17/08/2023
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
17.08.2023 (வியாழன்)
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 114:3-ல்,
"செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது." என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
தன்னைப் படைத்த இறைவனுக்கு இயற்கை பணிந்தது போல, நாமும் நம்மைப் படைத்தவருக்கு எந்நாளும் பணிந்திருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்." என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நமக்குத் தொடர்ந்து தீங்கு இழைப்பவர்களை நாம் திரும்ப திரும்ப மன்னிக்க தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று தலைவர் தன்னிடம் கடன்பட்டவனிடம் கூறுவதைக் காண்கின்றோம்.
இரக்கம், மன்னிப்பு ஆகிய இரண்டின் ஆணிவேரான அன்பை நாம் என்றும் பிறரிடம் கொண்டிருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
மேட்டூர் அணையில் குறைந்துவரும் நீர் மட்டம் காவேரி டெல்டா விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, NEET தேர்வினால் நேர்ந்திடும் தொடரும் தற்கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நல்ல முடிவினை எடுக்க வேண்டியும், அனைத்து குழந்தைகளின் நல்ல எதிர்கால வாழ்விற்காகவும் குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.