31/07/2026
கண்ணீர் அஞ்சலி 💐
மிருசுவில் மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அருட்சகோதரி மேரி இவோன் சிமியோன் (Rev. Sr. Yvonne Simeon ) அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி எங்கள் இதயங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அருட்சகோதரி அவர்கள் மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நீண்டகாலம் பணியாற்றிய ஒருவராவார் , குறிப்பாக போரின் கொடூர நாட்களின்போது மக்களின் துயரங்களையும் வேதனைகளையும் தன் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, அச்சமின்றி அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர். எத்தனை சிரமங்கள் வந்தாலும், மக்களின் நடுவே இருந்து அவர்களுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும், தாயாகவும் வாழ்ந்தவர் ஆவார்.
அன்பு, கருணை, தியாகம் என்றால் நினைவிற்கு வருபவர் அருட்சகோதரி அவர்களே! . மிருசுவில் கத்தோலிக்க மக்களால் மட்டுமல்லாது, அயற்கிராமங்களில் வாழ்ந்த இந்து சகோதர சகோதரிகளாலும் சம அளவில் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட ஒரு அரிய மனிதர்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாயாக மாறி, அவர்களை தன் சொந்த பிள்ளைகளாக வளர்த்து, கல்வி கற்பித்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்கி, நன்கொடையாளர்களின் உதவியுடன் திருமணம் செய்து வைத்து வாழ்க்கையில் நிலைநிறுத்திய அவரது தாய்மையின் மகத்துவம் என்றும் மறக்க முடியாதது. அது ஒரு சேவை மட்டுமல்ல, இறைவனின் அன்பை மனிதர்களிடம் வாழ்ந்து காட்டிய சாட்சியாகும்.
கன்னியர் மடத்தில் வளர்ந்த சிறுவர்களாக இருந்தாலும், வெளியுலகில் உதவி தேடிய சிறுவர்களாக இருந்தாலும், அவர்களை வேறுபாடின்றி அரவணைத்து அன்பு செலுத்திய ஒரு உண்மையான தாயாக அவர் வாழ்ந்திருந்தார். திருக்குடும்ப அருட்சகோதரிகளின் அர்ப்பணிப்பு வாழ்வின் உண்மையான அர்த்தத்தை தனது வாழ்வின் மூலம் வெளிப்படுத்தியவர்.
அவரது புன்னகை, கனிவான வார்த்தைகள், அக்கறை நிறைந்த இதயம், தன்னலமற்ற சேவை , வீடுகளில் உள்ள நோயாளர்கள் மேலும் அவர்களுக்கு தேவநற்கருணை வழங்குவதிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஆகிய இவை அனைத்தும் மிருசுவில் மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
அருட்சகோதரி மேரி இவோன் சிமியோன் அவர்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தாலும், அவர் விதைத்த அன்பும், நம்பிக்கையும், மனிதநேயமும் எமது இதயங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
இறைவன் அவரது ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாறுதலை அருள்வாராக.