறிஸ்தவ சபை We are a christian community, learning to follow Jesus and to share His love with the world.

07/06/2026

கொடுப்பதில் மகிழ்ச்சி……..

வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.
அப்போஸ்தலர் 20:35

கீதாவின் இளைய மகனுக்குத் தசைநார் சிதைவு தொடர்பான மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, தன் குடும்பச் சூழலால் ஏற்பட்ட மனச்சுமையைக் குறைக்க, வேறொருவருக்காக ஏதாகிலும் உதவி செய்ய விரும்பினாள். அதனால் அவள் தன் மகனின் சிறிதாய்ப்போன , நல்ல ஆடைகளை எடுத்து, ஒரு ஊழிய ஸ்தாபனத்திற்கு நன்கொடையாக அளித்தாள். இந்த காரியம், அவளது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாரையும் இணைந்துகொள்ளும்படி தூண்டியது, விரைவில் 200க்கும் மேலான நல்ல பயன்படுத்த தகுதியான ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது!

ஆடைகளை கொடையளித்தது மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக இருந்தாலும், தனது குடும்பம் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டதாக கீதா உணர்ந்து, “இந்த முழு அனுபவமும் மெய்யாகவே எங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டியது ,பிறரிடம் எங்கள் கவனத்தைச் செலுத்த உதவியது” என்றாள்.

தாராளமாகக் கொடுப்பது இயேசுவின் சீடர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பவுல் புரிந்துகொண்டார். எருசலேமுக்குச் செல்லும் வழியில், அப்போஸ்தலன் பவுல் எபேசுவில் தங்கினார். அவர் அங்கு ஸ்தாபித்த சபையின் மக்களுடனான அவரது கடைசி சந்திப்பாக இது இருக்கலாம் என்று அவர் அறிந்திருந்தார். சபை மூப்பர்களுக்கான தனது பிரியாவிடை உரையில், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தான் எவ்வாறு ஜாக்கிரதையுடன் பணியாற்றினார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (அப் 20:17-20) மேலும் அவர்களும் அதையே செய்யும்படி உற்சாகமூட்டினார் (வ.35) பின்னர், “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (வ.35) என்ற இயேசுவின் வார்த்தைகளோடு முடித்தார்.

நாம் விருப்பத்தோடும், தாழ்மையோடும் நம்மையே கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் (லூக்கா 6:38). அவர் நம்மை வழிநடத்துவார் என்று நாம் நம்பும்போது, அதற்கான வாய்ப்புகளை அவர் நமக்கு வழங்குவார். கீதாவின் குடும்பத்தைப் போலவே நாமும் அதன் விளைவாக அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படலாம்.

அன்பு தகப்பனே, மற்றவர்களுக்கு எனது நேரத்தையும்,
என்னிடம் உள்ளதையும் தாராளமாகக் கொடுக்க எனக்கு உதவும். ஆமென் 🙏

04/06/2026

தாகமும் நன்றியுள்ளமும்….

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
சங்கீதம் 42:1

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

அன்பு தேவனே, நீர் என் வாழ்க்கையை நிரப்புகையில் நான் அனுபவிக்கும் புதுப்பிக்கப்பட்ட பெலனுக்காக நன்றி. உம்மைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் நம்பியிருந்தால் என்னை மன்னியும்.
ஆமென் 🙏

02/06/2026

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது……

பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.

அன்பு தேவனே, நான் என் பாவங்களை உம்மிடம் அறிக்கையிட்டால்,
நீர் உண்மையுள்ளவராகவும், என்னை மன்னிப்பதற்கு
நீதியுள்ளவராகவும் இருப்பதற்காக நன்றி. ஆமென்.

21/05/2026

நமது ஆவிக்குரிய வரம்பை எப்படி பாதுகாப்பது…..

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.
2 நாளாகமம் 16:9

ராக்கி திரைப்படங்கள் ஓர் குத்துச்சண்டை வீரரின் கதையைச் சொல்கிறது. அவர் ஹெவிவெயிட் சாம்பியனாவதற்கு சாத்தியமில்லாத முரண்பாடுகளை முறியடித்து, எப்படி வாழ்க்கையில் ஜெயித்தார் என்பதை சொல்கிறது. ராக்கி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில், வெற்றியடைந்த ராக்கி தனது சொந்த சாதனைகளால் ஈர்க்கப்படுகிறார். தொலைக்காட்சி விளம்பரங்கள் அவரின் உடற்பயிற்சி நேரத்தை வீணாக்கின. அதின் விளைவாய் அவருடைய எதிர்தரப்பினர் மூலம் குத்துச்சண்டையில் தோல்வியை தழுவுகிறார். மீண்டும் சுதாரித்து, தன்னுடைய பழைய நிலைக்கு எவ்வாறு வருகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லவேண்டுமாகில், யூதாவின் ராஜா ஆசா தனது சண்டை முனையை இழந்துவிட்டான். அவனது ஆட்சியின் ஆரம்பத்தில், அவன் கடினமான முரண்பாடுகளை எதிர்கொண்டு தேவனை நம்பினான். வலிமைமிக்க கூஷியர்கள் தாக்கத் தயாரானபோது, “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்” (2 நாளாகமம் 14:11) என்று ஆசா ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார். யூதேயா தேசம் அவர்களுடைய எதிரிகளை மேற்கொண்டது (வச. 12-15).

பல ஆண்டுகளுக்குப் பிறகு, யூதேயா மீண்டும் அச்சுறுத்தப்பட்டது. இம்முறை ஆசா தேவனை புறக்கணித்து, அந்நிய தேசத்து ராஜாவிடம் உதவிகேட்கிறான் (16:2-3). அது அவனுக்கு நன்றாகத் தோன்றியது. ஆனால் தேவன் மகிழ்ச்சியடையவில்லை. அவன் தேவனை நம்புவதை நிறுத்திவிட்டதாக அனானி தீர்க்கதரிசி ஆசாவிடம் கூறினான் (வச. 7-8). அவன் ஏன் முன்போல் இப்போது தேவனை நம்பவில்லை?

நம் தேவன் முற்றிலும் நம்பகமானவர். அவருடைய கண்கள் “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி” பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது (வச. 9). நாம் முற்றிலும் தேவனை சார்ந்துகொண்டு, நம்முடைய ஆவிக்குரிய முனையை சரியாய் வைத்திருக்கும்போது, அவருடைய பெலனை உணரலாம்.

அன்புள்ள இயேசுவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மில் இளைப்பாறுவேன்.
ஆமென் 🙏

Amen 🙏
21/05/2026

Amen 🙏

திறமைகள் நம்மை வழிநடத்தலாம், ஆனால் கிருபை மட்டுமே நம்மை ஜெயிக்க வைக்கும். 🙏
Not by my strength…
Not by my ability…
It is God’s grace that lifts me.
He is the One who holds my hand and leads me.” 🤍✨

20/05/2026

கடந்த மற்றும் நிகழ்கால தேவன்….

நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்.
எரேமியா 29:10

நாங்கள் எங்கள் குடும்பமாய் வளர்ந்த ஓரிகான் நகரத்தை விட்டுவந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் அங்கு சிறந்த நினைவுகளை உருவாக்கினோம். அந்த இடத்திற்கு திரும்பி மீண்டும் வந்தபோது, நான் மறந்துவிட்ட தருணங்களை அது எனக்கு நினைவூட்டியது. எங்கள் பெண்கள் கால்பந்து விளையாட்டுகள், எங்கள் பழைய வீடு, தேவாலயக் கூட்டங்கள் மற்றும் எங்கள் நண்பர்களின் மெக்சிகன் உணவகம் என்று பல நினைவுகள் எனக்கு ஏற்பட்டது. இப்போது நகரம் முழுவதுமாய் மாறிவிட்டது. ஆனால் அங்கு வருவது உகந்தது என்று என்னை நம்பவைக்க போதுமான நண்பர்கள் எனக்கு அங்கு இருந்தார்கள்.

இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது, உறவுகள், அடையாளங்கள் மற்றும் கலாச்சாரத்தின் பரிச்சயத்தை அவர்கள் தவறவிட நேரிட்டது. தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ததற்காக சிறையிருப்புக்கு சென்றதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள், அவர்களிடம் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று கூறியபோது (எரேமியா 28:2-4; 29:8-9), அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். சீக்கிரம் அவர்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிவிடுவார்கள் என்ற பொய்யான தீர்க்கதரிசனத்தைக் கேட்பது அவர்களுக்கு இலகுவாய் இருந்தது.

கள்ளத் தீா்க்கதரிகளையும் அவர்களின் பொய்யான வாக்குறுதிகளையும் தேவன் அனுமதிக்கவில்லை. “உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்” (29:8) என்று தேவன் அவர்களை எச்சரிக்கிறார். அவர் தன்னுடைய ஜனத்தைக் குறித்து அழகான திட்டம் வைத்திருக்கிறார். அவைகள் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணும் மேன்மையான திட்டங்கள் (வச. 11). அவர்களின் நிலைமை சவாலானது, கடினமானது மற்றும் புதியது. ஆனால் தேவன் அவர்களுடன் இருந்தார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (வச. 13) என்று அவர்களிடம் சொல்லுகிறார். “நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்” (வச. 14) என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய பழைய மேன்மையான நினைவுகளை நினைக்கும்போது அது நம்மை சோர்வடையச் செய்துவிடுகிறது. தேவன் இப்போது என்ன செய்கிறார் என்பதைத் தவறவிடாதீர்கள். அவர் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார்.

தகப்பனே, நான் கடந்தகாலத்தைக் குறித்து ஏங்காமால், நிகழ்காலத்தில் உம்மை தொடர்ந்து தேடுவதற்கு எனக்கு கிருபை தாரும். ஆமென் 🙏

18/05/2026

தேவனால் அழைக்கப்பட்டு தயார்ப்படுத்தப்படல்……

சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்.
யாத்திராகமம் 31:3

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன்.

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார்.

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

தகப்பனே, எனக்குத் தேவையான அனைத்தையும் எனக்கு அளித்ததற்காய் உமக்கு நன்றி. Amen 🙏

14/05/2026

மகிழ்ச்சியும் ஞானமும்….

ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.
பிரசங்கி 8:15

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அன்பான தேவனே, நீர் என் வாழ்க்கையின் அழகு மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருப்பதற்கு நன்றி. ஆமென்🙏

All are Welcome 🙏
30/04/2026

All are Welcome 🙏

Address

60 Ballarat Road
Geelong, VIC
3215

Alerts

Be the first to know and let us send you an email when Geelong Tamil Christian Fellowship தமிழ் கிறிஸ்தவ சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Geelong Tamil Christian Fellowship தமிழ் கிறிஸ்தவ சபை:

Share