21/06/2026
தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணராக வாழும் தலைவர் திரு ஞானப்பு அவர்களுக்கு அகவை நாள் நல்வாழ்த்துகள்
-----------------------------------------------------------------------------------
கடந்த மூன்று தசாப்த காலமாக ஓர் உள்ளூர்த் தலைவனாக திரு ஞானப்பு ஐயா அவர்கள் நம்மத்தியில் இயங்கி வருகிறார்.
மட்டுநகரில் பிரபல்யமிக்க புன்னைச்சோலைப் பத்திரகாளியம்மன் கோவிலின் பிரதான நிருவாகியாகவும், இவ்வூரவர்களின் மதிப்பிற்குரிய தலைவனாகவும் வாழ்ந்துவரும் இவரது காலம் கவனிப்பிற்கும், கற்கைக்குமுரிய பேறுகளைத் தொட்டுணரக் கூடியதாகவும், தொட்டுணரமுடியாத விதத்திலும் ஏற்படுத்தியிருப்பதை நாமறிவோம்.
கடந்த உள்நாட்டுப் போர்க்காலத்தில் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட ஓர் ஊரின் சமூகப் பண்பாட்டு வரலாற்று நிலைமைகளைக் கவனத்திலெடுத்து ஊரின் கோயிலை மையமாகக் கொண்டு ஆக்கபூர்வமான தலைமைத்துவத்தை வழங்கிய ஓர் ஆளுமையாக இவர் காட்சி தருகிறார்.
காலமும் அது உருவாக்கும் சமூகச் சூழமைவுகளும் தலைவர்களைத் தோற்றுவிக்கும் என்பது வரலாறுகள் கற்றுத்தரும் பாடம்.
இந்தவகையில், கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னரான சமூகப் பண்பாட்டுச் சூழமைவுகள் திரு ஞானப்பு அவர்களை ஓர் ஆக்கபூர்வமான தலைவனாகச் செதுக்கியிருந்தது.
நீண்டகாலம் ஓர் உள்ளூர்த்தலைமை நின்று நிலைப்பது சாதாரணமான விடயமல்ல அகத்திலிருந்தும், புறத்திலிருந்தும் பலவேறு சவால்கள் வரும் நிலையில் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு ஒதுங்கிவிடாது தொடர்ந்து இயங்குவதற்குத் தனித்த ஆளுமைத் திறன்களும் தூரநோக்குச் சிந்தனைகளும் இருக்க வேண்டும்
இந்த ஆளுமையும், பக்குவமும், தூரநோக்கும் நிறைந்த ஒரு தலைவனாக திரு ஞானப்பு ஐயா திகழுகின்றார்.
ஓர் ஊரையும் அதில் வாழும் மக்களையும் கட்டியாளும் ஒரு தலைவனாக இவர் நமக்குக் காட்சி தருகிறார்.
இன்றைய ‘ஜென்சி’ தலைமுறையினர் உள்ளூர்த் தலைமைத்துவம் தொடர்பாகக் கற்றறிய வேண்டிய பல விடயங்களுக்கான முன்னுதாரணராக ஞானப்பு ஐயா விளங்குகிறார்.
ஒரு தேசிய இனத்தின் பன்மைத்துவ அடையாளங்களையும், வித்தியாசமான பண்பாடுகளையும் கட்டியாளும் உண்மையான தலைமைத்துவ ஆளுமைகளாக உள்ளூர்த் தலைமைகளே இயங்கி வருகின்றன என்பதே எதார்த்தமாகும்.
இந்தவகையில் கடந்த மூன்று தசாப்த காலமாக ஒரு பத்ததிச் சடங்குக் கோவிலின் தலைவனாகவும் அக்கோவிலை மையமாகக் கொண்ட ஊரினது தலைமையாகவும் முன்னீடு முகாமைத்துவத்தைச் செய்து வரும் தலைவர் ஞானப்பு அவர்களை அவரது அகவை நாளில் வாழ்த்துவோம்! கொண்டாடுவோம்!! அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுவோம்!!!
து. கௌரீஸ்வரன்,
21.06.2026