18/04/2021
5.
முன்னைய பிரிவான அத்தியாயம் 4 இல் இசையமைப்பாளர்களும் பாடலாசிரி யர்களும் எதிர்கொள்ளும் 8 சவால்கள் குறித்து ஆராய்ந்தோம். அத்தியாயம் 5 என்னும் இந்தப் பிரிவில் கத்தோலிக்க பாடலாசிரியர்கள்பற்றியும் பாடல் வரிகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதுபற்றியும் பார்ப்போம்:
பாடலாசிரியர்களில் இரு வகையினர் உளர். முதலாம் வகையினர் தமது சிந்தனையில் உருவாகிய மெட்டுக்கேற்ற வகையில் பாடல் வரிகளை எழுதுவோர் என்றும் இரண்டாம் வகையினர் மற்றவர்களால் இசையமைக் கப்படுவதற்காகப் பாடல் வரிகளை எழுது வோர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். பாடலாசிரியர்களை ஒரு வகையில் சிறு கதை எழுத்தாளர்களுக்கு ஒப்பிடலாம். சிறு கதைகளை எழுதுவோர் தாம் எழுதும் ஒவ்வொரு கதையையும் ஒரு கருப்பொ ருளை அல்லது வரலாற்றுக் கதையில் வருவதைப்போல், ஒரு கதைப் பின்புலத்தை மையமாக வைத்து, ஒரு கதைக் களத்தைச் சித்திரித்து, வேண்டுமானால் சில கற்பனை சம்பவங்களைக் காட்சிகளாகத் தொகுத்து, தமது கருப்பொருளை நியாயப்படுத்தும் வகையில் சில அறிஞர்களின் அல்லது சம யப் பெரியார்களின் கூற்றுக்களை மேற்கோ ளாகக் காட்டி, இறுதியில் சில படிப்பினை களோடு (lessons) கதையை நிறைவு செய்வர்.
வழிபாட்டிற்கான பாடல்களைப் புனைவோ ரும் ஒரு கதாசிரியரைப்போல ஒரு கருப்
பொருளை (theme), ஒரு கதைக் களத்தை (context/situation) மற்றும் ஒரு உறுதிமொழி யை அல்லது பாடத்தை (pledge/lesson) உள்ளடக்கிப் பாடல் வரிகளை அமைப்பர்.
கத்தோலிக்கராகிய நமக்குத்தான் கருப் பொருளுக்குப் பஞ்சமே இல்லையே! மீட்பின் காவியத்தை எடுத்துக்கொண்டால், மீட்பின் நாயகனாம் இயேசு கிறிஸ்து, அவரது போதனைகள், அவரது பாடு, இறப்பு மற்றும் உயிர்ப்பு, அவரது சீடர்கள், அன்னை மரியா மற்றும் திரு அவையால் அறிவிக்கப்பட்ட புனிதர்கள் மற்றும் அவர்களால் எடுத்தா ளப்பட்ட சம்பவங்கள், தூய ஆவியாரின் வருகை, பழைய ஏற்பாட்டில் வரும் தாவீது அரசரின் திருப்பாடல்கள் ... என அடுக்கடுக் காக விவிலியத்தில் வரும் அனைத்துமே கருப்பொருள்தான். நற்செய்தியில் வரும் ஒவ்வொரு சம்பவமுமே ஒரு கதைக்களம் தான். மீட்பின் அடைவதில் தடையாக இருக்கக்கூடிய தவறுகள் (failures) எவை, அவற்றை வெற்றிகொள்ள நாம் எடுக்க வேண்டிய உறுதிப்பாடுகள் (pledge/resolution)என்ன .. இவை போன்றவையும், ஆவியாரின் கொடைகள், திருவருட்சாத னங்கள், குடும்பம், சமூகம், திரு அவை, புனிதர்களின் உறவு, மறுவாழ்வு .. போன்ற எண்ணக்கருக்கள் அனைத்துமே நல்ல சுவையான கதைக் களங்களாக எடுத்தாளப் படக்கூடியவையே.
நல்ல கிறிஸ்தவனாக வாழ - அதிலும் நல்ல கத்தோலிக்கனாக வாழ நமக்கு வழிபாடுகள் தேவை. வழிபாடுகள் நன்றாக அமைய நல்ல வழிபாட்டுப் பாடல்கள் தேவை. இப் பாடல்கள் ஏனோ தானோ என்றில்லாது, அழகு தமிழில், நல்ல தாள இலயத்துடன், கேட்டவுடனேயே மனதைக் கவரும் வகையில், சுவைபட - ஆனால் ஆழ்ந்த மறையுண்மைகளைக் கொண்டதாக அமையவேண்டும். இங்கு மிகவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயம் யாதெனில், அது தாளமும் தமிழ் உச்சரிப்பும் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். பெரும்பாலான பாடலாசிரியர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. "அசை" எனப்படும் உச்சரிப்பு இடைவெளிகளில் (syllables) குறுகியவையும் உள்ளன, நீட்சி யானவையும் உள்ளன. உதாரணமாக, பழைய இராகத்தில் பாடப்படும் பரலோக மந்திரத்தில் "உம்முடைய திருச் சித்தம்" என்று வருவதைப் பாடும்போது "திருச் சீத்தம்" என்றுதான் பாடவேண்டியுள்ளது. "சித்" என்பது ஒரு அசையை மட்டும் கொண்ட குறுகிய ஒரு வல்லின உச்சரிப்பாகும். ஒன்றிற்கு மேற்பட்ட சுரங்களின் அசைகளை (உண்மை யில் "சித்" என்பதற்கு குறித்த பாடலில் நான்கு சுரங்கள் கொடுக்கப்பட் ஞஞடுள்ளன) அதற்குக் கொடுத்தால் உச்சரிப்பு நீளுவதைத் தவிர்க்கமுடியது. ஆகவேதான் "சித்தம் - சீத்தம்" ஆகின்றது. காதில் விழும்போது அது "சீற்றம்" (- அதாவது கோபம்) என்றுதான் விளங்குகின்றது. இன்னுமோர் உதாரணமாக "ஆவியானவரே அன்பின் ஆவியானவரே" பாடலைக் குறிப் பிடலாம். அதில் "இப்போ வாரும்" என்பதை "ஈப்போ வாரும்" என்றுதான் படுகிறார்கள். ஏவரினில் "இப்" என்பது ஒரு வல்லின உச்சரிப்பு ஆகும். அதற்கு ஒன்றரை அசை கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பின்வருமாறு சீர் செய்யலாம்: "இப்போ வாரும்" என்பதற்குப் பதிலாக "இப்போது வாரும்" என்று பாடலாம். பின்வரும் சுர வடிவில் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்:
முன்னையதன் சுர வடிவம்: "நீ,ஸ ரீரீ".
பின்னையதன் சுர வடிவம்: "நிநீ,ஸ ரீரீ"
"இப்" என்ற வல்லினக் குறில் உச்சரிப்பக்கு "நி" என்ற சுரமும், "போ" என்ற நெடில் உச்சரிப்புக்கு "நீ," என்ற சுரமும், மீண்டும் "து" என்ற குறில் உச்சரிப்புக்கு "ஸ" என்ற சுரமும் வரும்படி பாடவும்.
தாளக்கட்டுடன் நன்கு பொருந்திப் போகும் வகையில் பாடல் வரிகள் சந்தங்கள், சங்க திகள் மற்றும் எதுகை மோனையுடன் அணி செய்யப்படல்வேண்டும். ஆக, சிறந்த பாடல் வரிகளைப் புனைவதில் ஒரு பாடலாசிரிய னுக்கு இருக்கின்ற பொறுப்பு பாரியது என்றால் அது மிகையில்லை. இவ்வாறான பாடல் வரிகள் இதயத்தைத் தொடும் இசை யமைப்புடன் வெளிவந்துவிட்டால், அவை ஆண்டுகள் பல சென்றாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடும் என்பதில் ஐயம் இல்லை. உதாரணத்திற்கு, "அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்", " என் தேடல் நீ", "மனிதன் மிருகமாகலாம்", " அழைக்கின்றார் இயேசு ஆண்டவர்", "அர்ச்சனை மலராக", "பூம்புனல் அருகே", " என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன்" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் மக்கள் மனதில் இடம்பிடித்தமைக் கான காரணம்: எளிமையான சொற்பிர யோகம், மனங்கவரும் தாள இலயம் மற்றும் அவற்றில் பொதிந்துள்ள மறையுண்மைகள் என்பனவேயாகும்.
இன்னுமொன்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்: தூய அழகு தமிழில் வெளிவந்த திரு விவிலியத்தின் பொது மொழிபெ யர்ப்பே கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்துவருகிறது. பெருஞ் சிரத்தையெடுத்து அதனை வெளிக்கொ ணர்ந்த தமிழ்நாடு ஆயர் பேரவைக்கும் அச்சிட்டவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். திருப்பலி வாசகங்களும் செபமாலை உட்பட நாம் அன்றாடம் சொல்லும் செபங்களும் புதிய மொழியாக் கத்தின்படியே அமைந்துள்ளன. அந்த வகையில், புதிதாக வெளிவரும் கத்தோ லிக்க திருவழிபாட்டுப் பாடல்களும் அமைந் திருப்பதுதானே முறை? ஆனால், பொதுவாக பாடல்களைப் பொறுத்த வரையில், கத்தோலிக்க இறைநம்பிக்கையாளர்கள் சில பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர். இன்று YouTube ஐத் திறந்தால் அதில் நல்ல புதிய, பழைய கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்கள் ஒளி/ஒலிபரப்பாவதைக் காணலாம். அவற்றில் பாதிக்குமேல் நமது பிரிவினைச் சபையினராலேயே வெளியிடப் படுகின்றன. அவற்றில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களைக்கொண்டு அவற்றை நாம் இலகுவாக இனங்காணலாம் (உதாரணமாக - ஆத்மா, ஜீவன், கர்த்தர், ஸ்தோத்திரம், ஜெபம், சங்கீதம், சுவிசேஷம், வேத புஸ்தகம் முதலியன). நம்மில் ஒரு சாரார் கேட்கலாம், 'எல்லாப் பாடல்களும் கடவுளுக்குப் புகழ்ச்சியாகத்தானே பாடப் படுகின்றன, இயேசுவே ஆண்டவர் என்று தானே அவர்களும் முழங்குகின்றனர், பயன்படுத்தப்படும் வார்த்தைகளைக் காரணம் காட்டி நமக்குள் நாம் ஏன் முரண் பட்டுக்கொள்ளவேண்டும்?' என்று. இப்படி யான சிந்தனைப் போக்குடன் வெறும் பெயருக்குக் கத்தோலிக்கர்களாக வாழும் கொள்கைப் பிடிப்பில்லாதவர்களைத்தான் பிரிவினைச் சகோதரர்களும் குறிவைத்து, அவர்களைச் சூழ்ச்சிகரமாகத் தங்கள் வலைக்குள் வீழ்த்துகின்றனர். அவர்களது உள்நோக்கம் உண்மையான திரு அவையாம் கத்தோலிக்கத் திரு அவையை உடைக்க வேண்டும் என்பதே. புனித இராயப்பரின் தலைமைப் பீடத்தை ஏற்காத இவர்கள், நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை ஏற்காத இவர்கள், முதல் நற்கருணைப் பேழையாகத் திகழும் அன்னை மரியாவின் மேன்மையை ஏற்காத இவர்கள், மேற்கூறிய இறையியல் உண்மைகள்பற்றி வாயே திறக்காது, தமக்கு இசைவான வார்த்தை களை மட்டுமே விவிலியத்திலிருந்து எடுத்தாளும் இவர்கள் "ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலைஏற்படும்" (யோவான் 10:16) என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண் டிருக்கும் நம் ஆண்டவர் இயேசுவின் உண்மைச் சீடர்களாகத் தாங்களும் இருப்பதில்லை, மற்றவர்களையும் இருக்க விடுவதில்லை. எனவே, இப் போலி ஆயர்களின் வெளி ஆடம்பரங்களாலும் பசப்பு வார்த்தைகளாலும் கவரப்படாமல், உயிருள்ள தூய கத்தோலிக்க நம்பிக்கையை நம் எல்லோரிலும் சுடர்விட்டு எரியச்செய் யும்வகையில் நம் கத்தோலிக்க பாடலா சிரியர்கள் தமக்கென்று ஒரு கொள்கையை வகுத்து, சக்தி வாய்ந்த தம் எழுத்தாற்றலால், எல்லா வேளைகளுக்கும் தேவையான பாடல்களை எழுதும் அதேவேளை, தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாரைப்போல் மறை வளர்த்துத் தமிழ்த் தொண்டாற்ற முன்வரு வார்களாக!
கத்தோலிக்க பாடலாசிரியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை யில் என்னால் எழுதி இசையமைக்கப்பட்ட திருவிருந்துப் பாடல் ஒன்றின் வரிகளை வாசகர்களுக்கு இங்கு சமர்ப்பிக்கின்றேன்:
வாரும் தேவா வாருமே - இந்த
பாவியைக் கண் பாருமே
ஒரு சொல் நீரும் உரைத்தால் போதும்
நலமும் என்னைச் சேருமே.
உம்மைப் பிரிந்து அலைந்து திரிந்து
வாழ்வில் கண்டேன் வீழ்ச்சியே
அகந்தையாலே அறிவிழந்தேன்
அதுவும் சாத்தான் சூழ்ச்சியே
என்னில் நீரும் எழுந்து வந்தால்
என்றும் உந்தன் ஆட்சியே
எந்த நிலையில் இருந்திட்டாலும்
நானும் உமக்கோர் சாட்சியே